‘டாட்டூ’ – உடலில் வரையும் ஓவியம் அல்ல. ஆழ்மனதைத் திறக்கும் கதவு!
- ரமாதேவி ரத்தினசாமி

- 1 day ago
- 2 min read

எந்த ஒரு டாட்டூவைப் பார்த்தாலும் நமக்கு அறிமுகமில்லாதவராயினும் ஒரு கணம் நமது பார்வை அந்த ஓவியத்தில் நிலைகுத்தி மீள்வது இயல்பு. அதுவும் ஓவியத்தின் அழகு நம்மை ஈர்த்துவிட்டால் அங்கிருந்து கண்களை எடுப்பது கடினம்தான்.
சரிதா ஜோ எழுதியுள்ள ‘டாட்டூ’ நாவல், “உடலில் வரையப்படும் இந்த ஓவியங்களுக்குள் நினைவுகளையும் வலிகளையும் புதைக்க முடியுமா?” என்ற சுவாரஸ்யமான கேள்வியை முன்வைக்கிறது.
கதையின் நாயகி மாயாவைத் துரத்தும் கொடூரமான கனவுகளுடன் தொடங்குகிறது நாவலின் கதைக்களம். தீ, பாம்பு, டிராகன், கழுகு, பாலைவனம், புழுக்கள், திமிங்கலம் என அவளைத் தூங்க விடாமல் விரட்டும் கனவுக் குறியீடுகளுக்குக் காரணம் தெரியாமல் துடிக்கிறாள்.
மாயாவின் தோழி நட்சத்திராவுக்கு டாட்டூ மீது இருக்கும் ஈடுபாடு, கதையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. டாட்டூ என்பது அலங்காரத்திற்காக வரையப்படுவதல்ல, அது ஒரு மனிதனின் நினைவு, அவன் சார்ந்த கலாச்சாரம், அவனுக்குள் உறைந்திருக்கும் உணர்வு என்பதை நாவல் அழகாக எடுத்துரைக்கிறது.
5000 முதல் 7000 ஆண்டுகள் பழமையான பச்சைக் குத்தும் கலாச்சாரம் முதல், ஐஸ்மேன் உடலில் காணப்பட்ட டாட்டூக்கள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நிலவிய மரபுகள், ஜப்பானின் ‘ஐரேசுமி’, நியூசிலாந்தின் மோரியர் பழங்குடியினரின் பச்சைக் குத்தும் வழக்கம் என டாட்டூவின் வரலாற்றுச் செய்திகளை ஆங்காங்கே தூவிச் செல்வதன் மூலம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பயணத்தையும் தருகிறார் எழுத்தாளர் சரிதா ஜோ.
அம்மாயி – அப்புச்சி வீடு, பொங்கல், ஜல்லிக்கட்டு, வள்ளித் திருமணம் போன்ற நினைவுகள் கிராமியச் சூழலை கண்முன் காட்டுகிறது.
நாவலின் மிக முக்கியமான பலம் சிக்மண்ட் ஃப்ராய்டின் கனவு பற்றிய உளவியல் கோட்பாடுகளை கதைக்குள் இயல்பாகப் பின்னியிருப்பதுதான். நனவிலி மனம், ஒடுக்கப்பட்ட ஆசைகள், மறக்கப்பட்ட நினைவுகள், மனக்காயங்கள் ஆகியவை கனவுகளின் வழியாக வெளிப்படுகின்றன.
நமக்கே தெரியாத நம்முடைய மன அழுத்தங்களை, நாம் மறக்க நினைக்கும் நினைவுகளை, கனவு மூலமாக வெளியே கொண்டு வருகிறது.
ஒரு கயவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமி தனது எட்டு வயது முதல் 23 வயது வரை தூங்க முடியாமல் வலியைச் சுமந்து கொண்டிருப்பது எத்தனை கொடியது? ஆனால் அந்த கொடூரத்தைச் செய்த ஆண் எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தன் வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது எத்தனை பெரிய முரண்?
இறுதியில் அந்தக் கயவனைத் தேடும் மாயாவும் அவளது நண்பர்களும் எப்படி அவனைக் கண்டு பிடிக்கிறார்கள்? என்ன தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதை தனது விறுவிறுப்பான நடையில் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.
பெண்ணியக் கருத்துகள் திணிக்கப்படாமல் மெல்லிய நூலாக இழையோட விடுவது ஆசிரியரின் டச். பச்சை குத்தாமல் ஆண்களுக்கு பெண்கள் உணவு பரிமாறக்கூடாது என்ற கிராமத்து வழக்கம் பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு உளவியலோ என சந்தேகத்தை முன் வைக்கிறார்.
நிஜ உலகமும் கனவு உலகமும், கடந்த காலமும் நிகழ்காலமும், நினைவும் கற்பனையும் ஒன்றுக்கொன்று கலக்கும் விதம் இளையோர் வாசகர்களுக்கு புதுமையான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.
‘டாட்டூ’ என்பது உடலில் குத்தப்படும் ஒரு குறியீட்டின் கதை மட்டுமல்ல. மனதில் அழிக்க முடியாமல் பதிந்திருக்கும் நினைவுகளின் கதை. நாம் மறந்துவிட்டதாக நினைக்கும் சில அனுபவங்கள் உண்மையில் நம்மை விட்டு மறைவதில்லை. அவை கனவுகளாகவும், பயங்களாகவும், குறியீடுகளாகவும் நம்மிடம் திரும்பி வருகின்றன.
அந்த மறைக்கப்பட்ட நினைவுகளின் கதவுகளைத் திறக்கிறது ‘டாட்டூ’ என்ற சுவாரஸ்யமான கதை.
டாட்டூ இளையோருக்கான நூலா? ஆம், இளையோருக்கான நூல். ஆனால் பெரியோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
டாட்டூ உளவியல் நூலா? ஆம் நூலின் மையக் கருத்தே உளவியல் சிக்கல்கள் தான்.
டாட்டூ த்ரில்லிங் நூலா? ஆம் விறுவிறுப்பான மர்ம நாவல் போன்றது.
டாட்டூ பெண்ணிய நூலா? ஆம் பெண்ணியமும் பேசுகிறது.
டாட்டூ பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வூட்டும் நூலா? ஆம் பெண்குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெண்குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் நூல்.
இத்தனையும் ஒரே நாவலில் எப்படி இருக்க முடியும்? இருக்கிறதே, அது தான் 'டாட்டூ'.
இளையோர் இலக்கியத்தில் கவனிக்கத்தக்க ஒரு புதிய முயற்சி.
நூல் : டாட்டூ
ஆசிரியர்: சரிதா ஜோ
வகை : இளையோர் நாவல்
பதிப்பகம்: ஆலா பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ₹180

அரசுப்பள்ளி ஆசிரியையாக 29 ஆண்டுகள் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அமெரிக்கா, பெல்ஜியம்,ஸ்வீடன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்விசார் கருத்தரங்குகளிலும் பாலினச்சமத்துவம், பெண்கல்வி, பெண், தலைமைத்துவம் போன்ற கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர். ஆசியாவின் சார்பாகவும் இந்தியாவின் சார்பாகவும் ஐ.நா. சபையில் இருமுறை பங்கேற்று இந்தியாவின் குரலை உலக நாடுகளில் பதிவு செய்தவர். 18 நூல்களை எழுதியுள்ளதுடன் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுபெற்ற எழுத்தாளர். வெளிநாடுகளில் தான் கண்ட பள்ளிகளின் மாதிரியாக தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கென SKYWALK E International Play School துவங்கி நடத்தி வருபவர்.





Comments