top of page

தங்கச் சிறகுகள் கொண்ட அன்னப்பறவை

9 hours ago
3 min read

மாலை நேரம்.


பன்னிரண்டாவது மாடியில் இருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள் மீரா.


அப்போது


“படபட…”


ஏதோ ஒன்று கீழே விழுந்த சத்தம் கேட்டது.


மீரா எட்டிப் பார்த்தாள்.


ஒரு பெரிய அன்னப்பறவை பால்கனியின் ஓரத்தில் விழுந்து கிடந்தது.


அவள் பதறிப்போனாள்.


“அய்யோ! பாவம்… அடிபட்டிருக்கிறதே!” என்று கூறி அதை மெதுவாகத் தூக்கினாள்.


அந்தப் பறவையின் சிறகுகள் பளபளக்கும் தங்க நிறத்தில் மின்னின.


“ஆஹா ! தங்கச் சிறகுகள்!” மீராவுக்கு ஆச்சரியம்.


அதை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். மீராவின் அம்மா தண்ணீரும் உணவும்

கொடுத்தார்கள். அம்மாவின் உதவியுடன் ஒரு கூண்டையும் ஏற்பாடு செய்தாள்.


“நன்றாகக் குணமாகும் வரை இங்கேயே இரு” என்று தங்கச்சிறகு அன்னத்திடம்

சொன்னாள் மீரா.


மீராவின் அன்பான கவனிப்பில் அன்னப்பறவையின் உடல்நலம் தேறியது.


ஆனால் ஒரு விசித்திரம் நடந்தது.


அது பால்கனியில் விழுந்து கிடந்தபோது இருந்த ஒளிவீசும் தங்கச்சிறகுகளின் நிறம் இப்போது சற்று மங்கி இருந்தன.


“என்ன ஆச்சு உனக்கு?” என்று அன்னப்பறவையிடம் மீரா கேட்டாள்.


அன்னப்பறவை அமைதியாக அவளைப் பார்த்தது.


அது பதில் சொல்லவில்லை. அதன் காயம் முழுமையாக ஆறவில்லை.


ஆனால், அந்த வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கியது.


மீரா தினமும் பள்ளிக்குச் செல்வாள். பள்ளியிலிருந்து வந்ததும் பையைத் தூக்கி சோபாவில் வீசுவாள்.


“அம்மா, எனக்கு பசிக்குது” என்று கத்துவாள்.


“சரி, உட்கார். நான் உணவு எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு உணவை எடுத்து வந்து அம்மா ஊட்டுவார்.


அருகில் இருந்த அன்னப்பறவை அதைப் பார்த்துக்கொண்டிருந்தது.

அன்னப்பறவையின் சிறகில் இருந்த ஒரு தங்க இறகு கீழே உதிர்ந்தது.


அன்று மாலை பாட்டி,

“மீரா, இந்தத் துணிகளை மடித்து வைக்க எனக்கு கொஞ்சம் உதவி செய்கிறாயா?” என்று கேட்டார்.


“பாட்டி, அது எல்லாம் எனக்குத் தெரியாது” என்றாள் மீரா.


“கற்றுக்கொண்டால் தெரியும்” என்றார் பாட்டி.


“எனக்கு கற்றுக்கொள்ள விருப்பமில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் மீரா.


பாட்டி அமைதியாகத் துணிகளை மடிக்கத் தொடங்கினார்.


அன்னப்பறவையின் இன்னொரு தங்க இறகு உதிர்ந்தது. அன்னப்பறவை தன்

சிறகுகளைப் பார்த்தது.


தங்க நிறம் … இன்னும் கொஞ்சம் மங்கித் தெரிந்தது. அதன் கண்களில் ஏதோ வருத்தம் தெரிந்தது.


“சிறகு உண்டு… பறக்கவில்லை,


கால் உண்டு… நடக்கவில்லை,

கைகள் உண்டு… செய்யவில்லை,

வாழ்க்கை உண்டு… முயலவில்லை…

தங்கம் மின்னுமா?

