top of page

தத்துவம் அறிவோம்-17 : அடிமை முறை தோன்றியது.


மனிதனின் சுயநலம் என்ன செய்யும்?


எல்லாம் தனக்கே என்று நினைக்கச் சொல்லும். நம்முடன் கூட இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைக்க வைக்கும். யோசித்துப் பாருங்கள். நாம் கூட அப்படி நினைத்திருக்கிறோமில்லையா?


நிலத்தில் ஒரு பயிர் முளைப்பதற்கு மனிதன் மட்டுமா காரணம்?

யோசித்துப்பார்ப்போம்.


மண், மழை, காற்று, விதை, எல்லாம் சரியானபடி இருந்தால் தானே ஒரு பயிர் முளைக்கிறது.

மண் சரியில்லை என்றால் முளைக்காது. 

தண்ணீர் இல்லை என்றால் முளைக்காது. 

விதை சரியில்லை என்றால் முளைக்காது. 

பருவத்துக்கேற்ற காற்று வீசவில்லை என்றாலும் முளைக்காது. 

இதில் மனிதன் என்ன செய்கிறான்?


மண்ணை உழுது விதைக்கிறான். மழை இல்லாத காலங்களில் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுகிறான். விதைகளைப் பக்குவப்படுத்துகிறான்.


அதனால் தான் உலகம் முழுவதும் மனிதர்கள் ஆற்றங்கரைகளில் குடியேறி இருக்கிறார்கள். அங்குதான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது.


சிந்து நதி நாகரிகம்

நைல் நதி நாகரிகம்

மஞ்சள் நதி நாகரிகம்

வால்கா நதி நாகரிகம்

மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்குத் தண்ணீர் முக்கியப்பங்கு வகித்திருக்கிறது. 

சரிதானா?


நிலச்சொந்தக்காரன் தன்னுடைய நிலத்தில் மற்றவர்களை உழைக்க வைக்கிறான். வரும் விளைச்சலில் சிறிதளவே உழைத்தவர்களுக்குக் கொடுக்கிறான். அதுவே கூலி எனப்படுகிறது. 

கூலி என்றால் உழைப்புக்குக் கிடைக்கும் சன்மானம். ஆனால் ஒருவர் உழைப்பைக் கொடுத்தால் அதற்கு உரிய கூலியைப் பெறுகிறாரா?


உதாரணத்துக்கு ஒரு வயலில் எட்டு மணிநேரம் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு எட்டு மணிநேர வேலைக்கான கூலி கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக நான்கு மணிநேர வேலைக்கான கூலியே கிடைக்கிறது.


அப்படி என்றால் அவர் உழைத்த மீதியுள்ள நான்கு மணி நேர உழைப்புக்கான கூலி எங்கே போகிறது?


யார் நிலத்துக்குச் சொந்தக்காரரோ அவருக்குப் போகிறது. ஆக அவர் உழைக்காமலேயே மற்றவர்களின் நான்குமணி நேர உழைப்புக்கான கூலியை எடுத்துக் கொள்கிறார். 


என்ன சரிதானா? 


இப்படி அவருடைய நிலத்தில் உழைக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான்கு மணிநேர உழைப்புக்கான கூலியை எடுத்துக் கொள்ளும்போது என்ன நடக்கும்?


அவர் மிகச் சுலபமாகப் பணம் படைத்தவாராகி விடுவார் தானே. அவர் மட்டும் உழைத்தால் இந்த மாதிரி ஆக முடியுமா? மற்றவர்களுக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்காமல் எடுத்துக் கொள்வதால் தான் பணக்காரராகிறார்.


இது தான் சுயநலம். ஒரு சமூகத்தில் கிடைக்கும் அத்தனையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையா?

ஆனால் அப்படி இல்லாதபோது என்ன நடக்கும்?


ஒருவர் ஏழையாகவே இருப்பார். அவருக்கு எந்த வசதிவாய்ப்பும் கிடைக்காது. அவருக்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பம், குழந்தைகள், எல்லாரும் ஏழைகளாகவே இருப்பார்கள். பணக்காரருக்கு அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். அவருடைய குடும்பம், குழந்தைகள் எல்லாரும் பணக்காரர்களாகவே இருப்பார்கள். இல்லையா?.


முதன்முதலில் இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிய சமூகம் தான் நிலவுடைமைச் சமூகம்.

நிலக்கிழார்கள், பண்ணையார்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகளை விட்டு விடுவார்களா? 

தங்களிடம் வேலை பார்த்த சக மனிதர்களை அடிமைகளாக்கினார்கள்.


மற்ற இனக்குழுக்களுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று, தோற்றுப் போன இனக்குழு மனிதர்களை அடிமைகளாக்கினார்கள்.


இப்படி அடிமை முறை தோன்றியது.

அடிமை முறை என்றால் என்ன?


ஒரு மனிதனுடைய உடல், பொருள், உயிர் அனைத்தும் அவனை அடிமையாக வைத்திருப்பவனுக்குச் சொந்தம். அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

அடிக்கலாம். ஊனமாக்கலாம், உணவு கொடுக்காமல் பட்டினி போடலாம். கொல்லலாம். 

யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. தப்பித்துப் போய் விட முடியாது. அப்படி யாராவது ஓடினால் என்ன ஆகும்?


அவர்களைப் பிடித்து கைகால்களை வெட்டி ஊனமாக்குவார்கள். அல்லது மரண தண்டனை கொடுப்பார்கள். அது மட்டுமல்லை. 


அடிமைகள் ஓடிப் போனால் அவர்களை அடையாளம் காண்பதற்காக உடம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முத்திரையைப் பதித்து விடுவார்கள்.


ஓடியவன் அடிமை என்று எல்லாருக்கும் தெரியும்படி செய்து விடுவார்கள்.  


இந்த மாதிரி வேறு வேறு வகைகளில் அடிமைகளாகியவர்கள் வேலை செய்தார்கள்.

நிலவுடைமைச் சமூகம் இப்படித் தான் தொடங்கியது.


விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு தான் மனிதனை மனிதன் அடிமைப் படுத்தும் முறையும் தோன்றியது.


இது மட்டும் தானா?


( அறிவோம் தெளிவோம் )


உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page