வாசித்துத் தீராத உலகை வாசிப்போம், வாருங்கள்!

குழந்தைகளே, இந்த வாரம் நாம் ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை, சின்ன சின்ன புத்தகங்களாக உள்ள ஒன்பது புத்தகங்களைக் குறித்தே நாம் பேச இருக்கின்றோம்.
இந்தப் புத்தகங்களைக் குறித்து இப்போது பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அதற்கு முன்னதாக நீங்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் கடந்த மாதத்தில்
பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளி நேரத்தில் வெளியே சென்று வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆம். எங்கள் பள்ளியில்கூட ஆசிரியர்கள் அரசின் அனுமதியோடு தினமும்
வெளியே சென்று வந்து கொண்டிருந்தார்கள். வேறொன்றுமில்லை, இந்தியாவில் மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது இயல்பு. அந்த அடிப்படையில் இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக ஆசிரியர்கள் வெளியே சென்று வர
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அப்படி பள்ளி ஆசிரியர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்பு குழந்தைகளை ஒரே ஆசிரியராக நான் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மூன்று வகுப்பு
குழந்தைகளையும் தனி ஒருவனாக நான் பார்க்க வேண்டிய சூழல் இருந்தபோது அனைத்து குழந்தைகளும் ஈடுபாட்டோடு செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் எனது நினைவிற்கு வந்தவர் டேவிட் அட்டன்பரோ. டேவிட் அட்டன்பரோ உலகின் மிக முக்கியமான பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயற்கையியல் சார்ந்த ஆவணப்படங்களை இயக்குபவராக பணியாற்றிவருகிறார். அவர் இயக்கிய இயற்கையியல் சார்ந்த ஆவணப்படங்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதாகவும் பல முக்கிய இயற்கைக் கூறுகளை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாகவும் திகழ்ந்து வருகின்றன.

அவரது ஆவணப்படங்கள் இயற்கையின் அழகியலை மட்டும் வெளிப்படுத்துவதாக இல்லை. அதோடு, இயற்கையில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளையும், காலநிலை மாற்றச்
சிதைவுகளையும், மக்களிடம் உணர்த்துவதை, இவரது ஆவணப்படங்கள் சிறப்பாக செய்துகொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தை குழந்தைகளுக்கு இந்நேரத்தில் காண்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரது ஆவணப் படம் ஒன்றை பள்ளி வகுப்பறையில் காட்சிப்படுத்தினேன்.
கடல், காடு, பாலைவன நிலம், துருவப் பகுதிகள் என பல்வேறு விதமான நில அமைப்புகளில் வாழும் உயிரினங்களைக் குறித்து அழகியலோடு காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அந்த ஆவணப்படம், இறுதியாகச் சில நிமிடங்களில் மனிதர்களின் அசிரத்தையான
செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் சமநிலையினை சீர்குலைக்கிறது என்பதை சுட்டிக்காட்டியது. அவ்வளவு நேரம், விதவிதமான உயிரினங்களையும் நிலத்தோற்றங்களையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மனம், சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அவலங்களை மிகக் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் இந்த ஆவணப்படம் குறித்த உரையாடல்களை ஆர்வமுள்ள குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு சில ஐயங்கள் இருப்பதை
உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கான பதில்களை அவர்களே தேடி கண்டறிய நான் ஒரு உத்தியை மேற்கொண்டேன். உலக அளவில் டேவிட் அட்டன்பரோ செய்துகொண்டிருக்கக்கூடிய செயல்களை ஒத்ததாக தமிழகத்தில் செய்துகொண்டிருப்பவர் சூழலியல் ஒளிப்படக் கலைஞர் ஏ. சண்முகானந்தம் அவர்கள். அவர் தனது உயிர் பதிப்பகத்தின் மூலமாக பதிப்பித்திருந்த குழந்தைகளுக்கான மிகச்சிறிய சூழலியல் நூல்களின் தொகுப்பு ஒன்றினை
வகுப்பறைக்கு எடுத்து வந்து பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். வாசிப்பும் உரையாடலுமாக ஆசிரியரற்ற வகுப்பறைகள் கொண்டாட்டக் களமாகக் மாறியது.
குழந்தைகளின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் சின்ன சின்ன நூல்களாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒன்பது நூல்களும் நம்மைச் சுற்றி இருக்கும் பறவைகள், பூச்சிகள் குறித்தும் சூழலியல் சார்ந்து உலக அளவில் பங்களித்திருக்கக்கூடிய ஒரு பூச்சியியல் அறிஞர் குறித்தும், பூச்சிகள் குறித்த ஓர் அறிமுக நூலையும், ஏ சண்முகானந்தம் அவர்கள் பதிப்பித்திருக்கிறார். வே. ராமசாமி, அருண் நெடுஞ்செழியன், பேராசிரியர் த. முருகவேள்
மற்றும் ஏ. சண்முகானந்தம் இந்நூல்களை எழுதியுள்ளனர்.
1. செம்மார்பு குக்குறுவான்
2. தைலான் என்கிற தகைவிலான்
3. மரங்களின் இயற்கை மருத்துவர் மரங்கொத்திகள்
4. தட்டான்களைத் தவறவிட்ட காலம்
5. பூ நாரைகளின் காதல் நடனம்
6. காதலில் திளைக்கும் இரயில் பூச்சி
7. கொம்பன் ஆந்தைகள்
8. பூச்சியியலின் மூதாய் மரியா சிபெல்லா மேரியான்
9. பூச்சிகள் ஓர் அறிமுகம்
மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த ஒன்பது புத்தகங்களையும் வாசிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்றாலும், இந்த நூலில் உள்ள புகைப்படங்களைப் பார்ப்பது நமக்கு வேறொரு
அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
குழந்தைகளின் கையில் அடங்கக்கூடிய வடிவத்தில் வழுவழுப்பான தாளில் உள்ள இந்தப் புத்தகத்தில் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே வாய்ப்பு, படங்களுக்கும்
அளிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, குழந்தைகளால் சலிப்பில்லாமல் இந்தப் புத்தகங்களை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியும்.

இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை வெறும் தகவல்களாக மட்டும் எண்ணிவிட முடியாது. வட்டாரக் கதைகளாக, கவிதையாக, வரலாற்றுச் செய்திகளாக, பயண அனுபவமாக, அறிஞர்களின்
வாழ்க்கைச் சம்பவங்களாக பல வகைகளிலும் இந்த நூலின் தகவல்களை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும். காதலில் திளைக்கும் இரயில் பூச்சி என்கிற சின்னஞ்சிறிய நூல் ஒன்றில் மரவட்டையின் இணைசேர்ப்பு காட்சியை புகைப்படங்களாகவும் எழுத்துகளாகவும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். திருநெல்வேலிப் பகுதி - களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் இவர் மேற்கொண்ட சூழலியல் பயணத்தின்போது பார்த்தக் காட்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை பதிவாகியிருக்கின்றது. பலராலும் எளிதாக புறக்கணிக்கப்படும் மரவட்டை மீது இந்த நூலில் உள்ள
செய்திகளாலும் புகைப்படங்களாலும் நூலாசிரியர் இனம் புரியாத நெருக்கத்தை உருவாக்கிவிடுகிறார். உலகம் முழுக்க 8000 வகையான மரவட்டைகள் இருப்பதாகவும் சில மரவட்டைகளில் 50 முதல் 200 இணைக்கால்கள் இருப்பதையும் இவர் குறிப்பிட்டு
இருக்கின்றார். இதுபோல பல்வேறு விதமான தகவல்கள் நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளிப்பனவாக இருக்கின்றன.
ஆரம்பக் கல்விப்பருவம் கடந்த குழந்தைகளுக்கு இந்நூல் உயிரியல் பாடத்தை அவர்களது பாடப்புத்தகத்தைவிடவும் அதிக சுவையோடு கற்றுத்தரும். ஆகவே, குழந்தைகளே, அடுத்த புத்தகக்
கண்காட்சியில் இத்தொகுப்பை யாரும் தவறவிட்டுவிட வேண்டாம். உங்களது நண்பர்களுக்கு ஆகச் சிறந்த பரிசொன்றை நீங்கள் தர விரும்பினாலும் இந்த நூல் தொகுப்பே சரியான தேர்வாக இருக்கும்.
பறவைகள், பூச்சிகள் என உயிரியலில் விருப்பம் உள்ள அனைவருக்கும் நான் இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன்.
வாங்கி வாசியுங்கள்; இயற்கையின் இரகசியங்களை உணருங்கள்.

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.






Comments