காட்டின் உழவன்

இதோ இருவாச்சி வந்துவிட்டான். இவனுடைய தாத்தா தான், நான் இங்கு முளைக்கக் காரணம்.. ஆம் .. அதோ, அங்கே யானை மாதிரி ஒரு பாறை தெரியுதே! அங்கிருக்கும் அந்தக் காட்டு ஜாதிக்காய் மரத்தின் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, விதையையும் எச்சத்தோடு சேர்த்து இங்கே விட்டுச் சென்றார். நல்ல ஏதுவான நீரோட்டம் அருகே இருக்கிற சதுப்பு நிலம். நான் முளைத்துவிட்டேன். இன்று உயரமாக வளர்ந்து நிற்கிறேன். இப்போது அவரின் பேரன், பழங்களைக் கொண்டுபோக இங்கே வந்திருக்கிறான்.
“அக்கா முட்டையிடப் போறா.. அதான் பழங்கள் கொண்டு போக வந்திருக்கான்” என்று சொன்னது ஒரு கும்பாரா தவளை. அது காட்டு ஜாதிக்காய் மரத்தின் வேர்களில் அமர்ந்திருந்தது.
“ஆளு துரும்பா இளைச்சு போயிட்டானே.. இதோ பாரு! எத்தனை பழங்களை அவன் அலகுல சேர்க்கிறான்.. ஆனா எல்லாமே அவன் இணைக்கு தான்.. இவன் பசியில கிடந்தாலும், அவளுக்கு கொண்டு போய்விடுவான்..” என்று சொன்னது காட்டு ஜாதிக்காய் மரம்.
“ஆமாம்.. செய்யணும் இல்ல.. இருவாச்சி அக்கா அங்க முட்டையிட போறாங்கள்ல ..” என்று கூறிய கும்பாரா தவளை, ஆண் இருவாச்சியைப் பார்த்து கேட்டது, “எப்போ குஞ்சு பொரிக்கும் அண்ணே?”
மரத்தின் மேல் வந்து அமர்ந்த ஆண் இருவாச்சி, “முட்டையிட்ட பிறகு, சுமார் 40 நாள்ல குஞ்சு பொரித்துவிடும்... அவளுடைய இறகுகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே பொந்துக்குள்ள முட்டையிடத் தயாராக இருக்கிறாள்.. இந்த நேரத்துல நல்லா கவனிக்கிறது தான் எனக்கு முக்கியமான வேலை..” என்று சொல்லி இன்னொரு பழத்தை அலகில் அதக்கியது.
“நேத்து ரொம்ப நேரம் தேடிக் கொண்டிருந்தாயே .. கிடைத்ததா?” காட்டு ஜாதிக்காய் மரம் கேட்டது.
“பொதுவாக நாங்கள் பழங்களைத்தான் அதிகம் சாப்பிடுவோம். ஆனால் இனப்பெருக்கக் காலத்தில், குறிப்பாக குஞ்சுகள் வளரும்போது, பூச்சிகள், சிறு ஊர்வன, பாம்புகள் போன்ற உயிரினங்களையும் தேடிச் சாப்பிட வேண்டியிருக்கும். காடுகள் அழிப்பு காரணமாக பூச்சிகளும் சிறு விலங்குகளும் குறைந்து கொண்டே போகின்றன.” கவலையோடு சொன்னது இருவாச்சி.
“ஆமா பா.. நாங்க எப்போதுமே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் வாழ்கிறோம். எப்போ வெட்டுவாங்களோ என்று பயந்து பயந்து வாழ வேண்டியுள்ளது.” என்றது காட்டு ஜாதிக்காய் மரம்.
“நாங்க வழக்கமா முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது ஒரு சீனி மரத்தில். அந்த 100 வருட வயதான மரத்தை வெட்டிட்டாங்க. எல்லா மரங்களிலும் நாங்க குஞ்சு பொரிக்க முடியாது. பெரியதாகவும், வயதானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மரங்களில் உருவாகும் பெரிய பொந்துகள் எங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதில் எங்களால் பாதுகாப்பாகக் கூடு அமைக்க முடியும். எங்க இணையர் அம்மா.. உடனேலாம் ஓகே சொல்ல மாட்டாங்க.. நன்றாக பாத்து, யோசித்து தான் எங்கள் வீட்டைத் தேர்வு பண்ணுவாங்க.. இந்த முறை மரம் தேடியே நான் ஓஞ்சு போய்விட்டேன்” சலித்துக்கொண்டது இருவாச்சி.
அதற்கு காட்டு ஜாதிக்காய் மரம், “வயதான மரங்கள் இல்லனா நீங்க அழிந்துவிடுவீர்கள்.. நீங்க இல்லனா இந்தக் காடே இல்லையே. நீங்கள் சாப்பிட்டுவிட்டு போடுகிற எச்சத்தில் தானே எத்தனையோ மரங்கள் உருவாகியிருக்கின்றன. அதுக்கு என்னமோ பெயர் வைத்து இருக்கிறார்களே. உங்களுக்கு.. என்ன அது..?” என்று தன் உச்சிக் கிளையை காற்றில் சொறிந்துகொண்டே கேட்டது.
