top of page

சாவித்திரிபாய் பூலே

Updated: Apr 6



ree

ஜோ : வணக்கம் செல்லங்களா!


சிறார்கள் : வணக்கம் ஜோ அத்தை!


ஜோ : இன்னைக்கு இந்தியாவில் பெண்கல்விக்கு வித்திட்ட இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரைப் பற்றித் தான் பார்க்கப் போறோம்.


ரதி : சாவித்திரிபாய் பூலே பற்றியா?


ஜோ : ஆமாம்.. அவங்களப் பற்றித்தான் சாவித்திரிபாய் மகாராஷ்டிரா மாநிலம், கண்டால் மாவட்டத்தில் உள்ள நைகான்தா என்ற கிராமத்தில் 1831 ஆம் ஆண்டு பிறந்தார்.அந்தக் கால வழக்கப்படி சாவித்திரிபாய்க்கு 9 வயதிலேயே ஜோதிபாபுலே வைத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.


நகுலன் : என்னது ஒன்பது வயசிலேயே கல்யாணமா?


ஜோ : ஆமாம், அந்தக் காலத்தில் சிறுவயது திருமணங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. அதே மாதிரி சாதிப்பாகுபாடுகளும் கடுமையாக இருந்தன.


ரதி: சாதிப் பாகுபாடுன்னா என்னது அத்தை?

ஜோ: மனிதர்களை உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பிரித்து ஒருவருக்குக் கீழ் இன்னொருவர் என்று இழிவுபடுத்துகிற சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள்.. உதாரணத்துக்கு உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது. என்பது தொடங்கி. பொதுக்குளத்தில் நீர் எடுக்கக்கூடாது.. கல்வி கற்கக்கூடாது.. இதுவெல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் ஜாதியினர் ஏற்படுத்திய எழுதாத சட்டம்.


நகுலன் : மனிதருக்கு மனிதர் இப்படிச் செய்யலாமா?


ஜோ : நிச்சயமாகச் செய்யக்கூடாது . அதைவிட கொடுமை, பெண்கள் எந்த ஜாதியில் இருந்தாலும் அவர்களும் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டனர். பெண்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று சட்டங்கள் இருந்தன.. இவற்றையெல்லாம் அருவருப்புடன் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஜோதிராவ் பூலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களின் உரிமையை காக்கவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராட ஆரம்பித்தார்.


ரதி : அவரு ஒரு சூப்பர்மேன் சரியா அத்தை!


ஜோ : ரொம்பச் சரியா சொன்னாய் ஆதவ்.. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் உண்மையில் சூப்பர் மேன்.


இருவரும்: கரெக்ட்.அத்தை.. அப்புறம்?


ஜோ: முதன் முதலில் தன் வீட்டில் இருந்தே புரட்சி தொடங்கினார் ஜோதிராவ்பூலே. தாழ்த்தப்பட்ட மக்களின் துயரம் நீங்கவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போக்கவும் கல்வி அவசியம் என்று தன் மனைவி சாவித்திரிபாயிடம் கூறினார்.சாவித்திரிபாய்க்கு அவரே கல்வி கற்றுக் கொடுத்தார். இதனால் குடும்பத்தினர் மற்றும் உயர் வகுப்பினரின் வெறுப்புக்கும் கொடுமைக்கும் ஆளாக நேரிட்டது.


ரதி : அச்சச்சோ அப்புறம் என்ன ஆச்சு? பயந்துட்டாரா?


நகுலன் : மக்களுக்கு நல்லது செய்றவங்க பயப்பட மாட்டாங்க.


ஜோ :சரியா சொன்னே. நகுல். சாவித்திரிபாய்க்கு அவர் கற்றுக் கொடுத்தபிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்தார். அதன் பிறகு அவர் நிறுவிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக்கினார்.


ரதி : அப்படியா? அப்ப முதல் பள்ளிக்கூடம் தொடங்கியவர் ஜோதிராவ்பூலே தானா அத்தை?


ஜோ : ஆமாம், எல்லா சாதியினரும் கல்வி கற்கும் பள்ளியை முதன் முதலில் தொடங்கியவர் அவர்தான். ஆனால் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியது சாவித்திரிபாய்பூலே தான்.

நகுலன்: வாவ்..கிரேட்..அந்தப் பள்ளியை எப்படி நடத்தினார் அத்தை?


ஜோ :வீட்டில் இருந்து அவர் பள்ளிக் கூடம் செல்லும் வரை உயர்சாதியினரில் ஒரு சிலர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். சாணம், அழுகிய முட்டை, கற்கள், மலம் இவற்றையெல்லாம் அவர் மீது வீசினார்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டே பள்ளிக்கூடம் வருவார். அங்கு எடுத்து வந்திருந்த மாற்றுப் புடவையை மாற்றிக் கொண்டு கல்வி கற்பிப்பார். .


ரதி : ஏய் இவங்க சூப்பர் ஹீரோயின் பா


ஜோ : உண்மைதான், சற்றும் சோர்வு அடையாமல் 1849, ஆம் ஆண்டு தொடங்கி 1853 ஆண்டுக்குள் பெண்களுக்கான 18 பள்ளிக்கூடங்களை த் தொடங்கினார். அந்தக் காலத்தில் இளம் விதவைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களது முடியை மொட்டை அடித்து அலங்கோலப்படுத்தினார்கள்.. .சாவித்திரிபாய் முடிதிருத்துபவர்களை ஒன்று திரட்டினார். இனிமேல் இளம் விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்று நாவிதர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தார்.


நகுலன் : கேட்கும்போது சாவித்திரிபாய்பூலே மீது மரியாதை அதிகமாகுது அத்தை..

ஜோ : அதுமட்டுமல்ல..முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். பூனேவில் 1897 ஆம் ஆண்டு பிளேக் நோய் தீவிரமாக பரவியது சாவித்திரிபாய் மருத்துவரான தன் மகனுடன் நோயற்ற ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உதவினார். அப்போது சாவித்திரிபாய்க்கும் பிளேக் தொற்று ஏற்பட்டு அவர் இயற்கை எய்தினார்.


சிறார்கள்: அப்படின்னா இப்போது நாங்கள் எல்லாரும் கல்வி கற்பதற்கு ஜோதிராவ்பூலேவும் சாவித்திரிபாய்பூலேவும் தான் காரணமா?


ஜோ: நிச்சயமாக.. அதனால் கல்வியை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.. அதுதான் அவர்கள் பட்ட துன்பங்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்..


சிறார்கள்: ஆமாம் அத்தை.. படித்து நாங்கள் முன்னேறுவோம்..


ஜோ : நன்றி செல்லங்களா.. திரும்பவும் அடுத்த மாதம் இன்னொரு ஆளுமையை பத்தி தெரிஞ்சுக்கலாம்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page