top of page

கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்


சோவியத் ரஷ்யா நமக்கு அளித்துள்ள பொக்கிஷங்களில் ஒன்று “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்” என்ற நூல். நிகோலாய் நோசோவ் எழுதிய இந்த நூல் தமிழில் ரகுரு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2018ல் வாசல் வெளியீடாக வந்த நூல் இன்னும் போதிய கவனம் பெறவில்லையோ என்றே தோன்றுகிறது.


கோடை விடுமுறை என்றாலே நாம் குழந்தைகளாக இருந்த போது குதூகலமாக இருந்த நாட்கள் எப்போதும் நினைவுக்கு வரும். வளர்ந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஆனால் இன்றோ கோடை விடுமுறையில் குழந்தைகளை ஏதேனும் ஒரு வகுப்புக்கு அனுப்புவோமா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புக்கு அனுப்புவோமா என்று திட்டம் தீட்டப்படுகிறது. சில வீடுகளில் விடுமுறை முடியும் முன்னர் தன் குழந்தை ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசரம், இன்னும் சிலருக்கு குழந்தையின் தொந்தரவு இல்லாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம்; இன்னும் சிலருக்கு தாங்கள் வேலைக்குச் செல்லும் வேளையில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலாமையால் வேறு வழியின்றி ஒரு வகுப்பில் சேர்க்கின்றனர். இவ்வாறு பல காரணங்களோடும், முடிவுகளோடும் அருமையான கோடைக் காலம் நகர்கிறது.


இப்படி ஒரு சூழலில் முதலில் பெரியவர்களும், பின்னர் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்.” கோல்யா சினிட்சின் என்ற சிறுவன் தன் கோடைக்கால நாட்களை டைரிக் குறிப்புகளாக எழுதுவதுதான் இக்கதை. தன் தினசரி வாழ்வில் நடப்பதை இச்சிறுவன் எழுதி வருகிறான். தன் டைரியின் பக்கங்கள் முடிவுற்றதால் இக்கதையும் முடிவுறுகிறது என கோல்யா எழுதுவது இந்த நூலின் ஆசிரியர் குழந்தைகளுக்கே உண்டான அழகியலுடன் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதியதைக் காட்டுகிறது.   


கோல்யா, தான் டைரி எழுதத் தொடங்கும் போது என்ன எழுதுவதென்று தெரியாமல் “இன்று எழுதுவதற்கு ஒன்றுமில்லை” என குறிப்பிடுவது குழந்தைகளின் வெளிப்படையான, நேர்மையான வாழ்வியலைக் காட்டுகிறது. எழுத ஒன்றுமில்லாத சிறுவன் போகப்போக ஒரே நாளில் பல பக்கங்கள் எழுதுகிறான். அவன் பயணம் செல்லும் இடமெல்லாம் அந்த டைரியும் உடன் செல்கிறது. உலகம் முழுக்க கோடைக் காலம் என்பது குழந்தைகள் டைரி எழுதப் பழக நல்ல நேரம் தான் போல, ஏனெனில் மற்ற மாதங்களில் புத்தகச் சுமையே மேலோங்குகிறது.


இவ்வாறு துவங்கும் கதையில், கோடையில் குழுவாக ஏதாவது ஒரு கூட்டு உழைப்பினை குழந்தைகள் செய்வது சோவியத் ரஷ்யாவில் வழக்கமானது. அவ்வாறு கோல்யாவும் அவனது தோழர்களும் அவர்களின் குழுவுடன் பல ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பிறகு தேனீக்கள் வளர்ப்பது என்று முடிவு செய்து அப்பயணத்தினை தொடங்குகின்றனர். அதனைப் பற்றி அறிந்துகொள்ள ஆசிரியரை நாடுகின்றனர். மேலும் அறிந்துகொள்ள மற்றும் தேனீக்களை சேகரிக்க மூன்று நண்பர்கள் தங்களின் நகரத்தினை விட்டு, காடு வழியாக, கிராமத்திற்குப் பயணம் மேற்கொள்கின்றனர், அங்கு தங்குவதாக இருந்த ஒரு சிறுவனின் அத்தை வீடு பூட்டியிருக்க, தாங்களாகவே ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்குகின்றனர். அதில் சந்திக்கும் பிரச்சனைகள், அனுபவங்கள், தேனீக்களைப் பின் தொடர்வது, ஏதேச்சையாக சந்திக்கும் பெரியவர் என அனைத்தும் அவர்களின் மனதில் மட்டுமல்லாமல் நமக்குள்ளும் ஆழமாக பதிகிறது. இப்பயணம் தொடர்பாக உண்மையைச் சொல்லாமல் வீட்டில் மூவரும் மாட்டிக்கொள்ளும் காட்சி அனைவருக்கும் சிரிப்பூட்டக்கூடியது. தபாலில் தேனீக்களை பெறப்போகிறோம் என்ற கோல்யாவின் குறிப்பு அவனுக்குப் போலவே நமக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.


