top of page

காக்கை குருவி எங்கள் சாதி..


அன்று வயல் அறுவடை வேகமாக நடந்தது. நெல்மணிகள் களத்து மேட்டில் குவிந்தன.

விவசாயி குப்பன் அவற்றை மூட்டைகளில் கட்டி மாட்டுவண்டியில் ஏற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது மகன் குமரன்  அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றான்.


களத்து மேட்டில் குவிந்திருந்த நெல்லைக் குருவிகள் தின்பதற்கு பறந்து ஓடி வந்தன. அதைப்பார்த்த குப்பன் கம்பெடுத்து அவற்றை விரட்டினார். அதையும் குமரன் பார்த்தான்.

மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார் குப்பன். உடன் மகன் குமரனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார்.


வண்டி வீடு வந்து சேர்ந்தது. மகிழ்ச்சியுடன் நெல் மூட்டைகளை இறக்கினார்.

இந்த ஆண்டு நெல்சாகுபடி நல்லா இருந்தது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.


"குமரா.. இந்தத் தடவை நெல் நல்லா விளைஞ்சிட்டு.. நம் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கெல்லாம்  இன்னைக்கு நம் விவசாய நிலத்தில் விளைஞ்ச காய்கறிகளைக்கொண்டு சாப்பாடு போடணும்" என்றார். குமரனுக்கு புதிராக இருந்தது." நெல்லை தின்னவந்த குருவிகளை விரட்டினீங்க.. இப்போ ஊருக்கு சாப்பாடு போடப்போறேன்னு சொல்லுறீங்க" என்று வியப்புடன் கேட்டான். குப்பன் உடனே, "குமரா..நாம உழைச்சி கிடைக்கிற பொருளை நாலு பேருக்கு கொடுத்துச் சாப்பிடணும். அதுதான் நியதி" என்று சொல்ல, அந்த நாலு பேருல குருவி வராதா என்று குமரன் யோசித்தான். அதைப் பார்த்த குப்பன் உடனே, " குமரா..நீ சின்னப்பையன் உனக்குப் புரியாது..போ..போ" என்றார். குமரன் வீட்டுக்குள் சென்று தன் தாயிடம் விளக்கம் கேட்டான். அவர்"உன் அப்பாவிடமே விளக்கம் கேள்" என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்து கொண்டார்.


குமரனுக்கு குழப்பமாகவே இருந்தது.


மதியம் குப்பனின் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு. குப்பனும் அவரது மனைவியும் வந்தவர்களை அன்புடன் உபசரித்து உணவு வழங்கினர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு, குப்பனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சென்றனர்.


பின்னர் குப்பன் காக்கைக்கு தனியாக ஒரு இலையில் சாப்பாடு வைத்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு காக்கை ஓடி வந்தது. இலையின் அருகில் அமர்ந்தது. உணவைப் பார்த்தது. கா..கா..கா..என்று கத்தியது. சிறிது நேரத்தில் காக்கைகள் கூட்டமாக வந்து சேர்ந்தன. அனைத்து காக்கைகளும் ஒன்று சேர்ந்து அந்த உணவை உண்டன. குமரன் ஆச்சரியமாகப் பார்த்தான். நெல்லை உண்ணவந்த குருவிகளை விரட்டிய தந்தை இந்த காக்கைக்கு கூப்பிட்டுச் சாப்பாடு போடுறாரே என்று யோசித்தான். தன் தந்தையிடம் "அப்பா! நெல்லைத் தின்னவந்த குருவிகளை விரட்டினீங்க..இப்போ காக்கையைக் கூப்பிட்டுச் சாப்பாடு போடுறீங்க.." என்று கேட்க, குப்பன் சிரித்தார்.


"டேய்! காக்கை தான் மட்டும் தனியா சாப்பிடாது. நாலு காக்கைகளை கூப்பிட்டு பகிர்ந்து சாப்பிடும். அவ்வளவு உயர்ந்த குணம் உள்ளது காக்கை..அதனாலத்தான் காக்கைக்கு சோறுவச்சேன்" என்றார். "அப்படியா அப்பா" என்று குமரன் வியப்புடன் கேட்டான்.

அடுத்த நாள் காலை, குப்பனின் மனைவி வீட்டில் சமையல் அறையில் வடை சுட்டுக்கொண்டிருந்தார்.


வடை மணம் எங்கும் வீசியது. அப்போது மரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காக்கை. திடீரென்று பாய்ந்து ஒரு வடையை வாயில் கவ்விக்கொண்டு பறந்தது. இதைப் பார்த்த குப்பன் ஆத்திரம் அடைந்தார். "ஆ.. காக்கா" என்று சொல்லியபடி ஒரு கல்லை எடுத்து அந்த காக்கையை நோக்கி வீசினார். அது வடையை கீழே போடாமல் பறந்து சென்றது. இதை குமரன் பார்த்தான். "ஏப்பா..நேற்றுதான் காக்கா மற்ற காக்காக்களுக்கு கொடுத்து சாப்பிடுதுன்னு சொன்னீங்க.. இன்னைக்கு ஒரு வடையைத் தூக்கிட்டுப் போன காக்கையை கல்லைத்தூக்கி வீசுறீங்க" என்று கேட்க, குப்பன் கோபமாக,"இது திருட்டுக் காக்கை" என்று திட்டினார்.


உடனே,"இந்த காக்கையும் மற்ற காக்கைகளுக்கு கொடுத்துதானே வடையைச் சாப்பிடும்" என்று  குமரன்கேட்டான். குப்பன்,வேகமாக," திருடறது தப்பு..அதான் அந்த காக்கை மீது கல்வீசினேன்" என்றார். குமரனும் விடவில்லை."ஏப்பா..நேற்று சோறு வச்ச மாதிரி..இன்னைக்கும் தனியா வடை வச்சிருந்தா அந்தக் காக்கை ஏன் திருடப் போகுது..நீங்க கொடுக்காததால்தானே காக்கை அதுவா எடுத்துட்டு ஓடிச்சி" என்று கேட்க,குப்பனுக்கு குப்பென்று வியர்த்தது. "ஆமா! நீ சொல்லுறது சரிதான்..நம்மளா கொடுத்தா அது ஏன் எடுத்துட்டுப் போகுது.." என்றவர், வடைகளை எடுத்து தனியாக ஒரு இலையில் வைத்தார். காக்கை மற்றக் காக்கைகளை கூப்பிட்டு வடைகளை தின்றன. குப்பனும் குமரனும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.


குப்பன் தன் மகனைப் பார்த்து," உனக்கு இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்துச்சப்பா?" என்று கேட்க," அதுவாப்பா..பாரதியார் பாட்டிலிருந்துதான் நான் தெரிஞ்சிக்கிட்டேனப்பா..அவர், காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியிருக்காருப்பா..மனிதர்களுக்கு பகிர்ந்துண்ட நீங்கள் பறவைகளுக்கும் பகிர்ந்துண்டு சாப்பிடணுமப்பா" என்றான். அதைக்கேட்ட குப்பன் மகனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.


கோ.சுரேஷ்குமார்
கோ.சுரேஷ்குமார்

மேனாள் மேல்நிலைக்கல்வி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி ஆசிரியர், 

கல்வியாளர், சிறார் கதை ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர்,

"மைக்ரோகிரின்" வளர்ப்பு செயல்பாட்டாளர்,

வேளாண் விழிப்புணர்வு கட்டுரையாளர், பயிற்சியாளார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 15
Rated 5 out of 5 stars.

முருகேசன்

Like
bottom of page