“காட்டின் உழவன்.” என்றது கும்பாரா தவளை கரகரத்த குரலில்.
“பெயர் மட்டும் நல்லா வைக்கிறார்கள் இந்த மனிதர்கள்.. ஆனா செய்வது எல்லாம் நமக்கு எதிரான வேலைகள்..” என இருவாச்சி சொன்னது.
“அட.. நமக்கு மட்டுமா.. இயற்கை அழிப்பு என்பது மனிதர்களுக்கும் எதிரானது தானே.” என்றது காட்டு ஜாதிக்காய் மரம்.
“தனக்கு எதிரான வேலையை எப்படி தானே செய்கிறார்களோ.. இந்த மனிதர்கள். அபத்தமாக இல்லை?” என்று கேட்டது இருவாச்சி.
மூவரும் சிரித்தார்கள். எதையோ கவனித்த கும்பாரா தவளை, பதற்றத்துடன் கேட்டது, “என்ன அண்ணே. என்ன ஆச்சு? கழுத்தில் காயம் இருக்கிறதே.”
“நேற்று ஒருவன் என் இணையை வேட்டையாட வந்தான். நான் சரியான நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தேன். அவன் என்னைக் கவனிக்கும் முன், நான் அவனை அலகால் தாக்கினேன். அவன் வைத்திருந்த ஆயுதத்தால் என்னைத் தாக்கினான். எங்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம். நான் என் முழு பலத்தையும் கொண்டு போராடினேன். ஓடிப்போய்விட்டான். ஏதோ நேற்றைய பொழுது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உயிர் பிழைத்தோம்.” என்று சொன்னது இருவாச்சி.
“அய்யோ. கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே. அவர்கள் ஏன் உங்களை வேட்டையாட வந்தார்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்ட பறவைகள் என்று அறிவிக்கப்பட்டவர்களாச்சே!” என்றது கும்பாரா தவளை.
“கேவலம், எங்கள் அலகுக்காகவும் தலைக்கவசத்திற்காகவும் தான் எங்களை வேட்டையாட துடிக்கிறார்கள். இவை எங்கள் இனத்தின் இயற்கையான உடல் அமைப்புகள். உணவு தேடவும், எதிரிகளோட சண்டை போடவும், இன்னும் பல வேலைகளுக்கும் அவை உதவுகின்றன. எங்களைக் கொன்று எங்கள் அலகையும் தலைக் கவசத்தையும் பியித்து எடுக்கிறார்கள். அதில் என்னத்த அழகைக் கண்டார்களோ! ஒன்னும் புரியவில்லை.” என்று கவலையோடு சொன்னது இருவாச்சி.
“ஒரு உயிரை அதன் வாழ்விடத்தில் வாழும்போது ரசிப்பது தானே அழகு. இப்படி செய்வது எப்படிப் பட்ட கொடூரச் செயல். ச்ச..” என்று சொன்னது காட்டு ஜாதிக்காய் மரம்.
இப்போது இன்னும் கொஞ்சம் பதற்றத்துடன் வேகவேகமாக பழங்களை சேகரித்தது இருவாச்சி.
“சரி.. நேரம் ஆச்சு .. அவள், அந்த மரப்பொந்துக்குள்ள எனக்காக காத்திருப்பாள்.. கிட்டத்தட்ட இந்த மூன்று மாசம் அடைபட்டுக் கிடக்கிறாள். அவள் உலகத்தை ஒரு சின்ன ஓட்டை வழியே பாத்து வாழ்கிறாள்.. என்னை நம்பி தான் இருக்கா.. நான் கிளம்புறேன்.” என்று சொல்லிப் பறந்தது இருவாச்சி.
“பத்திரமா போய் வாங்க அண்ணே!” என்றது கும்பாரா தவளை. மஞ்சள் நிறக் கழுத்து சூரிய ஒளியில் தங்கம் போல மின்னியது. கருப்பு வெள்ளை சிறகுகளை அசைத்தது. ஆண் இருவாச்சி தன் கூட்டை நோக்கிப் பறந்து போகிறது. அதை காட்டு ஜாதிக்காய் மரம் பார்த்துக் கொண்டே இருந்தது.
அதோ பாருங்கள்! பளபளக்கும் மஞ்சள் அலகில் வைத்திருந்த பழங்களை ஒவ்வொன்றாய் எடுக்கிறது ஆண் இருவாச்சி. அவற்றை பொந்துக்குள் காத்திருந்த பெண் இருவாச்சிக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது.

சுகன்யா ராமநாதன்
எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.






Comments