வானவில் சிரிப்பு

வகுப்பிற்குப் புதிதாக வந்தவனை ஆசிரியர் மாடசாமி அறிமுகப்படுத்தினார். “இவன் பெயர் அரவிந்தன். உங்களுக்குக் கத்துக் கொடுத்தது போல எல்லாரும் வரவேற்புக் கொடுங்க பார்க்கலாம்.”
மாணவர்கள் கரவொலி எழுப்பினார்கள். “உன் வரவு நல்வரவாகுக நண்பனே,” என்று குரலொலியும் எழுப்பினார்கள்.
சில மாதங்கள் அரவிந்தனும் மற்றவர்களும் கலகலப்பாகப் பழகினார்கள். ஒருநாள் அதில் மாற்றம் ஏற்பட்டது.
பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்குமாறு தலைமையாசிரியர் அழைப்பு விடுத்தார். பெண் குழந்தைகள் நடனம், வண்ணக் கோலம், கயிறு தாவுதல் போன்ற போட்டிகளுக்குப் பெயர் கொடுத்தனர். ஆண் குழந்தைகள் மட்டைப் பந்து, கபடி, பளு தூக்குதல் போன்ற போட்டிகளுக்குப் பெயர் கொடுத்தனர்.
மறுநாள் பள்ளி அறிவிப்புப் பலகையில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிரித்துக்கொண்டே திரும்பினார்கள். வகுப்பறையில் அரவிந்தனைப் பார்த்ததும் உரக்கச் சிரித்தார்கள்.
“டேய் என்னடா உன்னோட நேம் டான்ஸ் லிஸ்ட்ல இருக்கு? அது கேர்ள்ஸ் போட்டிதானே… நீ என்ன கேர்ளா?” இப்படிக் கேட்டுச் சிரித்தவர்களில் மாணவன்களோடு மாணவிகளும் இருந்தார்கள்.
அவர்கள் சிரித்து முடித்ததும் அரவிந்தன் சொன்னான். “ஆமா ஃபிரெண்ட்ஸ், நான் கேர்ளா மாறிட்டிருக்கேன். இனிமே என் பெயர் அரவி,” என்று சொன்னான்.
மதிய உணவு இடைவேளையில் அவர்கள் மரத்தடியில் அமர்ந்து அரவிந்தன் பற்றிப் பேசிச் சிரித்தார்கள். அப்போது அங்கே வந்தார் கமலா டீச்சர். அவர் நடனப் பயிற்சியாளருமாவார். “என்ன எல்லாரும் கூட்டமா உட்கார்ந்து சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க.” என்று கேட்டார்.
மாணவர்கள் தங்களின் சிரிப்புக்கான காரணத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஆசிரியர் திட்டுவாரோ என்றும் நினைத்தார்கள். ஆனால் அவர் கோபித்துக்கொள்ளவில்லை.
“இதை உங்க மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு அரவிந்தனைக் கேலி செய்துக்கிட்டு இருக்காம என்கிட்ட ஓப்பனா பேசினதுக்காகப் பாராட்டுறேன்,” என்று சொல்லி அவர்களுக்கு வியப்பை அளித்தார். தொடர்ந்து அவரே, “சரி, அவன் கேர்ள்ஸ் போட்டியிலே பேர் கொடுத்ததுக்காக ஏன் சிரிக்கணும்,” என்று கேட்டார்.
“மேம், பையனா இருக்கிறது, இல்லாட்டி பொண்ணா இருக்கிறதுதானே இயற்கையா நடக்கும்? அவன் பொண்ணா மாறிக்கிட்டு இருக்கிறதாச் சொல்றது இயற்கைக்கு முரணானதுதானே?”
“இப்படிக் கேள்வி கேட்கிறதுக்காகவே உங்களை நான் பாராட்டுறேன. சரி, இன்னிக்கு சாயங்காலம் கதை சொல்ற பீரியட் வருதுல்ல, அதுக்கு நானே வர்றேன். அப்ப நாம இதப் பத்தி விரிவாப் பேசலாம், இப்ப கிளாஸ்சுக்குப் போங்க,” என்றார் அவர்.
