top of page

ஆழியும் பேண்ட் சட்டையும்


ஆழி இந்த வருடம் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.  அவள் தோழி கயலும் அதே வகுப்பு தான்.  அரசு பள்ளியில் தான் இருவரும் படிக்கிறார்கள்.   அவர்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் சுமார்  7  கி. மீ தூரம்.  சென்ற வருடம் பள்ளி விடுமுறையில், இதற்காகவே தோழிகள் இருவரும் சைக்கிள் கற்றுக் கொண்டாரகள்.  வழக்கம் போல தோழி கயல் வீட்டின் முன் நின்று சைக்கிள் பெல் அடித்தாள் ஆழி.


"வந்துட்டேன் ஆழி," என்ற கயல் "அம்மா கிளம்புறோம்' என்று சொல்லிவிட்டு, அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் போது கயல் பாவாடை சைக்கிள் செயினில் மாட்டிக் கொண்டது. அதை கவனிக்காமல் அவர்கள் வர.... சிறிது தூரத்தில் பாவாடை இறுக்கி கயல் சைக்களோடு கீழே விழந்துவிட்டாள்.


பதறிய ஆழி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினாள். அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கயலின் பாவாடையை சைக்கிளிலிருந்து எடுத்து விட்டார்கள்.

“பொட்ட புள்ளைங்களுக்கு சைக்கிள் எதற்கு?  எப்ப பார்த்தாலும் இதே வேலை தான்” என புலம்பிவிட்டு கடந்து சென்றார்கள்.

ஆம் அவர்கள்  சொல்வது சரிதான்.   ஒரு நாள் ஆழி, ஒரு நாள் கயல் இப்படி யாராவது ஒருவருக்கு இந்த பிரச்சனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வந்துவிடும்.   


கயல் மெதுவாக சைக்கிளை சரி செய்தாள். பின்னர் இருவரும் கிளம்பினார்கள்.


கயல்,  "நமக்கு சைக்கிள் பிரச்சனை இல்ல பா....." என்றாள் ஆழி.


"பின்ன என்ன பிரச்சனை?" என கயல் கேட்க,


"நம்ம உடை தான் பிரச்சனை பா" என்றாள்.


"என்னது உடையா?" என ஆச்சிரியத்தோடு கயல் கேட்டாள்.  


"ஆமாம்  உடை தான் பா!. இதற்கு நாம் ஒர் தீர்வு கண்டே ஆக வேண்டும்."


"இந்த வாரம் வெள்ளிக்கிழமை விருப்ப உடை அணிந்து செல்லலாம் இல்ல"


"ஆமாம்"


"அப்போ நாம நம்ம தோழிகள் அனைவரும் பேண்ட் சட்டை போட்டு போகலாம்", என்றாள் ஆழி.


"என்னடீ.. என்ன சொல்லற?  நம்ம அப்பா அம்மா எல்லாம்  சம்மதிக்க  மாட்டார்கள்.  பள்ளியிலும் நமக்கு அனுமதி கிடைக்காது" என்றாள்.


'நாம முயற்சி செய்யலாம் டீ.  இந்த வாரம் வெள்ளிக்கிழமை பேண்ட் சட்டை சீருடை அணிந்து தான் வரோம் " என்று முடிவு எடுத்தனர்.


 PANTS DAY - வெள்ளி கிழமை என்ற பதாகையோடு ஆழி கூட்டாளிகள் ஒன்றாக  பள்ளி உள்ளே நுழைந்தார்கள்.


"உடையில் சமத்துவம் வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை நாம் ஆரம்பிக்கவேண்டும். பேண்ட் சட்டை அணிந்து அதை துவங்கலாம் என பேசிக் கொண்டே சென்றார்கள்.  மற்ற வகுப்பு பெண்களும் இவர்களைப் பார்த்து வியந்து நின்றார்கள்.


"இங்கே விசேஷம் நடக்குது போல?"என வகுப்பு ஆசிரியர் வினவ,


ஆழி தயக்கமில்லாமல் சொன்னாள். "ஆமாம் டீச்சர், வாரத்தில் ஒரு நாள் 'Pants Day' – பெண்கள் விருப்பமாக பேண்ட் சட்டை அணிவதற்கான தினம். அது ஒரு 'வாரியர் வீக்' ஆரம்பம் மாதிரி!"

"தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு துவங்குங்கள்" என்றார்.


"சரிங்க டீச்சர்." என்று சொன்னதோடு, தலைமை ஆசிரியரை சந்தித்து  அனுமதியும் பெற்று விட்டனர்.


