top of page

புறா எப்போது? எப்படிப் பறந்தது?


புறா அழகுதான். அது பறப்பது இன்னும் அழகுதான். ஆனால், ஒரு காலத்திலே புறாக்களால் பறக்க முடியாமல் இருந்தது தெரியுமா? இறக்கையைப் படபடவென்று அடித்துக்கொண்டே கொஞ்சம் உயரமான இடத்துக்குத் தாவும். இறக்கையை மடித்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால் மற்ற பறவைகள் போல உயரத்தில் பறக்க முடியாது, அதைப் பற்றி புறாக்கள் கவலைப்பட்டதும் கிடையாது.


அப்படி இருந்தபோது, நம் குறிஞ்சிக் காட்டில் மஞ்சு என்று ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாள். அவள் ஒரு புறாக்குஞ்சை எடுத்து வளர்த்தாள். அதனிடம் மிகவும் பாசமாக இருந்தாள்.  காட்டுவாசி மக்கள் எல்லாரும் அவள் மீது  பாசமாக இருந்தார்கள். அவளுடைய அன்பும் பண்பும் அறிவும் சுறுசுறுப்பும் யாருக்குத்தான் பிடிக்காது!


ஒருநாள் காட்டுக்குள் மந்திரவாதி என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். மந்திரத்துக்கு மாய சக்தி எதுவும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? ஆனால் அவன் தன்னுடைய மந்திரக் கோலுக்குப் பயங்கரமான சக்தி இருப்பதாகக் கதை கட்டிவிட்டு எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு சுற்றி வந்தான்.


அவன் புறாக்குஞ்சுவோடு விளையாடிக்கொண்டு இருந்த மஞ்சுவைப் பார்த்தான். அவளை எப்படியாவது கடத்திப் போய் தன்னுடைய அடிமையாக வைத்துக்கொள்ளத் திட்டம் போட்டான். 


அவள் பக்கத்தில் போய் பேச்சுக் கொடுத்தான். மிகவும் நல்லவன் மாதிரி நலம் விசாரித்தான். அவளும் அன்பாகப் பேசினாள். அவளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் நடித்தான். அவளும் மகிழ்ச்சியாக விளையாடினாள்.


ஆனால் புறாக்குஞ்சுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் மேல் அதற்கு சந்தேகமாகவே இருந்தது.


அயர்ந்த நேரமாகப் பார்த்து அவன் மஞ்சுவை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடினான். தன்னை அவன் கடத்துகிறான் என்று புரிந்துகொண்டு அவள் கத்தினாள். அவனோ வேகமாக ஓடினான். சத்தம் கேட்டு காட்டு மக்கள் வருவதற்குள் அவன் அவளைத் தூக்கிக்கொண்டு காட்டை விட்டே வெளியேறிவிட்டான்.


மஞ்சு கடத்தப்பட்டதைத் தெரிந்துகொண்டு எல்லாரும் பதறினார்கள். அந்த மந்திரவாதியைப் பற்றித் தெரிந்தவர்கள் அவனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.


அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த புறாக்குஞ்சு முதல் முறையாகத் தன்னால் பறக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டது. பறக்க முயற்சி செய்தது. ஆனால் வழக்கம் போலக் கொஞ்சத் தொலைவுதான் பறக்க முடிந்தது. முதல் முயற்சி வெற்றிபெறவில்லை என்பதற்காக அது சோர்ந்துவிடவில்லை. 


மறுபடியும் மறுபடியும் இறக்கைகளை விரித்து அடித்துக்கொண்டே இருந்தது. முன்னால் பாய்ந்து பாய்ந்து இறக்கையை வீசியது. ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்தது. ஆனால் விடாமல் இப்படி நூறு தடவையாவது செய்திருக்கும்.


என்ன அதிசயம்! இப்போது  அதனால் முன்பு போனதை விட அதிகமான உயரத்துக்குப் போக முடிந்தது. கீழே விழாமல் கூடுதல் தொலைவு போக முடிந்தது.


நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பறந்தது புறாக்குஞ்சு. ஆகாயத்திலே பறந்துகொண்டு இருந்த மற்ற பறவைகளும் அதை அன்போடு வரவேற்றன. "விடாதே! றெக்கையை அடிச்சுக்கிட்டே இரு!  பற பற," என்று ஊக்கப்படுத்தின.


அவர்களிடம் புறாக்குஞ்சு, நடந்ததையெல்லாம் சொன்னது. "மஞ்சு அக்காவை மந்திரவாதி கடத்திட்டுப் போனதை யாராச்சும் பார்த்தீங்களா," என்று கேட்டது.


"நான் பார்த்தேன்," என்று ஒரு குரல் வந்தது. அது ஒரு கொக்கு. "அவன் ஏதோ அந்தப் பொண்ணோட விளையாடுறான்னு நினைச்சிட்டேன்," என்று அந்தக் கொக்கு சொன்னது.


