சிலந்தி சொன்ன இரகசியம்
- ராஜலட்சுமி நாராயணசாமி

- 2 days ago
- 3 min read

"கண்ணா வாட்டர் பாட்டில் எங்க டா?!" என ஆச்சர்யமாக கேட்டார் அம்மா.
"அது வந்து.. காணோம்"
"காணோமா? நல்லா தேடுனியா?"
"ம்ம்... தேடுனேன். இல்ல"
"பெஞ்ச்ல பார்த்தயா?"
"பெஞ்ச்ல, அப்றம் வேன்ல ஏறி பேக்ல பார்த்தேன். காணோம்"
திருதிருவென விழித்தான் சுரேன். சுரேன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ப்ரிகேஜியில் இருந்து பள்ளிக்கு போகிறான்.
ஆனால் இதுவரை எதையுமே தொலைத்தது இல்லை. பத்திரமாக வைத்திருப்பான்.
கோடை விடுமுறை முடிந்து இன்று தான் பள்ளிக்குச் சென்றான். முதல் நாளே பாட்டில் தொலைந்து விட்டது.
அம்மா உடனே வகுப்பாசிரியருக்கு போன் செய்தார்.
"மேம், சுரேன் வாட்டர்பாட்டிலைக் காணோம்" என சொன்னார்.
சுரேனின் வகுப்பு ஆசிரியை மிகவும் பொறுமையாக பதிலளிப்பார். குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்.
"சரி சுரேன் அம்மா. நான் தேடுகிறேன்" என்றார் ஆசிரியர்.
மறுநாள், பள்ளிக்கு வேறு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார் அம்மா.
"சுரேன், பள்ளியில் சென்று ஆசிரியரிடம் பாட்டில் கேக்கணும் சரியா?" என சொல்லி அனுப்பினார்.
ஆசிரியர் வகுப்பறை முழுவதும் தேடினார். வகுப்பு புத்தக அலமாரியில் தேடினார். மாணவர்களிடமும் கேட்டார்.
ஆனால் யாருக்குமே சுரேனின் வாட்டர் பாட்டில் எங்கு சென்றது எனத் தெரியவில்லை.
மாலை பள்ளி முடிந்தது. சுரேன் அம்மா கொடுத்து விட்ட பாட்டிலை எடுத்தான். அதைப் பத்திரமாக உணவுப் பையில் வைத்தான். வேனில் ஏறி வீடு வந்தான்.
உணவுப் பையைத் திறந்த அம்மா ஆச்சர்யப்பட்டார்.
"சுரேன், இன்னிக்கு கொடுத்த பாட்டில் எங்க?!"
"அம்மா நான் பாட்டில பேக்ல வச்சேன் மா. ஆனா இப்ப காணோம் மா" என்றான்.
"நிஜமா! பேக்கில் வச்சயா?" எனக் கேட்டார் அம்மா.
“ஆமாம்.. ஆமாம்” என மாலை பள்ளி விட்டதில் இருந்து சொன்னதையே சொன்னான்.
வகுப்பாசிரியர் பாட்டில் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டார்.
தண்ணீர் பாட்டில் எங்கே போயிருக்கும்?! ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
மறுநாள் இன்னொரு பாட்டில் கொடுத்து விட்டார் அம்மா.
அந்தப் பாட்டிலும் காணாமல் போய் விட்டது.
அம்மா கோபமாக சொன்னார், "நாளைக்கு உனக்கு பாட்டில் தர மாட்டேன். நீ உன் பாட்டில் எல்லாம் தேடி எடுத்துட்டு வரணும்"
சுரேன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
'பாட்டில்கள் எல்லாம் எங்க போச்சு?'
சுரேனின் நண்பர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
வகுப்பில் எல்லாரும் சுரேனின் பாட்டில்களைத் தேடினார்கள்.
ஒவ்வொரு பெஞ்சின் அடியிலும் தேடினார்கள்.
புத்தக அலமாரிகளில் தேடினார்கள்.
பக்கத்து வகுப்பறையில் தேடினார்கள்.
எங்கேயும் இல்லை.
பார்த்தவர்களிடம் எல்லாம் கேட்டார்கள்.
"சுரேனோட பாட்டில பாத்தீங்களா?"
யாருமே பார்க்கவில்லை.
உணவு இடைவேளையில், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேன்.
"எட்டுக்கால் பூச்சி... என் பாட்டில நீ பாத்தியா? காணோம். ஒண்ணு இல்ல நிறைய. அம்மா திட்டுறாங்க" என சோகமாக சொன்னான் சுரேன்.
"ஓ உன் பாட்டிலா எனக்குத் தெரியும்" என சத்தம் கேட்டது.
சுரேன் சுற்றிலும் பார்த்தான். அவன் நண்பர்கள் எல்லாம் வகுப்பிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
வகுப்பில் சுரேன் மட்டும் தான் அமர்ந்திருந்தான்.
"யாரு யாரு பேசுறீங்க" குரல் நடுக்கத்தோடு கேட்டான் சுரேன்.
எழுந்து வகுப்பில் இருந்து வெளியே ஓடத் தயாராக இருந்தான்.
"நாந்தான் சிலந்தி. நீ என்கிட்ட தான கேட்ட. அதான் பதில் சொன்னேன்" மீண்டும் குரல் மட்டுமே கேட்டது.