கதை நேரம் வழக்கத்தை விட மாணவர்களின் அதிகமான எதிர்பார்ப்போடு தொடங்கியது. கமலா நேரடியாகவே விவாதத்துக்கு வந்தார். “உங்களுக்குப் புரியணும்கிறதுக்காக இப்போதைக்கு எளிமையான விளக்கங்களைச் சொல்றேன். நீங்க வளர வளர இதைப் பத்தி வந்திருக்கிற புத்தகங்களைப் படிக்கணும், இந்த மாதிரி மக்களோட பழகணும். அப்ப இன்னும் தெளிவாப் புரியும். ஓகேயா? இங்கே பாருங்க, அதோ மாலினி கறுப்பா இருக்கா, முபாரக் ஒயிட்டா இருக்கான். சித்ரா மாநிறமா இருக்கா. சாய் கண்ணன் உயரமா இருக்கான், ஞானராஜ் உயரம் குறைவாக இருக்கான். கௌதமி நடுத்தர உயரமா இருக்கா. இதிலே எது இயற்கை?”
“எல்லாமே இயற்கைதான் மேம்,” எல்லோரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்.
“கரெக்ட். உயரமாவோ குள்ளமாவோ இருக்கிறது மட்டும் இயற்கையில்லை, நடுத்தர உயரமும் இயற்கைதான். கறுப்பாவோ வெள்ளையாவோ இருக்கிறது மட்டுமே இயற்கையில்லை. மாநிறமும் இயற்கைதான். அது மாதிரிதான் ஆணாவோ பெண்ணாவோ பிறக்கிறது மட்டும் இயற்கையில்லை. ஆணாப் பொறந்துட்டு, அப்புறம் தன்னைப் பொண்ணா உணர்றதும் இயற்கைதான். ஆனா பல குடும்பங்கள்ல பெற்றோர்கள் அது ஏதோ தப்பான பழக்கம்னு நினைக்கிறாங்க, பொறந்தப்ப இருந்த மாதிரி ஆணாவே இருக்க வைக்கிறதுக்குன்னு, அல்லது பெண்ணாவே இருக்க வைக்கிறதுக்குன்னு ஆபரேஷன் ஏற்பாடு பண்றாங்க. ஊசி மருந்து, மாத்திரை எடுத்துக்கக் கட்டாயப்படுத்துறாங்க. அதெல்லாம் ஆபத்தானது. அப்படி பாலின அடையாளம் மாறாம இருக்கிறதுக்கு ஆபரேஷன் செய்றதெல்லாம் சட்டப்படியும் குற்றம்.”
இவ்வாறு ஒரு சிற்றுரை நிகழ்த்தினார் கமலா டீச்சர்.
“அப்படின்னா பொண்ணா பொறந்தவங்க ஆணா மாறுவாங்களா?”
இப்படிக் கேட்ட ஆறுமுகத்தின் முதுகில் தட்டிக்கொடுத்தார். “ஆமா ஆறு. ஆணாப் பொறந்து அப்புறம் பெண்ணா உணர்றவங்க திருநங்கை. பொண்ணாப் பொறந்து ஆணா உணர்றவங்க திருநம்பி. அவங்க ரெண்டு பேருக்குமே பொதுப் பெயரும் இருக்குது – அதுதான் திருநர்.”
“ஓ, அப்படின்னா திருநர் வாழுற ஊர்தான் திருநகர் – இல்லையா மேம்?” இப்படி காமாட்சி கேட்டதும் வகுப்பறையில் சிரிப்பலை எழுந்தது.
“யாரும் சிரிக்கக்கூடாது. சரியோ தப்போ, தைரியமா கேள்வி கேட்கணும்னுதானே நான் உங்களுக்குச் சொல்லியிருக்கேன்?” இப்படி எல்லோரையும் பார்த்துச் சொன்னவர் இப்போது காமாட்சியைப் பார்த்துச் சொன்னார்:
“திருநர் வாழ்வதால திருநகர் இல்லம்மா. ஆனா திருநகர்ல திருநர் மக்களும் வாழ்வாங்க.” இதைக் கேட்டு மாணவர்கள் மறுபடியும் சிரித்தார்கள். ஆனால் இப்போது அது கிண்டல் சிரிப்பாக இல்லை, உண்மையைப் புரிந்துகொண்ட அறிவுச் சிரிப்பாக இருந்தது.
“மேம், சில பேரு பொண்ணாவே தெரியணும்கிறதுக்காக ஆபரேஷன் செஞ்சிக்கிட்டு உறுப்பை அறுப்பாங்க, இல்லாட்டி மாத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன், அது நிஜமா?” இப்படிக் கேட்டவன் சோமு. கமலா டீச்சர் கொடுத்த ஊக்கம் அவனை இப்படித் துணிச்சலாகக் கேட்க வைத்தது.
