பன்முகத்தன்மையைக் கொண்டாடும் சிறார் வெளி : ‘காஷ்குமரி’
- சுகன்யா ராமநாதன்

- 17 hours ago
- 2 min read

தமிழ் இலக்கியத்தில் அனைத்து வகைமைகளிலும் சிறந்த படைப்புகளை தந்து, பல விருதுகளையும் பெற்றிருப்பவர் ‘நெய்வேலி பாரதிக்குமார்’. சிறார் இலக்கியத்தில் அவருடைய முதல்படைப்பு ‘காஷ்குமரி’, நிவேதிதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.
ஒரு வலசைப் பறவையின் மேல் ஏறிக்கொண்டு, இந்தியா என்ற பரந்து விரிந்த தேசத்தின் தென்முனையான குமரியில் தொடங்கி, வடக்கே உள்ள லே, லடாக் வரை ஒரு பயணம் போய் வந்தால் எப்படி இருக்கும்? அந்தப் பயணத்தின் ஊடாகத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கும் ஐந்திணைகளையும் கண்டு களித்தால் அது எப்படிப்பட்ட ஒரு பூரிப்பைத் தரும்! ஒவ்வொரு நிலத்தின் மனிதர்களும் தனித்துவமான மொழி, பண்பாடு, கலை, உணவு எனப் பல்வேறு விருந்துகளைப் படைக்கிறார்கள். அந்த விருந்து நம் குழந்தைகளுக்குப் பரந்த சிந்தனையை வளர்த்தெடுக்க ஊட்டமளிக்கிறது.
ஒரே மொழி, ஒரே பண்பாடு மட்டுமே உலகம் என்று நினைக்கும் கிணற்றுத் தவளைகளாக இல்லாமல், உலகத்தை எட்டிப் பார்க்கும்போது பன்முகத்தன்மையின் அழகிலும் வசீகரத்திலும் தொலைந்துபோகாமல் இருக்க முடியாது. எல்லோரையும் மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அன்புடன் நடக்கவும் கற்றுக்கொள்வார்கள். அதே நேரத்தில், இந்தப் பயணத்தின் வழியாகத் தங்களின் தனித்துவமான அடையாளத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்யக் கற்றுக்கொள்கிறார்கள்.
பேதமை பரப்பப்படும் இன்றைய காலகட்டத்தில், பன்முகத்தன்மையின் அழகைப் போற்றும் ‘காஷ் குமரி’ போன்ற படைப்புகள் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவை.
ஒரு நல்ல சிறார் இலக்கியப் படைப்பு, வாசிப்பவருக்கு வெறும் வாசிப்பு அனுபவத்தை மட்டும் தருவதில்லை; அது ஒரு வாழ்வனுபவமாகவும் மாறுகிறது. அந்த வகையில், இந்தக் கதைகள் அகரனோடு சேர்ந்து பயணித்த ஓர் அனுபவத்தைத் தருகின்றன. அவன் கண்டுணர்ந்த ஆச்சரியங்களை நமக்குக் கடத்துகின்றன. அவனுடைய சோகங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
இந்தக் கதைகள் அன்பை விதைக்கும் கதைகள். சக மனிதர்கள் மீது அன்பாக இருப்பது இயல்பானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. இந்தப் படைப்பை வாசிக்கும் எவரும், இந்தச் சமூகத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சலுகைகளை நினைவுகூராமல் இருக்க முடியாது. அந்தச் சலுகைகள் நமக்கு வழங்கியிருக்கும் பொறுப்புகளையும் அவை ஞாபகப்படுத்துகின்றன.
‘லங்கர் சிங்’ கதையில், இந்திய தேசத்தில் இன்னமும் எண்ணற்ற மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது. ‘படிக்கிணறு’ கதையில், தண்ணீர் என்னும் அமுதத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பற்றாக்குறையால் மனித சமூகம் எதிர்கொள்ளும் துயரங்களையும் பேசுவதோடு, அதன் விளைவாகப் பெண்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளையும் சேர்த்துச் சொல்கிறது.
