top of page

மாடியில் கானுலா!


காலையிலேயே கதைப்புத்தகத்தோடு மொட்டை மாடிக்குச் சென்றான் கதிர். பகலிலும் வீட்டு மாடி குளிர்ச்சியாக இருந்தது. கதிரின் தங்கை கோதையின் விருப்பப்படி, பெற்றோர் மாடித்தோட்டம் அமைத்திருந்தார்கள். 


தினமும் செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி பராமறிக்கிறாள் கோதை. உதிர்ந்த இலைகளைச் சேகரிப்பதும், களைகளை அகற்றுவதும் கதிரின் வேலை. 


மேற்குத்தொடர் மலையும், செண்பகக் காடுகளும் மாடியில் இருந்து பார்த்தால் வெகு அருகில் இருப்பதாகத் தெரியும். 


இரவில் எல்லோரும் மாடியில் உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிடுவார்கள். மஞ்சள் விளக்கொளியில் மின்னும் ஊரில் பல பகுதிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். 


சூரியன் உச்சி வானத்துக்கு ஏறியிருந்தது. மொட்டைமாடியில் இருந்த கதிர், தெருவை எட்டிப்பார்த்தான். பிறகு புத்தகத்தைத் திறந்து ஆர்வத்துடன் கதை வாசித்தான். 


“காட்டில் ஒரு யானை….”


திடீரென்று கண்ணெதிரே ஓர் அதிசயத்தைக் கண்டான். 


எதிர்வீட்டுச் சுவரில் யானையின் நிழற்படம் தெரிந்தது. அதில் ஒரு காட்டு யானை! மேற்குமலை காடுகளில் வாழும் யானை, ஊருக்குள் வந்திருந்ததா என்ன? வெயில் நேரத்தில் யானையின் நிழல் அங்கெப்படி வந்தது? கண்ணுக்கெதிரில் மாயாஜாலம் நிகழ்கிறது என்று புரிந்தது. 


கதிர், “யானை, தனது கன்றுடன் குளத்தில் இறங்கியது” என்று அடுத்த வரியை வாசித்தான். 


சட்டென, கண்கள் எதிர்வீட்டுச் சுவரைச் சுற்றி சுழன்றது. அதில் ஒரு குட்டி யானையின் நிழற்படம்.  நிழற் யானைகளை கண் வாங்காமல் பார்த்தான் கதிர். 


அப்போது, பூப்பறிக்க மாடிக்கு வந்த கோதை, எதிர்வீட்டுச் சுவற்றில் தெரிந்த நிழற்படத்தை பார்த்து வியந்தாள். உற்சாகம் தொற்றிக்கொண்டது.  


“அண்ணா! புத்தகத்தை மூடி வை. நிழற்படங்களைப் பார்த்து நாமே கதை சொல்லலாம்” என்றாள். கதிர் சம்மதித்தான். 


“செண்பகக் காட்டில், ஒரு யானை தனது குட்டியுடன் குளத்துக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றது. காட்டு மரங்களைச் சுற்றி விளையாடியபடியே குட்டியானை சென்றது. தும்பிக்கையில் நீரையள்ளி அம்மா முகத்தில் பீய்ச்சி அடித்தது. அம்மா யானை, முழுவதுமாக நனைந்து போனது” என்று அவள் சொன்ன கதைக்கு ஏற்றபடி, எதிர்வீட்டுச் சுவரில் பிரதிபலித்த நிழற்படத்தின் காட்சிகள் மாறின. 


இருவரும் திகைப்பில் ஆழ்ந்தனர். கதையை நிறுத்தாமல் சொன்னால் நிழற்படம் தொடர்ந்து மாறுமா என்ற சந்தேகம். கோதை தொடர்ந்தாள்.  


கீழே இருந்த அப்பாச்சி, “கோதை! தொட்டிச் செடியில் இரண்டு தக்காளிகளைப் பறிச்சிட்டு வா. சமைக்கணும்” என்று கத்தியதை இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 


திடீரென்று, கதையில் புலி வந்தது. யானைகள் ஒரு கரையிலும், புலி எதிர்க் கரையிலும் நின்றிருந்தன என கோதை சொல்ல, கதை விறுவிறுப்பாகத் தொடர்ந்தது.


