top of page

பட்டுக்குட்டி


யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துச் செல். யேய்.. அதை எடுத்துச் செல். யார் யாரோ வேலைகளை சொல்வார்கள். யேய்,, என்பது அவள் பெயர் இல்லை. ஆனால், அப்படித்தான் அழைப்பார்கள். அவளுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால், அவளுக்கே அது தெரியாது. அவள் பாட்டி மட்டும் அவளை “செல்லக்குட்டி” என்று கூப்பிடுவார். அவளுக்கு ஏழு வயதிருக்கும். அவளுக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அவளும் பாட்டியும் தூரத்தில் சின்னக் குடிசையில் வாழ்கிறார்கள். 

அவள் முகம், கை காலெல்லாம் அழுக்காகவே இருக்கும். அவள்  தலை முடி பரட்டையாக இருக்கும். எப்பொழுதும் இரண்டு அழுக்கான சட்டையும், இரண்டு பாவாடையும் உடுத்தியிருப்பாள். மேல் சட்டை கைப் பக்கம் கிழிந்திருக்கும். அப்படியே தான் அவள் ஊர் முழுவதும் சுற்றுவாள். தோளில் ஒரு பெரிய பிளாஸ்டிக் சாக்குப்பை போட்டிருப்பாள். சிறிய நீளத்தில் ஒரு கம்பை வலது கையில் பிடித்திருப்பாள். கம்பின் நுனியில் ஒரு வளைந்த கம்பி கட்டியிருப்பாள். அதைக் கொண்டு, எதையும் பிடித்து இழுத்து விடுவாள். 


குப்கைளை விலக்கி பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் பொருக்குவாள். அட்டைப் பெட்டிகள். வேண்டாத இரும்பு சாமான்கள். கிழிந்த பிளாஸ்டிக் பைகள். இப்படி பல வேண்டாத பொருட்களை அவள் பை முழுக்க நிரப்புவாள். பழைய பொருட்கள் கடையில் கொண்டு சேர்ப்பாள். கொஞ்சம் பணம் கிடைக்கும். பாட்டியிடம் சரியாக எண்ணிக் கொடுப்பாள். இரவு வருவதற்கு முன்பே வீட்டுக்கு வந்து விடுவாள். 


அவள், காலையிலிருந்து மாலை வரை குப்பைகளை பரசும் போது, சில நேரம் அழகான பொம்மைகள் கிடைக்கும். அவைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து விடுவாள். கிழிந்து போன அந்த பொம்மைகளை ஊசி நூலால் பாட்டி தைத்து தருவார். அப்புறம் பொம்மைகள் சரி ஆகி விடும். பழைய துணியால் அந்த பொம்மைகளுக்கு கலர்கலராக சட்டை, பாவாடை பாட்டி தைப்பார். பொம்மைகள் அழகாய் மாறிவிடும். அந்த பொம்மைகளோடு இரவில்  பேசிக்கொண்டடே தூங்கி விடுவாள்.


அவள், ஒரு நாள் பகலில் குப்பைகளை பரசிக் கொண்டிருந்தாள். அது  பெரிய பெரிய வீடுகள் உள்ள தெரு. ஒரு வீட்டின் சாளரத்தில் உட்கார்ந்திருந்த, ஒரு குட்டிப் பாப்பா அழுது கொண்டிருந்தாள். முதலில் இவள் கவனிக்கவில்லை. கொஞ்சம் உன்னிப்பாக கேட்டாள். அழும் சத்தம் இவள் காதில் நன்றாகவே கேட்டது. அது குட்டிப்பாப்பாவே தான். அந்த குப்பைகளையே பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவள் ஒரு நிமிடம் பயந்து விட்டாள். தன்னைத்தான் பார்த்து அழுகிறாளோ…. என்று நினைத்தாள். அவள், குட்டிப்பாப்பாவை விட்டு கொஞ்சம் விலகி நின்றாள். ஆனாலும், குட்டிப்பாப்பா அழுதாள்.


அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்து அழவில்லை என்று. அவள் குட்டிப் பாப்பாவிடம் என்ன? என்று கேட்டாள். ஆனால், குட்டிப்பாப்பா எதுவும் சொல்லவும் இல்லை. அழுகையையும் நிறுத்தவில்லை. அவள் மறுபடியும் கேட்டாள். இப்பொழுதும் அழுதாள். ஆனால், ஏம்… பொம்மை… என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அவளுக்கு டக்கென்று உரைத்தது. குட்டி பாப்பாவிடம் என்ன பொம்மை என்று கேட்டாள். குட்டி பாப்பா அழுகையை நிறுத்தினாள். அவளிடம் என் எல்லோ கலர் குட்டி நாய் பொம்மை…. என்றாள். அவள் சுற்றி சுற்றி பார்த்தாள். எங்கும் நாய் குட்டி பொம்மை இல்லை. 


