ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
- ஜெ.பொன்னுராஜ்

- Mar 15
- 8 min read

விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும். ஆசிரியர் ஓய்வறையிலிருந்து வெளியேறும்போதே ஒரு விசிலடித்துவிட்டுத்தான் பிரம்போடு கிளம்புவார். வராண்டா கார்டனில் லாந்திக்கொண்டிருக்கும் மாணவர்கள் அடுத்த நொடியே பொந்துக்குள் பதுங்கும் எலிகளைப் போல வகுப்பறைக்குள் ஒடுங்கிப்போவார்கள். அந்த நேர அமைதியில் காற்றும் அமர்ந்து வீசும். மரம் செடிகளில் இலையசைவுகளும்கூட அடங்கி மெதுவாக தலையசைக்கும். வராண்டாவில் அவர் நடந்து வரும் காலடி ஓசை அருகில் கேட்டதும் லேசாக தலையை திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் போது அவரும் சன்னல் வழியாக பார்ப்பார். அந்த முகத்தில் கருவிழிகள் மட்டும் அசைந்து அருகில் வருவது போல் ஒருவித மிரட்சியாய் இருக்கும். அவரிடம் கண்டிப்பு இருந்தாலும் ஒருநாளும் யாரையும் அவர் அடித்து ஒருவரும் பார்த்ததில்லை. அவரது குரலும் மைனா கூப்பிடுவது போல க்கிர்.. கிர்ரி.. என மிகச்சிக்கனமான கீச்சுக்குரலாகத்தான் வெளிப்படும்.
மொத்த வகுப்பும் ‘கப்..சிப்’பாக இருக்கும் போது இந்த பன்னீர் மட்டும் எழுந்து, “ஏய்.. இவரை இப்பொழுது அடிக்கட்டுமா” என்று கேட்டு பூனையைப் போல அவருக்கு பின்னாலேயே போவான். உள்ளங்கையை பொத்தினாற்போல வைத்துக்கொண்டு அவர் முதுகில் ஒரு போடு போடுவான். அவர் அதிர்ந்து போய் பின்னால் திரும்பி ஏன் என்று கேட்பதற்குள் முந்திக்கொண்டு, “சார் முதுகுல பூச்சி ஓடுனது சார்” என்பான்.
“சரி..சரி. நீ போய் உட்கார்ந்து படி” என்று பிரம்பை ஆட்டிக்கொண்டு மறுபடியும் வராண்டாவில் நடக்க ஆரம்பித்துவிடுவார்.
நாளை முதல் பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குவதை நினைக்கும் போதே பன்னீருக்கும், அமுதனுக்கும் உண்டான சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவர்கள் ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேர வகுப்பில் கணித ஆசிரியர் ரெங்கசாமியின் அறிவிப்பை கேட்டதும் வகுப்பே இறக்கை தட்டி பறப்பது போல் உற்சாகமானது.
“எனது அன்பு மாணவர்களே.. இங்கிருந்து தென்திசையில் பார்த்தால் நீலவண்ணமாய் மடிந்துமடிந்து மலைமுகடுகள் தெரிகிறது பார்த்தீர்களா…”
“ஆமாம் சார்… குருமலை”
“அங்கேதான் ஒரு இரண்டு நாட்கள் நாம் எல்லோரும் சுற்றுலா செல்கிறோம். உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று வந்து சொல்லுங்கள் நாளை காலையில் புறப்படலாம்”
‘வீட்டுப்பாடம் படிக்க வேண்டாம். எழுதவேண்டாம். அய்..ய்யா ஒரே ஜாலிதான்’ ‘டின்..டின்..டின்.. டிங்..” பள்ளிக்கூட மணி அடிக்கும் சப்தம் கேட்டது. புஸ்தகப்பையை தோளில் தொங்கவிட்டவாறு சிட்டாய் கலைந்து வீட்டைப் பார்க்க ஓடினார்கள். உற்சாகத்துள்ளலில் மனஇறுக்கம் தளர்ந்து ஓட்டம் பிடித்தது. அது அடுத்த தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
பொழுது விடிந்தது. இதமான வெயிலோடு மார்கழிமாத சூரியன் பிரகாசமாய் எழும்பிக்கொண்டிருந்தது. கோவில்பத்து பேருந்து நிலையம். “குருமலை” என்ற பெயர்ப்பலகையுடன் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு பேருந்து புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
“ஒன்னு, ரெண்டு, மூணு… பதினாறு” ரெங்கசாமி வாத்தியார் வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக தலையைத் தொட்டு எண்ணினார்.