"சரி, எல்லாரும் நம்ம கொக்கு சொல்ற திசையில பறந்து தேடுவோம்," என்று ஒரு காடை சொன்னது. அதே போல் எல்லாப் பறவைகளும் புறாக்குஞ்சுக்குத் துணையாக மஞ்சுவைத் தேடிப் புறப்பட்டன. 


மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் கண்களில் ஏதோ மாறுதலாகத் தென்பட்டது. மற்ற பறவைகளைக் கூப்பிட்டு அதைக் காட்டியது. “அங்கதான் மஞ்சு இருக்கா,” என்று உற்சாகமாகச் சொன்னது.


உடனே எல்லாப் பறவைகளும் வேகமாகப் பறந்து போய் கழுகு காட்டிய இடத்தில் இறங்கின. அவைகளுடன் நம் புறாக்குஞ்சும் இறங்கியது.


ஓர் ஏரிக்கரையில் இருந்த தேக்கு மரத்துக்குக் கீழே ஒரு கூடாரம் இருந்தது. பறவைகள் நினைத்தது போலவே அது மந்திரவாதியின் கூடாரம்தான்.


உள்ளே நம் மஞ்சு இருந்தாள். ஆனால் அவளை மந்திரவாதி கட்டிப்போட்டுவிட்டு வெளியே போயிருந்தான். அதற்காக அவள் அழுதுகொண்டு இருக்கவில்லை. தப்பிப்பதற்கு வழி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு இருந்தாள்.


கூடாரத்துக்கு உள்ளே வந்த புறாக்குஞ்சையும் மற்ற பறவைகளையும் பார்த்ததும் அவளுக்கு ஒரு புதுத் தெம்பு ஏற்பட்டது. 


எல்லாப் பறவைகளும் சேர்ந்து அவளைக் கட்டிப் போட்டிருந்த கயிறை அவிழ்த்துவிட்டன. அப்போது பார்த்து மந்திரவாதி வந்துவிட்டான். "ஏய் ஏய், என்ன செய்றீங்க," என்று கேட்டுக்கொண்டே  மந்திரக்கோலைக் கையில் எடுத்தான்.


அவ்வளவுதான், எல்லாப் பறவைகளும் சேர்ந்து அவனைக் கொத்தத் தொடங்கின. கொத்து என்றால் கொத்து சரியான கொத்து. தலை, முகம், முதுகு, மார்பு, கை என்று எல்லா இடத்திலும் கொத்தின. அவன் வலி தாங்க முடியாமல் அலறியடித்துக்கொண்டே மந்திரக்கோலைக் கீழே போட்டுவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்.


ஒரு  மயில் தன்னுடைய முதுகில் மஞ்சுவை உட்கார வைத்தது. எல்லாரும் அவளுடைய இடத்துக்குத் திரும்பிப் பறந்தன. காட்டுவாசிகள் அவளைப் பார்த்துப் பேரானந்தம் அடைந்தார்கள்.


"எல்லாரும் புறாக்குஞ்சுக்குத்தான் நன்றி சொல்லணும். அதனோட முயற்சியாலதான் மஞ்சுவைக் காப்பாத்த முடிஞ்சது," என்று சொன்னது கவுதாரி.


மஞ்சுவுக்கும் அப்போதுதான் கவனம் வந்தது. உடனே அவள், "அட உன்னால எப்படி பறக்க முடிஞ்சிச்சு," என்று புறாக்குஞ்சைப் பார்த்துக் கேட்டாள்.


புறாக்குஞ்சு தன்னால் பறக்க முடியாமல் இருந்ததையும், மஞ்சுவைக் காப்பாற்றுவதற்காக இறக்கைகளை விரித்து விரித்து வீசி வீசி விடாமுயற்சியில் ஈடுபட்டதையும், கடைசியில் பறக்க முடிந்ததையும் கதை போல விவரித்தது.



மஞ்சு மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதனை அணைத்துக்கொண்டாள். மற்ற பறவைகளும் அதைப் பெருமையாகப் பார்த்தன. காட்டுவாசிகள் மஞ்சுவையும் புறாக்குஞ்சையும் தோளில் தூக்கிக்கொண்டு ஒரே கொண்டாட்டமாகச் சுற்றி வந்தார்கள்.


அந்தப் புறாக்குஞ்சு வளர்ந்து பெரிய புறாவான பிறகு நிறைய முட்டைகள் போட்டது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தன. அவைகளுக்கு எல்லாம் நல்ல வலுவான இறக்கைகள் முளைத்திருந்தன. அப்படிப் பிறந்த எல்லாப் புறாக்குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகப் பறக்கத் தொடங்கின. இன்றைக்கு நாம் பார்க்கும் புறாக்கள் அந்த விடாமுயற்சிப் புறாவின் சந்ததிகள்தான் என்று குறிஞ்சிக் காட்டு மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.



யே மாமா
யே மாமா

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Geeta
Jun 17
Rated 5 out of 5 stars.

அழகான கதை தோழர் 😊

Edited
Like
bottom of page