top of page

வறண்ட நிலமும் வற்றிய கிணறும்


முன்னொரு காலத்தில் முத்தூரில் பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார்.

அவர் அந்த ஊர் தங்கராசு பண்ணையார் தோட்டத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தார்.


அப்பாவிக்குணம் கொண்டவர். ஆனால் கடுமையான உழைப்பாளி.

வாங்கும் சம்பளத்தில் சிறிது சிறிதாகப் பணம் சேமித்து வந்தார்.


பல வருடங்களாக சேமித்து, அவருக்கு மிகப்பெரும் தொகை சேர்ந்தது.

உடனே தன் பண்ணையாரிடம், “ஐயா, நான் சிறுக சிறுக சேமித்து ஒரு பெரும்

தொகை என்னிடம் இருக்கிறது. அந்தத் தொகையை வைத்து நான் நிலம் வாங்க

விரும்புகிறேன். தங்களிடம் உள்ள ஏதேனும் நிலத்தை, நான் வைத்திருக்கும்

தொகைக்கு ஈடாக எனக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்” என்று பணிவுடன்

கேட்டார். பண்ணையாரும் “எவ்வளவு தொகை வைத்திருக்கிறாய்” என்று கேட்டார்.

அவர் அந்தப் பெரும் தொகை விவரங்களைச் சொன்னவுடன், பண்ணையாருக்கு

திடுக்கிட்டது.


‘நம்மிடத்தில் விவசாயத் தொழில் செய்யும் ஒரு விவசாயிக்கு இவ்வளவு பணம் எப்படி சேர்ந்தது?’ என்று அவரிடத்தில் நேரடியாகவே, “உனக்கு நான் தரும் கூலியை வைத்து எப்படி சேமித்தாய்” என்று கேட்டார்.


அவரோ, “ஐயா, என் மனைவி காட்டு வேலைக்குச் செல்வார். அவள் சம்பாதித்துக்

கொண்டு வரும் பணத்தை செலவு செய்யாமல் சேமித்தேன். பள்ளிக்கூடம் சென்று

விட்டு மாலை வீட்டிற்கு வரும் என் மகனும் சிறு சிறு வேலைகள் செய்வான். அவன்

சம்பாதித்த பணத்தையும் சேமித்து வைத்தேன். இப்படியாக சேமித்து, 20

வருடங்களாக சேர்த்த தொகை தான் இவ்வளவு”.


“உன் மகன் என்ன செய்கிறான்” என்றார் பண்ணையார்.


“என் மகன் படிப்பை முடித்து, இப்போது வெளியூரில் படித்த படிப்பிற்கு ஏற்ப நல்ல

வேலையில் இருக்கிறான்.”


“பிறகு ஏன் நிலம் வாங்கி விவசாயம் செய்ய நினைக்கிறாய்?, உடலில் வலு இருப்பது வரை என் நிலத்தில் வேலை பார். இல்லையென்றால் வீட்டில் ஓய்வெடு” என்று நிலம் தர விருப்பமில்லாமலே பதில் சொன்னார் பண்ணையார்.


“இதே போன்று, என் மனைவியும் வீட்டில் ஓய்வெடுக்கும்படி சொன்னாள். எனக்கு

ஓய்வெடுக்க விருப்பமில்லை எனவே நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்”


சற்று யோசித்து, “சரி நாளை வா. உனக்கு நான் நிலம் தருகிறேன்” என்றார்

பண்ணையார்.


“ரொம்ப நன்றி” என வணங்கிவிட்டு புறப்பட்டார் பொன்னன்.


பண்ணையாரின் மனதிற்குள் வஞ்சம் தோன்றியது. ‘நம்மிடத்தில் கூலி வேலை

செய்தவன் இப்போது நிலம் வாங்குகிறானே’ என்று ஒரு பெரும் பொறாமை அவரிடம் இருந்தது.


