கடல்ஜெல்லிகள் தோலில் பட்டால் ஏன் அரிக்கிறது?
- நாராயணி சுப்பிரமணியன்

- 10 hours ago
- 1 min read

முதலில் பெயர்க்குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இவற்றை ஜெல்லி மீன்கள் (Jellyfish) என்று அழைத்தார்கள்.
ஆனால் இவை மீன் இனங்கள் அல்ல. மீன் என்ற சொல் இருந்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே இப்போது இவை கடல் ஜெல்லிகள் (Sea jellies) என்று அழைக்கப்படுகின்றன.
நாமும் இவற்றைக் கடல் ஜெல்லிகள் அல்லது ஜெல்லிகள் என்று
அழைத்துக்கொள்ளலாம்.ஜெல்லிகள் தோலில் படும்போது மெலிதான அரிப்பு
முதல் கடுமையான குடைச்சல் வரை பல பாதிப்புகள் ஏற்படலாம். இது ஏன் நடக்கிறது?
ஜெல்லிகளின் உடலில் நெமடோசிஸ்ட் (Nematocyst) என்ற ஒருவகை செல் உண்டு. நெமடோசிஸ்ட் என்றால் "நூல் இருக்கும் பை" என்று பொருள். இவை கொட்டக்கூடிய செல்கள். இந்த செல்களில் கூர்மையான முட்கள் இருக்கும்.
இந்த முட்கள் ஒரு நீண்ட கயிறு போன்ற அமைப்புடன் இணைந்திருக்கும். முள் கொண்ட இந்தக் கயிறு ஒரு பை போன்ற உறுப்புக்குள் இருக்கும்.
ஜெல்லிகளுக்கு ஆபத்து வராதவரை இந்த முள் பைக்குள்ளேயே இருக்கும். ஆபத்து இருக்கிறது என்று ஜெல்லி உணரும்போது முள் இருக்கும் கயிறு
ஒரு சாட்டை போல வேகமாகப் பைக்குள் இருந்து வெளியில் வரும்.

வெறும் மூன்று மில்லிசெகண்டுகளுக்குள் இது வந்துவிடும். வேகமாக இது தோலைத் தாக்கும். சில நெமடோசிஸ்டுகளின் முனையில் அரிப்பு அல்லது வலியை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் இருக்கும். சில நெமடோசிஸ்டுகள் தோலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. சில நெமடோசிஸ்டுகள் தோல் மீது ஒட்டிக்கொள்ளும். வேறு சில நெமடோசிஸ்டுகளோ இறப்பையே ஏற்படுத்தும் அளவுக்கு நச்சு கொண்டவை.
பயமாக இருக்கிறதா? பயப்படவேண்டாம்.
கடற்கரைக்கு செல்லும்போது ஜெல்லிகளைப் பார்த்தால் அவற்றைத் தொடாமல் இருங்கள். கடல்நீரில் இருக்கும்போது ஜெல்லி கொட்டிய உணர்வு ஏற்பட்டால் உடனே
கரைக்கு வந்துவிடுங்ள். தோல் பொறுக்கும் அளவுக்கு சுடுநீரில் காயத்தைக் கழுவிவிட்டு உடனே
மருத்துவரை அணுகுங்கள். பத்திரமாக இருங்கள்.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.





Comments