மாதுளைப் பறல்களென குழந்தைகளின் ரகசியம்
- க.சம்பத்குமார்

- 2 days ago
- 2 min read

பள்ளி தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. கோடை விடுமுறையில் உறவுகளோடும் சக நண்பர்களோடும் வாயாடித் திரிந்த குழந்தைகள் இந்த காலத்தில் “கீப் கொய்ட்…சைலன்ஸ்” என்கிற சொற்களின் அதிகாரத்திற்குள் மீண்டும் வந்து விழுந்திருப்பார்கள்.
குழந்தைகள், வாயை கட்டிக் கொண்டு காதுகளை மட்டும் வகுப்பறையில் திறந்து வைத்திருக்க பழக்கமாகியிருக்கும் இவ்வேளையில் நாம் அறிமுகப்படுத்த இருக்கின்ற சிறிய நூலொன்று குழந்தைகளின் மனதை அவர்களின் சொற்களிலேயே பதிவு செய்திருக்கின்றது. நீண்ட நாட்களாக குழந்தைகள் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் உஷா ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள ‘குழந்தைகளின் ரகசியம்' என்கிற நூல்தான் அது.
நடைமுறையில் நமது வகுப்பறைகள், 'குழந்தைகள் மையக் கல்விமுறைக்கு' வந்துவிட்டதாக நாம் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் வகுப்பறைகள் குழந்தைகளின் சுதந்திரத்திற்கு வாய்ப்புள்ள இடங்களாக இன்னும் மாறவில்லை என்பதே நிதர்சனம். பாடத்திட்டங்களும் மதிப்பெண்களும் தேர்வுகளும் இன்னும் வலு குன்றாமல் இருப்பதே வகுப்பறைகளின் மாறாத்தன்மைக்கு சான்றாக விளங்குகின்றன. தற்காலப்படுத்திய பாடத்திட்டங்கள் குழந்தைகளை பள்ளிச்சூழல்களில் சிறிது ஓய்வாக நண்பர்களோடு உரையாடிக் களிக்கும் நேரத்தையும் அபகரித்துக் கொள்கின்றன. உணவுண்ணும் நேரத்தைக்கூட அபகரித்து கணினி அறைகளுக்குள் குழந்தைகளை தள்ளிவிடுகின்றன.
பதின்பருவத்தை எட்டும்வரை குழந்தைகள் தங்கள் உரையாடல்களின் வழியாகவே சமூகத்தோடு வலுவான பிணைப்புகளை உருவாக்கிக் கொள்ள முனைகின்றனர். ஆனாலும் அவர்கள் யாரிடமும் அவ்வளவு எளிதில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் விரும்புவதில்லை. பழக்கத்தின் வழியாகவும் தொடர் உரையாடல்கள் வழியாகவும் யாரிடம் அவர்கள் நெருங்கி வருகிறார்களோ அவர்களிடமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். வகுப்பறைகளில் குழந்தைகள் தனித்தனி குழுக்களாக பிரிவதும் குழுவினர்களிடையே ஏற்படும் முரண்களுக்கும் அடிப்படையாக அமைவதே குழந்தைகளின் இப்படியான உளப்பூர்வமான நட்பு இணைத் தேர்விற்காகத்தான்.
குழந்தைகளுக்கான இந்த அடிப்படை உரிமைகள் கூட வரம்புமீறலாகவும் ஒழுங்கீனமாகவும் கருதுகின்ற பள்ளி வளாகச் சூழலே அவர்களின் அதீதமான கோப உணர்ச்சிக்கும் நெறிபிறழான நடத்தைகளுக்கும் காரணமாய் அமைகின்றன.
வகுப்பறைகள் மட்டுமின்றி வீட்டுச்சூழல்கள் கூட பல நேரங்களில் குழந்தைகளின் அக திறப்புகளுக்கான வாய்ப்பினை அளிப்பதில்லை. பெரும்பாலான அரசுப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பணிச்சூழல் காரணமாக குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். வீட்டின் மூத்த குழந்தைகளே பெற்றோர்கள் வரும்வரையில் வீட்டிற்கான கடமைகளை நிறைவேற்றுபவர்களாக மாறிவிடுகின்றனர். இப்படியான சூழல்கள் குழந்தைகளிடம் அவ்வப்போது தோன்றி மறைகின்ற உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தடையாக அமைகின்றன. தன் தலைமுடியைக் கண்ணாடி முன் நின்று அழகழகாய் வாரிப் பார்ப்பதுபோல் தன்னுள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசிப்பழக சூழலின்றி புதைத்துக் கொள்கின்றனர் குழந்தைகள்.
