top of page

வானத்தில் பறப்பது சுலபம்

9 hours ago
2 min read

பிறந்த குழந்தைக்கு உயிரியல் தேவைகளைத் தவிர இந்த உலகமே விநோதமாகத் தான் தெரியும்.

வளர வளரத் தான் இந்த உலகின் பொருண்மைத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறார்கள். அதுவரையில் அவர்களுடைய மனதில் இந்த உலகமே ஒரு கற்பனை தான்.


குழந்தைகளின் கற்பனை எல்லையில்லாதது. அவர்களுக்கு அது கற்பனை என்று கூடத்தெரியாது. உண்மை என்று நம்புகிறார்கள். அவர்களுடைய பிரத்யேகமான உலகத்திற்கான ஒரு மொழியை உருவாக்குகிறார்கள். வித்தியாசமான சைகைகளை உருவாக்குகிறார்கள். விசித்திரமான செயல்களின் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் அவர்களுடைய மனதில் பதியும் முதல்பதிவு.


உளவியலாளர்கள் பாலிய காலத்தில் உருவாகும் இந்தக் கற்பனை உலகம் பெரியவர்களான பிறகும் தொடர்ந்து தன்னுடைய பாதிப்பைச் செலுத்துமென்று சொல்கிறார்கள். தாங்கள் உணர்ந்ததை வெளிப்படுத்தும்போது அதை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. அதில் தான் அவர்களுடைய படைப்பூக்கம் வெளிப்படுகிறது. அந்தப் படைப்பூக்கமும் திட்டமிட்டதில்லை. அந்த நேரத்தில் அவர்களுக்குத் தோன்றுகிற தன்னிச்சையான படைப்பூக்கம் (Spontaneous Creativity) படைப்பாக, பாடலாக, நடிப்பாக, நடனமாக வெளிப்படுகிறது. இந்தப் படைப்புகளின் வழியாகத் தாங்கள் உணர்ந்ததைச் சொல்லும்போது அதில் அவர்களையறியாமலே ஒரு கருத்துரு வெளியாகிறது. அதிலிருந்து பெரியவர்களும் சிறார்களும் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.


சிறார் இலக்கியத்தில் இந்த மாதிரியான படைப்புகள் குழந்தைகளே எழுதும் குழந்தை இலக்கியம் என்ற வகைமைக்குள் அடங்கும். உலகம் முழுவதும் குழந்தைகள் எழுதும் மிகச் சிறந்த படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன.


இதோ கோவையிலிருந்து பி.ஜீ. கவின் சொற்கோ ரியோ மியோ என்ற நாவலுடன் குழந்தை இலக்கியத்துக்குள் பிரவேசித்திருக்கிறார். எதிரெதிர் குணங்கள் கொண்ட விலங்குகளாக இருந்தாலும் அவை அன்பு கொண்டு விட்டால் அதற்காக எதையும் செய்து முடிப்பார்கள். ரியோ மியோ என்ற பெயரிலிருந்தே கதை தொடங்கி விடுகிறது. நாயும் பூனையும் ஒரு வீட்டில் எப்படி வாழத் தொடங்குகின்றன. முதலில் ஒருவரையொருவர் பிடிக்காமலிருந்தாலும் பிறகு ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகின்றன. இதுவரை கதை யதார்த்தத் தளத்தில் நகர்கிறது. பிறகு கதையில் முழுக்க முழுக்க கவினின் ஃபேண்டசி தான். கவினின் படைப்பூக்கம் முழுவீச்சில் வெளிப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட ரசிக்கும்படியான கதை அமைப்பும் முடிவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.


முதல் புத்தகம் என்ற உணர்வேயில்லாமல் மிக இலகுவான மொழிநடை, ஃபேண்டசிக்குள் இருக்கும் தர்க்கரீதியான கதைப்பின்னல், எல்லாம் கவினின் பரந்த வாசிப்பைச் சுட்டி நிற்கின்றன.

ஓவியர் தமிழ்ப்பித்தனின் அழகிய வண்ண ஓவியங்களுடனும் அழகான வடிவத்துடனும் மேஜிக்லாம்ப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் நம் குழந்தைகளின் கற்பனைத்திறனுக்குச் சாட்சியாக வெளியாகியிருக்கிறது.


வாசித்துப்பார்த்தால் வானத்தில் பறப்பீர்கள்!

வாழ்த்துகள் பி.ஜீ. கவின் சொற்கோ!

ரியோ மியோ


பி.ஜீ.கவின் சொற்கோ

வெளியீடு – மேஜிக் லாம்ப்

விலை- 150/

தொடர்புக்கு – 99425 11302


உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page