top of page

சுவரில்லாக் கல்வி : 'மரத்தடிப் பள்ளி' காட்டும் மாற்றுப் பாதை


மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம் – ரகுபாபு

தமிழில் – கலை கீர்த்தி


1990களில் தனியார்மயமாக்கலுக்கும் அதற்கு முன்னரும் பல பள்ளிக்கூடங்கள் மரத்தடிகளிலேயே நடந்தன. பின்னரும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அவ்வப்போது பள்ளி வளாகத்தினுள் மரத்தடிகளில் ஓரிரு வகுப்புகள் நடப்பதுண்டு. அந்த வகுப்பினை விரும்பாத குழந்தைகள் இருந்ததில்லை. மணலில் விளையாடிக் கொண்டும், மரத்தினையும், அதில் அமரும் பறவைகளையும், ஆங்காங்கே தென்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும், மைதானத்தையும் வேடிக்கைப் பார்ப்பது அதிகமாகவும், பாடத்தை கவனிப்பது குறைவாகவும் இருக்கும். எனினும் மனதில் பதிந்த காட்சியாக மரத்தடி வகுப்பு பலருக்கும் இருக்கும். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் இது போன்ற வகுப்பறை மாற்றம் வழக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்துவதாகவும் இருந்தது.


இன்றோ மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதென்பது ஒரு அதிசய நிகழ்வு போன்று பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் குளிரூட்டப்பட்ட வகுப்புகள் அளவிற்கு வசதிகள் அதிகரித்துள்ளது. இக்காரணத்தால் அரசு பள்ளிகளில் குறைந்தபட்சம் நல்ல மின்விசிறி கொண்ட அறைகளாவது இருப்பதை பெற்றோர்கள் விரும்புகின்றனர். அகண்ட வெளியிலும், மரத்தடிகளிலும் வகுப்புகள் நடப்பதென்பது வறுமையின் சின்னமாக உள்ளது. இவ்வாறு ஒரு பக்கம் இருக்கையில் மரத்தடிகளில் பாடங்கள் எடுப்பதை “மாற்றுக்கல்வி”யாகவும் “மாற்றுப் பள்ளி”யாகவும் சிலர் அழைக்கின்றனர். இதனிடையில் கொரொனா ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போது வாய்ப்புள்ளவர்கள் திறந்தவெளிகளில் பாடங்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். இயற்கையோடு இருப்பதே இயல்பு என்பதற்கு மாறாக அவ்வாறு இருப்பது ஒரு “தனி கவனம்” பெறும் சம்பவமாக மாறியிருப்பது வருத்தத்திற்குரியது. 


“மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்” என்ற புத்தகத்தின் தலைப்பே மரத்தடி நினைவுகளை மீட்டெடுத்தது. அட்டைப்படத்தில் தொடங்கி இப்புத்தகத்தில் உள்ள படங்கள் – குழந்தைகள் வரைந்துள்ளவை உட்பட – அனைத்தும் அருமை. அட்டைப்படமே புத்தகத்தின் சுருக்கமாக உள்ளது கூடுதல் அழகு. இப்புத்தகத்தின் தொடக்கப் பகுதியின் ஒரு வரி – “நம்மால் நம்மை இயற்கையில் இருந்து எவ்வாறு பிரித்துக் கொள்ள முடியும்?” “அதெல்லாம் எங்களால் முடியும்” என்பது போன்றே இன்றைய நம் வாழ்வியல் உள்ளது.


ஆனால் 1980களில் நல்லூர் அருகே இயங்கிய ஒரு பள்ளி, குழந்தைகளை இயற்கையோடு நெருக்கமாக்கியது மட்டுமல்லாமல் கற்றலும் இயற்கையாக நிகழ்வதற்கான அனைத்து சூழலையும் உருவாக்கி, இன்றும் பலருக்கு அதன் அனுபவங்களை பாடமாக அளித்துள்ளது. அப்பள்ளி பற்றிய குறிப்புகள் தான் இப்புத்தகம் “மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்.”


இப்புத்தகத்தை வாசிக்கையில் “டோட்டோ-சான்”, “இதயம் தருவோம் குழந்தைகளுக்கு” போன்ற புத்தகங்களையும், “மரியா மாண்டசரி” மற்றும் “ஜான் ஹோல்ட்” போன்ற ஆளுமைகளையும் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. குழந்தைகளோடு இணைந்து பணியாற்றிய அனைவரும் இப்புத்தகத்தில் உள்ளவை போன்று பல கற்றல் முயற்சிகளை பரிசோதித்து, தோற்று, வெற்றி கண்டிருப்பர். இன்றைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை செய்யாமல் இருந்தாலும் குறைந்தபட்சம் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை அவர்களின் பள்ளிகளிலும் வீடுகளிலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். நம் குழந்தைகள் இப்புத்தகத்தை வாசித்தால் இது போன்ற பள்ளியில் தங்களை சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பர். அவ்வாறு நடப்பதற்கு முன்னர் நாம் இப்புத்தகத்தை வாசித்து நம்மால் முடிந்த மாற்றத்தை பள்ளிகளில் கொண்டுவருவது சிறப்பு. 


