top of page

நெத்திலி


குழந்தைகளே! நான் நெத்திலிமீன் பேசுகிறேன்.


என்னை நீங்கள் மீன் சந்தைகளில் பார்த்திருக்கலாம். குட்டியாக, நீளமாக இருக்கும் மீன்  இனம் நான். ஆங்கிலத்தில் என்னை Anchovy என்று அழைப்பார்கள். மலையாளத்தில் என் பெயர் நெத்தோலி.


ஒரு சில நெத்திலி இனங்களைப் பொருவா என்றும் மீனவர்கள் அழைப்பார்கள்.


என் இனத்தில் 140 உறுப்பினர்கள் உண்டு. பெரும்பாலும் எங்கள் இனத்தவர்கள் 2 முதல் 40 சென்டிமீட்டர் நீளம்தான் இருப்போம்.


பெரும்பாலும் நீண்ட உடலுடன் இருப்போம். என் மூக்குப் பகுதியில் ஒரு சிறு உறுப்பு உண்டு.


இது மின்சாரத்தை உணரும் உறுப்பு என்று சொல்கிறார்கள், ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு இது இன்னும் உறுதியாகத் தெரியவில்லையாம்.நீங்கள் வளர்ந்தபிறகு ஆராய்ச்சியாளராகி இந்த உறுப்பின் வேலை என்ன என்று கண்டுபிடிப்பீர்கள்தானே?



நாங்கள் பெரும்பாலும் வெப்பமான கடல்களில்தான் வாழ்வோம். குளிர் கடல்களில் எங்களால்  தாக்குப் பிடிக்க முடியாது.


12 டிகிரி செல்சியஸுக்கும் கீழே கடல் வெப்பநிலை  இருந்தால் எங்களால்  இனப்பெருக்கம் செய்ய  முடியாது. சிறு சிறு மிதவை உயிர்களை சாப்பிட்டு நாங்கள் உயிர்வாழ்வோம்.


நாங்கள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழ்வோம்.  கூட்டமாக நீந்தும் எங்களைப் பார்ப்பதே அழகான காட்சியாக இருக்கும். கூட்டமாக வாயைத் திறந்துகொண்டே நீந்தி மிதவை உயிர்களை சாப்பிடுவோம். 


பார்ப்பதற்குக் குட்டி மீனாக இருக்கிறேனே என்று என்னைச் சாதாரணமாக  நினைத்துவிடாதீர்கள். நாங்கள் மிக முக்கியமான வணிக மீன் இனங்கள்.


பெருவில் இருக்கும் நெத்திலி இனங்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே  தூக்கிப் பிடிக்கின்றனவாம்.


நெத்திலிகளின் விலை குறைவு என்பதால் வறுமையில் இருப்பவர்களும் வாங்கி சாப்பிட முடியும், அவர்களுக்கான புரதச் சத்து இதன்மூலம் எளிதில் கிடைக்கும்.


அடுத்தமுறை மீன் சந்தைக்கு வரும்போது நெத்திலி மீன் இருக்கிறதா என்று  பாருங்களேன்.


நாராயணி சுப்ரமணியன்
நாராயணி சுப்ரமணியன்

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் 

பட்டமும் பெற்றவர்.

இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து  நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page