top of page

மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்


தலகோதும் இளங்காத்து சேதி கொண்டுவரும்

மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்

கலங்காதே கலங்காதே நீயும் நெஞ்சுக்குள்ளே

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல …


வணக்கம் குழந்தைகளே! என்ன இது. படிச்ச புத்தகம் பத்தி சொல்லாம சினிமா பாட்டு படிக்கிறேன்னு நினைக்கறீங்களா?


இல்ல குழந்தைகளே! இந்த பாட்டு வரியிலதான் நான் படித்த புத்தகத்தின் பெயரே இருக்குது. அது என்ன பெயர் தெரியுமா?


விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?


அடடே! நீங்க நினைக்கிறது தெரியுது. இரண்டு புத்தகம் இல்ல… ஒரே புத்தகம் தான். ஆனா, இரண்டு பேரு. ஏன் அப்படீன்னு தெரிஞ்சுக்கனுமா?


இந்த புத்தகம் பள்ளி பாடங்களைப் படிப்பது எப்படீங்கற விசயத்தை அறிவியல்பூர்வமான தகவல்களோடு சேர்த்துத் தந்திருக்காங்க. அதேசமயம், முழுவதும் தகவலாகவே இல்லாம, விரும்பி படிக்கும்படியாக ஒரு கதையாக கொடுத்திருக்காங்க.


அப்ப, இதுல கதையும் இருக்கு கூடுதல் அறிவியல் உண்மைகளும் இருக்கு. அதுனாலதான் இரண்டு பெயர்கள். புரிஞ்சுதா!


வாங்க, இனி புத்தகத்துக்குள்ளே போவோம்.


“படிப்பில் சுமாரான மாணவன் - என்பதே என்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்று” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் நூலாசிரியர் கூறியுள்ள கற்பித்தல் உத்திகள் அடங்கியுள்ள நூல் இது.


நூலாசிரியரை போலத்தான் இந்த புத்தகத்தில் வரும் கதிர் என்கிற சித்தப்பாவும். இந்த நூலும் முழுவதும் கற்றலில் சிறக்க   நிறைய அறிவியல்பூர்வமான வழிகளை தளிர் என்கிற குழந்தைக்கு கற்றுத் தருகிறார். ஆனாலும் தளிர் பள்ளி இடைத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று மனச் சோர்விற்கு உள்ளாகிறாள். பிறகென்ன நடந்தது என்பதை அவசியம் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒரு புதிய மாற்றத்தை உணர்வீர்கள், குழந்தைகளே!


இன்னமும் பழைய பாணியிலேயே கல்வியை அணுகும் அப்பா; தனது விருப்பங்களை சிதைத்து விடாது படிப்பில் முன்னேறத் துடிக்கும் மகள்; இவர்கள் இருவருக்கும் இடையில் தன் சுயத்தை கரைத்துக் கொண்ட அம்மா என பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகள் உள்ள குடும்பத்தை அப்படியே இந்நூல் பிரதிபலிக்கிறது. இவர்களுக்கிடையே தான் கற்ற அறிவியல் கோட்பாடுகளின்படி தீர்வு காண முனையும் சித்தப்பா கதாபாத்திரத்தின் வழியேதான் தளிருக்கு மட்டுமின்றி இந்நூலை வாசிக்க இருக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் புதிய வெளிச்சம் கிடைக்கிறது.


சித்தப்பாவோடு நெருங்கிய தோழனைப்போல பழகத் தொடங்கும் தளிர் அவரின் வழியே கற்றலுக்கான நிறைய உத்திகளை கற்றுக்கொள்கிறாள். ஆனால், இவையனைத்தும் படிக்கும் மேசையில் அல்ல. ஐஸ்கிரீம் வாங்கும் போதும், சமையலறையில் காளிபிளவர் சமைக்கும்போதும் வேப்பமரத்தடி நிழலிலும். இப்படி கற்றுக்கொள்ளும்போதுதான் அவை தளிருக்கு படிப்பின் சுவை புரிகிறது.


