சிறார் வாசிப்பு பண்பாடு – 3
- சாலை செல்வம்

- 2 days ago
- 2 min read
ரஷ்ய இலக்கியங்களின் தாக்கம்

அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியரான அம்மா, ஒரு கட்டுப் புத்தகங்களோடு வீட்டுக்கு வந்தார்கள். ஒன்று, இரண்டு மூன்று... என புத்தகங்களை எண்ணினோம். 17 புத்தகங்கள்.
பன்றிக்குட்டி வரையச் சொல்லிக் கொடுத்த புத்தகம்
சைக்கிள் ஓட்டும் சிறுவனைப் பற்றிய கதைப் புத்தகம்
குருவிக்கதை – படப்புத்தகம்
டால்ஸ்டாயின் படக்கதைப் புத்தகம் ... என வண்ண ஓவியங்களுடன் அவை இருந்தன. நாங்கள் நால்வரும் அவற்றை திரும்பத் திரும்பப் பார்த்தோம், படித்தோம், படிக்க முடியாத புத்தகங்களின் கதைகளைக் கேட்டோம். புத்தகங்களைப் படிக்கப் பக்கத்து வீடுகளில் இருந்து எங்கள் வீட்டிற்குப் பிள்ளைகள் வந்தனர்.
“சேர்ந்து உட்கார்ந்து படிங்க.
சத்தமாக படிங்க.
படிச்ச கதையை சொல்லுங்க...” என்பார் ஆசிரியர் அம்மா.
“ஒரு புத்தகம் 25 பைசாதானா?” என்ற கேள்வியோடு குழந்தைகளின் அம்மாக்கள் என் அம்மாவை பார்க்க வந்தனர். அம்மாவும் அவர்களுக்கு ரஷ்யப் பதிப்பகம் பற்றி விவரிப்பார். “அவர்கள் எப்பொழுதாவது பஸ் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்து விற்பார்கள். அந்த பஸ் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் விற்றுவிட்டு வேறு ஊருக்கு புத்தகங்களை விற்க சென்றுவிடும். அடுத்து அவர்கள் வருவதற்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். பெட்டி பெட்டியாக கப்பலில் வந்திறங்கும், ரஷ்யாவிலிருந்து...” என்று விளக்குவார்கள்.
70, 80, 90 களில் குழந்தைகளின் படிப்பில் அக்கறைப்பட்ட குடும்பங்களின் அனுபவங்களில் ரஷ்ய சிறார் இலக்கியத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்ததை மறுக்கவே முடியாது.
நான் வளர்ந்து கல்லூரி முடித்த காலத்தில் அதே புத்தகங்களும் அதைப் போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்களும் என். சி. பி. ஹெச் புத்தகக் கடைகளில் கிடைத்தன. திருச்சியில் நானும், தோழி சுபத்ராவும் தொடர்ந்து செல்லும் புத்தகக் கடையாக என். சி. பி. ஹெச் இருந்தது. புத்தகங்களை வாங்கும் கடையாக மட்டுமல்லாமல், வாசிப்பில் ஈடுபடும் இலக்கியவாதிகளையும், அரசியலில் ஈடுபடும் தோழர்களையும் சந்திக்கும் இடமாகவும் இருந்தது. மேலும் குழந்தைகளை புத்தகக் கடைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களை, அங்கு பார்க்கவும் பேசவும் முடிந்தது.
90களில் அப்புத்தகங்கள் திருத்தப்பட்ட விலைகளோடு பழைய புத்தகக் கடைகளில் விற்பனையாகின. தற்போது, அவற்றை பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்திருந்தவர்களிடமிருந்து பெற்று, சிறார் இலக்கியப் பதிப்பகங்கள் பதிப்பித்து வருகின்றன.
பின்னாளில், ரஷ்ய நாட்டுப்புறக் கதைகள், நிக்கோலாய் நோசவின் வெவ்வேறு கதைகள், மாக்சிம் கார்கியின் ‘ஈவ்சேகா மீன் பிடிக்க செல்கிறான்’ போன்ற சிறார் கதைகளை நான் மொழிபெயர்க்க வித்திட்டவை, குழந்தைப் பருவத்தில் நான் வாசித்த இக்கதைகள்தான் என்று சொல்லலாம்.
சோவியத் யூனியனின் மாஸ்கோ நகரில் இயங்கிய ராதுகா பதிப்பகம் மற்றும் பிராகிரஸ் போன்ற பதிப்பகங்கள் உலகப் புகழ்பெற்ற சிறந்த புத்தகங்களை வெளியிட்டன. ரஷ்ய எழுத்தாளர்களின் நவீன சிந்தனையும், ரஷ்ய ஓவியர்களின் திறன்மிக்க ஓவியங்களும் நேர்த்தியான வடிவமைப்பும் பதிப்புத் தரமும் தமிழ்க் குழந்தைகளையும் வியப்பில் ஆழ்த்தின. ரஷ்யா, உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புத்தகங்களை அனுப்பியது. ரஷ்யக் கதைகளை உலகின் அனைத்து மொழிகளைப் பேசுபவர்களும் படித்தனர். எல்லா நாடுகளிலிருந்தும் மொழிபெயர்ப்பாளர்கள் ரஷ்யாவிற்குச் சென்று மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மொழிபெயர்த்தப் படைப்புகளைத் தரமான புத்தகங்களாக மாற்றினர். அந்தந்த நாடுகளுக்கு பெட்டிப் பெட்டியாகக் கப்பல்களில் அனுப்பி வைத்தனர்.
சித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள், விசித்திரக் கதைகள்,மந்திரக் கதைகள், அறிவியல் கதைகள், கற்பனைக் கதைகள், படக் கதைகள்… என, குழந்தைகள் மத்தியில் அவை உலா வந்தன. அவை, குழந்தைகளை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் பற்றிய உண்மைகளை எடுத்துரைப்பதாகவும், கற்பனையைத் தூண்டுவதாகவும், மனிதநேயத்தை வளர்ப்பதாகவும், நற்பண்புகளை கடைபிடிப்பதற்கு உதவுவதாகவும், இயற்கையை நேசிக்க சொல்லிக் கொடுப்பதாகவும், கூட்டுணர்வை பண்பாக வளர்த்தெடுப்பதாகவும் இருந்தன.
சோவியத் யூனியனின் மாஸ்கோ நகரத்திலிருந்து வந்த புத்தகங்கள், குறைவான விலையில், வண்ண ஓவியங்களுடன், உலகத் தரத்தில் குழந்தைகள் கைகளில் தவழ்ந்தன. ராதுகா பதிப்பகமும் பிராகிரஸ் பதிப்பகமும் தலைமுறை தலைமுறையாக குழந்தைகளின் வாசிப்பை அவர்களின் விருப்பத்தோடு எடுத்துச் சென்றன. சிறார்களை அவர்களின் அக உலகிற்குள் சென்று, வாசிப்பை நேசிக்கும் மனிதர்களாக மாற்றியதன் பங்கை பற்றி, இன்னும் நிறைய பேச வேண்டி உள்ளது.

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.
புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.





Comments