"சி..சி.. சிலந்தியா?" யாராவது விளையாடுகிறார்களா என சுற்றிலும் பார்த்தான்.
இல்லை.
"ஆமா, இங்க மேல பாரு. சிலந்தி தான்" என்றது.
சுரேனுக்கு பயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
"என் பாட்டில் எங்க இருக்கு?" எனக் கேட்டான் மெதுவாக.
"உன் இருக்கைக்குப் பின்னால் ஒரு செடி இருக்கு இல்ல?" எனக் கேட்டது சிலந்தி.
"ஆமா, செம்பருத்தி"
"செம்பருத்தி.. அதுகிட்ட போய் கேளு"
"என்ன செடிகிட்டயா? செடி பேசுமா?" ஐயத்தோடு கேட்டான் சுரேன்.
"சிலந்தி பேசும் போது, செம்பருத்தி பேசாதா?" எனக் கேட்டது சிலந்தி.
சுரேன் மெதுவாக செடியின் பக்கம் போனான். அது அவனது வகுப்பறைக்கு வெளியே வளர்ந்தது. சில இலைகளும் ஒரு பூவும் மட்டும் வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது.
"செம்பருத்தி.. நீ என் வாட்டர் பாட்டில பார்த்தியா?" என மெதுவாகக் கேட்டான் சுரேன்.
"உன் ஒரு பாட்டில் மட்டும் இல்ல.. மூணு பாட்டிலும் என்கிட்ட தான் இருக்கு" என சொன்னது செம்பருத்தி.
செம்பருத்திச் செடி பேசும் போது, அதற்கேற்ப அதன் பூ ஆடியது, யாரோ தலையை ஆட்டி ஆட்டி பேசுவது போல வேடிக்கையாக இருந்தது சுரேனுக்கு.
"என்ன.. உன்கிட்ட இருக்கா?" மீண்டும் அதிசயமாகக் கேட்டான் சுரேன்.
"ஆமா. என்கிட்ட தான் இருக்கு.." என்றது செம்பருத்தி.
"உன்கிட்ட எப்படி வந்தது?"
"ஆமாம். நான் தான் எடுத்தேன்"
"ஏன் எடுத்த?"
"எனக்கு ஒரு நாள் தண்ணி கிடைக்குது. ஒரு நாள் தண்ணி கிடைக்கல. அதான் எடுத்தேன்"
"ஓ அப்படியா! ஆனா வகுப்பில அத்தனை பேர் இருக்காங்க. நீ ஏன் தினமும் என் பாட்டிலயே எடுத்த? தினம் புதுசு குடுத்து விட்டாங்க அம்மா. இன்னிக்கு திட்டிட்டாங்க" சொல்லும் போதே அழுகை வந்து விட்டது சுரேனுக்கு.
"ஐயோ அழாத அழாத.." என சமாதானம் சொன்னது செம்பருத்தி.
"ஏன் என் பாட்டில மட்டும் எடுத்த?" மீண்டும் கேட்டான் சுரேன்.
"ஏன்னா, வகுப்பில் எல்லாரும் அவங்க தண்ணிய குடிக்கிறாங்க. எல்லார் பாட்டிலும் காலி ஆகிடும். நீ தான் தண்ணியே குடிக்கறது இல்ல. உன் பாட்டில் முழுசா இருக்கும். அதான் அத எடுத்தேன்" என்றது செம்பருத்தி.
"நான் தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன்.
"ஆமா சாப்பிடும் போது ஒரு மடக்கு குடிப்ப. அப்பறம் உன் பாட்டில்ல தண்ணி அப்படியே இருக்கும்" என்றது செம்பருத்தி.
"சரி, என் பாட்டில்கள திரும்பக் கொடு. நான் உனக்கு தினமும் தண்ணீர் தெளிக்கிறேன்" என்றான் சுரேன்.
"வெயில் ரொம்ப ரொம்ப அதிகம். நீயும் அடிக்கடி நிறைய தண்ணி குடிக்கணும்" என சொன்னது செடி.
"இனிமே நான் அம்மா சொன்ன மாதிரி, நீ சொல்ற மாதிரி நிறைய தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன்.
"அது தான் நல்ல பையன்!" என்று மகிழ்ச்சியாகச் சொன்னது செம்பருத்திச் செடி. "நீ தண்ணீர் குடிச்சா உன் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எனக்குத் தண்ணீர் ஊத்துனா நானும் ஆரோக்கியமா இருப்பேன்."
தன் வேர்களுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து அவனிடம் கொடுத்தது செம்பருத்தி. சுரேன் மகிழ்ச்சியாக குதித்தான். பாட்டில்களை பத்திரமாக பைக்குள் வைத்தான்.
"அம்மா பாட்டில் கிடைச்சிருச்சு" என மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் சுரேன்.
எல்லா பாட்டில்களையும் அம்மாவிடம் கொடுத்தான். தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு சென்றான்.
ஒன்று சுரேனுக்கு.
மற்றொன்று செம்பருத்திக்கு!
அதற்குப் பிறகு, சுரேனின் வாட்டர் பாட்டில் காணாமல் போகவே இல்லை.

ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார்.
பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்.
இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.





Comments