அம்மாக்கு என்னைய புடிக்கும்
- சுகன்யா ராமநாதன்

- Jun 15
- 2 min read

ரெண்டு நாளா எல்லாரும் அழுதுகிட்டே இருந்தாங்க... அம்மா பின்னாடியே நடந்து நடந்து போனாங்க..
“எல்லாரும் எங்க போறாங்க..?” நான் கேட்டேன்.
“அவுங்க அவுங்க வீட்டுக்கு போய்ட்டாங்க,” மது அக்கா சொன்னா..
அவ மெர்மேய்ட் பொம்மைய எப்பவும் ஷேர் பண்ணவே மாட்டா.. ஆனா, இப்போ நான் கேக்காமலேயே எனக்கு ஷேர் பண்ணுனா...
ஆனா.. எனக்கு இப்போ அந்த பொம்ம வேணாம்.. அம்மா தான் வேணும்!
அம்மாவ ரெண்டு பேர் .. மம்.. இல்ல.. அஞ்சு பேர் தூக்கிட்டு போனாங்க.. ஒரு கார்.. இல்ல வேன் வந்துச்சு..
மாமா கல்யாணத்துல கார்ல பூவெல்லாம் ஒட்டி வச்சு டெக்கரேட் பண்ணி இருந்தாங்க... அதே மாதிரி.. பூவெல்லாம் வச்சு டெக்கரேட் பண்ணி இருந்தாங்க... அம்மா அதுல போயிட்டாங்க ..
அதோ.. அப்பாவும் போறாங்க... எனக்கு பயமா இருந்துச்சு..பாட்டி சொன்னாங்க அம்மா சாமிக்கிட்ட போய்ட்டாங்க.. இனிமே வரமாட்டாங்கன்னு … அப்போ அப்பாவும் வர மாட்டாங்களா? யாராச்சும் அப்பாவைக் காப்பாத்துங்கன்னு கத்தனும் போல இருந்திச்சு .. நானும் அப்பாக்கூட போறேன்னு அழுதேன்..
பாட்டி இடுப்புல இருந்து இறங்கி ஓடி வந்தேன்.. யாரோ மாமா என்னைய... ஒரே கையில தூக்கி எடுத்துட்டு வந்து.. ஒரு அத்தை கையில குடுத்துட்டு போயிட்டாங்க..
நான் அழுது அழுது .. பாட்டி மடியில தூங்கிட்டேன்.. கண் முழிக்கும்போது அப்பா மடியில இருந்தேன்.. அப்பா வேற மாதிரி இருந்தாங்க ... அப்பாவைக் கட்டிப்புடிக்க பயமா இருந்துச்சு...
அப்பா வந்துட்டாங்க! அப்போ அம்மா எப்போ வருவாங்க..? அப்பா கிட்ட கேட்டேன்.
“அம்மா இறந்து போயிட்டாங்க.. இனிமே வரமாட்டாங்க ..”
“சாமி எங்க இருக்கு.. எப்ப அம்மாவைத் திரும்பி வர விடும்..” அப்பா பதிலே சொல்லல..
அப்புறம்.. தினமும் பாட்டி தான் என்ன குளிப்பாட்டினாங்க.. மது அக்கா, பிரியா, லோகேஷ் எல்லாரோட விளையாடுவேன்..
பாட்டிக்கு அம்மா மாதிரி அனிமல்ஸ் தோசை சுட தெரியாது.. அடம் பிடிச்சா அப்பா என்னிக்காச்சும் சுட்டு தருவாங்க.
மது அக்கா ஸ்கூல் டை கட்டிவிடும்.. ஆனா அம்மா மாதிரி கட்ட தெரியாது..
அத்தை ஸ்கூல் கொண்டு போய் விட்டாங்க.. அம்மா பைக்ல.. ஆனா அம்மா மாதிரி.. பஞ்சுமிட்டாய் வந்தா நிறுத்தி வாங்கி தர மாட்டாங்க.. யாருமே அம்மா மாதிரி தூங்க வைக்க மாட்டாங்க.. கதை சொல்ல மாட்டாங்க.. கட்டி புடிக்க மாட்டாங்க.. என் வயித்துல அம்மாவோட பச்சைத் துணிய வச்சு.. நான் தூங்கும் வரைக்கும் தடவி குடுக்க மாட்டாங்க.. அதுனால தான் நைட்ல நான் அழுவேன்.. அம்மா கிட்ட பேசுவேன்.. எப்போ வருவேன்னு கேப்பேன்.. சில நைட்டு கோச்சிக்கிட்டு பேச மாட்டேன்.. அப்போ தானே அம்மா சீக்கிரம் வருவாங்க! மறுபடியும் பேசுவேன் ..
