top of page

பார்பி பன்றி


ஒரு அறிவியலாளர் ஒரு உயிரியைப் பார்க்கிறார். அது ஏற்கனவே தெரிந்த உயிரியாக இருந்தால் பரவாயில்லை.


"இது புதிய உயிரியாகத் தெரிகிறதே" என்று அவருக்கு சந்தேகம் வந்தால், அந்த உயிரியை ஆய்வுக்கூடத்துக்குக் கொண்டு சென்று, ஆராய்ச்சி நடத்துவார். 

அறிவியலாளர்கள், ஏற்கனவே இருக்கும் உயிரிகளோடு ஒப்பிட்டு, அது புதிய உயிரியா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். அப்போதும் சந்தேகமாக இருந்தால், மரபணு சோதனைகள் நடத்துவார்கள்.


அதே குடும்பத்தைச் சேர்ந்த பிற உயிரிகளின் மரபணுவோடு தரவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அந்த உயிரியின் மரபணுவில் வேறுபாடுகள் இருந்தால், "இது புதிய உயிரி" என்று அதிகாரபூர்வமாக சொல்வார்கள். அதன்பிறகு அந்த உயிரிக்குப் பெயர் வைப்பார்கள்.


ஒரு புதிய உயிரிக்கு எப்படிப் பெயர் வைக்கவேண்டும் என்பதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதன்படி பெயர் வைத்து ஆய்வுக்கட்டுரை எழுதுவார்கள்.

இந்த வேலை முடிய பல நாட்கள் ஆகலாம், சில மாதங்கள்கூட ஆகலாம்.


ஆனால் அதுவரைக்கும் பெயர் இல்லாமலேயே இருக்கமுடியாது, இல்லையா? அதனால் விஞ்ஞானிகள் தங்கள் மனதில் தோன்றும் ஒரு செல்லப்பெயரை அந்த உயிரிக்கு  வைப்பார்கள். குழந்தைக்குப் பெயர் வைக்கும்வரை "குட்டிப்பயலே", "தங்கபாப்பா" என்றெல்லாம் நாம் கொஞ்சுவோமே, அது போல ஒரு செல்லப்பெயர் இருக்கும்.


"பார்பி பன்றி" என்பது இதுபோன்ற ஒரு செல்லப்பெயர். 2024ல் ஹவாய் தீவுகளுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு  ஆராய்ச்சி நடந்தது. அதில் பல உயிரிகளை விஞ்ஞானிகள் பார்த்தார்கள்.


ஒரு உயிரி அழகான பிங்க் நிறத்தில் இருந்தது.


இதைப் பார்த்த ஆராய்ச்சியாளர் பெத்தனி ஃப்ளமிங் யோசித்தார்.


"நான் இங்கு வரும்போது விமானத்தில் பார்பி திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் இந்த பிங்க் நிறம் அதிகமாக வரும்.


இந்த உயிரியின் நிறம் எனக்கு பார்பி படத்தை ஞாபகப்படுத்துகிறது. ஆகவே இதை பார்பி பன்றி என்று செல்லமாகக் கூப்பிடப்போகிறேன்" என்றார்.


பிங்க் நிறம் என்பதால் "பார்பி" என்பது சரி. ஆனால், அதென்ன பன்றி? கடலுக்குள் பன்றிகள் வாழுமா?


உண்மையில் கடல் பன்றி என்பது ஒரு வகை கடல் அட்டை (Sea Cucumber). கடல் பன்றிகள் கடலின் ஆழத்தில் வசிக்கின்றன. குண்டாக, கொஞ்சம்  இளஞ்சிவப்பு  நிறத்தில் இருப்பதாலும் பன்றிகளைப் போலவே கடல் தரையை மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பதாலும் இந்தவகை கடல் அட்டைகளுக்கு, "கடல் பன்றி" என்று பெயர் வைத்தார்கள். 


பெத்தனி பார்த்த அந்த உயிரி கடல் பன்றி வகையைச் சேர்ந்தது. ஆகவே பார்பி படத்தில் வரும் பிங்க் நிறத்தையும் அந்த உயிரியின் வகையையும் சேர்த்து அதற்கு  "கடல் பன்றி" என்று பெயர் வைத்துவிட்டார்!


இந்த விலங்கின் புகைப்படத்தைப் பார்த்தீர்களா?


நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்தால் இதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?


நாராயணி சுப்ரமணியன்
நாராயணி சுப்ரமணியன்

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் 

பட்டமும் பெற்றவர்.

இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து  நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page