பறக்கும் பலகை
- ஜெ.பொன்னுராஜ்

- May 15
- 4 min read

வீட்டுப்பாடம் எழுதி முடித்த மகிழ்ச்சியில் முற்றத்திற்கு வந்து நின்று பார்த்தாள் சுபா. கீழ்வானில் நிலாவும் எழும்பி வந்து பார்த்தது. அதன் அருகில் ஒரு விண்மீன் பிரகாசமாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டு சுமா நடந்து வருவது தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.
சுபாவுக்கு விளையாட ஒரு ஆள் கிடைத்துவிட்டது. பேச்சு சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வந்து கூடினார்கள்.
“அங்கே பாரு.. நிலாவுல காளைமாடு காலைமடக்கி படுத்துக்கிட்டு அசை போடுது” இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தாள் சுபா.
“வானத்துல பாரு.. நட்சத்திரங்கள் முகம் காட்டி சிரிப்பதுபோல் மினுங்குது” சுமா கைகளை தட்டி எம்பிக்குதித்தாள்.
வானத்தின் இருட்டுவெளியில் இறைந்து கிடக்கும் விண்மீன் கூட்டம் மனதிற்குள் வந்து குதியாட்டம் போட்டன. மாலை நேரத்தில் நீலவானமும் அதில் செம்பிழம்பாய் இறங்கி பதுங்கிய சூரியனையும் பார்த்த காட்சிகள் மாறி இருளின் வியாபகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது.
அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பிரகாசமான ஒளிச்சுடர் வானத்திலிருந்து இறங்கி வந்தது. அது பல வண்ணங்களில் ஒளிர்ந்து பூமிக்கு அருகில் நெருங்கி வந்தது.
“அய்..ய்.யா. அங்கே பாரு. தேவதை போல ஒரு உருவம் நம்மளைப் பார்த்து வருது” குணா கைநீட்டிக் காண்பித்த திசையில் எல்லோருடைய முகங்களும் திரும்பி அண்ணாந்து பார்த்தன.
அது இறக்கைகளை அசைத்தபடி நீண்ட கூந்தல் அசைய மயிலிறகாய் மிதந்தபடி பூமியில் கால்களை தொட்டு இறங்கியது. அதன் உடலெல்லாம் பொன்னிறமாகவும் கண்கள் மஞ்சளாக, கூந்தல் அடர்நீலமாகவும் இறக்கைகள் சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களிலும் ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.
தேவதை தன் இறக்கைகளை மேலும்கீழுமாக மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தது. அதன் வண்ணவண்ண ஒளிமினுக்கம் ஒரு வில் போல வளைந்து ஆடியது.
யாரும் அதைப் பார்த்து பயந்து போனதாக தெரியவில்லை. தேவதையின் சாந்தமான தோற்றமும் மென்மையான அசைவுகளும் வசீகரமான தோற்றமும் நெடுநாட்கள் பழகிய தோழியைப் போலவே இருந்தது.
“குழந்தைகளே.. வானுலகத்திலிருந்து உங்களை பார்க்க வந்திருக்கிறேன். மேலே தெரிகிற நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாத்தையும் உங்களுக்கு காண்பிக்கப்போகிறேன்”
“எங்க அம்மா திட்டும். நான் வரலை” என்று தினகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டான்.
“ஏய்.. பயப்படாதே. தேவதை நமக்காக வந்திருக்கு” தினேஷ் கையசைத்துச் சொல்லியும் திரும்பியே பார்க்காமல் போய்விட்டான்.
தேவதை சில நொடிநேரம் கண்களை மூடி கைகளை அசைக்கவும் ஒரு பலகை காற்றுவெளியில் மிதந்து அருகில் வந்தது.
“இப்ப எல்லோரும் பலகையில் ஏறி உட்காருங்க. வானவீதியில் சஞ்சாரம் செய்துவிட்டு வருவோம்”
அந்த விசாலமான பலகையில் ஏறி உட்கார்ந்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவரையொருவர் உற்சாகமாய் பார்த்துக்கொண்டனர். தேவதையும் இறக்கைகளை குவித்து மடக்கி அவர்களோடு உட்கார்ந்துகொண்டது. உள்ளங்கைகளை ஏந்துவது போல கைகளை உயர்த்தவும் பலகை மெல்ல எழும்பி ஆகாயத்தில் பறந்தது. பறவைகளுக்கும் எட்டாத உயரத்தில் பறந்து பறந்து மேலே எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.
பூமியிலிருந்து பார்த்தபோது சிறியதாய் மின்னிய புதன்கிரகம் பிரமாண்டமான ரூபத்தில் பசுமை நிறத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தது. பலகை அந்த புதன் கோளில் போய் இறங்கியது.