“ம்.. மொத்தம் பதினாறு பேரு. ஏறி உட்காருங்க” சொல்லி முடிப்பதற்குள் ‘தட..தட’வென படிக்கட்டுகள் சப்தமிட ஏறி இடம்பிடித்துக்கொண்டார்கள். பன்னீரும் நந்தனும் ஒரு இருக்கையில் அருகருகே இருந்துகொண்டனர். அவர்கள் சேக்காளிகள். எப்போது பார்த்தாலும் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கைபோட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
பின்வாசலோரம் கடைசி இருக்கையில் எல்லோரையும் கண்பார்வையில் வைத்துக்கொள்ள வசதியாக வாத்தியார் அமர்ந்து கொண்டார்.
“நந்தா.. நம்மளை மாப்பிள்ளை பெஞ்சுன்னு வகுப்புல சொல்வாருல்ல. இப்ப பாரு.. அவரு கடைசி சீட்ல உட்கார்ந்திருக்காரு” பன்னீர் காதோடு காது வைத்து பேசினான்.
“க்..கெய்.ய்..” யென பேச்ச சப்தம் பெரிதாக கேட்டுக்கொண்டிருந்தது.
“ஏலேய்… சத்தமில்லாம அமைதியாக இருக்கணும். சொல்லீட்டேன்.. ஆமா.. பன்னீரு.. உன் சத்தம்தான் பெருசா கேட்கு” ஒரு அதட்டு போட்டார்.
“ட்.ர்ரிர்… ட்.டி.ர்ர்..” இரட்டை விசில் சத்தத்துடன் பேருந்து புறப்பட்டது. “ப்.பிப்.. பீப்”
“குருமலை 13 கி.மீ.” என்று சாலையோரம் கொடிகள் படர்ந்த மரத்தின் ஓரமாக நின்ற அறிவிப்புப்பலகை கைநீட்டிச் சொன்னது. கிராமங்களை தொட்டுப் போகும் சாலையில் ஒரு அரைமணி நேரப்பயணத்திற்குப் பின் குருமலை கிராமத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பேருந்து திரும்பியது.
அங்கிருந்து பார்த்தால் கிழக்காக மடிந்து நீளும் மலைச்சரிவில் டிராக்டர் போகும் செம்மண் பாதையில் இரண்டு மைல்கற்கள் தூரம் காலாற நடந்தார்கள். வெருவெட்டை முட்செடிகளும் கிளுவையும் கள்ளிச்செடிகளும் பாதையின் இருபுறமும் அடர்ந்து நின்றன. ‘கி.ய்ய்’யென்று காட்டுவண்டுகளின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு புள்ளிமான் தன் குட்டிகளோடு பாதையின் ஊடாக மறுபக்கம் தாவிப்போனது. துள்ளியோடிய மான்களை பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள். மேகங்கள் கூடி பூந்தூறலாய் மழைத்துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இப்போது மரங்கள் அடர்ந்த சோலை கண்பார்வைக்கு தென்பட்டது. இன்றைய நாள் பொழுது இங்குதான் ஆனந்தமாக கடந்து போகும். அந்த இடத்தை “தாழையூத்து” என்று சுற்றுவட்டார மக்கள் சொல்வதை கேட்டு தெரிந்துகொண்டார்கள்.
தாழையூத்தில் நுழையும்போது ஐநூறு வருடங்கள் பழமையான பரந்து விரிந்து விழுதுகள் விட்டு நின்ற ஆலமரம் இலைகளை அசைத்து ‘வா..வா..’ என புன்னகைத்தது.
நந்தன் தன் தாத்தாவுடன் இங்கு பலதடவை வந்து விளையாடியிருக்கிறான். ஒரு ஆள் கையை உயர்த்தி தொட்டுவிடும் உயரத்தில் இரண்டு கிளைகள் அடிமரத்தின் இருபுறமும் தணிவாக நீண்டிருந்தன. மரத்தின் ஒருபக்கக்கிளை நீண்டு கைகாட்டிய இடத்தில் ஊற்றுநீர் பெருகிய ஒரு குளம் இருந்தது. நீர்ப்பரப்பில் தாமரை இலைகள் படர்ந்து அதன் பூக்கள் மலர்ந்து விரிந்தும் மொட்டுகளாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாய் இருந்தன.
நந்தன் பன்னீரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓடி தான் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த மரக்கிளையை பெருமையாகக் காண்பித்தான்.
