முள்ளம்பன்றியும் கள்வர்களும்
- ஜெ.பொன்னுராஜ்

- 10 hours ago
- 2 min read

அது ஒரு அடர்ந்த காடு. பெருங்கொண்ட மரங்களும் செடிகொடிகளும் செழிப்பாக வளர்ந்து பசுமையாக இருந்தது. அந்தக்காட்டின் மலைக்குகையில் ஒரு முள்ளம்பன்றி தன் குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. பகல் முழுவதும் தன் குகை வீட்டில் குட்டிகளோடு பொழுதைக் கழித்து மகிழ்ச்சியாக இருந்தது. பொழுது இருட்டும் வேளையில் குட்டிகளோடு வெளியேறி கிழங்குகள், காய், பழங்களை தின்று வயிறு நிறைக்கும். அதுவும் கோரைக்கிழங்கு, கோவைக்கிழங்கு என்றால் அதற்கு ரொம்ப பிரியம். சில சமயம் பத்து அடி ஆழத்திற்கு மண்ணை கிளறித் தோண்டி கிழங்கை எடுத்துவிடும்.
அப்படி ஒரு நாள் குட்டிகளுடன் கிழங்கு தோண்டி சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த புதரில் ஒரு சிறுத்தைப்புலி பதுங்கியிருந்ததை பார்த்தது. அது குட்டிகள் மீது பாய்ந்து கவ்விக்கொண்டுபோக எத்தனித்தது. முள்ளம்பன்றி தன் வால்பகுதியின் குட்டையான முட்களுக்கு இடையிலிருந்த கிலுகிலுப்பை முட்களை ‘ஸ்.சிர்.ர்…ஸ்.சிர்.ர்’ரென அசைத்து ஒலியெழுப்பியது. சிறுத்தை பயமின்றி அசையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. குட்டிகள் தாய்ப்பன்றிக்கு பின்னால் பதுங்கின. சிறுத்தையும் பன்றியை சுற்றிசுற்றி வந்தது. சந்தர்ப்பம் பார்த்து குட்டிகள் மீது சிறுத்தை பாய்ந்தது. பன்றி ஆக்ரோசமாக தன் கழுத்து, தோள் மீதிருந்த நீண்ட முட்களை மயில்தோகை போல விரித்து குட்டிப்பன்றிகளுக்கு கவசமாய் நின்றது.
சிறுத்தையும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. பன்றி சட்டெனத் திரும்பி வலுவான முட்களால் சிறுத்தையின் முதுகில் குத்திக்கிழித்தது. சில தடித்த முட்கள் ஒடிந்து சிறுத்தையின் உடலில் இருந்துகொண்டன. அது இரத்தம் வடிய வலியில் அலறிக்கொண்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது.
பன்றி விரித்த முட்களை ஒடுக்கி, தன் குட்டிகளை பார்த்தது. அங்கிருந்து இடம்பெயர்ந்து மலைச்சரிவின் வழியாக நடந்துகொண்டிருந்தது. சண்டையிட்டு சிறுத்தையை விரட்டிய அது தண்ணீர் தாகத்தில் தவித்தது. சற்று தொலைவில் ஒரு குடிசையும் அதில் விளக்கு வெளிச்சமும் தெரிந்தது. சரி.. அங்கே போய் பார்ப்போம் என்று அந்தக்குடிசையை பார்த்து போனது.
குடிசையின் வாயிலில் மூங்கில் கதவு திறந்தே இருந்தது. பன்றி மெதுவாக உள்ளே எட்டிப்பார்த்தது. கிலுகிலுப்பை முட்களை சிலுசிலுவென ஆட்டி ஒரு சத்தம் கொடுத்தது.
அந்தக்குடிசையில் வயதான ஆச்சியும் சிறுமியான அகிலாவும் வசித்து வந்தனர். இந்நேரம்.. என்ன சப்தம் என்று எழுந்த பாட்டி வாசலில் முள்ளம்பன்றிகள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்.
“பாட்டி.. தாகமாக இருக்கிறது. குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுப்பீர்களா” என்று ஏக்கத்துடன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.
அகிலாதான் முந்திக்கொண்டு, “வாருங்கள்” என்று கைச்சாடை காட்டி குடிசைக்குப் பின்புறமாக கூட்டிச்சென்றாள். அங்கு உவர்மண்ணும் வரகுச்சக்கையும் கலந்து செய்த வாயகன்ற நீளமான தண்ணீர்தொட்டி இருந்தது. அருவிநீர் கொண்டு நிரப்பிய தொட்டியில் காற்று நீரலைகளை தவழவிட்டுக்கொண்டிருந்தது.
