கய்மூது
- அனுக்ரஹா

- Nov 15
- 3 min read

"ஹரி ... உன்ன குளிக்க சொல்லி அரை மணி நேரம் ஆச்சு.இன்னும் அப்படியே உக்கார்ந்து இருக்க. இப்ப குளிக்க போரியா-இல்லையா ?" ஹரி ஏழு வயது சுட்டி பையன். அவன் அம்மா அவனை குளிக்க சொல்கிறார்.
ஆனால் ஹரியோ கண்கள் சிமிட்டாமல் அம்மா சொல்லை காதில் வாங்காமல் ஆர்வமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சிறிது கோபமடைந்த அம்மா டிவியை அணைத்தார். உடனே பொங்கி எழுந்த ஹரி "அம்மா எதுக்கு இப்போ டிவியை ஆஃப் பண்ணீங்க ? நான் பாட்டுக்கு பார்த்துகிட்டு தானே இருந்தேன் ? " என்று சண்டை போட தொடங்கினான்.
"டேய் உன்ன அடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன், அடிக்க வச்சிறாத. ஒழுங்காப் போய் குளி. " என்று அம்மா கத்தியவுடன் வேகமாக பாத்ரூமை நோக்கி ஓடினான்.
பத்து நிமிடம் கழித்து, "அம்மா டவல் கொடு மா!" என்று ஹரியின் குரல் கேட்டது.
அம்மா, "ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய விடுவதில்லை!" என்று புலம்பிக் கொண்டே டவலை எடுத்து கொடுத்தார்.
குளித்து முடித்து மீண்டும் டிவி பார்க்கலாம் என்று நினைத்து ஹரி டிவியிடம் நெருங்கினான்.
கிச்சனிலிருந்து அவன் அம்மா கத்தினார் " டேய் டிவி போட்டின்னா அவ்வளவுதான் ஒழுங்கா போய் வேற வேலை இருந்தா பாரு. "
ஹரி என்ன செய்வது என்று தெரியாமல், அலமாரியில் இருந்த பழைய பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அப்போது அவன் கண்ணில் மூன்று குரங்கு பொம்மைகள் தென்பட்டன.
"ஐ! ஐ! இது என்ன புது பொம்மை , அழகா இருக்கு!" என்று கைகளில் எடுத்து பார்க்கையில் அது கீழே விழுந்து உடைந்து விட்டது.
"ஐயையோ! அம்மாக்கு தெரிந்தால் திட்டுவார்களே , இப்போது என்ன செய்வது?" என்று ஹரி முனகினான்.
அலமாரியைப் பூட்டிவிட்டு அந்த பொம்மையை கட்டிலுக்கு அடியில் தள்ளினான். அப்போது அவனுக்கு ஏதோ ஷாக் அடித்தது போல ஒரு உணர்வு வந்தது.
ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் உணர்ந்தான். அச்சமயம் அம்மா செய்யும் பிரியாணி வாசனை அவனைத் தூண்டியது , எல்லாவற்றையும் மறந்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.
" அம்மா எப்போ மா சாப்பாடு போடுவீங்க ரொம்ப பசிக்குது! என்றான்.
உடனே "அய்யய்யோ" என்று கத்தினான்.
உடனே அம்மா ஓடி வந்தார், "என்னடா ஆச்சு?" என்று பதறினார் . அம்மா வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவன் தன் கண்களால் பேசினான் என்று . அவரால் தன்னை நம்ப முடியவில்லை.
"என்னடா ஆச்சு கண்ணால பேசுற?. கண்ணால பேசுறத கேள்விதான் பட்டிருக்கேன் ஆனா இப்போதான் பார்க்கிறேன்." என்றார் அம்மா.
"ஆமாம்மா என்னன்னே தெரியல என் கண்ணு தானே அசைஞ்சு பேசுது" என்று கண்ணாலேயே பதில் சொன்னான் .
"சரி கண்ணால பேசுற கண்ணால பார்க்க முடியுதா? " என்று கேட்டார் அம்மா.
" இல்லம்மா நான் வாயால தான் உன்னை பார்க்கிறேன் " என்றான் ஹரி.
"என்னடா உளர்ற " என்று அம்மா குழம்பினார்.
" சரி காது ஆச்சு ஒழுங்கா கேக்குதானு பாரு பிரியாணி வாசனை வருதா ? " என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டார் அம்மா.
"அம்மா காது கேக்குது ஆனா லைட்டா தான் கேக்குது வாசனையும் சைடுல இருந்து வர மாதிரி இருக்கு " என்றான்.
"டேய் உன் காதும், மூக்கும் மாறி இருக்குடா கண்ணும் வாயும் மாறி இருக்குடா என்னத்த டா பண்ணி தொலச்ச ? "என்றார் அம்மா.
"அம்மா , நான் எதுவும் பண்ணல மா பயமா இருக்குமா "இன்று அழத் தொடங்கினான் ஹரி.
அவன் வாயிலிருந்து கண்ணீர் கொட்டியது . என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவும், பையனும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் முன்னே ஒரு சிறு வெளிச்சத்துடன் மூன்று குரங்குகள் தோன்றின. அந்த மூன்று குரங்குகளும் ஹரி பார்த்த அந்த பொம்மைகளைப் போலவே இருந்தன.