“அய்..ய்.யா ஜாலி.. ஜாலி” என்று ஆறேழு பேர் அந்த தாழ்ந்த கிளையில் தொற்றி ஏறி உட்கார்ந்துகொள்ள கீழே நின்றவர்கள் ஊஞ்சலாட்டினார்கள். கிளையின் தளிர் இலைகள் சலசலவென அசைந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
“வந்தவுடனேயே மரத்துல ஏறிக்கிட்டீக. ஊத்துல போயி தண்ணீரை குடிப்போம். இறங்கி வாங்க” சற்று பின்னாலேயே வந்த வாத்தியார் விசிலை எடுத்து ஊதி கையசைத்தார்.
ரெங்கசாமி வாத்தியாருக்கு விசில் இணைபிரியாத நண்பன். அதை எப்போதும் கால்சட்டை பைக்குள் போட்டு வைத்திருப்பார். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதும் ஒரு சிறு சத்தம் கேட்டாலும் விசிலை எடுத்து ஊதிக்கொள்வார். காட்டிற்குள் அந்த விசில் அவசியமாக இருந்தது. ஆனாலும் அது இப்போது கறார் கண்டிப்புகள் இல்லாமல், ஒரு நண்பனைப்போல அரவணைப்பாக ஊதிக்கொண்டிருந்தது.
கூட்டம் சுனையை பார்க்க திரும்பியது. மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருந்த ஒரு இடத்தில் வாய்க்கால் நிரம்பி ஓடும் அளவிற்கு ஊற்று நீர் பொங்கி வந்துகொண்டிருந்தது. நடந்துவந்த களைப்பு தீர தெளிந்த நீரை அள்ளிக்குடித்தால் இதுவரை பார்த்திராத அப்படியொரு சுவை தேங்காய்ப் பாலாய் இனித்தது. புதர்ச்செடிகளுக்கு அருகில் மயில்கள் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்த அற்புதமான காட்சியை, “அங்கே பாருங்க” என்று ஒருவன் கைநீட்டிக் காண்பித்தான்.
ரெங்கசாமி வாத்தியார், “எனக்கு பின்னாலேயே வாங்க. இந்த வனத்தில் அரிய வகை மூலிகைச்செடிகளை காண்பிக்கிறேன்” என்று தோப்பு முழுவதும் சுற்றிக்கொண்டு வந்தார். முகர்ந்தால் மணக்கும் சிறுசின்னி, கோபுரம்தாங்கி, சிவனார்வேம்பு, சர்பத் தயாரிப்பில் சேர்க்கப்படுகிற நன்னாரிக்கொடி, உத்தாமணி, ரசவாத மூலிகையான விராலிச்செடி, நறுமணம் மிக்க லெமன்கிராஸ் புல், கருடன் கிழங்குக்கொடி என ஒவ்வொன்றாக இனம் காண்பித்து அதன் பயன்பாடுகளை விளக்கியதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்தனர். இப்போது சூரியன் தலைக்கு மேலே உச்சிவானத்திற்கு வந்திருந்தது.
சமையல் ஆக்கத்தெரிந்த கண்ணுச்சாமியும் மாரியும் காய்ந்த மரக்குச்சிகளை சேகரித்து, சுனைநீரை முகர்ந்து வந்து ஆலமரத்தடியில் மூன்று கற்களை எடுத்து முக்கோணமாய் அடுப்புக்கூட்டி மதிய உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக எடுபிடி வேலைகளை செய்வதற்கு கடைசி பெஞ்ச் பையன்கள் இரண்டு பேர் அடுப்பில் சுள்ளி விறகை தள்ளி நெருப்புமூட்டுவதும் வெங்காயம் உரிப்பதுமாக இருந்தனர்.
பழங்கால கமலைக்கிணறு, நீர் பாயும் வாய்க்கால்கள், மன்னர்கள் காலத்திய இளைப்பாறும் மாளிகை, மாமரநிழலில் பயன்பாடற்றுக் கிடந்த மாவரைக்கும் ஆட்டுரல், மசால் அரைக்கும் அம்மிக்கல் குழவி, மன்னரின் சேவகர்கள் தங்கும் அறைகளின் சுண்ணாம்புக்காரை சுவர்கள் என ஒவ்வொன்றாக காண்பித்துக்கொண்டே வந்தார் ரெங்கசாமி வாத்தியார்.
