பறக்கும் செல்போனும் கோவைச் சுற்றுப்பயணமும்
- ரா.சண்முகலட்சுமி

- 1 day ago
- 2 min read

பொது முடக்க காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கற்றலுக்காக பயன்படுத்தத் துவங்கியதிலிருந்து அலைபேசி மாணவர்களின் ஓர் உடல் அங்கமாகவே மாறிவிட்டது.
அங்கமாக மாறிய அலைபேசி தன்னுள் பொதிந்துள்ள தகவல்கள் மூலமாக இருந்த இடத்தில் உலகைச் சுற்றிக் காட்டுகிறது. அலைபேசிக்கு இறக்கை முளைத்து அதன் மீது பயணம் செய்யும்படி பரிணமித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை கதையாக்கியுள்ளார் எழுத்தாளர் மு.ஆனந்தன்.
எழுத்துலகில் தன் முத்திரையை கவிதை,சிறுகதை,கட்டுரை,மொழியாக்கம் என அழுத்தமாக பதிவு செய்துள்ள மு.ஆனந்தன் சிறார் இலக்கியத்திற்குள் இந்நாவல் மூலம் தடம் பதித்துள்ளார்.குழந்தைகள் வாசிக்கத் தகுந்த எளிமையான எழுத்து நடை, விறு விறுப்பான கதைக்கு இடையே குட்டிக் குட்டி பாடல்கள் என சுவாரசிய விருந்து படைத்துள்ளார்.
25 குட்டிக் குட்டி அத்தியாயங்கள் கோவையைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை தருகிறது. ஆறாம் வகுப்பு படிக்கும் தாராவின் பிறந்த நாள் பரிசான பறக்கும் செல்போனுடன் தன் நண்பன் மாறனுடன் அவர்கள் வசிக்கும் கோவையைச் சுற்றுகின்றனர். வெள்ளியங்கிரி மலை, வ.உ.சி.பூங்கா, புரூட் பில்ட் மால், டவுன் ஹால் மணிகூண்டு என நகரின் சிறப்புமிக்க பகுதிகளையும், வரலாற்றையும் சொல்கிறது.
கோயம்புத்தூர் எனப் பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் சுவாரசிய கதைகள், 1800 வருடத்திற்கு முந்தைய பேரூர் பட்டீஸ்வரன் கோவில் வரலாறு, வெளிநாட்டிலிருந்து வரும் பறவைகள், 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் இருக்கும் காடு, 100 வருடத்திற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலை என நாவல் குட்டி குட்டித் தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.
தாரா, மாறன் இருவருடன் வாசிக்கும் நாமும் பறக்கும் செல்போன் அலாவுதீனுடன் கோவையில் உள்ள வாலங்குளம், உக்கடம் பெரியகுளம், பேரூர் பட்டீஸ்வரன் கோவில், சிறுவாணி அணை என சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை தருகிறது.
காடு என்றால் அதற்கு ராஜா இருப்பார். அவர் பெரும்பாலும் சிங்கமாகத் தான் இருப்பார் என்ற மாயபிம்பத்தை உடைக்கிறது. எல்லா காடுகளிலும் சிங்கங்கள் இருக்காது. குறிப்பிட்ட சில காடுகளில் மட்டும் தான் இருக்கும் என்ற தகவலையும் கூறுகிறது.
கோவைக்கு குடிநீர் எங்கிருந்து வருகிறது? ஆறு, குளங்களின் இன்றைய நிலை எப்படி உள்ளது? என்பதையும் எளிமையாக விளக்குகிறது. நகரிலிருந்து காட்டுக்குள் நுழையும் தாராவும், மாறனும் சந்திக்கும் பேராபத்தை எப்படி எதிர்க்கொள்கிறார்கள்? அவர்களுக்கு யார்.. யார் உதவி செய்கிறார்கள்? என திக் திக் திருப்பங்களுடன் விறுவிறுப்பான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.
பறக்கும் செல்போன் புதுவித சிந்தனை கற்பனையும், அறிவியலும் இணைந்த கதைக்களம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் வாசிப்பிற்கும் சிறந்த படைப்பு. காடுகளையும்,விலங்குகளையும் பாதுகாப்பது குறித்து குழந்தைகள் எளிமையாக புரிந்து கொண்டு செயல்பட வழிகாட்டுகிறது.
செல்போனின் ஆபத்தையும் இடை இடையே பேசுகிறது. குழந்தைகளுக்கான முதல் படைப்பு என சொல்லமுடியாத இயல்பான எழுத்து நடை, கதைக் களத்திற்கு ஏற்ற ஓவியங்கள் என நாவல் மிளிர்கிறது. ஆகச்சிறந்த படைப்பை புத்தகமாக்கிய புக்ஸ் ஃபார் சில்ரன் ப்திப்பகத்திற்கும்,எழுத்தாள்ர் மு.ஆனந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கதை சொல்லி, தமுஎகச அறம் கிளையின் பொருளாளர்.
பெருந்தலைவர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர்.
2020ஆம் ஆண்டு முதல் தமுஎகச அறம் கிளையின் முகிழ் சிறார் குழுவை தொடங்கி, நடத்தி வருகிறார். இணைய வழியில் கதை சொல்லல், குழந்தைகளுக்கான நிகழ்சிகள் ஒருங்கிணைத்தல் என்று சிறார் வெளியில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.





Comments