சிறு குழந்தைகள் கவிதைகள், ஓவியம், கதைகள், கற்பனை உரையாடல்கள் எழுதுவதும், வரைவதும் இயற்கையாக நிகழக்கூடியது என்பதற்கு இப்புத்தகம் மேலுமொரு சாட்சி. சின்ன கதைகளைக் கொண்ட புத்தகங்களையே இன்றைய குழந்தைகளிடம் கொண்டு செல்ல நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, ‘அன்னை நிலம்’ போன்ற அருமையான ரஷ்ய நாவலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய இப்பள்ளி ஆசிரியர்களை எப்படி பாராட்டாமலும், வியந்து பார்க்காமலும் இருக்க முடியும்!


வகுப்புகளின் பெயர்கள் எண்ணிக்கையில் இல்லாமல் மரங்களின் பெயர்களாக சூட்டியிருப்பது, மாணவர்கள் விரும்பும் பாடங்களை விரும்பிய நேரத்தில் பயில்வது, பாடங்களுடன் சேர்ந்து ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்ய கற்பிக்கப்படுவது என ஒரு குழந்தை விரும்பும் வண்ணமாக இப்பள்ளி இருந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், நம் பள்ளிகளின் கட்டமைப்பில் இவற்றை செய்து பார்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏராளம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்புத்தகத்திலும் அன்று அவர்கள் சந்தித்த சிக்கல்களையும் குறிப்பிடுகின்றனர். ஒரு வகுப்பின் கூச்சல் பிற மாணவர்களுக்கு தொந்தரவாக இருப்பது, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடன்படாத பள்ளி செயல்பாடுகள், குழந்தைகளுக்கே உண்டான இயல்பினை எதிர்கொள்வது, குழந்தைகள் மீதான பெற்றோர்களின் மற்றும் சமூகத்தின் தாக்கம் என எக்காலத்திற்கும் பொருந்தும் சவால்கள் உரையாடப்படுகின்றன. பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான, நாம் உரையாட வேண்டிய சம்பவங்கள் போன்றவற்றை வாசிக்கையில், அப்பள்ளி குழந்தைகளின் பயணத்தில் நாமும் இணைந்து விடுவோம். “புளியமரம்” என்ற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.


ஒரு பொங்கல் திருவிழாவினைக் கொண்டு அனைத்து பாடங்களும் எவ்வாறு கற்கப்பட்டது என்பதை வாசிக்கையில், ஒவ்வொரு பாடத்தினைக் கொண்டும் எவ்வாறு “சமாதானத்தையும், வன்முறையின்மையையும்” கற்றுக் கொடுப்பது என்பதற்கான ஒரு பயிற்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. எந்த பாடத்தைக் கொண்டும் நாம் சொல்ல விரும்புவதை சற்றே மெனக்கெட்டால் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கு இந்த குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். 


“தற்கற்றல் தளங்கள்” என்ற பகுதி ருசிகரமானது. அனைத்து பள்ளிகளிலும் சாத்தியமில்லாமல் போனாலும், பொது நூலகங்களில் இது சாத்தியமே! குழந்தைகளுக்கு இது புரியாது என்று ஒதுக்காமல் “பெண்ணியம்” போன்ற தலைப்புகளும் 90களில் உரையாடப்பட்டிருப்பது ஆச்சரியம்! நாம் பலவற்றை உரையாட தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. உரையாடல்கள் பகுத்தறிவுக்கான முதலீடு தானே!


ஆறுகளோடும், விவசாயத்தோடும், விவசாயிகளோடும் இவர்களின் கற்றல் பயணம் தொடர்கிறது. வீடுகளிலும், பள்ளிகளிலும் அகராதியினை அறிமுகப்படுத்தவே தவறுகிறோம். ஆனால் இங்கோ குழந்தைகள் ஒரு ‘அகராதி’யினை உருவாக்குகின்றனர். 


இப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிய ரகுபாபு எழுதிய இப்புத்தகத்தை தமிழில் கலை கீர்த்தி மொழிபெயர்த்து நேர்த்தியாக தன்னறம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் “செயல் வழிக் கற்றலை” விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறு கையேடு. இயன்றதை முயன்று பார்க்கலாம். ஏனெனில் எந்த ஒரு முயற்சியும் எளிதில் வெற்றியடையாது. ஆனால் தோல்வியில் துவண்டுவிட்டால் மாற்றமே நிகழாது! கல்விக் கற்றலிலும், கற்பித்தலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது கட்டாயம்.



செ.பிரியதர்ஷினி
செ.பிரியதர்ஷினி

பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரியில் நிதியாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை பொருளாளராகவும் உள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page