இப்போது தாழையூத்தின் கீழ்புறமாய் மலையடிவாரத்தை ஒட்டி இருந்த கன்னிமார் குளத்தின் கரையில் தன் குழுவோடு போய் நிழலோட்டமான இடத்தில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார் வாத்தியார். குளத்தில் அல்லிக்கொடிகள் படர்ந்து அதில் வெண்ணிறப்பூக்கள் மலர்ந்திருந்தன.
இந்தக் குளத்திற்கு தண்ணீர் வரத்து எப்படி வருகிறது என்று ஒருவன் கேட்க, மறுபக்கத்திலிருந்த நீர்வரத்து ஓடையை காண்பித்தார் வாத்தியார். மலையிலிருந்து வழிந்தோடிய மழைநீரும் பாறை இடுக்குகளிலிருந்து கசியும் நீரும் குளத்தில் வந்து நிரம்பியிருந்தது.
குளத்தில் தாவிக்குதித்தும் நீச்சலடித்தும் ஆனந்தமாய் குளியல் போட்டவர்களுடன் தண்ணீரை தட்டியும் இறைத்து வீசியும் ஒரு சிறுபிள்ளையைப் போல விளையாடிக்கொண்டிருந்தார் ரெங்கசாமி வாத்தியார். பாக்கெட்டிலிருந்த விசிலை கரையோர மரத்தின் கிளையில் தொங்கவிட்டு பத்திரப்படுத்திவிட்டுத்தான் குளத்தில் இறங்கியிருந்தார். அவருக்கு குருமலைக்காட்டின் ஒவ்வொரு அங்குலப்பகுதியும் அத்துப்படியான விசயம். தனக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்தே அடிக்கொரு தடவை இங்கு வந்து போனால்தான் அவருக்கு இதயமே துடிக்கும். மனிதர்களிடம்கூட ஏற்பட்டிராத ஈர்ப்பை இந்த மலை அவரிடம் கொண்டிருந்தது. அந்த இணைப்பின் அந்நியோன்யத்தில் ஏமாற்றங்களையும் நிம்மதியற்ற பொழுதுகளையும் தான் கண்ட அநீதிகளையும் தொலைத்துவிட்டிருந்தார். அந்த மலை தன்னை நாடி வந்தவர்களை தன் மடியில் கிடத்தி தாலாட்டும் ஒரு தாயாகவே இருந்தது. கரையில் நின்ற அத்திமரத்தின் நிழல், நீர்ப்பரப்பில் படர்ந்து அலையோட்டமாய் தவழ்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது.
“க்.கெள.வ்...க்.கவ்..” புதர்ச்செடிகளிலிருந்து புள்ளிமான்கள் கத்தும் சப்தம் கேட்டது. மான்கள் கூட்டமாய் மறுகரையில் நின்றுகொண்டிருந்தன. வழக்கமாக தண்ணீர் குடிக்க வரும் இடத்தில் ஆர்ப்பரிப்பு சப்தம் கேட்டு அவை மருட்சியோடு பார்த்தன.
“ம்.. கரையேறி வந்துருங்க. மதிய உணவுக்குப் போகலாம்” குரலை கேட்டு குளம் அமைதியானது. கரையேறிய வாத்தியார் முதல் வேலையாக விசிலை எடுத்து ஒரு ஊதல் ஊதினார். அமைதி திரும்பிய குளத்தின் நீர்ப்பரப்பில் இப்போது மான்கள் இறங்கின. அலுங்காமல் அலம்பாமல் தண்ணீரை குடித்த மான்களுக்குத்தான் அந்த குளத்தோடு எவ்வளவு பரிச்சயம். அது மான்களுக்கு தாய்மடி.
“புதிய விருந்தாளிகளாய் நாங்கள் வசிக்கும் காட்டிற்கு வந்திருக்கிறீர்களே.. இங்கே என்னவெல்லாம் பார்த்தீர்கள்” மான்கள் நெருங்கி வந்து கேட்டன.
“உங்களைத்தான் பார்க்க வந்தோம்” ரெங்கசாமி வாத்தியாரின் குரலை கேட்டதும் அந்த மான்கள் தலையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அவரை பலநாட்களாகப் பார்த்துப்பார்த்து அறிமுகமான மான்கள்தான் அவை.
“இந்தக் காடு முழுவதும் சுற்றினாலும், தண்ணீர் தாகமென்றால் வெகுதூரம் நடந்து தாழையூத்திற்குத்தான் வரவேண்டியதிருக்கிறது. இங்கு நாய்கள் நடமாட்டம் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு வயதான மானை நாய்கள் அடித்துத் தின்றுவிட்டன” கொம்புகளைச் சிலுப்பியபடி ஒரு ஆண்மான் சொல்லியது.
