கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
- நாராயணி சுப்பிரமணியன்

- 2 days ago
- 1 min read

ஆறுகள், குளங்கள், ஏரிகளில் உள்ள நீர் எல்லாமே நன்னீராக இருக்கும்போது கடல்நீர் மட்டும் ஏன் உப்புக் கரிக்கிறது? இந்த உப்பு எங்கிருந்து வருகிறது?
கடல்நீரில் இருக்கும் உப்பு பல வழிகளிலிருந்து வருகிறது.
நிலத்தில் உள்ள பாறைகளின்மீது மழைநீர் விழுகிறது.
இது பாறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. இதனால் வேதிப்பொருட்கள் வெளியேறி, ஓடைகள் மற்றும் ஆறுகளின் மூலம் கடலுக்குள் சென்று சேர்கின்றன.
இவ்வாறு சேரும் பல வேதிப்பொருட்களைக் கடல்வாழ் உயிரிகள் பயன்படுத்திக்கொள்ளும். பயன்படாத வேதிப்பொருட்கள் தொடர்ந்து கடலில் சேர்ந்தபடியே இருக்கின்றன. இது உப்புத்தன்மையை அதிகரிக்கும்.
ஆறுகளிலும் ஓடைகளிலும்கூட அதே உப்புக்கள் இருக்கின்றன, ஆனால் அவை உப்புக்கரிக்கவில்லையே, ஏன்?
மழைநீர் இந்த நீர்நிலைகளின்மீது விழுந்தபடியே இருக்கிறது, இதனால் உப்புக்களை விட இவற்றில் சேரும் நன்னீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆகவே இவை உப்புக் கரிப்பதில்லை. ஆறுகளும் ஓடைகளும் ஓடிக்கொண்டே இருப்பதால் அவற்றில் இருக்கும் உப்பு அப்படியே தேங்கி நீரில் கலப்பதற்கும் வாய்ப்பு குறைவு.
கடல்நீரின் உப்புத்தன்மைக்கு இன்னொரு காரணமும் உண்டு.
கடலின் தரைப்பகுதியில் சின்னச்சின்ன விரிசல்கள் இருக்கும். இதன்மூலம் கடல்நீர் பூமிப்பந்தின் மையப்பகுதிக்குச் செல்லும். பூமிப்பந்தின் மையத்தில் எரிமலைக்குழம்பு இருக்கிறது. அங்கு சென்று சேரும் கடல்நீருக்குள், எரிமலைக்குழம்பில் இருக்கும் பல்வேறு உலோகப் பொருட்கள் கலக்கின்றன.
இந்தக் கடல்நீர் மீண்டும் விரிசல் வழியாக மேலே செல்லும்போது உப்புகள் கடலுக்குள் கலக்கின்றன. கடலின் தரையில் ஆங்காங்கே இருக்கும் உப்புக்குன்றுகளிலிருந்தும் (Salt domes) உப்புகள் கரைந்து கடல்நீரில் சேர்கின்றன.
இதெல்லாம் சரிதான்.
ஆனால் இவை இப்போது இருக்கும் கடலுக்குள் எப்படி உப்புகள் சேர்கின்றன என்பதற்கான விளக்கங்கள். முதன்முதலில் பூமியில் கடல் உருவாகும்போதே அது உப்பாகத்தான் இருந்ததா? அந்த உப்பு எங்கிருந்து வந்தது?
கடல் என்பது முதன்முதலில் உருவானபோது இந்த உப்புத்தன்மை இருக்கவில்லை.
பாறைகளில் இருக்கும் உப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கரைந்ததாலேயே இந்த உப்புத்தன்மை வந்திருக்கிறது.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.





Comments