சுல்தானாவின் கனவு: மாற்றத்திற்கான விதை

21ஆம் நூற்றாண்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர்.
இந்த மாற்றங்களுக்கு முன்னோடிகளான பலரின் முயற்சியும், போராட்டங்களும்,
செயல்பாடுகளுமே காரணம். கட்டமைக்கப்பட்ட பிற்போக்கான கற்பிதங்களை
உடைத்து, போராடியவர்கள் பலர்.
இன்று நாம் பெற்றுக் கொண்டிருக்கும் சுகத்திற்குக் காரணமானவர்கள் கண்ட
கனவுகள் ஏராளம். கனவோடு நின்று விடாமல் அவற்றை செயல்படுத்திய
செயல்வீராங்கனை ரொக்கேயா பேகத்தின் பெண்ணியக் கனவுதான், இந்த
'சுல்தானாவின் கனவு'. இந்தியாவின் சுதந்திரம் என்பது பெண்களின் சுதந்திரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என உரக்கச் சொன்னவர் ரொக்கேயா பேகம்.
வங்காளத்தில் வீட்டின் உள்பகுதியில், பர்தா முறையில் தனிமைப்படுத்தப்பட்டு
ஜெனானாவுக்குள் அடைபட்டிருந்த ரொக்கேயாவிற்கு கிடைத்த கல்வியால், அவரது சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்பட்ட மாற்றத்தை நாம் அறிய முடிகிறது. தான் பயணித்த பகுதிகளில் பெண்களின் நிலை குறித்து சிந்தித்து தன் படைப்புகளில் அவற்றை மையப்படுத்தி எழுதத் தொடங்கினார்.
1906ஆம் ஆண்டு ‘இந்தியன் லேடீஸ் மேகசின்’ என்ற இதழில் வெளியான
ரொக்கேயா பேகத்தின் முதல் அறிவியல் புனைவுக் கதை Ladyland தான்
சுல்தானாவின் கனவு கதை. நூற்றாண்டுகள் கடந்து இன்று நாம் அனைவரும்
வாசிக்க தமிழில் எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் திவ்யா பிரபு.
‘இது பெண்ணிய தேசம், அறமே இங்கு ஆட்சி செய்கிறாள். வாருங்கள் வாசிப்பின்
சிறகுகளை அசைத்து பெண்ணிய தேசத்திற்குள் காலப்பயணம் செய்யலாம்’ என சாரா நம்மைக் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். ஆண்களின் உலகம் குறித்து
சுல்தானாவிற்கு விளக்கம் அளிப்பது போல் நமக்கு விளக்குகிறார்.
சாரா அளிக்கும் விளக்கமும், சுல்தானாவின் எதிர்கேள்விகளும் வாசிக்கும் ஆண்
மற்றும் பெண் குழந்தைகளின் மனதில் மாற்றத்திற்கான விதை முளைவிடத்
தொடங்குவதற்கான தொடக்கப்புள்ளி எனலாம். நடந்து செல்லும் பாதை எங்கும்
பெண்கள் மட்டுமே உள்ள உலகம், பெண்களின் அறிவியல் அறிவால் செயல்படும்
அரசாட்சி போன்ற கதையின் போக்கில், அறிவாற்றலே அடிமைத்தனத்திலிருந்து
விடுபடுவதற்கான சிறந்த செயல்பாடு என்பதை இக்கதையில் உணர்த்தியுள்ளார்.
புத்திசாலித்தனமே உடல் வலிமையை விட வலிமையானது என்று
வலியுறுத்தியிருக்கிறார்.
ஆணாதிக்கத்திற்கு எதிராக பல கருத்துக்களை சாரா முன்வைக்க, அதைப்
புரிந்துகொள்ள, சுல்தானா எழுப்பும் கேள்விகள் வாசிக்கும் நம்மை புரிதலுக்கு கூட்டிச் செல்கிறது. ஆண்களே அனைத்தையும் நிர்வகிப்பவர்களாக இருந்த உலகத்தை எப்படி மாற்ற முடிந்தது? எந்தச் சூழலில் இத்தகைய மாற்றம் சாத்தியமாயிற்று? என கதைக்குள் கதைப் பயணம் அழைத்துச் செல்கிறார் சாரா.
13 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராணியின் அறிவியல் ஆர்வம் பெண் கல்விக்கு
விதையாகிறது. நாடு சந்திக்கும் போர் நெருக்கடியை பெண்கள் எப்படி அறிவியல்
அறிவால் முறியடித்தனர்? பெண்களின் ஜெனானா போல் ஆண்களின் மர்தானா
எப்படி உருவானது? மர்தானா நடைமுறைக்கு பின் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்
என்னென்ன என்பவை சாரா சொல்லும் கதைக்குள் இருக்கும் ரகசியங்கள்.
ரகசியத்தின் ஆணிவேரான ராணியின் அறிமுகத்துடன் சுல்தானாவின் கனவு
ரொக்கேயாவின் எழுத்துகளால் நிறைவு பெறுகிறது.
1931இல் ரொக்கேயா எழுதிய ‘உண்மையான விடியல்’ என்ற கட்டுரையும்,
அவருடைய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மீம்ஸ் வடிவில் தொகுக்கப்பட்ட
வரிகளும் சுல்தானாவின் கனவுக்கு பலம் சேர்ப்பவை. கதைக்கு மிக நெருக்கமான கருப்பு வெள்ளை ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளார் ஓவியர் சின்மயா தேவி.
வாசிப்பின் மூலம் சிறார்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த புக்ஸ் ஃபார் சில்ரனுடன்
இணைந்து சுல்தானாவின் கனவை புத்தகமாக்கியுள்ள ஓங்கில் கூட்டத்தின்
செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். நூற்றாண்டுக்கு பிறகு சுல்தானாவின் கனவை நம்
குழந்தைகளும் வாசித்து மகிழ்ந்திட மொழியாக்கம் செய்துள்ள திவ்யா பிரபுவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தற்போது நாம் அனைவரும் குழந்தைகளின் நலனில் கவனமும் அக்கறையும்
செலுத்துவது சிறப்பான செயல். அதைவிட அந்தக் குழந்தையின் தாயை
வலுப்படுத்துவது மிகமிக அவசியமான ஒன்று. என்ன நடந்தாலும் சரி, பெண்களே
விழித்தெழுங்கள். உங்களுடைய கடமைகளை நிறைவேற்றப் புறப்படுங்கள் என தன் எழுத்துகளின் மூலம் எழுச்சியூட்டும் சுல்தானாவின் கனவை வாசிப்போம். வாசிப்பின் மூலம் மாற்றத்திற்கான வழிகளை செயல்படுத்த யோசிப்போம்.
நூலின் பெயர்: சுல்தானாவின் கனவு
ஆசிரியர்: ரொக்கேயா பேகம்
தமிழில் : திவ்யா பிரபு
வகைமை: சிறார் கதை
பதிப்பகம்: ஓங்கில் கூட்டம் & புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 9498062424

கதை சொல்லி, தமுஎகச அறம் கிளையின் பொருளாளர்.
பெருந்தலைவர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர்.
2020ஆம் ஆண்டு முதல் தமுஎகச அறம் கிளையின் முகிழ் சிறார் குழுவை தொடங்கி, நடத்தி வருகிறார். இணைய வழியில் கதை சொல்லல், குழந்தைகளுக்கான நிகழ்சிகள் ஒருங்கிணைத்தல் என்று சிறார் வெளியில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.






Comments