கள்ளம் கபடமற்று அனைவரோடும் கலந்துறவாடி பேசி மகிழ்கின்ற ஆரோக்கியமான சூழல் வாய்க்கப் பெறாத குழந்தைகள் நிறைந்ததாக இச்சமூகம் மாறி வருகிறது. குழந்தைகள் குழந்தைகளாக வளர வாய்ப்பில்லாத எதிர்கால சமூகம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திடும் என்பது குறித்த பார்வை பெரியவர்களாக நம் அனைவருக்குள்ளும் அவசியம் ஏற்பட்டாக வேண்டும்.
தொடர்ந்து குழந்தைகளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் உஷா ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள ‘குழந்தைகள் ரகசியம்' என்கிற நூல் உணர்த்தும் செய்திகள்தான் மேலே குறிப்பிட்ட செய்திகள் குறித்த உணர்வுகளை என்னுள் கடத்தியது. தான் சந்திக்கும் குழந்தைகளிடையே படைப்பாற்றல் கல்வியை பயிற்றுவித்து அவர்களை வாழ்வியல் திறன் பெற்றவர்களாக மாற்றிட உஷா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. குழந்தைகளுக்கு கற்பிக்கவும் அவர்களிடம் கற்றுக்கொள்ளவதுமாக நிறைந்த அவரது பயிற்சிக்களத்தில் விளைந்த நல்லதொரு செயல்முறைதான் இந்த புத்தகமாக விரிந்துள்ளது.
ஆறுமாத காலம் தொடர்ந்து ஒரு அரசுப்பள்ளியில் திறன் பயிற்றுநராக பணியாற்றியதால் நூலாசிரியரை தன்னுள் ஒருவராக குழந்தைகள் உணரத் தொடங்கியுள்ளனர். கதை எழுதத் தொடங்குவதன் முயற்சியின் ஒரு திருப்பத்தில் குழந்தைகள் தங்கள் வாழ்வனுபவங்களை ஆசிரியரோடு் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அப்படி குழந்தைகள் பகிர்ந்த சுய அனுபவங்கள் மாதுளையின் குட்டிக்குட்டி பறல்களாக நூலில் அணி செய்கின்றன.
நம் பார்வைக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும் இக்கதைகளை வாசிக்கும்போது குழந்தைகளின் மனதினை வாய்க்கப் பெறுபவர்கள் தமக்குள் சுடறேற்றிக் கொள்வார்கள். அம்மாக்களோடான சண்டைகளும் அப்பாக்களோடான பயணங்களும் உறவுகளோடான நெருக்கங்களும் தம்பி தங்கைகளோடும் வளர்ப்பு பிராணிகளோடுமான அவர்களது உலகம் மிகச்சிறியதாக நமக்கு தெரியக்கூடும். அவர்களின் மன அதிர்வுகள் நமக்கு கேலியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவைகளின் வழியே அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் அழிவில்லாததாக அமைகின்றது.
‘குழந்தைகளின் ரகசியம்' என்கிற இந்நூலிற்கு ச. மாடசாமி அய்யா அவர்களின் அணிந்துரை இரண்டு பக்கங்களிலான ஆய்வுரையாக அமைந்திருப்பது அழகு.
எடுத்ததும் வாசித்து முடித்துவிடுகிற அளவில் சிறியதாக உள்ள இப்புத்தகம் வாசிப்பவர்களை குழந்தைகளுக்கு நெருக்கமானவர்களாக மாற்றிடும் சூட்சுமம் பொருந்தியது. பாரதி புத்தகாலயம் பதிப்பித்த குழந்தைகள் குறித்த நூல்களில் கவனம் பெறவேண்டிய நூல் இது.
நம்பிக்கையோடு உங்கள் கைகளிலேந்தி மனதில் இருத்துங்கள் ‘குழந்தைகளின் ரகசிய’த்தை. நல்லதொரு அனுபவம் கிட்டும் உங்களுக்கும்.

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.





Comments