“குழந்தைகளே.. வீட்டு முற்றத்தில் விளையாடும் போது உங்களை தினமும் பார்ப்பேன். உங்களுக்கு என்னோட வீடு பிடிச்சிருக்கா” புதன் கைகளை நீட்டி அணைத்தபடி கேட்டது.
“உன் பசுமை நிற ஜொலிப்பு எங்களுக்கு பிடிக்கும். ஆனால் இந்த இராத்திரி நேரத்தில் இங்கே கடும்குளிராக இருக்கிறதே”
“நான் பகல் வேளையில் வெப்ப சுபாவமுள்ளவன். நான் சூரியனுக்கு அருகிலுள்ள மிகச்சிறிய கோள். நான் பாறைகளால் ஆனவன். 88 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவருவேன். நீங்கள் நன்றாகப் படியுங்கள்” என்று சொன்னது.
“சரி.. இன்னும் போவோம்” என்று தேவதை கையசைக்க பலகை பறந்தது.
பிரகாசமான வெண்ணிறமாய் ஒளி வீசிக்கொண்டிருந்த வெள்ளி கோளை தொலைவிலிருந்து பார்த்தனர். அது அதிகமான வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. பறக்கும் பலகை இன்னும் பறந்து நிலவில் போய் இறங்கியது.
“நிலாவில் காளைமாடு படுத்துருக்குன்னு சுபா சொன்னாளே. பாட்டி வடை சுடுதுன்னு கந்தனும் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தான். இங்கே வந்து பார்த்தால் மேடுபள்ளங்களும் பாறைகளாகவும் இருக்கிறதே” என்று சுமாவிற்கு தெளிவு வந்தது.
வானவெளியில் பயணம் தொடர்ந்தது. பாறை, பாலைவனம், வெடிக்காத எரிமலை, பனி மூடிய துருவங்கள் என சிவப்பு நிறத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்த கோளை “செவ்வாய்” என குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தது தேவதை. செவ்வாய் கிரகத்தில் பலகை இறக்கிவிட்டதும் ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்து ஆட்டம் போட்டு ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தன் மடியில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்து எப்போதுமில்லாத வகையில் செவ்வாய்க்கு ஒரே சந்தோசம். “நான் உங்கள் பூமியின் விட்டத்தில் பாதி அளவு இருக்கிறேன். என்னிடம் பனிக்கட்டி வடிவில் நீரின் தடயங்கள் இருக்கிறது. என்னோடு வசிக்கலாமா என்று சிலபேர் இங்கே வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நீங்கள் விரும்பும்போது என்னிடம் வரலாம்” என்று உபசரித்தது.
பறக்கும் பலகை உயரே உயரே பறந்து போய்க்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டும் தூரத்திற்கு இருள்வெளியில் பதுங்கிய நீலவானத்தை ஊடுருவிக்கொண்டு போனது.
பொன்னிறமான கதிர்களை வீசி பிரகாசமாய் மினுங்கிக்கொண்டிருந்தது வியாழன் கோள்.
“குழந்தைகளே.. இப்ப நாம் போய் இறங்கும் இடம் வியாழன். இங்கே வாயுக்களும் உலோகப்பாறைகளும் இருக்கும்” தேவதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே பலகை வியாழனில் இறங்கியது.
அவர்களது வருகையால் மகிழ்ந்துபோன வியாழன் மேலும் பிரகாசமாய் ஒளிர்ந்து சிரித்தது.
“நான் சூரியகுடும்பத்தில் மிகப்பெரிய கோள். தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிலவுகள் இங்கே உள்ளது. என்னைத் தேடி வந்து பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் என்ன படிக்கிறீர்கள்” நீண்ட நாள் நண்பனைப் போல நலம் விசாரித்தது.
பலகையிலிருந்து இறங்கியர்கள் வியாழன் காட்டிய அன்பில் மகிழ்ந்து உற்சாகமானார்கள்.
“பூமியிலிருந்து பார்க்கும் போது உள்ளங்கையில் அடங்குவது போல தெரியும் வியாழன் உங்கள் பூமியைவிட பதினொன்று மடங்கு பெரியதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” தேவதை சொன்னதை கேட்டு வியப்பாக இருந்தது.
சரி மேலும் போகலாம் என்று பலகையில் அவர்கள் பயணம் தொடர்ந்தது. “அங்கே பாருங்கள். சாம்பல் நிறத்தில் ஒளிர்ந்து பிரமாண்டமாய் சுழன்று போகும் இது என்ன..” சுபா உற்சாகமாய் கைநீட்டிக்காண்பித்து கேட்டாள்.