குட்டிப் பாப்பா அழ வில்லை. ஆனால், சாளரத்தின் வழியே மஞ்சள் நிற நாய் குட்டி பொம்மை தெரிகிறதா…? தேடினாள். எங்குமே இல்லை. குட்டிப் பாப்பா முகம் வாடியது. அவள், குட்டிப்பாப்பாவிடம் “எங்கேயாவது உன் நாய்குட்டி பொம்மை கிடைத்தால் கொண்டு வருகிறேன்” என்றாள். குட்டிப் பாப்பாவும் கொஞ்சம் சிரித்து,  தலை அசைத்தாள். அவள் அங்கிருந்து சென்றாள். அதன்பின், ஊருக்குள் எங்கெல்லாமோ சென்றாள். சென்ற இடமெல்லாம் குட்டிப்பாப்பாவின் நாய்குட்டி பொம்மையை தேடினாள். எங்கும் மஞ்சள் நிற நாய்குட்டி பொம்மை இல்லை.


அவள் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அன்று இரவு பொம்மைகளோடு விளையாடி பேசிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளுக்கு நினைவெல்லாம் குட்டிப் பாப்பாதான். குட்டிப்பாப்பா அழுததையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவளிடமும் ஒரு நாய் குட்டி பொம்மை இருந்தது. அது கிழிந்து போன, நாய்குட்டி பொம்மை. அந்த பொம்மையை பாட்டி ஊசி நூலால் தைத்திருந்தாள். அதற்கு ஒரு பட்டுச் சட்டையும் தைத்து போட்டிருந்தாள். குட்டிப்பாப்பாவின் நாய்குட்டி பொம்மை இல்லையே. அவள் நாளையும் அழுவாளே…  நினைத்துக் கொண்டே இருந்தாள். அப்படியே தூங்கி விட்டாள்.


மறுநாள் காலையில் அவள் சாப்பிட்டு, பாட்டியிடம் சொல்லி விட்டு பிளாஸ்டிக் சாக்கு, கையில் கொக்கிக் கம்புடன் கிளம்பினாள். ஆனால், இன்று முகத்தை தண்ணீரால் துடைத்தாள், தலையை சீவினாள். அவளுக்குள் ஒரு சந்தோசம். பெரிய வீடுகள் உள்ள தெருவிற்குள் சென்றாள். சில வீடுகளைக் கடந்து சென்றாள். குட்டிப்பாப்பாவின் வீடு மூன்றாவது தெரு. கடைசி வீடு. இரண்டு தெருவைக் கடந்தாள். மூன்றாவது தெருவுக்கு சென்றாள். எப்படியும் குட்டிப்பாப்பா அழுகையை நிறுத்தி விடலாம் என நினைத்து சிரித்துக் கொண்டாள். குட்டிப்பாப்பா வீட்டை நெருங்கினாள். அந்த வீட்டின் சாளரத்தில் பார்த்தாள். ஆனால், குட்டிப் பாப்பா அங்கு இல்லை. அவள் மனம் சோர்வானது.


ஒரு வேளை குட்டிப் பாப்பா வீட்டிற்குள் இருக்கலாம். பிறகு பார்ப்போம்… என்று அவள் திரும்பினாள். “அக்கா..அக்கா… என் நாய்குட்டி பொம்மையை பார்த்தாயா,,?” என்று குட்டிப்பாப்பா அவள் கையை பிடித்தாள்.   அவள் கையை பிடித்து “அக்கா” என்று அழைத்ததில் ஒரு சந்தோசம். 

உடனே, அவள் பிளாஸ்டிக் சாக்கை திறந்தாள். குட்டிப்பாப்பா அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளிருந்து ஒரு நாய் குட்டி பொம்மையை வெளியே எடுத்தாள். குட்டிப் பாப்பா முகத்தில் சிரிப்பு பொங்கியது. அந்த நாய்க் குட்டி பொம்மை பட்டு போல் மினிங்கியது. அது குட்டிப் பாப்பா பொம்மை இல்லை. ஆனால் அதை விட அழகாக இருந்தது. குட்டிப்பாப்பா அந்த பொம்மையை அவளோடு சேர்த்து அணைத்தாள். கண்ணத்தோடு ஒட்டிக் கொண்டாள். அக்கா………எனக்கு இந்த நாய்குட்டி பொம்மை ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள். இது பட்டுக்குட்டி என்றாள். குட்டிப்பாப்பா செய்வதைப் பார்த்து அவளும் சந்தோசத்தில் சிரித்தாள். அன்று முதல் அவளும் குட்டிப் பாப்பாவும் நண்பர்கள் ஆனார்கள்.




Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page