இன்னிக்கு பச்சைத் துணியோட அம்மா கிட்ட பேசினேன்.. ஆனா அம்மா சொன்னது தான் எனக்கு கேக்க மாட்டேங்குது.. ரொம்ப தூரத்துல இருக்காங்க.. அவுங்க வானத்துக்கு போய்ட்டாங்க .. ஸ்டார் ஆயிட்டாங்க..
ஒரு நாளு.. கிரிக்கெட் வெளையாடுனேன்.. அடி பட்டுச்சு.. ரத்தம் வந்துச்சு .. கொஞ்சம் தான்.. பாட்டி திட்டினாங்க .. “ஒங்க அப்பா கிட்ட என்ன பதில் சொல்லுறது.. உயிர எடுக்குற..”. மருந்து போட்டாங்க.. அம்மாவும் என்ன அப்படி திட்டி இருக்காங்க. நான் பால் குடுத்தா குடிக்காம வச்சுட்டு விளையாடுவேன். அது அப்போ அப்போ கொட்டிடும். அம்மா திட்டுவாங்க. ஒரு நாள் சோபாலa கொட்டிடுச்சு. அம்மாக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. அப்புறம் ஒரு நாள் அம்மாவோட ஆபீஸ் நோட்புக்குல நான் வரைஞ்சுட்டேன். “ஏன் இப்படி கிறுக்கி வச்ச? என் உயிர எடுக்குற..” கோவமா அம்மா திட்டினாங்க. அம்மா, நான் சேட்டை பண்ணனாலா தான் போய்ட்டாங்க .. அம்மாக்கு என்ன புடிக்கல.. அதுனால போய்ட்டாங்க... நான் அன்னிக்கு ரொம்ப அழுதேன்..
கொஞ்ச நாள் கழிச்சு.. அம்மா டிரஸ்ஸெல்லாம் ஸ்ருதி சித்திக்கும், திவ்யா அக்காக்கும் குடுத்தாங்க.. அப்போ அம்மாவுக்கு..? ஒரு ஷால மட்டும் நான் எடுத்துக்கிட்டு வந்தேன்.. அம்மா அந்த போட்டோல அந்த டிரெஸ் தான் போட்டுருப்பாங்க.. எனக்கு கிஸ்ஸீ கொடுத்தாங்க.. அதுல.. நான் பேபியா இருந்தேன்..
அன்னிக்கி ஸ்கூல்ல எல்லாரோட அம்மாவும் வந்தாங்க.. எனக்கு மட்டும் அப்பா மட்டும் வந்தாங்க.. அப்பாட்ட டீச்சர் சொன்னாங்க .. “மகி ரொம்ப சமத்து..குட் கேர்ள்..” இன்னும் சொன்னாங்க.. அம்மா பத்தி சொன்னாங்க.. எனக்கு கொஞ்சம் தான் புரிஞ்சுது. அப்பாவும் டீச்சர்ட்ட சொன்னாங்க.. “வீட்டுல அவளே அவ வேலைகள செய்யுறா.. சமத்தா இருக்குறா...“ அப்பா கண்ணுல தண்ணி.. ஆனா அழுவல ..
அப்பாக்கு என்ன ரொம்ப புடிக்கும்.. பாட்டிக்கும் தான்.. டீச்சருக்கும் என்ன புடிக்கும்.. அப்போ அம்மாக்கும் என்ன கண்டிப்பா புடிக்கும் ! அம்மா அன்னைக்கு தூங்கும் போது கனவில் வந்தாங்க. முத்தம் குடுத்தாங்க.

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.





Comments