top of page

இன்று யாருடைய பிறந்தநாள்?

23 hours ago
3 min read

தகைமதிக்கு இன்று யாரோடும் பேசப் பிடிக்கவில்லை.

 

தகைமதியின் வருகைக்காக காலையிலிருந்தே நண்பர்கள் காத்திருந்தனர். தேவதையைப் போல அழகான உடையோடு பள்ளிக்கு வந்திருந்தாள் தகைமதி. அவளின் வகுப்புத் தோழிகள், அவளை பள்ளியின் வாசலிலேயே சூழ்ந்து கொண்டனர். அருகில் நிற்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு, அவளை வகுப்பறைக்கு அழைத்து வந்தனர்.

 

பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அவள் யாரிடமும் பேசாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள். நண்பர்கள் எவ்வளவு கேட்டும் அதற்கு அவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆசிரியர்களுக்கு மிட்டாயைக் கொடுக்கச் செல்லும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாள்.

 

பாடவேளை தொடங்கியதும் நண்பர்கள் தகைமதியை மறந்து தங்களுக்கான பணிகளில் மூழ்கிப் போயினர். தகைமதி மட்டும் ஜன்னல் வழியாகத் தெரிந்த காலி மைதானத்தையும் கொடிக் கம்பத்தையுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றுப் பெய்த மழையில் மைதானம் நனைந்து போயிருந்தது. இன்னமும் ஈரம் காயாமல் சேறும் சகதியுமாய் இருந்த மைதானத்தைப் பார்த்து ஏனோ மனம் உடைந்து போனாள். அவளையும் அறியாமல் கண்ணீர் பொங்கி வந்தது.

 

“ச்சே, ஏன் இன்னைக்கு காலையிலேயே மழை வந்துருச்சு?” என வருத்தப்பட்டுக் கொண்டாள்.

 

பாடத்தில் கவனம் செலுத்த முடியாதபடி, காலையிலேயே அவளை வருத்தப்பட வைத்த நினைவுக்குப் பின்னால் செல்லத் தொடங்கினாள்.

 

காலையில் தகைமதியும் இன்சுவையும் சேர்ந்தே பள்ளிக்கு வந்தனர். வகுப்பறைக்கு வந்து புத்தகப் பைகளை வைத்துவிட்டு, ஆசையாக தலைமையாசிரியரைப் பார்க்க ஓடினர். இருவரின் முகமும் சந்தோசத்தில் பூரித்திருந்தது.

 

அவர்கள் சென்ற நேரம் தலைமையாசிரியர்,  மைதானத்தில் நின்றபடி,  “எல்லாரும் வகுப்புக்கு உள்ள போங்க. இன்னைக்குப் பிரேயர் இல்ல” என அதட்டிக் கொண்டிருந்தார்.

 

கட்டளைக்குப் பணிந்து குழந்தைகள் தேங்கிய மழைநீரில் கால் வைக்காமல் வகுப்பறைக்கு நகர்ந்து கொண்டிருந்தனர்.

 

தலைமையாசிரியரின் குரலில் இருந்த கடுமை தகைமதியின் ஆசையை நொறுக்கிவிட்டது.  இன்சுவை மெல்ல, தலைமையாசிரியரை நெருங்கி, “டீச்சர், இன்னைக்கு தகைமதிக்கு பிறந்தநாள்” என்றாள்.

 

“சரிம்மா! அத அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல வகுப்புக்குள்ள போங்க!” என்றார் தலைமையாசிரியர்.

 

“டீச்சர். பிரேயர் இருந்தா.. தகைமதிக்கு வாழ்த்து… பரிசு…”

 

இன்சுவை சொல்வதைக் காதில் வாங்காமலேயே தலைமையாசிரியர் வேறிடத்திற்கு நகர்ந்துவிட்டார். அப்போதே பக்கத்தில் நின்றிருந்த தகைமதியின் முகம் வாடிவிட்டது.

 

“சரி… வா, இன்சுவை. பரவால்ல!” எனத் தனது தோழியை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பிவிட்டாள்  தகைமதி.

 

‘பிரேயர் இருந்திருந்தா தலைமையாசிரியரிடம் இருந்து, பிறந்தநாள் பரிசாக ஒரு புத்தகம் கிடைத்திருக்குமே!’ என அப்போது தொடங்கிய அவளின் முக வாட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை.

 

தலைமையாசிரியர் இடமாற்றமாகி, இந்தப் பள்ளிக்கு  வந்தபிறகு  பள்ளிக் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு புத்தகங்களை பிரேயரில் வைத்து பரிசளிக்கத் தொடங்கினார்.

 

புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள குழந்தை – தகைமதி. அதனாலேயே அவளைத் தலைமையாசிரியருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. பிறந்தநாள் கொண்டாட இருக்கிற குழந்தையின் பெயரையும் அந்தக் குழந்தைக்கான புத்தகத்தையும் தேர்வு செய்து, முன்தினமே தலைமையாசிரியரின் மேசையில் வைக்கும் பொறுப்பை தகைமதியிடம் கொடுத்தார்.  