வீட்டில் பெற்றோரிடம் அனுமதி பெறுவது அதைவிட பெரிய  டாஸ்காக இருந்தது.


வெள்ளிக்கிழமை வந்தது.  Pants Day வந்து விட்டது.


அன்று  ஆழியும் அவளின் 11 தோழிகளும்  அழகாக பேண்ட் சட்டை சீருடையில் பள்ளிக்கு சைக்களில் வந்தார்கள். எல்லோரிடமும்  முக்கியமாக ஒரு அம்சம் இருந்தது:  அது கம்பீரம்!


அரங்கத்திலிருந்த வகுப்பு ஆசிரியர் பார்த்தவுடன் புன்னகைத்தார்.  சட்டென்று, "தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கினீர்களா?" என்றார்.


"இன்றைய விழா நாயகனே நமது தலைமை ஆசிரியர் தான் டீச்சர்" என்றாள் ஆழி.  "அனுமதி பெற்று தான் இந்த பேண்ட் சட்டை அணிந்து வந்துள்ளோம் டீச்சர்" என்றார்கள்.


தலைமை ஆசிரியர் சிரித்தபடி  அரங்கம் உள்ளே நுழைந்தார்.


அரங்கம் அமைதியானது.   விழா துவங்கியது.   அவரவர் விருப்ப உடையில் மாணவர்கள் மேடையில் வலம் வந்தார்கள்.


ஆழியும் அவளின் தோழிகளும் மிகவும் கம்பீரமாக மேடை ஏறி பேண்ட் சட்டை சீருடையில் ஒரு வெற்றி நடை போட்டார்கள்.


தலைமை ஆசிரியர், "நான் வழக்கமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவேன். ஆனா இப்போ நான் 'விழிப்புணர்த்தப்படுற' நிலைக்கு வந்திருக்கேன் போல இருக்கு!

ஆடை அரசியல் வேண்டாம். இனிமேல்,  மாணவிகளும் ஒரு நாள் மட்டும் அல்ல எல்லா நாட்களும் பேண்ட் சட்டை சீருடை  அணிந்து  வரலாம் என  புதிய அறிக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."


"அது மட்டுமல்லாமல்  நமது இந்த அறிக்கையை  பரிந்துரை செய்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள்   பேண்ட் சட்டை அணிந்து வர சட்டம் நடைமுறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்." என்று பேசினார்.


மாணவிகளிடமிருந்து வந்த பலத்த கைத்தட்டல்  அரங்கத்தை அதிரச் செய்தது.


"ஆழி ஒரு பேண்ட் சட்டை மட்டும் போட்டுத்தான் பள்ளிக்கு வந்தாள்… ஆனால் வருங்காலத்தில் இது ஒரு சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். ஒரு சீருடை மாற்றம், ஒரு சிந்தனை மாற்றத்துக்கு வித்தாய் இருக்கலாம்.” என்றார் தலைமை ஆசிரியர்.  பலத்த கைத்தட்டலோடு விழா நிறைவடைந்தது.


ஆழியும் அவளின் தோழிகளும் பேண்ட் சட்டையில் பட்டாம்பூச்சி போல சைக்கிளில் பறந்து சென்றார்கள். இனி பாவாடை சைக்கிளில் மாட்டாது. மாற்றம் துவங்கியது.


சாந்தி சரவணன்
சாந்தி சரவணன்

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, ஹைக்கூ மற்றும் சிறார் இலக்கிய தளங்களில் இயங்கி வருகிறார். ‘மலர் மேல் மழைத்துளி’, ‘முள்ளின் மொழி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்காக கதை சொல்லி வருகிறார்.


4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Vidhya
Aug 04
Rated 5 out of 5 stars.

கதை நன்றாக உள்ளது.

Like

Jaishree
Jul 16
Rated 5 out of 5 stars.

அருமை, இனிமை, பெருமை. கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

Like

நா.முத்துநிலவன்
Jul 15
Rated 4 out of 5 stars.

மிகவும் அருமையான சிறார் கதை! அதுவும் சிறுமிகளுக்கான உடை விடுதலைக் கரு மிகவும் சிறப்பானது. 1990-91இல் புதுக்கோட்டையில் நாங்கள் நடத்திய அறிவொளி இயக்கத்துக்காக, நான் எழுதிய. "சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி" பாடல் நினைவுக்கு வந்தது👍எழுத்தாளர் சாந்தி சரவணன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள் 🎉

Like
Shanthi Saravanan
Jul 15
Replying to

மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்

Like
bottom of page