வெறும் நாய்

தெருவில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது வெறும் நாய்.
இன்று சாப்பிட ஏதும் கிடைக்கவில்லை. அதன் குட்டிகளுக்கும் சாப்பிட ஏதாவது கொடுக்கவேண்டும். பத்திரமான இடத்தில் குட்டிகளை விட்டு விட்டு உணவு தேடி அலைந்தது வெறும் நாய்.
தெருக்களில் குப்பைகள் தான் அதிகம் கிடந்தன தினம் தினம் சாப்பிடுவதற்காக என்ன அலைச்சல் அலைய வேண்டியது இருக்கிறது.?
நிமிர்ந்து பார்த்த வெறும் நாய்க்கு எதிரே ஒரு பூங்கா தெரிந்தது. அங்கே மக்கள் கூட்டமாய் இருந்தார்கள். வெறும் நாய் மக்கள் கூட்டம் இருந்தால் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும் என்று நினைத்தது. உள்ளே பயந்து பயந்து எச்சரிக்கையாகப் போனது.
ஆனால் அங்கே வெறும் நாய்க்கு ஆச்சரியம் காத்திருந்தது. உள்ளே ஒரே நாய்களின் கூட்டம்.
விதவிதமான நாய்கள். சடைமுடி நாய், உடம்பில் புள்ளிகள் உள்ள நாய், எலிக்குட்டி மாதிரி நாய், பெரிய எருமை மாடு மாதிரி நாய், நீளமான நாய், உருண்டையான நாய், தலைமுடி சீவிய நாய், வாலில் மட்டும் முடி உள்ள நாய், என்று அத்தனை விதமான நாய்களை அன்று தான் வெறும் நாய் பார்க்கிறது. முதலில் அந்த நாய்களைப் பார்த்ததும் அதற்குக் கோபம் தான் வந்தது.
தன்னுடைய உணவைப் பிடுங்க வந்த கூட்டாளிகளாக நினைத்து
’ பௌவ் ‘ என்றது. பிறகு தான் கவனித்தது.
அத்தனை நாய்களின் அருகிலும் மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரும் டிப்டாப்பாக உடை அணிந்திருந்தார்கள்.
அதைவிட வெறும் நாயின் கண்களைக் கவர்ந்த விஷயம் எல்லா நாய்களுக்கும் கழுத்தில் பெல்ட் மாட்டி ஒரு கயிறோ சங்கிலியோ கட்டப்பட்டிருந்தது.அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய நாய்களும் வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ, குறுநடை போட்டுக் கொண்டோ இருந்தன. முகத்திலும் உடம்பிலும் செழிப்பு. எல்லாம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தன.
வெறும் நாயின் விலாப்பக்கம் அரிப்பு எடுத்தது. உடனே அப்படியே உட்கார்ந்து கால்களால் சொறிந்தது. அந்த அரிப்பு அப்படியே காதுகளுக்குப் போனது. வாலின் மீது உட்கார்ந்தது. பின்னால் பிட்டத்தை நோக்கி படையெடுத்தது. வெறும் நாய் அப்படியே தரையில் படுத்து புல்லில் உருண்டு புரண்டது. சுகமாக இருந்தது.
அப்போது யாரோ ஒருவர், “என்ன உருண்டுகிட்டிருக்கே.. வா வா..” என்று வெறும் நாய் யோசிப்பதற்குள் கழுத்தில் பெல்ட்டும் கயிறும் கட்டி விட்டார். வெறும் நாய் துள்ளிக்குதித்து எழுந்தது. அவர் அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.
எல்லாநாய்களும் ஒரு கோட்டில் நின்றன. வெறும் நாயையும் அந்தக் கோட்டில் நிறுத்திக் கயிறை அவிழ்த்தார். வெறும் நாய்க்கு அருகிலிருந்த புசுபுசுன்னு முடியுடன் இருந்த பொமரேனியன் நாய் மெல்ல முணுமுணுத்தது.
“ என்ன திடீர்னு நாத்தமடிக்கிறது “ என்று மூக்கைச் சுளித்தது. திரும்பி வெறும் நாயைப் பார்த்து முறைத்தது. வெறும் நாய்க்குப் பெருமையாக இருந்தது.
“ என்ன நடக்குது இங்கே? “ என்று பொமரேனியன் நாயைக் கேட்டது.
“ ஓட்டப்பந்தயம் உனக்கு உன்னுடைய டிரெய்னர் சொல்லலியா? “ என்றது பொமரேனியன்.
“ நாள் முழுக்க ஓடிக்கிட்டே தானே இருக்கேன்..ஓடுனா என்ன கிடைக்கும் அதைச் சொல்லு ”
“ அட டா! உன்னோட கப்பு தாங்கமுடியல.. ஓடிப் போறது மட்டுமல்ல.. அந்தா கயித்துல தொங்குது பாரு.. பெரிய ரொட்டித்துண்டு.. அதைக் கவ்வி ட்ரெய்னர்ட்ட கொடுக்கணும்.”
அப்போது தான் வெறும் நாய் கவனித்தது. தூரத்தில் உயரமாய் ஒரு கயிற்றில் ரொட்டித்துண்டு தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. அதைப் பார்த்ததும் வெறும் நாய்க்கு வயிறு பசித்தது.. காலையிலிருந்து இதுவரை எதுவும் ஒருவாய் சாப்பிடவில்லை.
ஒரு விசில் சத்தம் கேட்டது.
எல்லாநாய்களும் தயாராக நின்றன. அடுத்த விசில் சத்தம் கேட்டது தான். கோட்டில் நின்ற அத்தனை நாய்களும் பாய்ந்து ஓடின. புழுதி பறந்தது. சுற்றி நின்றவர்கள் ஆரவாரம் போட்டனர். கை தட்டினார்கள்.
ஆனால் வெறும் நாய்க்கு இது எதுவும் தெரியவில்லை. அதன் கண்களில் அந்த ரொட்டித்துண்டு மட்டும் தான் தெரிந்தது. எங்கிருந்து தான் அதற்கு வேகம் வந்ததோ. எத்தனை முறை மற்ற நாய்கள் துரத்தும்போது ஓடியிருக்கிறது! பையன்கள் கல்லை விட்டு எறியும்போது ஓடியிருக்கிறது. காற்றில் வரும் உணவின் வாடையை முகர்ந்து அதைத்தேடி ஓடியிருக்கிறது.
வெறும் நாய்க்கு இந்த உலகமே அந்த ரொட்டித்துண்டு தான். பாய்ந்தோடிய வெறும் நாய்க்கு அருகில் எந்த நாயும் ஓடி வரவில்லை. எல்லாரும் வெறும் நாயைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
“ யாருடைய நாய் இது? “ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டார்கள்.
வெறும் நாய் பாய்ந்து அந்த ரொட்டியைக் கவ்வியது. கூட்டம் ஆரவாரத்துடன் கூவியது. கைத்தட்டல் விசில் பறந்தன. மற்ற நாய்களும் வந்து ரொட்டியைக் கவ்வி எடுத்தன.
எல்லாரும் முதலாவதாக வந்த வெறும் நாயைத் தேடினார்கள்.
காணவில்லை. அங்கும் இங்கும் தேடினார்கள். எங்கே போச்சு என்று யாருக்கும் தெரியவில்லை.
வெறும் நாய் வாயில் ரொட்டியுடன் பாய்ந்து ஓடியது.
அதன் கண்களில் பசியுடன் இருக்கும் குட்டிகள் மட்டுமே தெரிந்தன.”

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.






கடைசிவரியில் மந்திரம் செய்யும் சிறுகதை உத்திகளை நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பான கதை தோழர்.