கோமாளி ராஜா
- கார்த்திக் கிருபாகரன்
- 14 hours ago
- 6 min read

காலை நேரம் வந்ததுமே அரண்மனை வாசல் சங்கு முழக்கம் ஒலித்தது.
"அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த நம் மாமன்னன் - கோணாங்கி நாடு திரும்பி தேரில் வந்து கொண்டிருக்கிறார்" என்று குதிரையில் அறிவிப்பு சொல்லியபடியே காவலாளி செல்ல, பின்னால் குதிரையில் படை வீரர்கள் செல்ல, அழகிய புதிய அரபு நாட்டு தேரில் மன்னர் திரையை விளக்கி மக்களை கவனித்து கையசைத்தபடியே வந்தார்.
சாலையில் இருபுறமும் நின்றிருந்த மக்கள், "வணக்கம்...வணக்கம்" என்று சந்தோஷம் இல்லாமல் வணங்கி நின்றார்கள்.
ஆனால் தனது புதிய தேரைத் தான் மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்று நினைத்து வந்தார். சிலர் கிழிந்த உடையுடன் கூட்டத்தில் நிற்பதை மன்னர் கண்டுகொள்ளாமலே வந்தார். உடன் அமைச்சர் நெடுமுடியும் அமர்ந்திருந்தார்.
"அரசே, மக்களை கவனித்தீர்களா?", என்றார் அமைச்சர் நெடுமுடி.
அவர்களை நோக்கி மகிழ்ச்சியாக கையசைத்தபடி, " எல்லாரும் என்னை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எனக்கு பரிசாக அரபு நாட்டு மன்னன் அக்கிம் கொடுத்த தேரையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
"நன்றாக பாருங்கள் அரசே! அவர்கள் உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்களா? இல்லை சோகமாக வரவேற்கிறார்களா ?" என்றார் அமைச்சர்.
எதையும் கண்டு கொள்ளாதது போல, "ஏன் அவர்கள் என்னை சோகமாக வரவேற்க வேண்டும் ?" என்று கேள்வி கேட்டார்.
"மன்னா, அரபு நாட்டு பயணம் முடிந்து வந்த உங்களிடம் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணி விட வேண்டாம். கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் தண்ணீர் பிரச்சனை, அதனால் விவசாயமும் இல்லை, போதிய இருப்பு தானியங்களும் இல்லாமல் போனதால், கடும் பஞ்சம் நிலவ தொடங்கியுள்ளது. நிலைமையை சரி செய்ய, நம் பக்கத்து நாட்டிடம் தண்ணீர் கேட்டும், அவர்கள் அணையில் தடுப்பு போட்டு விட்டார்கள். அணையில் இருந்து தண்ணீரை அனுப்பவில்லை .நம் நாடு பெரும் வறட்சிக்கு உள்ளாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. அரண்மனையிலும் இப்பொழுது வறட்சி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலைமை கை மீறி போய்விட்டது."
அமைச்சர் தொடர்ந்தார், "இந்த நிலைமையை சரி செய்யாமல், நீங்கள் உல்லாசமாக அரபு நாட்டுக்கு சென்று வந்தது மக்களுக்கு சற்று பிடிக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் குதூகலமாக இருப்பதாக அனைவரும் உங்களை விமர்சிக்கிறார்கள். அதுவும் நீங்கள் முற்காலத்தில் ஒரு நாடக நடிகர். அரசி உங்களின் நடிப்பை பார்த்து உங்களை மணந்து கொண்டதால், கிடைத்த மன்னர் பதவியை வைத்து, மக்களை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று பல பெரும் வணிகர்கள் கூட விமர்சிக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை உங்களை 'கோமாளி அரசன்' என்று கூட உங்களை வர்ணிக்கிறார்கள்" என்று சற்று சிரித்தவாறு நெடுமுடி சொன்னவுடன், சட்டென்று கோபப்பட்டு, "மக்கள் கூறியதா?, இல்லை மனத்திற்குள் நீர் தேக்கி வைத்ததை என்னிடம் மக்கள் கூறுவதாக கூறுகிறாயா ?" என்றார்.
" தங்களை நான் ஏன் தரகுறைவாக சொல்ல போகிறேன் ?, மக்கள் சொல்வதை தான் நான் சொல்கிறேன் மன்னா!" என்றார்.
