வருடம் - 3025

இடம் :- மேட்சென் (தற்போதைய சென்னை பெயர் மாற்றப்பட்டு)
இப்போதிலிருந்து ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சென்னையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும் என யோசித்ததின் பயனாக முக்கியமான ஒரு மாற்றத்தை பார்ப்போமா?
உங்கள் கற்பனையில் என்னுடைய கதை.
ஒரு அம்மா அப்பா வுக்கு TA மற்றும் PK எனும் இரட்டை குழந்தைகள் இருந்தனர் (இப்ப இருக்கிற மாதிரி திவ்யா, அர்ஜுன் என்றெல்லாம் அப்ப பேர் வைக்க மாட்டாங்க. அவங்களுக்கு பெரிய பேரா வைக்க நேரமில்ல. சுருக்கமா இனிஷியலை வச்சு தான் கூப்பிடுவாங்க). அப்படி தான் பெண் குழந்தைக்கு TA ன்னும் , ஆணு குழந்தைக்கு PKன்னும் பேர் வச்சாங்க . இவங்க ஒரு பிரபலமான ஆங்கில வழி பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கின்றனர்.. ஒரு நாள் அவங்க பள்ளியில் அருங்காட்சியகம் ஒன்றிற்கு அவர்களை அழைத்து சென்றார்கள். அது ஒரு அறிவியல் மற்றும் விஞ்ஞான அருங்காட்சியகம்.
அங்கே பல்வேறு புராதன பொருட்கள் கண்ணாடி அறைகளில் பாதுகாக்கப்பட்டு இருந்தது.
TA வும் PK வும் கண்கள் விரிய சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அங்கே என்னவெல்லாம் இருந்தது தெரியுமா? தொலைகாட்சிப்பெட்டி, டெஸ்க்டாப் கனிப்பொறி , தினசரி பத்திரிக்கைகள், நாட்காட்டி, கால்குலேட்டர், பட்டன்
அலைபேசி....இப்படி….எத்தனையோ
அந்த அருங்காட்சியகத்தின் நடு கூடத்தில் ஒரு கண்ணாடி பேழையில் ஒரு புத்தகம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது… புத்தகம் எனும் வடிவத்தை அவர்கள் பார்த்தேயில்லை… அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்…..கனிபொறி…டேப்…ஈ.புக்… இவை தான். அவர்களுக்கு அந்த கண்ணாடி பேழையை தொட்டு பார்க்க ஆசை… யாரும் கவனிக்காத போது… பக்கத்தில் போட்டு தொட்டு பார்க்கவும்….அந்த கண்ணாடி பேழை திறந்து கொண்டது. உள்ளே இருக்கும் புத்தகத்தை பார்த்து பயந்து…வியந்து போனார்கள்…மெதுவாக தைரியத்தை வரவழைத்து கொண்டு புத்தகத்தை தொட்டு பார்த்தார்கள்….தொட்டது தான் தாமதம்…. அவர்கள் இருவரையும் அந்த புத்தகம் அப்படியே உள்வாங்கி கொண்டது…. இருவரும் நீண்ட தூரம் பயணம் செய்து கொண்டே இருந்தனர்… பயத்தில் கண்களை இறுக மூடி கொண்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் தரையில் இறங்கிய உணர்வு தோன்றியது. அவர்கள் மெல்ல கண் திறந்து பார்த்தனர் அவர்கள் இறங்கிய இடம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
கண்களை மெதுவாக தேய்த்து கொண்டு இருவரும் தங்கள் இறங்கிய இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தனர் எங்கே பார்த்தாலும் புத்தகம் அது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. புது விதமான அனுபவமாக இருந்தது அவர்கள் கண்களில் பட்டு அவர்களை கவரும் புத்தகத்தை எல்லாம் தொட்டு தடவி முகர்ந்து அதில் உள் நுழைந்து படிக்கத் தொங்கினர். பள்ளியில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தமிழ் மற்றும் பிற பாடங்களை பயின்றவர்களுக்கு புத்தகமாக பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும்