தேனீக்கள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிய மூவர், அவர்களின் தவறினால் சேகரித்த தேனீக்களை கோட்டை விட்டதனாலும், தேனீக்களிடம் வாங்கிய கொட்டுகளாலும், தேனீக்கள் வளர்க்கும் பணியினை கைவிட முடிவு செய்கின்றனர், இவர்கள் தவிர மற்ற சிறுவர்கள் கடிதம் மூலம் தபாலில் தேனீக்களைப் பெறுகின்றனர். இம்மூன்று சிறுவர்கள் இல்லாமல் மற்றவர்கள் அப்பணியினை செவ்வனே தொடர்ந்து செய்வது, அதனால் இவர்கள் வருந்தி, பின்னர் அவர்களின் தோழர்களுடன் இணைந்து செயல்பட்டு, சிறப்பாக தேனீக்களை வளர்த்து பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய செய்தி வந்து, இவர்கள் பிரபலமாவது வரை இக்குழுவின் பயணமானது அருமை. இவற்றை வாசிக்கும் போது உலகின் எல்லா திசையிலுள்ள குழந்தைகளும் ஒன்று போல் தான் உள்ளனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களின் சேட்டைகள், வம்புகள், சண்டைகள், கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிடித்த வேலையில் முழு ஈடுபாடு, குழுவாக செயல்படுதல், கவனித்தல் என அனைத்திலும் குழந்தைகள் ஒன்று போல தான் உள்ளனர். இக்குழுவின் வாழ்க்கையில் தேனீக்களும் ஒரு பகுதியாகிவிடுகின்றன.


இக்கதையில் வரும் ஆசிரியர் நீனா செர்ஜியேவ்னா மாணவர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் நேரடியாக பதில்கூறாமல் அவர்களே கண்டறியும் அனைத்து உத்திகளையும் பயன்படுத்துகிறார். அதனால் மீண்டும் மீண்டும் அவரிடமே மாணவர்கள் கேள்விகளுடன் படையெடுக்கின்றனர். “மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் போதும்” என்ற உவமையை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு கற்பது வாழ்நாள் கல்வியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சோர்வில்லாமல், அறிவியல் பார்வையுடன் தேனீக்களின் வாழ்வைப் படிக்கும் இச்சிறுவர்கள் மூலம் நாம் தேனீக்களைப் பற்றி கற்றுக் கொள்கிறோம். அவர்கள் செய்யும் விதவிதமான ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது புன்னகையை வரவழைக்கின்றன. அறிவியலை இப்படியும் கற்கலாமா என்று தோன்றுவதற்கு பதிலாக இப்படித்தான் கற்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.


சோவியத் ரஷ்யாவிற்கே உரித்தான கூட்டு முயற்சிகளையும், குழுக்களையும் குறிக்கும் வண்ணம் “பாலர் சங்கக்குழு”, “இளம் இயற்கையாளர் வட்டம்” மற்றும் “மாணவர்களைக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு” போன்றவைகள் புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன. நம்மிடம் இவ்வாறு குழுக்கள் இல்லையே என்ற ஏக்கம் எழுகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்களுக்கும், குழந்தை உழைப்பாளர்களுக்கும் வித்தியாசம் தெரியாமலல்லவா இருக்கிறோம்!


குழந்தைகளின் உள்ளார்ந்த தேடல்கள், அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்விகள், மறுமுயற்சிகள், கற்றுக் கொள்ளும் புது திறமைகள், என அனைத்தும் இக்கதையில் இயல்பாக உள்ளன. சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கும் தன்மை இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உண்டு என்பதையும், தங்களின் பொறுப்புகளை அவர்கள் கைவிடவும் செய்வர், விட்டதை விட்ட இடத்திலிருந்தே துவங்குவர் என்பதையும் இக்கதை நமக்குக் காட்டுகிறது. பாராட்டுகளை சிறுவர்கள் எதிர்கொள்ளும் விதம் பெரியவர்களுக்கு ஒரு பாடம்!


இச்சிறுவர்கள் பிரபலமான பிறகு, நாட்டின் பல பகுதிகளிலிருந்து கடிதப் போக்குவரத்துகள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் அழகு தான். பல மூலைகளிலுருந்து குழந்தைகள் இணைந்தே வாழ்ந்துள்ளனர் சோவியத் ரஷ்யாவில். அவ்வாறு கோல்யாவிற்கு வரும் ஒரு கடிதத்தில் “தேனீ வளர்ப்பாளன்” என்று அச்சிறுவனைக் குறிப்பிட்டு பெறப்படுகிறது. தனக்குத்தான் விரும்புவது போன்று ஒரு அடையாளம் கிடைத்ததாக அவன் மகிழ்கிறான். அது தானாக வந்துவிடவில்லை. அவனின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு. அப்படி ஒரு அடையாளம் இல்லாமல் தான் நம்மில் பலர் இருக்கிறோம். 


தாங்கள் கோடையில் செய்துள்ள இந்தப் பணி தன் நாட்டின் உருவாக்கத்தில் தங்களது “சிறிய பங்களிப்பு” என்கின்றனர் பெருமையாக. நாம் நமது குழந்தைகளின் பங்களிப்பாக எதைப் பார்க்கிறோம் என்று நினைக்கையில் சற்று அச்சமாக உள்ளது.



செ. பிரியதர்ஷினி
செ. பிரியதர்ஷினி

பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரியில் நிதியாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை பொருளாளராகவும் உள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page