"அப்படியென்றால் என்னை 'கோமாளி ராஜா' என்று சொல்லி திரியும் ஆட்களை பிடித்து கைது செய்து சிறையில் அடையுங்கள்" என்றார்.
"மன்னா!, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், இது போன்று செய்தால் மக்கள் நம் மீதும், ஆட்சி மீதும் மிகுந்த கோபம் அடைவார்கள்" என்றார் அமைச்சர்.
கடுகடுப்பின் உச்சத்தில், "கள்ளி வள்ளி" என்றார் மன்னர்.
"அப்படி என்றால் என்ன மன்னா ?" என்று குழப்பத்தில் அமைச்சர் கேட்க,
"அது அரபு சொல். அதற்கு அர்த்தம் போகப் போக புரியும்"
"மன்னா...." என்றவாறு இழுத்த அமைச்சரின் பேச்சை நிறுத்தி, "சற்று பொறு. இப்போது தான் பயணம் முடித்து வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஓய்வு தேவை. பின் மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையை போக்க ஆலோசனை செய்யலாம்" என்று மன்னர் வெறுப்பாக சொன்னவுடன், அமைச்சரும் அமைதியானார்.
மன்னன் அரண்மனைக்கு வந்து தன் மனைவி ராணி லட்சுமி, மகன்களை பார்த்து மகிழ்ந்தார். வெகு நாட்களுக்கு பிறகு அவர்களை பார்ப்பதால் சற்று நேரம் அரபு நாட்டு பயணத்தில் நடந்தவற்றை மனம் விட்டு பேசினார். ஆனாலும் ஓய்வெடுக்க இயலாமல், அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் உண்மையாகவே தன்னை, 'கோமாளி ராஜா' என்று தான் அழைக்கிறார்களா ?, இல்லை அமைச்சரின் சூழ்ச்சியா ? என்ற குழப்பம் தான்.
"சரி குழப்பத்திற்கு தீர்வு காண்போம்" என்று தீர்மானித்து, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்ல குதிரையில் ஏறி புறப்பட்டார். சில தூரம் பயணம் செய்து அருகிலிருந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்தார்.
குதிரையை சாவடி பக்கத்தில் கட்டி வைத்து, ஊருக்குள் நடைபயணமாக சென்றார். மக்கள் கூடும் இடங்களான கோவில், சந்தை என சுற்றினார். அப்போது பூங்கா வாசலில் பலர் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக சென்று நின்று கவனித்தார். அதில் அவர்கள் நாட்டு சமாசாரங்களை பேசினார்கள். அப்போது மன்னர் தெரியாமல் ஒருவரின் காலை மிதித்தார். உடனே அவன் "அறிவு கெட்டவனே, கண் இல்லாதவனை" என்று திட்டி கொண்டிருக்க, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னர் கூறியும் அடிப்பதற்கு கையை ஓங்கி பின் அடிக்காமல் விட்டு விட்டு சென்றான். ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த மன்னருக்கு மீண்டும் கோபம் அதிகமானது. "நான் மாறுவேடத்தில் இருப்பதால், என்னை யாரென்று உனக்கு தெரியவில்லை" என்று மனதில் நினைத்தவாறு சென்றார்.
அந்தக் கூட்டத்தில் ஒருவர், "கோமாளி ராஜாவின் அடுத்த பயணம் எங்கவோ?" என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது "சத்தமாக பேசாதே நண்பா, காலையில் தான் ஒரு செய்தி வந்தது. 'கோமாளி ராஜா' என்று மன்னரை யாராவது கிண்டலாக சொன்னால் உடனே அவர்களை கைது பண்ணி பாதாள சிறையில் அடைக்கிறார்களாம். அதனால அமைதியாக இருங்கள்" என்று ஒருவன் சொல்லி கொண்டிருக்க, ஓரத்தில் இதை கேட்டு கொண்டிருந்த மன்னனுக்கு ஒரே இறுமாப்பு ஏற்பட்டது. "மக்கள் பயந்து இனிமேல் யாரும் 'கோமாளி ராஜா' என சொல்ல மாட்டார்கள்" என்று அங்கிருந்து புறப்பட்டு சந்தை பகுதிக்கு வந்தார். அங்கு குதிரையும் ஓரிடத்தில் நின்றது. குதிரையில் அமர்ந்தவாரே மன்னன் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க, சாலையோரத்தில் வெளிச்சத்திற்காக எரிபந்தங்களில் நெருப்பை பற்ற வைத்து ஏற்ற, நெருப்பு சிதறிஅருகில் நின்றிருந்த குதிரை முகத்தின் மீது பட்டது. சட்டென்று குதிரை தனது முன் கால்களைச் சட்டென்று தூக்கியது, மன்னர் கீழே விழுந்து கல்லில் தலை மோதி மயங்கிய நிலையில் கிடந்தார்.
சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு, பக்கத்தில் இருந்த கோவில் மண்டபத்தில் உட்கார வைக்க, மன்னருக்கோ தண்ணீர் தாகம் ஏற்பட்டு, "தண்ணீர்...தண்ணீர் கொடுங்க" என்று பரிதாபமாக கேட்டார்.
ஒருவன் தன் குடுவையைப் பார்த்தான். அது தண்ணீர் இல்லாமல் காலியாக இருந்தது. "என்னுடைய குடுவையில் தண்ணீர் இல்லை. இங்கு வேறு யாரிடமும் தண்ணீர் இல்லை. அந்த கடையில் தண்ணீர் இருக்கும். ஆனால் ஒரு குவளைத் தண்ணீர் ஒரு ரூபாய் சொல்லுவாங்க. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்றார்.
மன்னனின் தலையில் லேசாக இரத்தம் வந்தது. வயதான மூதாட்டி அதை துடைத்து விட்டு, தன் சுருக்கு பையில் இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து, "இந்தா! தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், நான் சாப்பிட்டு என்ன பண்ண போறேன். இந்தாப் புடி" என்று காசை அவனிடம் கொடுத்து தண்ணீர் வாங்கி வரச் சொன்னாள். அவரும் வேகமாக சென்று ஒரு குவளைத் தண்ணீர் வாங்கி வந்து மன்னருக்கு கொடுக்க அதைக் குடித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக அமர்ந்தார். அந்த பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருப்பதையும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அளவுக்கு தன்னுடைய ஆட்சி நடைபெறுவதையும் எண்ணி மன்னர் மனதிற்குள் வருந்தினார்.
யாரென்று தெரியாத நபருக்காக தண்ணீர் வாங்கி வந்தவரையும், அதற்கு பணம் கொடுத்து உதவிய அந்த மூதாட்டியைப் பார்த்தும் மன்னர் கையெடுத்து கும்பிட்டார்.
"சாப்பிட்டியா" என்று மூதாட்டி கனிவாக கேட்க மன்னரின் கண்களோ கலங்கியது.
அருகில் இருந்த நபர் தனது சோற்று பொட்டலத்தை சாப்பிடக் கொடுத்தார்.
மன்னரும் அதை வாங்கி, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தார்.
"யாரப்ப நீ ?, ஊருக்கு புதுசா ?" என்று கேட்டாள் அந்த மூதாட்டி.
"ஆமாங்க" என்று சாப்பிட்டபடியே சொல்லி சுற்றி பார்த்தார். அந்த இடத்தில் பலர் ஆங்காங்கே படுத்துக் கிடந்தனர்.
"என்னப்பா அப்படி பார்க்குற" என்றாள்.
"பாட்டி, உங்களுக்கு வீடு இல்லையா ?" என்றார் மன்னர்.
"இருக்குப்பா, நான் இங்க பொருள் விற்பதற்காக வந்தேனப்பா, இரவு பொழுது ஆச்சுன்னு நான் இங்கேயே தங்கிட்டேன்" என்றாள் பாட்டி.
மூதாட்டியைப் போலவே பலரும் வெவ்வேறு தொழில் செய்வதற்காக வந்து இரவு அங்கு தங்கியிருந்தனர்.
மன்னரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மூதாட்டியின் அருகிலேயே அமர்ந்தார்.