“நாய்களை சுட்டுப்போடணும். எங்க வீட்ல வேட்டைத்துப்பாக்கி இருக்கு சார்” ஒருவன் ஆவேசமாய் எம்பிக்குதித்தான்.
“ஏலேய்.. சும்மா இருலே. நீ பாட்ல எதையாவது சுட்டுப்போடாத” வாத்தியார் அமைதிப்படுத்தினார். அவர் எப்போதும் இப்படித்தான். யாராவது உணர்ச்சி வயப்பட்டு பரபரப்பானால் அமைதியாகப் பேசி அவர்களை சாந்தப்படுத்துவார். கண்டிப்புக்காக வெளித்தோற்றத்தில் விறைத்துக் கொள்வதுபோல் தோற்றமளித்தாலும் அது ஒரு நடிப்புக்குத்தான். மனதிற்குள் சதாநேரமும் சாந்தமாகவே இருப்பார். அப்படியொரு குணவாகு அவருக்கு வாய்த்திருந்தது.
“தாழையூத்தில் இருந்து சுற்றுப்பட்டு ஊர்களுக்கு போர்வெல் தண்ணீர் போகுது சார். எங்கள் ஊர் தலைவர்கிட்ட சொல்லி, குடிநீர் குழாயில் நல்லி பொருத்தி மான்களுக்கு தண்ணீர்த்தொட்டி திறக்கச்சொல்வேன் சார்” செந்தில் ஆவலாய் சொன்னான். செந்திலின் ஊர் அருகில்தான் இருக்கிறது.
“தெலுங்கானா மாநிலத்தில் புள்ளிமான்தான் மாநிலவிலங்காக இருக்கிறது. இந்த மான்களைப் பார்க்கும்போதே நமக்குள் ஒரு சாந்தமான உணர்வு பரவுகிறது. அதனால் நாமும் இதற்கு தண்ணீரை கொடுத்து பராமரிப்பு செய்யவேண்டும். எதையாவது கொடுக்கும்போதுதான் நமக்கும் ஒரு சந்தோசம் வருகிறது” வாத்தியார் சொன்னதை கேட்டு புள்ளிமான்கள் துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது.
பொய்யாமொழி அய்யனார் கோவிலில் உச்சிகால பூசை ஆகும் மணியோசை கேட்டது. அது ஒரு பழமையான கோவில். கடும் வெயில் காலத்திலும் குளிர்ச்சி தரும் கல்மண்டபங்கள் கோவிலில் இருந்தன. கருவறையில் மூலவர் அய்யனாருடன் பூரணம், பொற்கலையின் தத்ரூபமான காட்சியில் சாம்பிராணிப்புகை மிதந்துகொண்டிருந்தது. கோவிலின் முகப்பில் குதிரை மீதேறி வேட்டைக்குப் போவது போன்ற அய்யனாரின் காரைச்சிற்பம் காண்பவர்களுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஆலமரத்தடியில் அப்போதுதான் கண்ணுச்சாமி ஆக்கிவைத்திருந்த ‘கூட்டாஞ்சோறு’ கமகமவென மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
ஒரு வட்டமடித்து சுள்ளென்ற பசியோடு அமர்ந்தவர்களுக்கு முன்பாக தாமரை இலையில் அரிசி, பருப்பு, கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், நாட்டு வெங்காயம், மிளகாய் சேர்த்து ஆக்கிய கூட்டாஞ்சோறும் தக்காளி பச்சடியும் பரிமாறியதை ருஷி பார்க்கும் மகிழ்வான நேரம் இப்போது கைகூடி வந்திருந்தது. இலையிலிருந்து சூடான புகை வெளியேறி மிதந்து கொண்டிருந்தது. காட்டுச்சோறு ‘இன்னும் கொடு.. கொடு’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிட்டது.
“சமையல் பிரமாதம். சோறாக்கிய இரண்டு பேரையும் வாழ்த்தணும்” என்று அவர்களுக்கு கத்திரிக்காய் மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆலமரக்காற்றும் வெயிலோடு உறவாடிய இலைகளின் இயல்புகலந்த நிழலோட்டமும் அவர்களை ஸ்பரிசமாய் தொட்டு மெளனமொழியில் பேசியது. மரத்தின் நிழல் மெல்ல மெல்ல கிழக்கில் சரியத்தொடங்கியது. காய்ந்த இலைதழைகள் சிதறிக்கிடந்த தரையில் பேசிக்கொண்டும் உடலைச் சாய்த்து படுத்துக்கொண்டும் இருந்தவர்கள் ரெங்கசாமி வாத்தியாரின் ஒற்றை விசில் சப்தம் கேட்டு கொத்தாக எழுந்தனர்.
