கோலிக்குண்டுகளும்... கவிதைகளும்...

“நல்ல கவிதைகளை இரசிக்கிற சுகத்திலிருந்து கூட ஒருவர் இலட்சிய வாதியாகவும், தைரியசாலியாகவும் திகழ முடியும்! சில கவிஞர்களின் பாடல்கள், காலங்காலமாகப் பெருகி வாழ்ந்து நிலைத்திருக்கும் ஒரு பரம்பரையையே படைத்துப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கின்றன..” – என்கிறார் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி. நமது நாடு, மற்றும் அயல்நாடுகளின் மகாகவிகளுடைய வரலாறுகளை, அவர்களின் கவிதைகளால் உத்வேகம் பெற்று வாழ்ந்த இலட்சியவாதிகளைப்பற்றிய இலக்கியங்களைப் படித்தால் இது எவ்வளவு உண்மையென்பது நிரூபணமாகும். நமது குழந்தைகளைத் தைரியசாலிகளாக, இலட்சியவாதிகளாக வளர்த்தெடுக்க விரும்பும் பெற்றோர்களாகிய நமக்கு, நல்ல கவிதைகள் எவை, எப்படிப்பட்ட கவிதைகளைச் சிறார்களுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும், அவற்றை எப்படி அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள் எழும். ஏற்கெனவே ‘கடைசி பெஞ்ச்’ ‘சாக்லேட்டி’ போன்ற சிறார் கவிதைத்தொகுதிகளை, ‘ஓங்கில் கூட்டம்’- ‘புக்ஸ் பார் சில்ட்ரன்’ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளன. இலண்டனில் இருந்து கொண்டு,பஞ்சு மிட்டாய் இதழையும், ஓங்கில் கூட்டம் அமைப்பையும் நடத்தி வரும் பிரபுவின் முயற்சிகள் இந்தத் திசைவழியில் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவின் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள், கடல் பயணங்களால் உருவெடுத்த சார்லஸ் டார்வின், இயற்கையை நேசித்த ஓர் அறிவியல் அறிஞர் ஹம்போல்ட், கிரிக்கெட்டில் ‘சாதி’த்த இந்திய சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூ, போர்க்குரல் எழுப்பிய ஓர் அடிமையான ஒலாடா, முடிவிலிருந்து ஒரு தொடக்கத்தை நிகழ்த்திய ஸ்டீவன் ஹாகிங், உயரப் பறந்த இந்தியக் குருவியான சாலிம் அலி, முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்திரி பாய் பூலேவின் கதை – இம்மாதிரியான 26 நூல்களை ஓங்கில் கூட்டம் – பாரதி புத்தகாலயம் இணைந்து இதுவரை வெளியிட்டுள்ளன. ஓரிகாமியின் கதை, சோசோவின் விசித்திர வாழ்க்கை, கயிறு, மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள், சுல்தானாவின் கனவு, பகத் சிங் ஏன் நாத்திகர் ஆனார், ஆழ்கடல், தோபா தேக்சிங், போக்கிரி இளவரசி – போன்றவையும் இந்த வரிசையில் வெளியான நூல்களே. திவ்யா பிரபு, ஆதி. வள்ளியப்பன், உதயசங்கர், விஷ்ணுபுரம் சரவணன், கொ. மா. கோ. இளங்கோ, நாராயணி சுப்ரமணியன், ஹேமபிரபா, இ. பா. சிந்தன், சிவசுப் பிரமணியம் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள் இந்த 26 நூல்களையும் படைத்தவர்கள்.
சிறுவர்களின் கோடைவிடுமுறைக் காலங்களில் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகத் திகழ்பவை கிரிக்கெட் மட்டை, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுக் கருவிகளே. அந்தக் கோலிக்குண்டு எனும் தலைப்பிலேயே 25 கவிதைகளை ஓர் அருமையான, இனிய, வாசிப்புச்சுவை மிக்க தொகுப்பை உருவாக்கித் தந்திருக்கிறார் கவிஞர் ந. பெரியசாமி. ‘கவிதை பொங்கும் பதின்பருவத்தினர் வாசிக்கவும், தமிழ்க்கவிஞர்களை அறிந்து கொள்ளவும் இந்தக் ‘கோலிக்குண்டு’ வழிகாட்டியாகத் திகழும்” என்கிறார் உதயசங்கர். அறிவியலாளரும், மிகச்சிறப்பான அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் தொடர்ந்து எழுதி வருகிறவருமான ஹேமபிரபா தனது அணிந்துரையில் பின் வருமாறு சொல்கிறார்: “இந்தப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்களில், ஒரு சிறுவனின் தலையில் முளைத்த பூந்தொட்டியில் அழகிய பூக்கள் மலர்ந்திருக்கின்றன. ஒரு சிறுமியின் எண்ணக்கூண்டிலிருந்து பறவைகள் பறந்து போகின்றன. சிறைகளாக இருக்கும் பிற கூண்டுகள் போலல்லாது, அந்தப்பறவைகள் பறக்கப் பறக்க எண்ணக் கூண்டும் விரிவடையும். அதற்குத்தானே கவிதைகள் தேவை!”