ஒரு குரங்கு கண்களை மூடியபடி இருந்தது. மற்றொன்று வாயை மூடி இருந்தது. மூன்றாவது குரங்கு காதை மூடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹரி பதட்டத்தில் அம்மாவிடம் உண்மையை கூறினான்.
" அம்மா நான்தாம்மா இந்த குரங்குகள் மாதிரி அலமாரியில் இருக்கிற பொம்மைகளை உடைச்சேன். ஒருவேளை அதனாலதான் இப்படி எல்லாம் ஆயிருக்குமோ ? " என்றான்.
"பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து அழறதை பாரு. " என்றார் அம்மா.
அந்த மூன்று குரங்குகளும் ஹரி இடம் வந்து அழாத தம்பி என்று சமாதானம் படுத்தின .
"நான் உங்கள மாதிரி இருக்கும் பொம்மையை உடைச்சதுக்கு சாரி இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அதுக்கு என்ன பழி வாங்காதீங்க என்ன பழைய படி மாற்றுங்கள். " என்றான் ஹரி .
"சரி சரி அழாத நீ எங்களைப் போல இருப்பாய் என்றால் நாங்கள் உன்னை பழையபடி மாற்றுகிறோம்" என்றனர் மூவரும் .
"எனக்கு நீங்க சொல்றது புரியல!" என்றான் ஹரி.
"நீ எங்களைப் போலவே கெட்டதை பார்க்க கூடாது, கெட்டதை பேசக்கூடாது கெட்டதை கேட்கக் கூடாது . சத்தியம் செய்து கொடு " என்றனர்.
ஹரியும் சரி என்று ஒப்புக்கொண்டு சத்தியம் செய்தான். தான் கெட்டதை பார்க்க மாட்டேன், கெட்டதை கேட்க மாட்டேன், கேட்டதை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.
நல்ல பையன் என்று ஹரியை பாராட்டி தாங்கள் ஹரியை மாற்றுவதாக முன் வந்தனர் .
"உனக்கு கண்ணும் வாயும் மாறி இருக்கின்றதல்லவா ஆகையால் காய் என்று கூறு . அதுபோல் காதும் மூக்கும் மாறி இருக்கின்றது அல்லவா அதற்கு மூது என்று கூறு. இப்போது இரண்டையும் சேர்த்து காய்மூது என்று மூன்று முறை உச்சரி என்றனர்.
இந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் மூவரும். அந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்ததும், ஹரிக்கு எல்லாம் பழையபடி மாறிவிட்டது. அவனுக்கு பயங்கர சந்தோஷம்.
தான் செய்த சத்தியத்தை என்றைக்கும் மீறமாட்டேன் என்றும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி என்றும் கூறி வழி அனுப்பினான். அவர்கள் சென்றவுடன் அம்மாவிடம்
" அம்மா எங்கேம்மா அந்த பொம்மையை வாங்குன ? "என்று கேட்டான்.
அதற்கு அம்மா," எனக்கு எதுவும் தெரியாதுடா , நான் எல்லாம் அந்த பொம்மையை வாங்கல . நீ எந்த பொம்மையை சொல்ற ? "என்றார்.
அவன் சாட்சிக்காக கட்டிலுக்கு அடியில் பொம்மையை தேடினான். ஆனால் அது அங்கு இல்லை . இது அந்த மந்திர குரங்குகளின் வேலை, எல்லா பிள்ளைகளும் நல்ல குழந்தைகளாக இருக்க அவர்களிடம் இருந்து சத்தியம் வாங்க உருவாக்கிய திட்டம் எது .
சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டு குட்டி பெண் அம்மா என்று அலறிய சத்தம் கேட்டது .

தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனுக்ரஹா கார்த்திக் சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டவர். பத்து வயதில் இவர் எழுதிய 'காணாமல் போன சிறகுகள்' என்ற கதை, 'சுட்டி உலகம்' வலைத்தளம் நடத்திய சிறார்க்கான கதைப் போட்டியில் முதல் பரிசு வென்றது. 'நாலு கால் நண்பர்கள்,' 'தப்பித்து ஓடு' என்ற இரு சிறார் நூல்களைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர் 'பூஞ்சிட்டு' குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.




அற்புதம் சிரிது நேரத்தில் என் புலங்களே இடமரியதை போல திகிலூண்டேன்... வாழ்த்துகள்
One of the very beautiful story 🥳 i have ever read before🩷 and u have more skills to grow up in ur life 👑
Congratulations 💐💐💐
Congratulations my dear let u grow more and more 🌹 as ur classmate 🎯 i know about ur hardwork and ur hardwork never fails 🤝
தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது, தூண்டலில் துலங்கல் துவளாமல் இருப்பது திறம். மகிழ்திகழ் வாழ்த்துகள் மகளே.
அருமையான கதை..இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.இதுபோல் கற்பனையோடு கூடிய அறிவுரை க்கதைகள் மேலும் எழுதுக.