சிறகுகள் மின்னுமா?”


என்று அந்த இரவு கூண்டுக்குள் அன்னப் பறவை தனக்குத்தானே பாடியது.


மீரா அந்தப் பாடலைக் கேட்டாள்.


“நீ என்ன பாடுற?” என்று கேட்டாள்.


அன்னப்பறவை அவளைப் பார்த்தது. ஆனால் எதுவும் பேசவில்லை.


ஒருநாள் மீராவின் தோழி பிரணிகா வீட்டிற்கு வந்தாள். கூண்டைப் பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன.


“அடடா! இது அன்னப்பறவையா? எவ்வளவு அழகா இருக்கு!” என்று கூறிவிட்டு

கூண்டுக்கு அருகில் வந்தாள்.


“இது என்ன அழகு? நான் முதலில் பார்த்தபோது இதன் சிறகுகள் முழுக்க தங்க

நிறமாக இருந்தன” என்றாள் மீரா.


“இப்போ ஏன் இப்படி மங்கியிருக்கு? சில இறகுகளைக் காணவில்லை என்று

கேட்டாள் பிரணிகா.


“தெரியல. கூண்டில் வைத்த பிறகுதான் இப்படியாகிவிட்டது” என்று சோகமாக அந்தக் கூண்டைச் சுற்றி வந்தபடியே கூறினாள் மீரா.


அப்போது மீராவின் அம்மா இரண்டு தட்டுகளில் சிற்றுண்டி கொண்டு வந்தார்.


“மீரா! இந்தா ஒன்று உனக்கு. இன்னொன்று பிரணிகாவிற்கு” என்று கூறிக்

கொடுத்தார்.


“அம்மா, எனக்கு நீங்களே ஊட்டி விட்டுவிடுங்கள்” என்றாள் மீரா.


“பாரு, பிரணிகாவுக்கும் உன்னுடைய வயதுதான். அவளே சாப்பிடுகிறாள். நீயும்

சாப்பிடு” என்றார் அம்மா.


“முடியாது அம்மா. நீங்கள் தான் ஊட்ட வேண்டும்” என்று கூறி அம்மாவின் மடியில்

ஏறி அமர்ந்தாள் மீரா.


மீராவின் அம்மா மீராவிற்கு ஊட்ட ஆரம்பித்தார்.


பிரணிகா ஆச்சரியமாகப் பார்த்தாள்.


சிறிது நேரத்தில்,


“மீரா, குளிக்க நேரமாச்சு,” என்றார் அம்மா.


அவளை அழைத்துச் சென்று குளிக்க வைத்தார்.


தலை சீவினார். பவுடர் போட்டார். பொட்டு வைத்தார்.


“இதெல்லாம் அம்மாவே செய்கிறார்களே. இவ்வளவு பெரியவளா வளர்துட்டே நீ

செய்ய மாட்டாயா?” என்று பிரணிகா கேட்டாள்.


மீரா சிரித்தாள்.


“ஆமாம். அம்மா இருக்கும்போது நான் எதுவுமே செய்ய மாட்டேன்” என்று

சொல்லிவிட்டு மீரா தோளைகளைக் குலுக்கிச் சிரித்தாள்.


பிரணிகா விளையாடி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.


ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மீராவின் மனதிற்குள் ஓடிக்கொண்டே

இருந்தன.


"நம்மால் முடிந்த வேலைகளை நாமே செய்ய வேண்டும் மீரா..முடிந்தால்

மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.."


அவளுடைய குரல் திரும்பத் திரும்ப மீராவின் காதுகளில் ஒலித்துக்கொண்டே

இருந்தது.


அன்றிரவு மீராவுக்குத் தூக்கம் வரவில்லை.


மெதுவாக எழுந்து, கூண்டின் அருகில் சென்று நின்றாள்.


அன்னப்பறவை அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தது. அதன் மங்கிய தங்கச் சிறகுகளைப் பார்த்தபோது மீராவின் மனதிற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு தோன்றியது.