“யானை, புலி, செந்நாய், கரடி, வரையாடு, மான், குரங்கு என எல்லா விலங்குகளும் குளக்கரைக்கு வந்து சேர்ந்தன” என்றாள் கோதை.  


அடுத்த என்ன நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான் கதிர். 


கதைக்கு ஏற்றபடி, நிழற்படக் காட்சிகள் மாறின. அண்ணன் தங்கை இருவரும் வீட்டிலிருந்தபடியே கானுலா சென்றதாக உணர்ந்தார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள்.


“குளம் வற்றியிருக்குமோ?” இது கதிர். 



கதை சூடு பிடிக்கத் தொடங்கியது. “குளக்கரையில் என்ன நடக்குதுன்னு தெரியுமா? தண்ணீரில் வாழும் விலங்குகள் ஏதோ புகார் கொடுக்கக் கூடியிருந்தன” என்றாள். 


“அதென்ன புகார்?”


“கோடை காலத்தில், குளம் வறண்டு விடுவதாகவும் தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் இறப்பதாகவும் புகார்”


“குளத்தை நம்பியே இருக்கிற வாத்துகளும் தவளைகளும் அளிக்கிற புகாரில் நியாயம் இருக்கிறதுதானே. அவற்றுக்கான தீர்வு கிடைக்கத்தானே வேண்டும்” என்றான் கதிர். 


“தலைமை யானை அதற்கு ஒரு வழி சொன்னது”


“ஓ, அப்படியா?” 


“போர்க்கால அடிப்படையில் குளக்கரையைப் பலப்படுத்தணும். கரையில் மணல் கொட்டி உயரத்தை எழுப்பணும். மழைக்காலம் வருவதற்குள் காட்டாறுப் பாதையை அகலப்படுத்தணும் என்ற யானையின் அக்கறை, மற்ற விலங்குகளுக்குப் புரிந்தன. உடனடியாக பணிகளைத் தொடங்க சம்மதித்தன”  என்றாள் கோதை. 


“க்ராக்! க்ராக்!! குவாக்! குவாக்!!” 


“இதென்ன சத்தம்?”


“அண்ணா! தவளைகளும், வாத்துக்களும் தலைமை யானைக்கு நன்றி தெரிவிக்கின்றன” என்று கதையை முடித்தாள் கோதை. 


அப்போது வானத்தில் லேசாக இருட்டிக்கொண்டு வந்தது. பகல் வெளிச்சம் மங்கத் தொடங்கியவுடன் எதிர் வீட்டுச் சுவற்றில் தெரிந்த நிழற்படம் மறைந்து போனது. 


நிழற்படம் முடிந்த பிறகு கதிர் யோசித்தான். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?


சட்டென்று ஒரு யோசனை. “அப்பாச்சி சிறு வயதில் கிராமத்தில் நடக்கும் பாவைக்கூத்து நாடகங்கள் பற்றி நிறையச் சொல்லி இருக்கிறார். ஆமாம்! இதுவும் புதுமையான பாவைக்கூத்து மாதிரியே இருந்தது” என்றான். 


“ஆமாண்ணா!” என்ற கோதை பின்னால் திரும்பிப் பார்த்தாள்.


காய்கறிப் பந்தல் கொடிகளின் இலைகளை அசைத்துக்கொண்டிருந்த அம்மா பிடிபட்டார். அவரால் உடனடியாக வேறெங்கும் ஓடி ஒளிய முடியவில்லை. 


குபீரென்று சிரித்த கதிருக்கும், கோதைக்கும் உண்மை புரிய வந்தது. நிழற்படக் கானுலா புதுமையான விளையாட்டு. மனம் நிறைந்தது. 


இதுபற்றி நண்பர்களிடன் சொல்ல, இருவரும் மாடியிலிருந்து இறங்கிச்  சென்றார்கள்.



கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page