காலத்தை சுமந்தோடும் ‘வானி’
- க.சம்பத்குமார்

- May 15
- 2 min read

‘வானி' என்கிற இந்நாவலை நாவலின் கடைசிக் காட்சியிலிருந்து குறிப்பிடுவது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். மருத்துவர் சத்தியசுந்தரி அவர்கள் நாவலின் கடைசி அத்தியாயத்தில் வானி ஆற்றில் இறங்கி கால் நனைத்து நின்று கொண்டிருப்பார். நித்திலா, பாட்டியின் முகத்தில் புலப்படும் சோகத்தை புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
இதோ, இந்த தலைமுறைக்கு நாங்கள் இந்த ஆற்றை காப்பாற்றிக் கொடுத்துவிட்டோம். இனிவரும் தலைமுறைகளுக்கும் ஆற்றின் பாதுகாப்பு மீது இதே ஆர்வமும் அக்கறையும் இருக்குமா? என்கிற மனவோட்டத்தோடு நித்திலாவைப் பார்ப்பார் சத்தியசுந்தரி அம்மா.
நாவலில் மட்டுமல்ல நடப்பிலும் இதே எதிர்பார்ப்பினை இளைய தலைமுறைகளிடம் இச்சமூகம் கொண்டிருக்கிறது. புதிய புதிய மாற்றங்களை எல்லாத் தளங்களிலும் விரும்பும் இளைஞர்கள் அந்தந்த தளங்களில் இதற்கு முன்பு நடந்துள்ளவைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா!
இளைஞர்களின் கற்கும் ஊடகம் டிஜிட்டல் மயமாகி இருந்தாலும் இன்னமும் அதனால் புத்தகங்களின் இடத்தை சற்றும் நெருங்க இயலவில்லை. ஆகையால் புத்தக வாசிப்பை கைவிடாதவர்களாக இருக்கும்பட்சத்தில் இந்நாவலில் வரும் சத்தியசுந்தரி போன்ற சூழலியல் போராளிகளின் நீட்சியாக அக்குழந்தைகளும் சமூகத்தின் அறனாகப் போற்றப்படுவார்கள்.
இனி நாவலின் பக்கங்களுக்குள் நுழையலாம். உண்மையில் இந்நாவல் என்பது எழுத்தாளர் நக்கீரன் குறிப்பிடுவது போல இளையோர்களுக்கான கதையாக மட்டுமல்லாது மருத்துவரின் வரலாறாக; பவானி ஆற்றின் ஒரு காலகட்டத்தின் ஆவணமாக; ஈரோடு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வரலாறாக என பன்முகத் தோற்றத்தோடு விளங்குகிறது. பரவலாக வெளியுலகு அறிந்திராத தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்ககால நிகழ்வுகளில் ஒன்றைப் பேசுகிறது.
மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் 1980 களின் காலகட்டத்தில் திருப்பூரின் சாயக்கழிவுகளை ஈரோட்டில் கொண்டு சேர்த்ததுபோலவே அதேமலைத்தொடரின் மற்றொரு பக்கத்திலிருந்து உற்பத்தி ஆகும் ‘வானி' என சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற பவானி நதி, சவுத் இந்தியன் விஸ்கோஸ் என்கிற ரெயான் நூழிலைத் தொழிற்சாலையின் இரசாயன நச்சுக்கழிவுகளை அதன் நீர்வழித்தடத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் பாதிப்பை உண்டாக்குகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வந்த சத்தியசுந்தரி அம்மாள் அவர்கள் 30000 ற்கும் மேலானவர்களுக்கு மகப்பேறு மருத்துவர் பார்த்தவராக இருந்தாலும் ஒரு நதியினை அழிவிலிருந்து மீட்டெடுத்த சமூக மருத்துராகவே சிறப்புற்றிருக்கிறார். ஆம், அவரே பவானி நதிப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவராக இருந்து பெரும் பணியை சவாலாக நிறைவேற்றி இருக்கிறார். அவரின் வாழ்வை பேசுவதாக வரும் இந்நாவலை நித்திலா என்கிற அவரது பேத்தியின் கண்கொண்டு நாம் காணும் வகையில் வடிவாகியுள்ளது.
தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் பொதுமக்கள் அனைவரிடமும் பொதுவான ஒரு பாதிப்பு இருப்பதை உணர்ந்து அதன் மூலத்தை கண்டறியும்போது அவர் ஆற்றில் கலந்திடும் நச்சு இரசாயனங்களின் ஆபத்தை உணர்ந்து கொள்கிறார். அதன்பின் ஒத்த சிந்தனை கொண்ட மருத்துவர் ஜீவா, சுந்தரம், குணசேகரன், சுகந்தா என பலரின் கூட்டுச் சிந்தனைகளால் போராட்டக்குழுவினை கட்டமைத்து பலவிதமான போராட்டங்களை முன்னெடுக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கியமான பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் விஸ்கோஸ் ஆலையின் முதலாளிகள் திட்டமிட்ட கொலை முயற்சி முதல் பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் மருத்தவரின் திகிலான தருணங்களை இந்நாவலில் வாசிக்கும்போது மனம் அச்சத்தால் அதிர்வுறுகிறது.
வீதி நாடகங்கள், துண்டறிக்கை எனத் தொடங்கி மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் என நீண்டு பின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வாயிலாக நீதியை வென்றெடுக்கிறார்கள் பவானி நதிப் பாதுகாப்பு கூட்டமைப்பினர். அதன்பிறகுதான் சத்தியசுந்தரி அம்மாள் பவானி நதியில் கால் நனைத்தபடி அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பதாக இந்நாவல் நிறைவடைகிறது.
சத்தியசுந்தரி அம்மாள் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்குரிய இளம் தலைமுறையின் உருவமாக இந்த நாவலிலேயே நித்திலாவை எழுத்தாளர் உலவ விட்டிருக்கிறார். வெறும் வரலாற்று ஆவணமாகப் புலப்படும் இக்கதையை அழகான புனைவாக; கதையோட்டமாக வாசிக்க சிறுமி நித்திலா என்கிற கதாபாத்திரத்தின் பங்கு அளப்பறியது.
நித்திலாவின் கேள்விகளும், காலத்தை உணர்ந்து கொள்ள அவளெடுக்கும் முனைப்பும் பொருப்புணர்வும் வாசிக்கும் இளையோர்களின் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி.
நித்திலாவை நாவலின் ஒரு கதாபாத்திரமாக மட்டும் என்னால் உணர முடியவில்லை. நாவல் இளையோரிடம் சொல்லவரும் மாற்றத்தின் குறியீடாகவே பல இடங்களில் என்னால் உணர முடிந்தது. முதலில் அம்மாவிடம் கதை கேட்பவளாக வருபவள் நாவலின் இடையிலேயே தேர்ந்த வாசிப்பாளராக மாறிவிடுவாள். வங்காரி மாத்தாய் குறித்த நூலின் வழியே கண்முன் நிகழும் சூழலியல் போராட்டத்தை உணர்பவளாக நாவலில் காட்சிபுடுத்தப்பட்டிருப்பாள்.
அதேபோல, பெரியவர்களோடு வீட்டிற்குள் நடக்கும் உரையாடல்களில் சுதந்திரமாக பங்கேற்றதன் விளைவாக தனது தோழியோடு பூங்காவொன்றில் சூழலியல் பேசுபவளாக மாறிவிடுவாள். பல நேரங்களில் கேள்விகளால் நிறைந்த அவளது மனம் கடந்தகால வரலாறுகளை அனுகுவதன் மூலமும் நிகழ்கால நடப்புகளை கூர்ந்து அவதானிப்பதன் வாயிலாகவும் பதில்களை அடைகிறது.
வாசிப்பு, சுந்திரம், கூருணர்வு ஆகிய உணர்வுகளின் பிரதிபலிப்பாக திகழும் நித்திலாவையே சத்தியசுந்தரி அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைமுறையாக எழுத்தாளர் உருவகப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவர் சத்தியசுந்தரி அவர்களின் வாழ்விலிருந்து இந்நாவலை அனுகுவதற்கு நிகராக நாம் குறிப்பாக இளையோர்கள் நித்திலாவின் வாழ்விலிருந்து அவரவர்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அனுகலாம்.
இதுவே காலம் நமக்கிட்டிருக்கும் கட்டளை. நம்பிக்கையோடு முன்னகர்வோம் வெளிச்சத்தை நோக்கி.
ஈரோடு பகுதியில் சூழலியல் சார்ந்து பல முக்கிய நகர்வுகளை உருவாக்கி இருக்கும் ‘சூழல் அறிவோம்' இயக்கத்தின் மிக முக்கியமான ஆக்கமாக இந்த ‘வானி' திகழப்போகிறாள் என்பதில் ஐயமில்லை.
வாங்கி வாசியுங்கள். இக்கோடை விடுமுறை அர்த்தமுள்ளதாகட்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.





Comments