top of page

Let’s Go Adventuring - 25 Exciting Trips Around India


ஊர் சுற்றுவது பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா? நம் எல்லோருக்கும் ஒரு விடுமுறை கிடைத்தால் எங்காவது சென்று வந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். இயல்பு தான். 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு ‘ஊருக்கு செல்வது’ என்றால் தாத்தா, பாட்டிகளின் வீட்டுக்கோ, அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா போன்ற உறவினர்கள் வீட்டுக்கோ செல்வது தான்

வாடிக்கை. ஆனால் இன்றோ வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சுற்றிக்கொண்டிருக்கும் சமூகமாகி வருகிறோம். பொருளாதாரத்தைப் பொருத்து செல்லுமிடமும், தங்குகிடமும், சுற்றித்திரியும் இடமும் வேறுபடுகிறது. பல நேரங்களில் நம்மில் பலர் சொந்த ஊரில் உள்ள பல அருமையான இடங்களை காணத் தவறுகிறோம் என்பதும் நிதர்சனம். எது எப்படியானாலும், ‘அடங்காத காற்றைப் போல” சுற்றித்திரிவது அலாதியானது தானே!


Let’s Go Adventuring - 25 Exciting Trips Around India என்ற புத்தகத்தை எழுதியுள்ள சுப்ரியா சேகல் (Supriya Sehgal) அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டவர். ஒவ்வொரு பயணத்தின் போதும் தனக்கு கிடைத்த அனுபவங்களை குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான ஆங்கிலத்தில் நேர்த்தியாக இப்புத்தகத்தை எழுதியுள்ளார். சுவாரஸ்யமான பல தகவல்களையும், மனிதர்களையும் அடக்கியுள்ளது இப்புத்தகம். பெரியவர்களும் விரும்பி வாசிக்கலாம். பயணத்தைத் தொடங்குவோமா? வாங்க!


இந்தியாவின் ஒரு நகரத்தில், ஒரு திருவிழாவின் காரணமாக, குழந்தைகளுக்கு ஒரு மாதம் முழுக்க விடுமுறை விடப்படுகிறதாம்! “ச்ச்ச, நாமும் அங்க இருந்திருக்கலாமே,” என்று தானே தோன்றுகிறது.

ம்ம்ம்ம், சரி தான். எனக்கும் அப்படித்தான் தோன்றியது! அக்டோபர் மாதத்தில் வாரணாசியின் ராம்நகர் என்ற ஊரின் குழந்தைகளைப் பற்றி தான் ஆசிரியர் சொல்கிறார். என்ன திருவிழா அது? எதுக்கு விடுமுறை?


நீங்கள் விரும்பி சாப்பிடும் சட்னி எது? தேங்காய், வெங்காயம், புதினா, பூண்டு, அல்லது? இவ்வாறான சட்னிகள் தான் நம் வீடுகளில் செய்யப்படும். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மிகவும் ருசியான மற்றும் நோய்களை தீர்க்கக் கூடிய சட்னியாக “எறும்பு சட்னி” உள்ளதாம்! எந்த ஊர் அது?


குகை மனிதர்கள் பற்றி படித்திருப்போம். நம் முன்னோர்கள் குகைகளில் வாழ்ந்தவர்கள் தானே. இன்றைய குழந்தைகள் குகைகள் எப்படி இருக்கும் என்பதை படங்களிலும், புத்தகங்களிலும் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரத்தைச் சுற்றி பல

குகைகளை காண முடியுமாம். அந்த குகைகள் எப்படி இருக்கும்? சுற்றிப்பார்க்க விடுவார்களா?


நமக்கு பல் தொடர்பான உபாதை என்றால் எங்கு செல்வோம்? பல் மருத்துவரிடம் தான்! அவர் எங்கு இருப்பார்? அவருடைய பல் மருத்துவமனையில் தான். இதெல்லாம் ஒரு கேள்வியா என்று தானே கேட்கிறீர்கள். இந்தியாவின் ஒரு ஊரில் ஒரு பல் மருத்துவர் வித்தியாசமான வகையில் பல் மருத்துவம் பார்க்கிறாராம். அதுவும் அதிவிரைவு இரயில் மாதிரி! அப்படி எங்கு வைத்து வைத்தியம் பார்ப்பார்?


வீட்டில் நான்கு நபர்களுக்கு மதிய உணவினை தயார் செய்து டப்பாவில் வைத்து சாப்பாடு பைகளை உரியவரிடம் கொடுக்கும் போது சில நேரங்களில் நம்மில் பலர் அவசரத்தால் பைகளை மாற்றிவிடுவது உண்டு. இங்கு ஒரு ஊரில் 5000 வேலையாட்கள் சேர்ந்து நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் பேர்களுக்கு தினமும் அவர்களின் வேலையிடத்திற்கு மதிய உணவு கொண்டு சேர்த்து வருகின்றனராம்.

இதில் மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் உணவு டப்பாக்கள் ஒரு நாளும் தவறி மாறிவிடுவதில்லையாம். எப்படி இது சாத்தியம்? இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா?


பட்டம் செய்யவும், பட்டம் விடவும் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் பட்டங்களுக்கு ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்? என்னது! ஒரு கோவிலில் வண்டி தான் கடவுளாக வழிபடப்படுகிறதா?


ஏன்? தலைமுடியினை பின்னுதல் தெரியும், அது என்ன மர வேர்களைப் பின்னுதல்? அதனைக் கொண்டு ஒரு கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது, தெரியுமா? எதற்கு இப்படி ஒரு வேர்பாலம்? பாலம் விழுந்துவிடாதா?


மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கும், மேலும் சுவாரஸ்யமான பயண அனுபவங்களுக்கும் இப்புத்தகத்தை வாசித்து பாருங்கள். நான் இடங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். சுப்ரியா அவர்கள் விவரித்துள்ள விதவிதமான மனிதர்களும், உரையாடல்களும் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

இவ்வாறான அனுபவங்கள் அதிக செலவு செய்து தூரமாக பயணித்தால் மட்டுமே கிடைக்குமா என்றால், நிச்சயம் இல்லை. நம் ஊரின், நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கு இப்புத்தகத்தை படித்த பின்போ, அல்லது இந்த புத்தக அறிமுகத்தை வாசித்த பின்போ சென்று வாருங்கள். குறிப்பு எழுதத் தோன்றும். சந்தித்த மனிதர்களை மறக்காமல் இருக்கவும், கிடைத்த அனுபவங்களை பொக்கிஷமாக பாதுகாக்கவும், அடுத்தவருக்கு அவற்றைக் கடத்தவும், மீண்டும் பயணிக்கத் தூண்டவும், பயண குறிப்புகள் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை தானே! திட்டமிடாத பயணங்களும் செய்து பார்க்கலாம்!


எங்க அவசரமா போறீங்க, அடுத்த பயணத்திலிருந்து குறிப்பெடுத்து பாதுகாக்க ஒரு கையேடு தயார் செய்யவா? அருமை!


பதிப்பகம்: Hachette India Publications


செ. பிரியதர்ஷினி
செ. பிரியதர்ஷினி

பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரியில் நிதியாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை பொருளாளராகவும் உள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page