அப்போது பக்கத்தில் ஒருவர், மற்றவரிடம் "என்ன பண்ண பொழப்புக்காக நான் இப்படி மாறி மாறி அலைஞ்சுகிட்டு இருக்கேன். எல்லாம் விலைவாசி ஏறிடுச்சு. தண்ணி பஞ்சம்.அதனால விவசாயம் பண்ண முடியல. நானும் வேற வேற பக்கம் வேலை தேடி போயிட்டு இருக்கேன். ஒரு கோமாளி அரண்மனைக்கு சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. மாறாக அரண்மனை வட்டரங்கு (சர்க்கஸ்) கூடாரமாகிவிடும்ன்னு பழமொழி சொல்ற மாதிரி இருக்கு நம்ம மன்னர் ஆட்சி " என்று வருத்தமாக சொல்லி கொண்டிருக்க மன்னர் அதை கேட்டு வருந்தினார்.
"ஆமாங்க இப்ப கோமாளி ராஜான்னு சொன்னா கூட கைது பண்றாங்க. அதனால அந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமா இருக்கு. மக்களுக்கு நல்லது பண்ணினா, அந்த பேரு மாறிட்டு போகுது" என்று கிண்டலாக இன்னொருவர் சொன்னார்.
"தலைமுறை தலைமுறையா, மன்னர் வம்சம் இல்லாம, நம்மில் இருந்த மனிதன், நாடக நடிகராக இருந்து இப்போ மன்னர் ஆகிருக்காரு. ஒவ்வொரு நாடகத்திலேயும் நல்லது செய்ற மாதிரி தான் நடிப்பாரு. நிஜத்திலும் கண்டிப்பா நல்லது செய்வார். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா" என்று அவர்களிடம் மூதாட்டி சொன்னார். மூதாட்டி சொன்னதைக் கேட்டு மன்னருக்கு மனதில் ஒரு உத்வேகம் உண்டானது.
அந்த மூதாட்டியை பார்த்து, "எனக்கு மிகவும் பெரிய வேலை வந்துவிட்டது. மிகப் பெரிய பொறுப்பு எனக்கு இருப்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். அந்த பொறுப்பை முடித்துவிட்டு நான் ஓய்வெடுக்க பார்க்கிறேன்" என்று மூதாட்டியை வணங்கி விட்டு, தனது குதிரையை லேசாக தட்டிக் கொடுத்து, ஏறி அரண்மனைக்கு புறப்பட்டார்.
குதிரையில் செல்லும் போது, அந்த மூதாட்டியின் வார்த்தை மன்னனின் மனதை ஏதோ செய்தது. விடியற்காலை பொழுதில் அரண்மனை வந்து சேர்ந்தார். பக்கத்து நாடு, கரிநாடக மன்னன் விஷ்ணு வர்மனின் பிறந்தநாள் விழாவிற்கு கோணங்கி மன்னனையும் அழைத்திருந்தார்கள். அந்த விருந்திற்கு மன்னனும் சென்றார். "பக்கத்து நாட்டு மன்னன் தான், அணையில் நீரை தடுத்து தண்ணீர் வரவிடாமல் செய்துள்ளார். அவர் அழைப்புக்கு நம் மன்னரும் சென்றுள்ளார்..!" என்ற செய்தி நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. மன்னன் கோணங்கிக்கு கரிநாடாக நாட்டில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. 64 வகையான உணவு பரிமாறி விருந்து வழங்கப்பட்டது. மன்னர் கோணங்கியும் மகிழ்ச்சியாக விருந்து உணவை உற்சாகமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் சற்று வேகமாக சாப்பிட்டதாலோ என்னவோ விக்கல் ஏற்பட ஆரம்பித்தது. பதறிய மன்னன் விஷ்ணு, "அடடே மன்னருக்கு தண்ணீர் கொடுங்கள்" என்றார். மூன்று நான்கு வேலைக்காரர்கள் குடுவையில் தண்ணீரோடு அவர் முன்னால் வந்து நின்றார்கள். ஆனால் கோணங்கி தண்ணீரை குடிக்காமல் விக்கி கொண்டே இருந்தார். "தண்ணீர் ஏன் குடிக்காமல் இருக்கிறார்" என்று விஷ்ணுவுக்கு கோணங்கியின் செயல் ஒன்றும் புரியாமலே இருந்தது. "விருந்து போதும் நண்பா" என்று விக்கியபடியே கூறிவிட்டு வெளியில் கோணங்கி வந்தார்.