ஆனந்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு தளமாக போய் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை எல்லாம் எடுத்து பார்த்து தடவி முகர்ந்து உள் நுழைந்து படித்துப் பார்த்தார்கள் அந்த அனுபவம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது விதவிதமான புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும்மாய் நிறைந்திருந்தன. ஒவ்வொரு புத்தகமாக படித்துப் பார்த்து மகிழ்ந்தனர்.
சில மணி நேரம் புத்தகங்களை படித்த பிறகு அவர்கள் திரும்ப பயணம் செய்து அருங்காட்சியகத்திற்கு வந்துவிட்டனர். சொல்லப் போனால் அவர்களுக்கு
திரும்ப அருங்காட்சியகத்தில் வர விருப்பமே இல்லை, மனசே இல்லை. இப்போது இருவரும் பேசிக் கொண்டனர் “எவ்வளவோ அற்புதமான அனுபவமாக இருந்தது ஒவ்வொரு புத்தகத்தை எடுத்து படிக்கும் போதும் நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது கதை புத்தகங்களை படிக்கும் போது நமக்கு சிந்தனையும் கற்பனையும் அதிகமாக வளருகிறது. அந்த அனுபவம் நிச்சயம் அலாதி தான். செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டிற்கு பிறகு நாம் நமது சிந்தனையையும் கற்பனையையும் குறைத்துக் கொண்டோம் என்றே தோன்றுகிறது” என்று பேசியபடியே அவர்கள் பள்ளிக்கு திரும்பினர். நாம் புத்தகங்கள் இங்கே எங்கே கிடைக்கும் என்று பார்த்து நூலகங்களுக்கு
சென்று இதே போன்ற புத்தகங்களை எடுத்து படித்து நாம் மகிழலாம் என்று
பேசிக்கொண்டனர்.
வீட்டிற்கு சென்று அவர்களின் அம்மாவிடம் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அம்மாவும் “ஆம் குழந்தைகளே எங்க மூத்தோர்கள் காலத்தில் புத்தகங்கள் படிப்பது தான் மிக பெரிய பொழுதுபோக்கு அதில் அவர்கள் கற்றது ஏராளம். இப்போது போல் செயற்கை நுண்ணறிவு மூலம் படிக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு அறவே கிடையாது. புத்தக வாசிப்பு என்பது ஒரு கலை. அது நமது கற்பனையையும் சிந்தனையையும் மேன்மை அடைய செய்யும் இனி நிச்சயமாக ஒவ்வொரு வார விடுமுறையிலும் நாம் இங்கே நூலகங்கள் இருக்கிறதா? அல்லது எங்கேயாவது கிடைக்குமா? என ஆய்வு செய்து அங்கே சென்று புத்தகங்களை வாசிப்போம்” கேட்டவுடனே TA. மற்றும் PK. வுக்கு ஏக மகிழ்ச்சி.
இப்போது அடுக்களையிலிருந்து அம்மாவின் குரல் ஒலித்தது “டேய் பசங்களா நேரமாகுது ஸ்கூலுக்கு கிளம்பணும். எழுந்திருங்க”. இன்னும் கண்களை திறக்க முடியாமல் கலைந்த கனவுகளோடு எழுந்து உட்கார்ந்தனர் TA என்கிற தமிழரசியும்…PK என்கிற பொற்கண்ணனும்…

கதை, கவிதை எழுதுதல், ஓவியம் தீட்டுவது, கைவினை பொருட்கள் செய்வது, பொம்மலாட்டம் இவரின் தனித் திறமைகள்.
இவரின் கதைகள் நூலாகவும், மின்னிதழ்களிலும் வெளியாகியுள்ளன.
பொம்மலாட்ட நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்.






வருடம் 3025 ல் இவ்வாறாக நிகழ்வு என்ற நிதர்சனமான உண்மை.வாழ்த்துகள்
💥