பொழுது இருட்டுவதற்குள் மலை உச்சியில் இருக்கிற ‘தவசி குகை’க்கு போய் வருவோம் என்று வாத்தியார் முன்னால் நடந்தார். நீர்ச்சுனையிலிருந்து இடது புறமாய் பிரிந்துபோகும் தடத்தில் நடந்து மயில் வனத்தின் ஊடாக போய் மலையேறினார்கள். வழியெங்கும் எலுமிச்சை புற்கள் அசைந்து வாசனை பரப்பின. சில்லென்ற காற்று பாறைகளில் மோதி சுழன்று திரும்பியது. குகையை எட்டிப்போனபோது நாலாபுறமும் இருந்த ஊர்கள் தம் இருப்பை காட்டி நட்பு கொண்டாடின. இது இந்த ஊர்.. அது அந்த ஊர்.. என்று தனக்கு தெரிந்த ஊர்ப்பெயர்களை சொல்லிக்கொண்டே வந்தார் ரெங்கசாமி.
மூச்சு வாங்க நடந்து குகை வாயிலுக்கு முன்னால் போய் நின்றபோது அங்கே ஒருவிதமான அமானுஷ்யமான அமைதி நிலவுவதை உணரமுடிந்தது. குகையின் மேல் ஒரு கல்லாலமரம் வளர்ந்து முன்னால் எட்டிப்பார்த்தது. பக்கவாட்டில் கற்றாழை இனமான ‘மருள்’ செடிகள் முளைத்திருந்தன. குகைக்கு முன்னால் ஒரு வெட்டையான நிலப்பகுதி அமர்வதற்கு வசதியாக இருந்தது. அதை சுற்றி பொடிவட்டு இலைகளுடன் ‘மை மரங்கள்’ அசைந்து கொண்டிருந்தன. குகையின் வாயிலை ஒரு கல்பாறை அடைத்துக்கொண்டிருந்தது. குகைவாசலின் முன்புறமிருந்த பள்ளத்தில் இறங்கிய பன்னீர் தான் கொண்டுவந்திருந்த திராட்சை கொத்தை ஒரு கல்மீது வைத்துவிட்டு வந்தான். குகைக்கு உள்ளிருந்து கீரிப்பிள்ளைகள் மெல்ல எட்டிப்பார்த்தன. அவற்றின் வாய்ப்பகுதி வித்தியாசமாக கோவைப்பழம் போல சிவப்பு நிறத்திலிருந்தது. அவை திராட்சையை தின்றுவிட்டு ‘இன்னும் கிடைக்குமா’ என்று ஏறிட்டுப் பார்த்தன.
“கொஞ்ச நேரம் மெளனமாக இந்த இடத்தில் அமைதியாக உட்காருவோம். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால்தான் இந்த இடத்தின் சக்தியை கிரகிக்கமுடியும்” சொல்லி முடிக்கும்முன் இதுவரை கேடடுக்கொண்டிருந்த பேச்சு சத்தம் ஒடுங்கியது. நிசப்தமான பொழுதில் காடு அதன் பாஷையில் பேசுவது கேட்டது. இதுவரை கண்டிராத மனதை கவரும் நேரமாக அது இருந்தது.
“காட்டுப்பன்றிகள் வெளியே வரும் நேரம். இப்போது இறங்கினால் சரியாக வரும்” என்று வாத்தியார் சைகை செய்து முன்னால் போனார்.
அடிவானத்திலிருந்த கல்மரத்தை அடைந்தபோது சூரியன் தொடுவானத்திற்கு மேல் இறங்கிக்கொண்டிருந்தது. ஒரு சிறுபாறைக் கல்தான் மரத்தின் உருவத்தில் அங்கே இருந்தது.
“வாருங்கள்.. பேச்சியம்மன் குகையை பார்த்துவிட்டுப் போகலாம்” என்று கல்மரத்திலிருந்து பக்கவாட்டுச்சரிவில் கொஞ்சதூரம் கூட்டிக்கொண்டு போனார். ஒரு இருபது பேர் கூடி கால்களை நீட்டி தளர்வாக உட்கார வசதியாக அந்தக் குகை விசாலமாக இருந்தது. மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க வசதியான இடம்தான் என்று அங்கிருந்து திரும்பினார்கள்.