விஷ்ணுவிற்கும், அவரது அம்மாவிற்கும் பெரும் மனக்கசப்பு ஆகியது. "விருந்துக்கு வந்தவர், விக்கல் எடுத்தும் நம் நாட்டு தண்ணீரை குடிக்காமல் செல்கிறாரே" என்று அந்த தாய் புஷ்பா அம்மாள் கோணங்கியை நிறுத்தி, "தண்ணீர் இருந்தும் ஏன் குடிக்காமல் செல்கிறீர்கள்?" என்றாள்.
"அம்மா, எனக்கு விக்கல் எடுக்கிறது. நீங்கள் தண்ணீர் கொடுத்து விடுவீர்கள். ஆனால் என் நாட்டு மக்கள் தண்ணீர் இல்லாமல் எத்தனையோ கவலைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி தண்ணீர் கொடுப்பது?, நீங்கள் அணையில் தண்ணீர் விடாமல் தடுத்து, அங்கு பெரும் துன்ப சூழல் நிலவிக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அம்மா உங்கள் தண்ணீரை குடிக்க முடியும்?, நான் பொறுத்துக் கொண்டு என் நாட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று வருத்தமாக கோணங்கி சொன்னது. விஷ்ணுவிற்கு தூக்கி வாரிப் போட்டது.
"என் நாட்டு மக்களின் எதிர் காலத்திற்காகதான் தண்ணீரைத் தடுத்தேன். அதை எங்கள் நாட்டில் வேறு பகுதிக்கு திருப்பி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார் விஷ்ணு.
"இயற்கை நமக்கு தந்த பெரும் கொடையை, என் தண்ணீர், உன் தண்ணீர் என்று நாம் பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு. தங்கள் நாட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தும் விளக்கு, எண்ணெய் பொருட்கள் எங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள். அதை நாங்கள் உங்களுக்கு தர மறுத்தால், உங்கள் நாடு இருளிலே மூழ்கிவிடும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. நட்போடு இருக்கிறோம்.. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம்" என்று விக்கியபடி கோணங்கி சொல்ல, "நான் பெரும் தவறு இழைத்து விட்டேன். நீங்கள் தண்ணீர் குடியுங்கள். இந்த கணம் முதல் உங்கள் நாட்டிற்கு தண்ணீர் பாயும். இனி அணையில் தண்ணீரை தடுக்கமாட்டேன்" என்று சொல்லியபடி, அமைச்சரிடம், தண்ணீரை திறந்து விட விஷ்ணு உத்தரவிட்டார்.
மன்னன் கோணங்கியும் மகிழ்ச்சியாக தண்ணீரை வாங்கி குடித்தார். விருந்தும் சிறப்பாக முடிந்தது. நடந்த இந்த மனக்கசப்பான விஷயத்திற்கு கோணங்கி, விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். பின் தான் அரபு நாட்டில் இருந்து கொண்டு வந்த பேரிச்சம் பழங்களை அவருக்கு கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். விஷ்ணு தன் நாட்டின் சிறந்த இனிப்புகளை அவருக்கு பரிசாக கொடுத்தார். நட்புறவாக இருவரும் கைக்குலுக்கிக் கொண்டு விடை பெற்றார் கோணங்கி.
மூன்று நாட்கள் கழித்து அரண்மனை சங்கு ஒலித்தது. மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என அரண்மனை கதவு திறந்தது. பொது மக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள். சந்தோஷத்தில் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தும், சிலர் கைகுலுக்கியும் வரவேற்றார்கள்.
அமைச்சர் நெடுமுடி, மக்களின் மகிழ்ச்சியை கண்டு திக்குமுக்காடினார்.
அமைச்சரை அழைத்து, "உடனே நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தையும் தூர் வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நடுங்கள். முக்கியமாக பனை மரங்களை நடுங்கள் இதை துரிதப்படுத்துங்கள்" என்றார்.
நெடுமுடி மன்னரிடம், "மன்னா, கள்ளி வள்ளி என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் பிறகு சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள்" என்றார்.
சிரித்தவாரே, "அது இருக்கட்டும் விடுங்கள்" என்றார்.





Comments