மறுநாள், ஊருக்கு வெளியே ஒரு வறண்ட நிலத்தையும், வற்றிய கிணற்றையும் காட்டி, “நீ தரும் தொகைக்கு இந்த நிலம் சரியாக இருக்கும்” என்று அவனிடம் காட்டினார்.


பண்ணையாரை எதிர்த்துப் பேசவோ, கேள்வி கேட்கவோ நடுங்கும் பொன்னனோ,

வறண்ட நிலத்தையும், வற்றிய கிணற்றையும் வாங்க முடிவு செய்தார்.


“பண்ணையார் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்” என்று அவரை

வணங்கி விட்டு தன் பணத்தை கொடுத்து அந்த நிலத்திற்கு தன் பெயர் போட்டு கிரயம் செய்து வாங்கிக் கொண்டார். தன் மனைவியிடம் இதைக் கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் கற்களும், சிறிய பாறைகளும் இருக்கும்.


அந்த வறண்ட நிலத்தில் மாடுகளைக் கொண்டு அரும்பாடு பட்டு உழவு செய்ய

ஆரம்பித்தார். கடும் வெயிலிலும் பாடுபட்டு உழவு செய்த பலன், இயற்கை நல்ல

வழிவிட்டது. அந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. அந்த வற்றிய

கிணறிலும் தண்ணீர் ஊற ஆரம்பித்தது. நிலமும் உழவுக்கு தயாரானது.


பணிக்கு ஆட்களை கொண்டு பயிர் நட ஆரம்பித்தார். பின் பாசனத்திற்கு கிணற்று நீரை பயன்படுத்தினார்.


அவர் உழவு செய்வதை கேள்விப்பட்ட பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எப்படியாவது அவரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த நினைத்தார். ஏதாவது சூழ்ச்சி செய்து மீண்டும் தன்னுடைய அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்தார். எந்த வகையில் சிக்க வைப்பது என யோசித்து, ஒரு வழி கண்டுபிடித்தார். மறுநாள் தன் பண்ணை அடியாட்களை அழைத்துக் கொண்டு பொன்னனின் நிலத்திற்கு வந்தார்.


கிணற்றிலிருந்து நீர் இறைப்பதைப் பார்த்து, தடுத்து நிறுத்தி, பொன்னனிடம், “நீ

என்னிடம் நிலமும், வறண்ட கிணறும் வாங்கினாய். ஆனால் கிணற்றில் இப்போது

தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீர் எனக்குத்தான் சொந்தம். அந்த தண்ணீரை சேர்த்து நீ விலைக்கு வாங்கவில்லை. அதனால் அந்த தண்ணீரை நீ பயன்படுத்தினால் எனக்கு பணம் தர வேண்டும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார். இதைக் கேட்ட பொன்னனுக்கு பயம் ஏற்பட்டது. “இத்தனை நாட்களாக நமக்கு நல்லது செய்வார் என்று நினைத்த பண்ணையார், இப்போது இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாரே!, பணம் கேட்கிறாரே! இன்னும் பயிரிடவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படி செய்தால் என்ன செய்வது ?” என வருத்தப்பட்டார். இதை தன் மனைவியிடமும் கூறினார்.


அவருக்கும் ஒன்றும் வழி சொல்லவும் தெரியவில்லை. உடனே தன் மகனுக்கு கடிதம் எழுதி தன் மகனை வரவழைத்தார் பொன்னன். இரண்டு நாட்களில் ஊருக்கு வந்த தன் மகன் வேலனிடம், வறண்ட கிணற்றை தான் மீண்டும் தோண்டி ஆழப்படுத்திய பின் மழை பெய்ததால் கிணற்று தண்ணீர் ஊத்து ஏற்பட்டதையும் பண்ணையார் இப்போது குழப்பம் செய்வதையும் கூறி, அழுதார் பொன்னன். உடனே, அவன் கிரயப் பத்திரத்தை வாங்கிப் படித்தான். பின் “சரி இதற்கு நான் முடிவு கட்டுகிறேன்” என்று அவன் சிந்தித்தான்.