சுனையை கடந்து செல்லும் போது ஏழெட்டு காட்டுப்பன்றிகள் ‘உர்..உர்..ர்’ரென உறுமியபடி வழிமறித்து நின்றன. தலை முதல் பின்பகுதி வரை பிடரிமயிர்கள் கம்பி போல் சிலிர்த்துக்கொண்டு நின்றது. அதன் கன்னத்தில் ரோமமும் வாலில் மயிர்க்குஞ்சமும் காற்றில் அசைந்தது. கீழ்த்தாடையில் இரண்டு கோரைப்பற்கள் வளைந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. பன்றிகளின் உறுமல் சப்தம் பயமுறுத்துவது போலிருந்தது.
ரெங்கசாமி வாத்தியார் பதட்டமடையாமல் தோள் பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து கீழே வைத்தார். பழவாசனை பன்றிக்கூட்டத்தை கிறங்கச்செய்ததில் அவை அமைதியானது. பழத்தை தின்றுகொண்டே ஒரு பெரிய பெண்பன்றி பெருமையாய் பேசத்தொடங்கியது.
“நாங்கள் ஐம்பது கிலோ எடையுள்ள பெரிய கல்லையும் புரட்டிப்போட்டு விடுவோம். கிழங்குகளை தின்பதற்கு மண்ணைக்கிளறி தோண்டும்போது நீரும் காற்றும் உட்புகுந்து அதில் பறவைகள் போட்ட எச்சங்களின் விதைகள் முளைத்து விருட்ஷங்களாகி வனம் செழிப்பாகிறது. நீங்களோ பேராசையில் வனத்தையே அழிக்கிறீர்கள்” என்று கோபத்துடன் கேட்டது.
“உங்கள் ஆதங்கம் புரிகிறது. நாங்களும் உங்கள் நண்பர்கள்தான்” கண்ணுச்சாமிதான் பன்றிகளுக்கு பதில் சொன்னான்.
“சார்.. எங்க அப்பா கூட சொல்லுவாரு. ஏலேய்.. பரீட்சையில மார்க் குறைவாக வாங்கியிருக்க. நீ பன்னி மேய்க்கத்தாம்லே லாயக்குன்னு திட்டுவார்” அழகர் தன் கதையை எடுத்துவிட்டான்.
“அப்படியா.. எங்களை மரியாதையில்லாமல் பேசுனாரு. எதற்கெடுத்தாலும் பன்னி மாதிரி இருக்க.. பன்னி மாதிரி திங்கிறேன்னு எங்களை இழிவாகப் பேசுறீக. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு எங்களை எதற்காக ஊடால இழுக்கீக” பன்றி தலையை திருப்பிப் பார்த்தது.
“அவர்களுடைய நிலத்தில் சோளம், வேர்க்கடலை விதைத்திருந்த போது எல்லாத்தையும் முண்டிக்கிளறி தின்றுவிட்டீர்களாமே. அதனால் ஒரு கோபத்தில் சொல்லியிருப்பார்” வாத்தியார் சமாளித்தார்.
“செவித்திறனும் பார்வையும் குறைவுங்கிறதால மோப்ப சக்தியால் தரையை பார்க்க குனிந்து உணவை தேடி போகிறோம். நிலத்தின் பொலியில் ரோமங்களை துணியில் சுற்றிப்போட்டு வைக்கிறீர்கள். அதை தின்று தொண்டையில் சிக்கி அலறும்போது மற்ற பன்றிகளையும் அலறவிட்டு விரட்டுறீகளே..” பன்றிகள் திருப்பிக்கேட்டன.
“சீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சுபாவம் இருக்கும். அதனதன் இயல்பில் சாந்தமாகவோ ஆக்ரோசமாகவோ அதன் குணங்களை வெளிப்படுத்தும். இந்தப் பன்றிகள்தான் கரடியைவிட கொடூரமாக திருப்பித்தாக்கும் பழக்கமுடையது. அதனால் இங்கே ரொம்ப நேரம் இருக்கவேண்டாம். இவைகளோடு வாதம் செய்யாமல் அப்பிடியே பேசிக்கொண்டே போயிருவோம்” என்று வாத்தியார் சொல்லவும் பழங்களை கீழே சிதறிக்கொண்டே நைசாக அந்த இடத்தைவிட்டு கடந்துவிட்டார்கள்.
