top of page

திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்குமா?


"கடலிலேயே மிகப்பெரிய விலங்குகள் என்றால் அவை திமிங்கிலங்கள்தாம்" என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


திமிங்கிலங்கள் நம்மைவிடப் பெரியவை என்றால் அவை நம்மை சாப்பிடுமா? தாக்குமா? விழுங்குமா?


இவை எல்லாமே தனித்தனிக் கேள்விகள். ஒவ்வொன்றாக பதில் சொல்வோம்.

திமிங்கிலங்கள் மனிதர்களை உண்பதில்லை.


ஆகவே அவை நம்மை சாப்பிடாது.


சில சமயங்களில் திமிங்கிலங்கள் மனிதர்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அந்தத் தாக்குதல்கள் உணவுக்காக நடப்பவை அல்ல.


திமிங்கிலங்களுக்கு நாம் இடையூறாக இருந்தாலோ ஏதோ ஒருவகையில்  நாம் அவற்றை எரிச்சல்படுத்தினாலோ கோபத்தை வெளிப்படுத்த சில நேரம்

தாக்கும்.


நாம் சும்மா நீந்திக்கொண்டிருந்தால் தாமாக வந்து திமிங்கிலங்கள் நம்மை  சீண்டாது.

சரி. இப்போது மூன்றாவது கேள்விக்கு வருவோம்.


திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்குமா?


முதலில் திமிங்கிலங்களின் வாய் எப்படி இருக்கும் என்று கவனிப்போம்.


திமிங்கிலங்களில் இரண்டு வகைமைகள் உண்டு. Toothed whales எனப்படும் வகைமையில் உள்ள திமிங்கிலங்களின் வாயில் பற்கள் இருக்கும். இரண்டாவது Baleen whales எனப்படும் பலீன் தகடு திமிங்கிலங்கள். இவற்றின் வாயில் நீண்ட முடி போன்ற அமைப்புகள் இருக்கும். பல் துலக்கும் பிரஷ் இருக்குமே,அதுபோல நீண்ட முடிகள் அருகருகில் அமைக்கப்பட்டிருக்கும்.


இரண்டுவகை திமிங்கிலங்களின் வாய்ப்பகுதியும் வேறுமாதிரியானவை. 

பல்லுள்ள திமிங்கிலங்கள் இரையைக் கடித்து,சிறு துண்டுகளாக்கி விழுங்கும் பண்பு கொண்டவை.



பெரும்பாலான பல்லுள்ள திமிங்கிலங்களின் வாய்ப்பகுதி மனிதர்களைவிட  சிறியதாக இருக்கும்.


ஸ்பெர்ம் திமிங்கிலம் என்ற இனத்தின் வாய் பெரிது என்றாலும் அது  மனிதர்களை விழுங்குவதில்லை.


பலீன் தகடு திமிங்கிலங்கள் வாயைப் பெரிதாகத் திறந்து கடல்நீரை அப்படியே  விழுங்கும் பண்பு கொண்டவை.


பிறகு இந்த நீரில் இருக்கும் இரையைத் தகடுகள் வடிகட்டும். இந்தப் பண்பு இருப்பதால் பலீன் திமிங்கிலங்களின் வாய் மிகவும் பெரிதாகத்  திறக்கக்கூடியது.


ஆகவே பலீன் திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்க வாய்ப்பு இருக்கிறது.

இருங்கள்! பயப்படாதீர்கள்.


பலீன் திமிங்கிலங்களின் வாய் மட்டும்தான் பெரியது.தொண்டை மிகவும்  குறுகியது.ஆகவே வாய்க்குள் போன மனிதன் தொண்டைக்குள் போகாமல்  அப்படியே வெளியில் வந்துவிடுவான்.


பல பலீன் திமிங்கிலங்களின் தொண்டைக்குழல் வெறும் 8 சென்டிமீட்டர் விட்டம்தான் இருக்கும். அதிகபட்சமாக ஒரு டென்னிஸ் பந்து உள்ளே செல்லும் அளவுக்குத்தான் இவற்றின் தொண்டைக்குழி இருக்கும்! உணவு உண்ணும்போதுகூட ஒரு அளவுக்கு மேல் விரியாது. ஆகவே எந்த ஒரு திமிங்கிலத்தாலும் மனிதர்களை விழுங்க முடியாது.


 திமிங்கிலங்கள் மனிதர்களை சாப்பிடுவதில்லை என்பதால் ஒருவேளை  தவறுதலாக மனிதர்கள் வாய்க்குள் மாட்டிக்கொண்டால்கூட அவை நம்மைத்  துப்பிவிடும்.


திமிங்கிலங்களைப் பார்த்து நாம் பயப்படவேண்டியதில்லை. அவை அழகான கடல் உயிரிகள்.


அவை கடல் சூழலுக்குப் பல நன்மைகள் செய்கின்றன. 


உங்களுக்குத் திமிங்கிலங்கள் பிடிக்குமா?



உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும்,பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும்  பெற்றவர்.இளம் விஞ்ஞானி விருது,சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான  அருணா ராஜகோபால் விருது,எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க  விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து  நூல்களை எழுதியுள்ளார்.

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page