அவன் பண்ணையாரிடம் தன் அப்பாவை அழைத்துச் சென்றான். படித்து, நல்ல

வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் உயர்வாக வேலன் இருப்பதை பார்த்த

பண்ணையாருக்கு கோபமும் பொறாமையும் இருந்தது. அதை வெளியில் காட்டிக்

கொள்ளாமல், “வா வேலா, அப்பா உன்னிடம் எல்லாம் சொன்னாரா?, நான் விற்கும் போது அது வறண்ட கிணறு. ஆனால் இப்போது தண்ணீர் வந்துவிட்டது. அப்போது அந்த தண்ணீர் எனக்குத் தானே சொந்தம். அதைத்தான் உன் அப்பாவிடம் சொன்னேன். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு எனக்கு பணம் தர வேண்டும்” என்றார் பண்ணையார்.


உடனே வேலன், ”உண்மைதான் ஐயா, தண்ணீர் உங்களுக்கு சொந்தம் தான். அது

இப்பொழுது எங்கள் கிணறில் உள்ளது. அந்த தண்ணீரை நீங்கள் எடுத்துச்

செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் தண்ணீர் இருப்பதற்கு நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் கிணற்றில் உள்ள மொத்த தண்ணீரை எடுத்து செல்லுங்கள்” என்றான்.



இப்படிப்பட்ட பதிலை கேட்ட பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘ படிப்பறிவில்லாதவன், பயந்து நடுங்கக் கூடிய பொன்னனை ஏமாற்றி, நிலத்தை

பிடுங்கிக் கொள்ளலாம்’ என நினைத்த பண்ணையாருக்கு முகம் வாடியது.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதேதோ பேசினார். தர்க்கம் செய்தார்.

ஆனால் கடைசியாக வேறு வழியில்லாமல், “நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.


“மீண்டும் இது போல் ஏதாவது மோசடி செய்தீர்கள் என்றால் அதற்கும் தக்க பதிலடி தர தயாராகத்தான் இருக்கிறோம். மீண்டும் ஏதேனும் செய்தால் நீதிமன்றம் வரை செல்லவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றபடி வேலன் பண்ணையாரை எச்சரித்து விட்டு நகர்ந்தான்.


இதனைச் சுற்றி நின்று வேலை செய்தவர்களும் சில மக்களும் பார்க்க,

பண்ணையாருக்கு அவமானமாக இருந்தது. ‘இப்படித்தானே நம்மிடமும் நிலங்களை பிடுங்கி இருப்பார். நாம் வேலனிடம் நம் குறைகளைக் கூறி அவன் மூலம் இழந்த நிலங்களை திரும்ப பெறலாம்’ என சில மக்கள் சிந்தித்து அவன் பின்னால் சென்றார்கள்.


தன் மகனின் அறிவுக் கூர்மையை எண்ணி பொன்னன் பெருமிதம் கொண்டார். சில நாட்களில் வேலனும் மக்களிடம் பண்ணையார் பிடுங்கிய நிலங்களையும்

சட்டவிரோதமாக அபகரித்த நிலங்களையும் நீதிமன்றம் வாயிலாகப் போராடிப்

பெற்றுக் கொடுக்கத் தொடங்கினான். ஊர் மக்களும் வேலனுக்கு பக்கபலமாக

இருந்தனர்.


உழவு தொடங்கியது. நன்கு பயிரிட்டு அறுவடை செய்தான் பொன்னன். லாபம்

இரட்டிப்பாக கிடைத்தது. வேலை செய்பவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வாழ வைத்தார் பொன்னன்.



கார்த்திக் கிருபாகரன்
கார்த்திக் கிருபாகரன்

அபுதாபியில் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். கணையாழி, குமுதம், தீராநதி போன்ற அச்சிதழ்களிலும், சொல்வனம், பதாகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 2019-இல் 'தீதும் நன்றும்' என்ற இவரது நாவலும், 2024-இல் 'ஒரு கோடி' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் புத்தகமாக வெளிவந்துள்ளன.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page