top of page

பட்டாம்பூச்சி சொன்ன ரகசியம்


    ஊருக்கு மேற்கே மேய்ச்சல்பூமி பசேலென விரிந்து கிடந்தது. ஒரு பாட்டம் பெய்த மழையில் மண் நனைந்து நெகிழ்வாய் குழைந்திருந்தது. அதில் நடந்து போன ஆடுமாடுகளின்  கால்தடங்களை அச்சுப்பதித்தது. செடிகொடிகளின் இலைகளிலும் புல்நுனியிலும் சொட்டுசொட்டுகளாய் நீர்த்துளிகள் படர்ந்திருந்தன. மரங்கள் குளிர்ந்த காற்றில் அசைந்து மழைத்துளிகளை உதிர்த்துவிட்டுக்கொண்டன. பறவைகள் இறக்கைகளை விரித்து ஈரத்தை உலர்த்திக்கொண்டிருந்தன.


நான்காம் வகுப்பில் படிக்கும் சுதாவும் யோகேசும் அந்தக் குளிர்ந்த மாலை வேளையில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க மேய்ச்சல் பூமிக்கு வந்திருந்தார்கள். செடிகளில் படர்ந்திருந்த வண்ணவண்ண பூக்களின் மேல் வட்டமிட்டு சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, இளம்பச்சை, ஊதா, பழுப்பு, வயலெட் என விதவிதமாய் பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. கருப்பு சிவப்பு வண்ண இறக்கைகளை விசிறி ஒரு பட்டாம் பூச்சி அவர்களுக்கு அருகில் பறந்து வந்தது. ஒரு மூதாய்பூச்சியும் நத்தையும் ஈரத்தரையில்  ஊர்ந்துகொண்டிருந்தன.  அதை ஏளனமாகப்  பார்த்த பட்டாம்பூச்சி, “நீங்கள் என்னைப் போல் பறக்கமுடியாது”  என்று கர்வத்துடன் கூறியது.


தும்பிச்செடி குலையால்   அந்தப் பட்டாம்பூச்சியை பொத்திப்பிடித்தான் யோகேஷ். தன் டவுசர் பையிலிருந்து ஒரு நூலை பிரித்து அதன் வாலில் சுற்றிக்கட்டி, நூலின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு பறக்கவிட்டான். பட்டாம் பூச்சி சுதந்திரமாகப் பறக்க முடியாமல் யோகேசின் விரல் அசைவுகளுக்குள் வட்டமடித்தது. அதை பறக்கவிடுவதும் சுண்டி இழுப்பதுமாக இருந்ததை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த சுதாவுக்கு அந்த காட்சி என்னவோ போல் இருந்தது. 


“ஏய்.. உன்னைய கயிறு கட்டி இழுத்தால் எப்படி இருக்கும். பட்டாம் பூச்சி சுதந்திரமாகப் பறப்பதைப் பார்க்கும்போதுதான் மனசும் எல்லையற்ற வானம் அளவுக்கு பறக்கும். நூலை அவிழ்த்து அதை பறக்கவிடு” சுபாவின் கருணை உள்ளம் பேசியது. 


சரியென்று நூல்முடிச்சை அவிழ்த்துவிட்டான். அது நீலப்பூக்கள் மலர்ந்திருந்த செடிகளை தொட்டு உயரே பறந்துபோனது.


நத்தையும் மூதாய் பூச்சியும் நெகிழ்ந்த மண்ணில் ஊர்ந்தபடியே பேசிக்கொண்டிருந்தன.


நத்தை சொன்னது. “என்னைவிட பத்துமடங்கு எடையை தூக்கவும் இருநூறு பங்கு எடையை இழுத்துக்கொண்டு செல்லவும் என்னால் முடியும். நான் பலசாலி” என்றது.


“உன்னை காகம் பார்த்தால் வாயில் கவ்விக்கொண்டு போய்விடும். நீயா பலசாலி” என்று மூதாய்பூச்சி நத்தையை இகழ்ந்து பேசியது.


“எனக்கு இரண்டு ஜோடி உணர்கொம்புகள் இருக்கிறது. பெரிய உணர்கொம்பில் இருக்கும் கண்களால் காகம் வருவதை பார்த்து என் ஓட்டுவீட்டுக்குள் ஒளிந்துகொள்வேன். அப்படியே மூன்று வருடங்கள்கூட தொடர்ச்சியாக தூங்கிவிடுவேன். கும்பகர்ணன்கூட ஆறுமாதங்கள்தான் உறங்குவார்” என்றது நத்தை.


“உனக்கு கால்களே இல்லை. வயிற்றுப்பகுதி தசைகளால் தரையில் மெதுவாக நகர்ந்து போகிறாய். எனக்கு எட்டு கால்கள் இருக்கிறது. சிவந்த வெல்வெட் மெத்தை மாதிரி எனக்கு அழகான உடம்பு. அதனால தாம்பூலத்துல வைக்கிற வெற்றிலை பாக்கு மாதிரி மக்கள் என்னை ‘தாம்பாலப்பூச்சி’ என்று மரியாதையாக அழைக்கிறார்கள். நான் அழகாக இருப்பதால் நான்தான் உன்னைவிட பெரியவன்” என்றது மூதாய் பூச்சி.