இப்போது அரவியின் குரல் ஒலித்தது: “ஆமா, சில பேரு அப்படி ஆபரேஷன் செஞ்சிக்கிடுறாங்க. ஆனா அப்படிக் கண்டிப்பா ஆபரேஷன் செய்யணும்கிறது இல்லை. நான் இயற்கையான உடல் உறுப்புகளோடும் மன உணர்வுகளோடும் இருக்கத்தான் விரும்புறேன்.”
கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்தபோது வகுப்பாசிரியரும் வந்து சேர்ந்துகொண்டார். “பசங்க இப்படியெல்லாம் பேசுறது பெருமையா இருக்குது. அரவிந்தன் சொன்னது போல… இல்லையில்லை, நம்ம அரவி சொன்னது போல… உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சையால மாத்துறதும் மாத்தாம இருக்கிறதும் அவங்கவங்க விருப்பம். கட்டாயப்படுத்தக்கூடாது,” என்றார் மாடசாமி சார்.
கமலா தொடர்ந்து பேசினார். “சார் ஏன் பெருமைப்படுறாரு தெரியுமா? முந்தியெல்லாம் இப்படி பாலின அடையாளம் மாறுறவங்களை அவமானப்படுத்தி வேற வேற பெயர்ல கூப்புடுவாங்க. நீங்க முதல்ல சிரிச்சாலும் அப்புறம் நல்லா புரிஞ்சிக்கிட்டுப் பேசுறீங்க. உங்களைப் போலவே பெரியவங்களும் புரிஞ்சிக்கிட்டாங்கன்னா பாலின அடையாளம் மாறுறவங்க வீட்டை விட்டு ஓடிப்போற நிலைமையே ஏற்படாது.”
இப்போது மாடசாமி பேசினார். “வரலாற்றிலே பார்த்தீங்கன்னா நிறைய திருநர்கள் அரசாங்கத்திலே உயர்ந்த பொறுப்புல இருந்திருக்காங்க. இப்பவும், இவங்களுக்கு ஆதரவா உச்சநீதிமன்றம் தீர்ப்பளிச்சிருக்கு. இவங்க தங்களை மூன்றாம் பாலினம்னு பதிவு பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கு. போலீஸ் அதிகாரி, கலெக்டர், பேராசிரியர்னு முக்கியமான பணிகள்ல இவங்க இருக்காங்க. வானவில் எப்படி ஏழு வண்ணங்களால அழகா இருக்குதோ, அப்படித்தான் மனித குலமும் பல வகைப் பிறப்புகளால் அழகா இருக்குது. சரி, கடைசி மணி அடிக்கப்போகுது. நாளைக்குப் போட்டிகளுக்குப் பயிற்சி எடுக்கத் தயாரா வந்துடுங்க.”
அப்புறம் கமலா பக்கம் திரும்பியவர், “என்ன மேம், பயிற்சிக்கு உங்க மகன் அறிவுநம்பி வர்றான்ல,” என்று கேட்டார்.
“அவன் இல்லாமலா,” என்று புன்னகையோடு பதிலளித்தார் கமலா.
மறுநாள் காலையில் இலேசாக மழை தூறியிருந்தது. வானத்தில் இளம் கதிரொளி படர்ந்திருந்தது. மேகங்களை ஒரு வானவில் அரவணைத்திருந்தது.
கமலா டீச்சரோடு கம்பீரமாக நடந்து வந்தான் அறிவுநம்பி. அவனைப் பார்த்து மாணவர்கள் முதலில் வியந்தார்கள். பின்னர் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டு உற்சாகமாக வரவேற்றார்கள். ஆம், அவன் ஒரு திருநம்பி.
மைதானத்தில் எல்லோரும் கூடினார்கள். தலைமை ஆசிரியர் பின்வருமாறு அறிவித்தார்: “மாணவச் செல்வங்களே, ஒரு நற்செய்தி. இனிமேல் நம் பள்ளியில் ஆண்களுக்கான போட்டி, பெண்களுக்கான போட்டி என்று பிரிவினை கிடையாது. யாரும் எந்தப் போட்டிக்கும் பெயர் கொடுக்கலாம்.”
குழந்தைகளின் உற்சாகக் கூச்சலைக் கேட்டு வானவில் தன் ஏழு வண்ணங்களையும் குலுக்கிச் சிரித்தது.

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.






Comments