“அதற்கு பெயர் சனி. அங்கேதான் இப்பொழுது போகிறோம்” என்று தேவதை ஒரு புன்முறுவல் பூத்தது. தன்னிடம் வந்தவர்களை வாரியெடுத்து அணைத்துக்கொண்டது சனி.
“உன்னை பார்த்ததில் மனதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. பூலோகத்தில் மனிதர்கள் எதற்காக உன்னை பார்த்து பயப்டுகிறார்கள்” தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள் சுமா.
“நான் மிகவும் குளிர்ச்சியான கோள். ஒரு பிரமாண்டமான கடலில் என்னை தூக்கிப்போடுகிறீரகள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் கடல்நீரில் மிதந்துகொண்டுதான் இருப்பேன். நான் வாயுக்களால் ஆனவன். என்னைப் பார்த்து பயப்பட என்ன இருக்கிறது. நீங்கள் நேர்வழியில் இருந்து உங்கள் கடமையை ஆற்றுங்கள்”
“சரி அப்படியே செய்கிறோம் “
“சூரிய ஒளியும் நிலவொளியும் உங்களை வந்து தொடுகிற மாதிரி நானும் உங்களை சந்திக்க வருவேன். அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பேன்”
“நாங்கள் யாரும் உன்னை இதற்கு முன் உன்னைப் பார்த்ததேயில்லையே”
“நான் வாயுக்கோளம். என் வியாபகம் பூமியிலும் இருக்கும்”
“நீ சொன்னதை நினைவில் வைத்திருந்து எல்லோருக்கும் நன்மையே செய்வோம். இப்போது சென்று வருகிறோம்”
“இவ்வளவு தூரம் வந்தபிறகும் ராகு கேதுவை இன்னும் பார்க்கவில்லையே” தினேஷ் ஆவலாய் கேட்டான்.
“அவை நிழல் கிரகங்கள். சூரியனுடைய சுழற்சியினால் அதனுடைய மையத்தில் ஏற்படும் அழுத்தத்தால் அதன் இருபுறமும் வெளியே வருகிற கருமை நிறமான காந்த அலைப்பாதைகளைத்தான் ராகு கேது என்று சொல்கிறோம்”
“சரி நேரமாகிறது. அம்மா தேடுவார்கள். இப்பொழுது நாம் திரும்பிப்போகலாமா” சுபா கேட்க, எல்லோரும் பலகையில் ஏறிக்கொண்டார்கள். தேவதை கைகளை அசைக்கவும் பலகை அவர்களை சுமந்துகொண்டு பூமியை நோக்கி பறக்க ஆரம்பித்தது. நட்சத்திரங்கள் கண்சிமிட்டி விடை கொடுத்தன.
சூரியனிலிருந்து மூன்றாவது வட்டப்பாதையில் சுழன்று கொண்டிருந்த பூமிக்கு மேல் நெருங்கி வந்தார்கள். வெளிச்சப்புள்ளிகளாய் ஊர் தெரிந்தது.
சுபாவின் வீட்டு முற்றத்தில் பலகை வந்து இறங்கியது. குழந்தைகளின் ஆரவாரச்சத்தம் கேட்டு தினகர் ஓடி வந்து பார்த்தான்.
தேவதை உள்ளங்கையை மேல் நோக்கி உயர்த்த பறக்கும் பலகை மாயமாய் மறைந்து போனது.
“குழந்தைகளே.. உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதானே. இப்பொழுது உங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்கிறேன்” என்று தேவதை உயரே உயரே பறந்து போனது.
நட்சத்திரங்களின் வர்ணஜாலங்களுக்கிடையே ஒளிர்ந்து ஒளிர்ந்து ஒரு புள்ளியாய் அந்த தேவதை மறைவதுவரை இமை கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2





அருமை
குழந்தைகளுக்கு கோள்களை பற்றி நன்கு புரியும் வகையில் கதை வந்து இருந்தது மிகவும் சிறப்பு அண்ணா
ராகு கேது பற்றி சொன்னது கூடுதல் சிறப்பு அண்ணா
உன்னுடைய எழுத்து பயணம் தொடரட்டும் அண்ணா
சற்று நேரம் நானும் உடன் பயணித்தேன் நன்றி💓
சிறுவர்கள் அறிந்து கொள்வது மட்டுமல்ல,பெரியவர்களுக்கும் நினைவூட்டக் கூடிய கோள்களைப் பற்றிய செய்திகள்.
இரண்டாவது மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்கு கோள்கள் பற்றிய திறனை கதை வாயிலாக கற்பிப்பதற்கான அருமையான புத்தகம் இதன்மூலம் கோள்களின் தன்மைகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் ஆசிரியரின் கற்பித்தலை எளிதாக்கும் சாதனம்.