உடைந்த முட்களுடனும் சிறுத்தை ஏற்படுத்திய காயங்களுடனும் களைத்துப்போயிருந்த பன்றி தண்ணீரை உறிஞ்சிக்குடித்து ஆசுவாசமானது.
“யாருமேயில்லாத இந்தக்காட்டிற்குள் நீங்கள் தனியாக வசிக்கிறீர்களே. நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்” பன்றி விசாரித்தது.
“அதை கேட்கிறாயா.. இந்தக்காட்டில் ஆச்சா மரங்கள் நிறைய உள்ளது. இந்த மரத்தின் பாலில் இருந்து வரும் பிசினை எடுத்து சேகரிப்போம். இந்தப் பிசின்தான் சாம்பிராணிப் புகை போடுகிறோமில்லையா.. அந்தக்குங்கிலியம். இதை அருகிலுள்ள நகரத்தில் போய் விற்றுப் பிழைக்கிறோம்”
“அதோ அங்கே தெரிகிறதே.. மலைச்சரிவிலுள்ள பாறைகள். அங்குதான் நாங்கள் வசிக்கும் குகைவீடு இருக்கிறது. அங்கு நீங்கள் வரலாம். கிழங்கு வகைகளை உண்பதற்கு கொடுப்பேன்” என பன்றி பிரியத்துடன் கூப்பிட்டது.
“நீங்கள் என் நண்பர்களாகிவிட்டீர்கள்.. அதனால் உங்களைப் பார்க்க வருவோம்”
“உங்களுடனான உரையாடல் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது களைப்பாக இருப்பதால் இந்த குடிசை வீட்டில் இன்று இரவு தங்கி காலையில் செல்லலாமா…”
“ஓ… தாராளமாக. உள்ளே வாருங்கள்” என்று காய்ந்த சீகம்புல்லும் வரகு வைக்கோலும் சேர்த்து பின்னிய படுக்கையை காண்பித்து ஓய்வெடுக்கச் சொன்னாள் அகிலா.
அயர்ந்து போய் உறங்கிக்கொண்டிருந்த இரவுப்பொழுதின் நடுஜாமத்தில் குடிசைக்கு வெளியே ஏதோ அருவம் கேட்டு அகிலாவும் ஆச்சியும் எழுந்து உட்கார்ந்தார்கள். பன்றியும் விழித்துக்கொண்டு நடப்பதை என்னவென்று கவனித்தது. காட்டில் இதுவரை இல்லாத புதிய சப்தமாக அது இருந்தது. பூட்டு இல்லாத தட்டிக்கதவை திறந்துகொண்டு வீட்டிற்குள் கள்வர்கள் நுழைந்தார்கள்.
ஆச்சி அகல் விளக்கின் திரியை தூண்டவும் வெளிச்சம் வாசலுக்கு வெளியே படர்ந்தது. கள்வர்களின் கைகளில் கம்புகளும் கத்தியும் இருந்தது. ஊருக்குள் குற்றங்கள் செய்து காவலர்களிடம் அகப்படாமல் இருப்பதற்கு காட்டுக்குள் ஒளிந்துகொள்ள வந்தவர்கள். அவர்கள் கரேலென்ற திருக்கு மீசைகளுடன் கடுகடுத்த முகங்களுடன் அமைதியற்று இருந்தார்கள்.
இந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்ற லேசான பயத்துடன் அவர்களைப் பார்த்து பயந்தபோது, முள்ளம்பன்றி ஒரே பாய்ச்சலாக வாயிலுக்கு வந்தது. தன் கிலுகிலுப்பை முட்களை அசைத்து அதிர்வொலி எழுப்பியது. கள்வர்கள் ஒரு அடி பின்வாங்கி வாயிலுக்கு வெளியே கால்வைத்தனர். பன்றி முதுகு காட்டி நீண்ட திடமான முட்களை விரித்து சிலிர்த்தது. அவ்வளவுதான் கள்வர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தார்கள். இருட்டுக்குள் எங்கே போகிறோம் என்று தெரியாமல் விழுந்தடித்துக்கொண்டு திசைக்கொருவராய் சிதறி ஓடி மறைந்தார்கள்.
“பன்றி நண்பா… இன்று இராத்திரிப் பொழுது எங்களோடு நீ இருந்ததும் நல்லதாகப் போச்சி.” படபடவென மூச்சு வாங்கிக்கொண்டிருந்த ஆச்சி ஒரு நிதானத்திற்கு வந்தார்.
சூரியஉதயத்திற்கு முன்பே அதிகாலைப்பொழுதின் மெல்லிய இருட்டில் பன்றிக்கூட்டம் தம் குகைவீட்டைப் பார்க்க நடந்தன.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2





Comments