ஆம்; அந்தத் தேவையைக் கருத்திற்கொண்டுதான், இப்போது கோலிக்குண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஒரு கதைத்தன்மையுடன் அமைந்திருப்பதைத் தற்செயலாக என் வாசிப்பின் போது உணர்ந்தேன். “ஒரு மரத்தின் கிளை மீது வந்தமர்ந்த பறவை / இளைப்பாறிய பின் பறக்கிறது. / மீண்டும் இளைப்பாற அமரும் வரை / பின் தொடர்ந்து செல்லும் என் கிளை.” எனும் வேல் கண்ணனின் கவிதையும், “மீண்டும் மீண்டும் அமர்கிறது பறவை / அப்படி என்ன செய்து விட்டது மரம்? / தாங்கத் தெரிந்திருக்கிறது.” எனும் நேசமித்ரனின் கவிதையும் ஒரே காட்சியின் இரு வேறு பக்கங்களை இரு கவிஞர்களின் பார்வைகளில் நறுக்கென்று பதிவு செய்திருக்கின்றன.
“சன்னல்கள் காட்டுவது வானத்தின் ஒரு பகுதிதான்” என்று சொல்லும் ஒருவனிடம், “முழு வானமும் தெரியும் வசமாய் ஒரு சன்னல் செய்ய முடியுமா?” என கவிஞர் பிரான்சிஸ் கிருபா கேட்பதுவும் ஒரு கவிதை தான்! நெரிசல் மிகுந்த ஒரு பேருந்துப் பயணத்தின் போது, ஒரு வழியாகச் சன்னலோரத்தில் சீட் கிடைத்தவுடன், ஆவலுடன் ஓடிப்போய் உட்கார்ந்து குதூகலிக்கும் குழந்தையை உடனே இறங்கச்சொல்கிறாள் அம்மா. வீடு அங்கேதான் இருக்கிறதாம்! ‘இதெல்லாம் ஒரு காரணமா?’ என்று மனம் சுருங்கும் குழந்தையை முகுந்த் நாகராஜனின் கவிதை சித்தரித்திருப்பது பெரும் கவனிப்பைப் பெற்றுவிட்ட படைப்பல்லவா?
ஒரு பருந்து பறக்கும் திசையில் ‘சொய்ங்க்’, ‘சொய்ங்க்’ என்று கைகளை வீசிக்கொண்டு நிற்கும் ஒரு சிறுமியின் விசையில், கொஞ்ச நேரத்தில் நகரமே பறக்கத் தொடங்கிவிடும் விந்தையை வேலகண்ணனின் கவிதை படம் பிடிக்கிறது. ஆலமரத்தை ‘அலெக்ஸ் மரம்’தான்’ என்று சாதிக்கும் சிறுவனின் மனதைப் படம் பிடிக்கிறார் ந. பெரியசாமி. ஸ்ரீ நேசனின் இரு கவிதைகள், பூவிதழ் உமேஷின் சிறிய வீடு, பத்மபாரதியின் கூடவே வரும் நிலா, சாலையோர உணவு விடுதியில், கைகழுவப் போன இடத்தில் நீர் தெளித்து விளையாடும் முகுந்த் நாகராஜன் – என ஒவ்வொரு கவிதையும் கதையென விரிகிறது. சிவானிக்குட்டி சுவரில் இலை வரையப்போக, வந்து ஒட்டிக்கொள்ளும் மரங்களைப் பார்த்து “என்ன இது? ம்?” என்று மிரட்டும் அதட்டலில், தனது காட்டையே கண்ணீருடன் பெயர்த்து வைக்கிறாள் சிவானி. வீடோ, பெரு வழிச்சாலைக்கு அளவுக்கல் நடப்பட்ட நிலமெனத் தூங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார் நந்தன் கனகராஜ். பாதிக்கதையிலேயே குழந்தை தூங்கிப் போகிறது. இன்னும் விழித்திருக்கும் வேறொரு குழந்தையின் வீட்டைத்தேடிக் கண்டு பிடிக்க அந்த இரவில், தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கும் மீதிக்கதையின் சோகத்தைப் பதிவு செய்கிறார் ஸ்டாலின் சரவணன்.
இராட்டினம் சுற்றிக்காட்டும் நாடோடியின் பிரிவால், சிறுமியின் வானம் வண்டிச்சக்கரத்தில் நெரிபட்டுச் சிதைந்து போகிறது. கனக்கும் பாடல் ஒன்றைப் பாடியபடி ஒற்றையடிப்பாதையில் வண்டியைத் திருப்பும் அவன், அந்த நீண்ட பாதையில் மற்றுமொரு விழா நாளில் மீண்டும் வந்து சேரக்கூடும். அனுதினமும் சிறகுகளைப் பிடுங்கி நாள்காட்டியில் செருகிக் காத்திருக்கும் அவள் எறியும் கூழாங்கல், தரை தட்டி வெறிக்கிற சோகத்தை சுஜாதா செல்வராஜின் கவிதை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறது. கனவில் வந்த யானையின் கதையைக் கவிதையாக்கிக் காட்சிப்படுத்துகிறார் க. மோகனரங்கன். நா. முத்துக்குமார், பரமேஸ்வரி, ஆத்மாநாம், கண்டராதித்தன், யூமா வாசுகி – என நாம் பரவசப்பட்டுப் படித்து மகிழ வேண்டிய கவிதைகள் தொடர்கின்றன. தேர்வுகள் மிக அருமை. ஓவியங்களின் மூலம் இந்தக் கவிதைகளைக் காட்சிகளாக்கிக் கதைகள் சொல்லியிருக்கிறார் ஓவியர் கே. ஆர். கார்த்திகேயன். ஓங்கில் கூட்டத்தின் கடைசி பெஞ்ச், சாக்லேட்டி- யின் வரிசையில் வந்து நம் மனக்குழிகளில் விழும் கோலிக்குண்டுகள் இவை!

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.






Comments