குழந்தைகளின் மனதை அழகாகப் பிரதிபலிக்கும் கதைகள் இவை. குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட வலிகளையே பெரிதும் நினைவில் கொள்கிறார்கள். ‘இன்பச் சுற்றுலா தந்த இனிய சிந்தனை’ என்ற கதையில், நண்பனால் சுற்றுலாவுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படுத்தும் மனவேதனையே மேலிடுகிறது. இந்தச் சமூகத்தின் சமத்துவமின்மை குழந்தைகளை எவ்வாறு கையறு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை அந்தக் கதை பேசுகிறது.
அறிவியல் மனப்பான்மையையும் இந்தக் கதைகள் குழந்தைகளிடத்தில் விதைக்கின்றன. அகரனின் தந்தை தொல்லியல் துறையில் பணிபுரிகிறார். புராணங்களை வரலாறாக மாற்ற முற்படும் தற்போதைய சூழலில், வரலாறும் அறிவியல் அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டியது என்பதை இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. ‘காந்த மலை’ கதையிலும், அடிப்படை அறிவியல் சார்ந்த கேள்விகளை எழுப்புவதன் மூலம் நம்மைச் சுற்றிச் சொல்லப்படும் கட்டுக்கதைகளையும் புரட்டுகளையும் கண்டறிந்து புறந்தள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பன்முகத்தன்மையைப் போற்றும் இந்தக் கதைகள், தனித்துவத்தின் அவசியத்தையும் வெளிச்சப்படுத்துகின்றன. ஒருவருடைய பெயர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் சொல்கின்றன. அகரன் தனது பெயருக்கான விளக்கத்தைச் சொல்லும்போது, அது தமிழ் மொழியின் தொடக்க எழுத்து என்றும், எல்லாவற்றிற்கும் தொடக்கமானவன் என்றும் சொல்கிறான். இதைக் படிக்கும்போது, வடமொழி ஜாதகப் பரிந்துரைகளின்படி பெயரிடப்படும் பெரும்பான்மையான நம் தமிழ்ச் சமூகக் குழந்தைகளிடம் 'உன் பெயரின் அர்த்தம் என்ன?' என்று கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை எழாமல் இல்லை.
அதே சமயத்தில், நாவலின் உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். மேலும், தமிழ் எழுத்துகளில் ஆங்கிலச் சொற்களை வாசிப்பது, வாசிப்புச் சுமையை அதிகமாக்குகிறது.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சூழ்நிலைகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வது, கேள்விகள் கேட்பது, சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது, இயற்கையைப் பாதுகாப்பது, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய தேசிய உணர்வை வளர்த்துக்கொள்வது என ஏராளமான பாடங்களை குழந்தைகளின் மனதில் இயல்பாகவே பதிய வைத்துவிடுகின்றன இந்தக் கதைகள்.
தொடர்கதைகளின் வழியாக ஒரு பயணத்தை உருவாக்கியிருப்பதும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அகரன் அடுத்து எங்கே போகப் போகிறான் என்ற ஆவல் வாசிப்பவரிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கும் போதும், ஒரு கதையை முழுமையாக வாசித்த திருப்தியையும் இந்தத் தொடர் தருகிறது.
உள்ளடக்கத்திலும் சரி கதைச் சொல்லும் முறையிலும் சரி ‘காஷ்குமரி’ தமிழ் சிறார் இலக்கியத்திற்கு ஒரு இனிமையான நல்வரவு. மெய்நிகர் உலகத்தின் அதீதங்களில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகளை மீட்டு, இயல் உலகத்தின் அற்புதங்களைக் காட்ட வழிகாட்டுகிறது. யாவர் கரங்களிலும் கைபேசியின் இடத்தை ‘காஷ்குமரி’ ஆக்கிரமிக்கட்டும்.
நூல்: காஷ்குமரி
எழுத்தாளர்: நெய்வேலி பாரதிக்குமார்
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,
தொடர்புக்கு: 89393 87296

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.





Comments