தனது மூளையை selfie எடுப்பது, படிப்பதற்கான தக்காளி முறை, பாடத்தை குறிப்பெடுப்பதில் உள்ள உத்தி, குறிப்புகளைக் கொண்டு தேர்விற்கு தயாராவதற்கான வழிமுறைகள் என பல விசயங்களை கற்றுக் கொள்ளும் தளிர் அதை இன்றைய தேர்வுமுறைகளின் தன்மை அறிந்து பயன்படுத்தவும் கற்றுக் கொள்கிறாள். இப்படி கற்கத் தொடங்கும்போது அவளது பாடங்களில் ஆழமான புரிதல் அவளுக்கு கிடைப்பதை வாசிப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.


ஒருமுறை தளிர் தனது சித்தப்பாவுடன் அவரது ஓவிய நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அவர்களிடையே அங்கு நடக்கும் உரையாடலை தளிர் வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கேட்கவும் பார்க்கவுமான வாய்ப்புகள் அமையுமானால் அது அதியற்புதமான தருணமாக அமையும். தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. தோல்வியைக் குறித்து நாம் யோசிக்கத் தொடங்கும்போதே வெற்றியின் வெளிச்சம் நம்மை நெருங்கத் தொடங்கிவிடும். தோல்வியை நாம் எப்படி அணுகப் போகிறோம் என்பதில்தான் தீர்வு அமைகிறது என்பதை அவர்களின் உரையாடலில் மகிழ்வாக நாம் கற்றுக் கொள்ள முடியும். அவர்களது உரையாடலில் வரும் ‘failcon' போன்ற கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு தோல்வியின் மீதான அச்சத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியது.


யானையையும் பூனையையும் கொண்டு நமது மூளையின் செயல்பாட்டு இரகசியங்களை புரிந்துகொள்ளச் செய்வதுதான் இந்த நூலின் முதன்மையான பகுதி. தளிரின் வழியாக எழுப்பப்படும் நினைவுத்திறன் பற்றிய வினாக்கள் எல்லோரிடமும் எப்போதும் இருக்கக்கூடியவைதான். அதற்கான அறிவியல்பூர்வமான விளக்கங்களை இந்நூலின் வழியாக எளிதாக அறிந்து கொள்ள முடியும்.


புனைவாகவும் அல்புனைவாகவும் தலைப்பிட்டுள்ளதைப் போலவே இந்நூலை நாம் இரண்டு வழிகளிலும் அணுகலாம். இரண்டு வகைகளிலுமே நமது மனதிற்கு நெருக்கமாக இந்நூல் அமைந்திருக்கிறது.


தன்னை சுமாரான மாணவன் என்கிற வரிகளுக்கு ஏற்புடையவனல்ல என கூறியபடி அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் பயணிதரன் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறையின் உயர்பதவிகளில் பணியாற்றியவர். இந்தியத் தூதராக அஜர்பைஜான் போன்ற நாடுகளில் மதிப்பு பெற்றவர் என்பது இந்நூலின் உள்ளடக்கத்திற்கு சான்று அளிப்பதாக அமைந்திருக்கிறது.


இப்படியொரு நூலை உருவாக்கவும் மாணவர்களின் உளவியலை நன்கு உணர்ந்தவர்களாகவும் கல்வியின் சிக்கல்களைக் களைய கவனம் செலுத்துபவர்களாகவும் தங்களது கல்விப் பணிகளை சீரமைத்து செயல்பட்டுவரும் SRV கல்வி நிறுவனத்தின் மதிப்பு மிக்க படைப்பு இது. 


இப்படியொரு படைப்பு ஒவ்வொருவர் கைகளிலும் தவழட்டும். வாங்கி படியுங்கள் குழந்தைகளே.


க.சம்பத்குமார்
க.சம்பத்குமார்

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page