 

மறுநாள் பிரேயரில் புத்தகத்தைக் கொடுத்து பரிசு பெறும் குழந்தையைப் பற்றியும் நம்பிக்கையாக சில வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்டுவார், தலைமையாசிரியர்.

பிரேயர் இல்லையென்றாலும்  புத்தகம் கிடைக்கும். ஆனால் உற்சாகமான வார்த்தைகள் கிடைக்காமல் போய்விடும்.

 

பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளில்  சிலர் புத்தகங்களைப் பரிசாகப் பெறுவதில் ஆர்வமில்லாமலும் இருக்கத்தான் செய்தார்கள்.   தகைமதி அப்படி அல்ல. எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அதை உடனே வாசிக்கத் தொடங்கிவிடுவாள்.

 

வாரந்தோறும் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்பதற்காகவே வீட்டிற்கு சென்றதும் வீட்டுப் பாடங்களை அவசர அவசரமாக முடித்து விட்டு நூலகப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிவிடுவாள்.

 

நேற்று கூட புதிய புத்தகங்களின் வாசனையில் கிறங்கியபடியே எல்லா நூல்களையும் துழாவினாள். அதிலிருந்து  ‘சிறியதே அழகு’ என்கிற குட்டிக்குட்டி புத்தகமாக இருந்த சூழலியல் நூல் தொகுப்பைத் தேர்வு செய்தாள். பிறகு தன்னுடைய பெயரைத் துண்டுச் சீட்டில் எழுதி தேர்வு செய்த நூலில் செருகி தலைமையாசிரியரின் மேசையின் மேல் வைத்துவிட்டு வந்தாள்.

 

அவள் தேர்வுசெய்து வைத்திருந்த புத்தகங்களில் இருந்த பறவைகள் மற்றும் பூச்சிகளின் புகைப்படங்கள் கனவிலும் வந்து அவளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருந்தன.

 

இன்று வெள்ளிக்கிழமை வேறு. வானம் இன்னமும் மேகமூட்டமாக இருக்கிறது. மாலையிலும் மழை வந்து தலைமையாசிரியர் கவனம் மாறிவிட்டால் தனக்கான புத்தகம் கிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டுமே! என எண்ணிக் கொண்டிருக்கையில் மதிய உணவிற்கான மணி ஒலித்துவிட்டது.

 

இன்சுவையோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தகைமதியை தலைமையாசிரியர் அழைப்பதாக ஒரு மாணவி வந்து அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

 

சாப்பிடுவதை விட்டு, பாதியிலேயே மனம் மலர்ந்து, எதிர்பார்ப்போடு எழுந்து ஓடினாள் தகைமதி. தலைமையாசிரியரின் அறையில் அவர் இல்லை. அவள் பெயர் எழுதி தேர்வு செய்து வைத்திருந்த புத்தகத்தை இன்னமும் தலைமையாசிரியர் பார்க்கவில்லை எனத் தோன்றியது.

 

நூலக அறைக்குச் செல்லும் வழியில் தேங்கி நின்றிருந்த மழைநீர் பள்ளத்தில் வேலையாள் ஒருவர் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே தலைமையாசிரியர் நின்று கொண்டிருந்தார்.

 

தகைமதி அவரை நெருங்கிச் சென்றாள்.

 

“டீச்சர்…. கூப்பிட்டீங்களா?”

 

“ஆமாம், தகை. மாலை 3 மணிக்குப் பக்கத்துப் பள்ளி ஆசிரியர்கள் எல்லாம்  வரப்போறாங்க. நம்ம சயின்ஸ் டீச்சரிடம், நூலக அறையை ஒதுக்கித் தரச் சொல்லியிருக்கேன். நீயும் இன்சுவையும், சூழல் மன்றக் குழந்தைகளை அழைச்சுக்கிட்டு அரங்கத்திற்கு வந்திருங்க. அரங்கத்தைத் தயார் பண்ணிடுங்க, சுற்றுச்சூழல் சம்பந்தமான நிகழ்வுதான் நடக்க இருக்குது”.

தலைமையாசிரியரின் குரலில் இருந்த பரபரப்பை தகைமதி புரிந்து கொண்டாள்.

 

“சரிங்க…. டீச்சர்.” என்று சொல்லி, மெல்ல நகர்ந்தாள் தகைமதி.

 

சுறுசுறுப்பாகத் தகைமதியும் இன்சுவையும், நண்பர்களோடு சேர்ந்து நிகழ்வுக்கான வேலைகளைத் தொடங்கினர். அறையைச் சுத்தப்படுத்தி, அழகாக அலங்கரித்தனர். இருக்கைகளை வரிசைப்படுத்தி அமைத்தனர். சூழல் மன்றப் பதாகையை, பள்ளி வாயிலில் வரவேற்பிற்காகக் கட்டிவிட்டனர். குழந்தைகள் வரைந்த ஓவியங்களை, பின்புலத்தில் அழகாகக் காட்சிப்படுத்தினர். வண்ணக் காகிதங்களில் மடிக்கப்பட்ட கொக்கு உருவங்கள் அரங்கின் கூரையில் பறக்கவிடப்பட்டன.