அன்னப்பறவை அவளைப் பார்த்தது.எதுவும் சொல்லவில்லை.


ஆனால் அன்று இரவும் அதே பாடலைப் பாடியது.


அடுத்த நாள் காலை, மீரா தானாகவே சாப்பிட்டாள்.


அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.


“என்ன மீரா, இன்னைக்கு நானே ஊட்டணும்னு சொல்லலையே?”


மீரா சிரித்தாள்.


“இல்லம்மா… இனிமேல் நானே சாப்பிடுறேன்”


அம்மாவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது. அன்று மாலை பள்ளியில்

இருந்து வந்ததும், புத்தகப் பையை அவளே கொண்டு போய் படிப்பறையில்

வைத்தாள்.


புத்தகங்களை ஒழுங்காக அடுக்கினாள். பள்ளிப் பாடங்களையும் அவளே முடித்தாள். சிறிய வேலைதான்.


ஆனால் மீராவுக்கு அது ஏதோ ஒரு பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல

இருந்தது.


“நான் செய்துட்டேன்!” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டாள்.

பிறகு உடனே கூண்டின் அருகில் ஓடிச்சென்றாள்.


அன்னப்பறவையைப் பார்த்தாள். அன்னப்பறவை சிரித்தது.


அப்போது தான் கவனித்தாள். ஒரு புத்தம் புதிய தங்க இறகு அதன் சிறகில்

முளைத்திருந்தது.


அந்தச் சிறிய இறகு மட்டும் கண்ணைப்பறிக்கும் தங்க நிறத்தில் மின்னியது!

மீராவின் கண்கள் விரிந்தன. அவளால் நம்பவே முடியவில்லை.


“உன் இறகு! தங்கமாயிடுச்சே!" என்று சொல்லியபடியே கூண்டைத் திறந்து,

அன்னப்பறவையைத் தடவிக் கொடுத்தாள்.


அன்னப்பறவை அவளைப் பார்த்துத் தலையை ஆட்டியது.


அன்றிலிருந்து அது மீராவுக்கும் அன்னப்பறவைக்கும் இடையிலான ஒரு ரகசிய

ஒப்பந்தம் போல மாறியது.


அடுத்த நாளும் அவளை தன்னுடைய வேலைகளை செய்தாள்.


அடுத்த நாள் மாலை வந்து பார்த்தபோது, இன்னொரு இறகும் தங்க நிறமாக

மாறியிருந்தது.


மீராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


தினமும் அவளால் முடிந்த வேலைகளை அவளே செய்ய ஆரம்பித்தாள்.


ஒரு மாதம் கழிந்தது.


அன்னப்பறவையின் இறகுகள் முழுவதும் மீண்டும் தங்க நிறமாக மாறியிருந்தன.


மீரா சில நொடிகள் அதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் மனதிற்குள் ஒரு பெருமிதம். பின்னர் கூண்டின் கதவைத் திறந்தாள்.

அன்னப்பறவையைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்கு வந்தாள்.


'போய் வா! என் தங்க அன்னமே! உன் உலகத்துக்குப் போய் வா..!'


அன்னப்பறவை படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு உயரப் பறந்தது.


உயர உயரப் பறந்துகொண்டே, ஒருமுறை திரும்பி மீராவைப் பார்த்தது.


மீரா மகிழ்ச்சியோடு கையசைத்தாள்.


அப்போது திடீரென்று—


அவளுடைய தோள்களில் ஏதோ அழுத்துவது போல உணர்ந்தாள்.

மீரா திரும்பிப் பார்த்தாள்.


அவளுடைய முதுகுக்குப் பின்னால் இரண்டு தங்க நிறச் சிறகுகள் முளைத்திருந்தன!


மீரா வியப்பில் சில நொடிகள் அசையாமல் நின்றாள்.


பிறகு அந்தச் சிறகுகளை மெதுவாக விரித்தாள்.


அன்னப்பறவை வானத்தில் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.


மீரா சிரித்தாள்.


அவளும் வானத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தாள்.


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட

பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page