மாற்றம் ஒன்றே மாறாதது

அது ஒரு அழகிய காடு.
காலை நேரம். வானத்தில் மஞ்சள் விளிம்புகளுடன் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. சூரியனின் பொன்னிற ஒளிக்கதிர்கள் மேகங்களின் இடைவெளியில் இருந்து காடு முழுவதும் விழுந்தன. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரங்களும் செடிகளும் காட்சி அளித்தன. குளிர்ந்த காற்று வீச, மரங்கள் சிலுசிலுவென்று ஆடிக்கொண்டிருந்தன.
அந்தக் காட்டில் ஒரு பெரிய ஆண் யானை நின்று கொண்டிருந்தது.
அது தன் தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது.
“பிரீரீஈஈ…!”
ஆண் யானை தன் நீண்ட தந்தங்களை முன்னும் பின்னும் ஆட்டியது. அடடா! என்னஅழகு!
நீளமும் பசுமையும் மஞ்சளும் கலந்து ஆயிரம் கண்கள் பார்ப்பதைப் போல அதைச் சுற்றிலும் காடு மின்னியது. காற்றில் மரங்கள் சிலுசிலுவென்று ஆடின. ஆண் யானையும் தன் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு முன்னும் பின்னும் கால்களை எடுத்து வைத்து ஆடத் தொடங்கியது.
மை தீட்டியதைப் போல கருமையான தும்பிக்கை.
வெண் சங்கு போல நீண்ட வெண்மையான தந்தங்கள்.
நீண்ட நெடிய உருவம்.
அழகான பெரிய காதுகள்.
அந்த ஆண் யானை தன் தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது.
பெண் யானை தன் குட்டிகளுடன் சற்றுத் தொலைவில் நின்று புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.
குட்டி யானைகளும் கருநிறத்தில் அழகாக இருந்தன. அவற்றில் ஒரு குட்டி, ஆண் யானையின் ஆட்டத்தை கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதற்கு அந்த யானையைப் பார்த்துப் பார்த்து ஒரு சந்தேகம் வந்தது.
தைரியமான அந்தக் குட்டி யானை மெதுவாக ஆண் யானையிடம் சென்றது.
“அப்பா…”
“என்ன கண்ணே?”
“உங்களைப் போல எனக்கும் அழகான தந்தங்கள் வருமா?”
ஆண் யானை புன்னகைத்தது.
“நிச்சயமாக வரும் கண்ணே!”
“உங்களைப் போல கருப்பு நிறமாக நான் மாறுவேனா?”
“நிச்சயமாக மாறுவாய்.”
“உங்களுடைய அழகான கண்களைப் போல என்னுடைய கண்களும் அழகாகுமா?”
“அழகாகும் கண்ணே.”
குட்டி யானையின் கண்கள் இன்னும் பெரிதாகின.
“உங்கள் முகத்தில் இருப்பதைப் போல எனக்கும் நீண்ட தந்தங்கள் வளருமா?”
“நிச்சயமாக வளரும்.”
“எப்போது வளரும்?”
ஆண் யானை சிறிது நேரம் யோசித்தது.
“காலம் வரும்போது.”
“காலம் எப்போது வரும்?”
“அது சீக்கிரமே வந்துவிடும்.”
“நான் எப்போது உங்களைப் போல மாறுவேன்?”
ஆண் யானை குட்டியைத் தன் தும்பிக்கையால் மெதுவாகத் தடவியது.
“நீ நிச்சயம் என்னைப் போல வளர்வாய்.”
குட்டி யானை தன் முகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது.
“நான் மாறுவேனா?”
ஆண் யானை புன்னகையுடன் சொன்னது:
“நிச்சயமாக மாறுவாய் கண்ணே. மாற்றம் ஒன்றே மாறாதது.”
“மாற்றம் ஒன்றே மாறாதது…”
குட்டி யானை அந்த வார்த்தைகளை மெதுவாகச் சொல்லிப் பார்த்தது.
அதன் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது.
“மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் ஒன்றே மாறாதது…” என்று சொல்லிக்கொண்டே தன் அம்மாவிடம் ஓடிச் சென்றது.
அந்தக் காலை நேரக் காட்டில் மரங்கள் தொடர்ந்து சிலுசிலுவென்று ஆடிக்
கொண்டிருந்தன.
அவற்றுடன் சேர்ந்து அந்தக் குட்டி யானையின் கனவும் மெதுவாக வளரத்
தொடங்கியது.





"அழகிய காலைப் பொழுதின் காட்சியைத் தங்களின் எழில்மிகு எழுத்துகளால் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். மேகங்களின் மஞ்சள் விளிம்பும், சூரியனின் பொன்னிறக் கதிர்களும் உங்கள் வரிகளில் ஜொலிக்கின்றன. இயற்கையின் அழகை வர்ணித்த விதம் அருமை. உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துகள்!"
குழந்தைகளின் உலகம் கதையில் அழகாக பதிவாகியிருக்கிறது தோழர். குழந்தைகளின் கேள்விகள் அதை எதிர்கொள்பவர்களின் ஆர்வத்தைப் பொருத்து அடர்த்தியாகும். இதில் அந்தத் தன்மையை உணர்கிறேன்.