 

நிகழ்வு தொடங்கியது.

 

அரங்கு ஆசிரியர்களாலும் சூழலியல் சார்ந்த ஆர்வலர்களாலும் நிரம்பி இருந்தது. சூழலியலாளர், கோவை சதாசிவம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார்.

 

குழந்தைகளைக் கவரும் வண்ணம் கதைகளைச் சொல்லித் தொடங்கிய அவரது உரை அரங்கை அமைதிப்படுத்தியது. பேச்சின் ஊடே பெரியவர்களின் கைதட்டல் அர்த்தம் நிறைந்த அவரது பேச்சிற்குப் பெருமை சேர்த்தது.

 

பேச்சை நிறைவு செய்யும் நேரத்தில் சூழலியல் கல்விக்குச் சிறந்த பங்களிப்பு செய்தவரை நினைவுறுத்தும் பொருட்டு, “இன்று யாருடைய பிறந்தநாள் தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

“தகைமதி” 

 

சூழல் மன்றக் குழந்தைகள் அனைவரும் முழக்கமாகக் கூச்சலிட்டனர்.

 

குழந்தைகளின் கூக்குரலால் சலசலத்த அரங்கில் இருந்த ஆசிரியர்களும் இயற்கை ஆர்வலர்களும் கல்வி அதிகாரிகளும் யார் அந்த தகைமதி எனத் துழாவத் தொடங்கினர்.

 

தகைமதி எழுந்து நின்றாள். “அடடே! அப்படியா… பிறந்தநாள் வாழ்த்துகள் தகைமதி.”

 

தகைமதியை வாழ்த்திவிட்டு, “ஒரு ஆளுமையும் தனது பிறந்தநாளை, தகைமதியுடன் பகிர்ந்துகொள்கிறார். அவர் யார்?” என்றார் அவர்.

 

இப்போது அரங்கு மீண்டும் சிந்தனையில் மூழ்கியது. அதிகாரிகளும் ஆசிரியர்களும் பதில் தேடிக் கொண்டிருக்கையில் தகைமதியின் குரல் மணியோசை போலத் தெளிவாகக் கேட்டது.

 

“டேவிட் அட்டன்பரோ. இன்று அவரது நூற்றாண்டு. உலகப் புகழ்பெற்ற இயற்கையியல் ஆவணப்பட இயக்குநர். அட்டன்பரோ குறித்த செய்தியை, சுட்டி யானை இதழில் படித்தேன்.”  என பேசத் தொடங்கினாள் தகைமதி.

 

கைதட்டலில் அரங்கம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. தகைமதியை கோவை சதாசிவம் அவர்கள் வாரி அணைத்துக் கொண்டார்.

 

தகைமதி தலைமையாசிரியரைப் பார்த்தாள். கண்கள் குளமாக தன் மாணவியை பெருமிதமாகப் பார்த்தபடி இருந்தார்.

 

பாராட்டுகளுக்கிடையில்  கோவை சதாசிவம் அவர்கள் தான் எழுதிய   புத்தகம் ஒன்றை பரிசளித்தார். ‘பூச்சிகளின் தேசம்’ எனத் தலைப்பிட்டிருந்த அட்டையில் நத்தையின் படமொன்று அழகாக அச்சாகி இருந்தது.

 

“சாரிம்மா… தகை”

 

குரல் கேட்டு திரும்பிய தகைமதியினைக் கட்டியணைத்துக் கொண்டார் தலைமையாசிரியர். பக்கத்தில் இன்சுவையும் நின்று கொண்டிருந்தாள். வெட்கத்தில் இருந்த தகைமதியின் கண்கள் இன்னும் பிரகாசமாகின.

 

தலைமையாசிரியரின்  கைகளில் மலர்ந்திருந்தது அவள் தேர்வு செய்திருந்த புத்தகம்.


4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
6 hours ago
Rated 5 out of 5 stars.

சார்.. மிக அருமையான நிறைவான சிறுகதை..

தகைமதியும் புத்தக வாசிப்பும் சூழலியலும் கோவை சதாசிவம் அவர்களும் டேவிட் அட்டன்பரோ அவர்களும் பின்னிப் பிணைந்த சிறப்பான சிறுகதை.. தெளிவான தேர்ந்த நடை.. சூப்பர்ப் சார் இவண் சேகர்

Edited
Like

Guest
7 hours ago
Rated 5 out of 5 stars.

கதை அருமை.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் உள்ளது.

Like

Guest
8 hours ago
Rated 5 out of 5 stars.

மிகவும் அருமையாக எளிமையான நடையில் மாணவர்களை கவரும் வகையில் இருந்தது

Like

Guest
8 hours ago
Rated 5 out of 5 stars.

மிகவும் அருமையான கதை இந்த கதையை படிக்கும் போது நாம் அந்த நிகழ்வு இடத்துக்கு செல்வது அதாவது பள்ளிக்கு சென்றது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையில் சூழ்நிலையர் பற்றி கையாண்டுகிற விதமும் அருமையாக உள்ளது

Like
bottom of page