“உடல் சூட்டை தணித்துக்கொள்ள சேற்றில் புரண்டு உடலில் சேறு பூசிக்கொள்கிற பன்றிகளோடு நமக்கெதற்கு சகவாசம்” என்று தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டு விறைப்பாக நடந்து போனான் அழகர்.
அது மாடியுடன் கூடிய காட்டு பங்களா. ஒரு காலத்தில் வேட்டையாடவும் பொழுது போக்கிற்காகவும் படைவீரர்களுடன் வந்த ராஜாக்கள் தங்கி ஓய்வெடுத்த பங்களா. மேல்மாடியில் நான்கு புறங்களிலும் கம்பி அடைப்புகளுடன் கூடிய தாழ்வாரங்கள் இருந்தன. அதில் நின்று காட்டின் அழகையும் மலைமுகடுகளையும் அதன் சரிவுகளையும் பார்த்து மகிழலாம். வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கலாம். இன்று இரவு அந்த பங்களாவில்தான் தங்குவதற்காக சென்றார்கள். சன்னல்கள் காற்றோட்டமாக திறந்து வைக்கப்பட்டு தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அறையிலும் தாழ்வாரங்களின் மூலைகளிலும் அரிக்கேன் விளக்குகள் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தன.
இரவு உணவுக்குப்பின் ரெங்கசாமி வாத்தியார் சொன்ன சுவாரஸ்யமான கதைகளை கேட்டுக்கொண்டிருந்தனர். உறங்குவதற்கு முன் தோப்பில் ஒரு சுற்று நடை போய்வருவோம் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த அரிக்கேன் விளக்குகள் இரண்டை எடுத்துப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கி நடந்தார்கள். மரங்களும் புல், செடி கொடிகளும் அந்த நிசப்தமான இரவில் உறங்கிக்கொண்டிருந்தன. காற்று மெதுவாக வீசி இலைகளை அசைத்து ‘உஸ்..ஸ்..”சென உசுப்பிக்கொண்டிருந்தது.
ஆலமரம் விழுதுகளை ஆட்டியவாறு இந்நேரத்தில் வருவது யாரென்று ஒய்யாரமாய் நின்று பார்த்தது. நிலவு மலைமுகடுகளுக்கு மேல் எழும்பி பிரகாசித்துக்கொண்டிருந்தது. ‘வ்.வுய்..ய்..’யென காட்டு வண்டுகள் முரலும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுனையில் ஊற்றெடுத்து வாய்க்காலில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த நீரோட்டம் நிலவொளியில் பொன்னிறமாய் ஒளிர்ந்தது.
பாதையிலேயே மேம்போக்காக நடந்து மச்சுபங்களாவுக்கு திரும்பி வந்தபோது நரிகள் ஊளையிடும் சப்தம் அருகில் கேட்டது. இரவில் உறங்கியவர்களை குருமலைக்காற்று அடிக்கொரு தடவை வந்து தொட்டுப் பார்த்து போனது.
அதிகாலையில் மயில்களின் அகவலும் விதவிதமான பறவை ஒலிகளும் கேட்டு விழிப்பு தட்டியது. தாமரைக்குளத்தில் போய் குளித்து மகிழ்ந்த புத்துணர்வில், “புறப்படலாம்” என்று ரெங்கசாமி வாத்தியார் விசிலை எடுத்து ஊதவும் அங்கிருந்து திரும்பிச்செல்ல மனமில்லாமல் மெல்ல ஊரைப் பார்க்க நடந்தார்கள். ஆலமரம் இலைகளை அசைத்து, “அடிக்கொரு தடவை இங்கே வாங்க” என்று வழி அனுப்பி வைத்தது.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2





மிகவும் அருமையான பள்ளிப் பருவ பயணக் கதை நான் மன அழுத்தம் இருந்தாலே குருமலைக்கு ஞாயிறு அங்கே அடிக்கொருதரம் வந்துருக்கேன் எனக்கு குருமலைக் காற்று குதூகலம் தந்தது இப்போது வந்து ஏழட்டு வருசமாச்சி.... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து.கி. உக்கிரபாண்டி
Super fantastic
அருமையான எழுத்து..பள்ளி தோழர்களுடன் இணைந்து நாங்களும் குருமலையில் சுற்றி திரிந்தோம்.. வாழ்த்துக்கள் பொன்னுராஜ்…
Super Mama
A very good story