“இங்கே பாரு. எனக்கு எலும்புகளே கிடையாது. ஆனால் என் நாக்கில் இரம்பம் மாதிரி இருபத்து ஐயாயிரம் பற்கள் இருக்கின்றன. அதனால் நானே பெரியவன்” என்று வாதம் செய்தது நத்தை.

அப்பொழுது அங்கே வந்த யோகேஷ் ஒரு வெற்றுத்தீப்பெட்டியை திறந்து அதற்குள் நத்தையை எடுத்துப்போட்டு மூடினான். வீட்டில் போய் விளையாடுவதற்கு மூதாய் பூச்சியை பிடித்து டவுசர் பைக்குள் போட்டுக்கொண்டான். 


நான் பெரிது … நீ பெரிது என்று சண்டையிட்டுக்கொண்டிருந்த மூதாய்பூச்சியும் நத்தையும் நடக்கவும் முடியாமல் ஊர்ந்து செல்லவும் முடியாமல் சிறைப்பட்டுக்கொண்டன.

மேய்ச்சல் தரையின் சிற்றோடைகளில் பாய்ந்தோடிய மழைநீரில் எதிர்நீச்சல் போட்டு துள்ளிவிழுந்த மீன்களை பார்த்துக்கொண்டிருந்த சுதாவிடம் போய், “நான் என்ன வச்சிருக்கேன் பாரு” என்று டவுசர் பையை பொத்தினான். 


“ஏய்… என்னது. மறுபடியும் பட்டாம் பூச்சியா” என்று கைகளை தட்டிவிட்டாள்.


“இல்லை. இங்கே பாரு” என்று மூதாய்பூச்சியையும் நத்தையையும் வெளியே எடுத்துக்  காண்பித்தான்.


“வகுப்புல டீச்சர் என்ன சொல்லி இருக்காங்க. வண்டு, பூச்சி, புழு எதையும் பிடிச்சி விளையாடக்கூடாது. அவையும் நம்மைப்போல ஒரு சீவராசிதான்னு சொன்னதை மறந்துவிட்டாயா..”


“அப்படியானால் சரி” என்று டவுசர் பையில் போட்டு வைத்திருந்ததை புல்தரையில் எடுத்துவிட்டான்.


நத்தையும் மூதாய்பூச்சியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் மெளனமாக நடந்தன.


நடந்தவற்றை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி சொன்னது. “யாரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அழகிலும் உறுதியிலும் நானே பெரியவன் என்று உங்களுக்கு நீங்களே ஒரு அடையாளத்தை சொல்லி பெருமையாகப் பீத்திக்கொண்டிருந்தீர்கள். அதனால் இந்த பசும்புல்லும் நீலவானமும் மழைநேர காற்றின் குளிர்ச்சியும் இந்த மண்ணோட வாசனையும் உங்களுக்கு பக்கத்திலேயே இருந்தும் அவற்றை உணர்ந்து உங்களால் சந்தோசமாக அனுபவிக்க முடியவில்லை.  இந்த மாயத்தோற்றங்களை உதறிவிட்டு நீங்கள் நீங்களாக மற்றவர்களை நேசிக்கும்  எதார்த்த நிலைக்கு வரும்போது  இயற்கையும் அதன் சீவராசிகளும் உங்களோடு நட்பாக வந்து உறவாடும்”  என்று சிறகசைத்து எங்கேயோ பறந்துபோனது. 


ஜெ.பொன்னுராஜ்
ஜெ.பொன்னுராஜ்

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.

பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2


5 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 19
Rated 5 out of 5 stars.

கதையில் நிறைய விஷயங்கள் உள்ளே பொதிந்து கிடக்கிறது அண்ணா.நத்தை மூன்று வருடங்கள் தூங்கி கொண்டு இருக்கும் என்பது இக் கதையின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.பிற உயிர்களை துன்புறுத்தல் கூடாது என்பது தான் நீதி.நல்ல கதை

வாசிக்க வாசிக்க ரெம்பவே நல்லா‌ இருக்குது


Like

Guest
Jun 18
Rated 5 out of 5 stars.

Good 👍🏻

Like

Guest
Jun 15
Rated 5 out of 5 stars.

Understand the children that loving the nature and living things

Edited
Like

Jegajothi
Jun 15
Rated 5 out of 5 stars.

A very good story . Love all living beings. This idea is emphasised

Like

Guest
Jun 15
Rated 5 out of 5 stars.

அருமையான கதை.. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை அழகான கதையாக வடித்துள்ளார் கதாசிரியர் ..மனமாரந்த வாழ்த்துக்கள்..

Like
bottom of page