தத்துவம் அறிவோம் - 11
- உதயசங்கர்

- 3 days ago
- 2 min read
கடவுள் உருவான கதை

என்னது?
மனிதர்கள் கடவுளை உருவாக்கினார்களா?
நம்பும்படியாகவா இருக்கு?
கடவுள் தானே இந்த உலகத்தைப் படைத்தார். காற்றைப் படைத்தார். நீரைப் படைத்தார். உயிர்களைப் படைத்தார். அவர் எங்கும் இருப்பவர். எப்போதும் இருப்பவர்.
இப்படி நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். வெகுகாலத்துக்கு முன்னால் எல்லா மனிதர்களும் இப்படித் தான் நம்பினார்கள். இப்போதும் நம்புகிறார்கள். ஆனால் ஹோமோ சேப்பியன்ஸ் இந்த பூமியில் பிறந்தபோது அவர்களுக்குக் கடவுள் என்றால் யார் என்றே தெரியாது. இந்த உலகம் எப்படி பிறந்த து என்று தெரியாது. காற்று எப்படி உருவானது என்று தெரியாது. நீர் எப்படி உருவானது என்று தெரியாது. இயற்கையில், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் எப்படி உருவாயின என்று தெரியாது.
அவர்கள் பிறக்கும்போதே இவை எல்லாம் இருக்கின்றன.
அவ்வளவு தான்.
ஆனால் உயிர் வாழ்வதற்கான போராட்டம் பல இன்னல்களைக் கொண்டுவந்த து. பல நேரங்களில் தன்னுடன் இருந்த சக தோழர்களை இழக்க நேர்ந்த து. தன்னைச் சுற்றிலும் இருந்த இயற்கையை மரம், செடி,கொடி, விலங்குகள் அனைத்தையும் தன்னிச்சையாகச் செயல்படுவதைப் பார்த்தான்.
தன்னைப் போலவே அவற்றுக்கு உயிர் இருப்பதாக நினைத்தான். அந்த உயிர் உடலில் இருந்து போனாலும் அது மறைவதில்லை.
ஆவியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நம்பினான்.
இப்போதும் அப்படித்தானே! ஆவி பேய் பிசாசு என்று கதைகள் இருக்கின்றன இல்லையா?
எப்படி அந்தச் சிந்தனை மனிதனுக்குத் தோன்றியது தெரியுமா?
நம்முடைய மூளை தான் காரணம். அப்படியா?
மூளையின் வளர்ச்சிப்போக்கில் மனிதன் தினம் தினம் கண்ட காட்சிகளும் அனுபவங்களும் மூளையின் ஞாபகச்சேகரிப்பில் சேர்ந்து விடும். அந்த அனுபவங்களும் காட்சிகளும் அவன் உறங்கும்போது கனவுகளாக வெளிப்பட்டன.
இப்போது கூடப் பாருங்கள் நமக்கு எவ்வளவு கனவுகள் வருகின்றன?
அந்தக் கனவுகள் ஏன் வருகின்றன என்று யோசித்திருக்கிறோமா?
சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. சில கனவுகள் பயங்கரமாக இருக்கின்றன. சில கனவுகள் துன்பம் தருகின்றன. சில கனவுகளில் பகலில் நடந்த அத்தனைக் காட்சிகளும் மறுபடியும் வருகின்றன. சில கனவுகளில் நாம் பார்க்காத காட்சிகளும் வருகின்றன.
சில கனவுகளில் இறந்தவர்கள் வருகிறார்கள். சில கனவுகளில் விநோதமான உருவங்கள் வருகின்றன. பகலில் நாம் அந்த உருவங்களைக் கற்பனையே செய்திருக்கமாட்டோம்.
இனி உங்களுக்குக் கனவுகள் வரும்போது ஏன் அப்படிப்பட்ட கனவுகள் வந்தன என்று யோசித்துப் பாருங்கள்.
அந்தக் காலத்தில் இறந்த உயிர்கள் கனவுகளில் வந்தபோது மனிதர்கள் அந்த உயிர்களின் ஆவி இந்த உலகத்தை விட்டுப் போகவில்லை. இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று நம்பினார்கள்.
அந்த ஆவிகளைச் சமாதானம் செய்ய வேண்டும். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி அவர்களைச் சாந்தமடைய வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
அப்போது கூட்ட த்தில் சிலர் பூசாரிகள் ஆனார்கள். அவர்கள் சில சடங்குகளை உருவாக்கினார்கள். மந்திரங்களை உருவாக்கினார்கள். பலி கொடுத்தார்கள்.
நல்லதும் கெட்ட தும் அந்த ஆவிகளால் தான் நடக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே மனிதர்கள் அந்த ஆவிகளை வணங்கி வழிபட்டார்கள். ஆவிகளை நல்ல ஆவிகள் என்றும் கெட்ட ஆவிகள் என்றும் பிரித்தார்கள்.
எதை எல்லாம் வணங்கினார்கள் தெரியுமா?
கல்லை வணங்கினார்கள்.
மண்ணை வணங்கினார்கள்.
மரத்தை வணங்கினார்கள்
செடி, கொடிகளை வணங்கினார்கள்.
புழுவை, பூச்சியை, பறவையை விலங்குகளை வணங்கினார்கள்.
அவர்களுடன் வாழ்ந்து மறைந்த சக மனிதர்களையும் வணங்கினார்கள்.
இந்த வழிபாட்டு முறைகளின் வழியாகத் தான் மெல்ல மெல்ல கடவுள் உருவானார்.
ஆவி வழிபாடு தான் கடவுள் வழிபாடாக மாறியது.
புரிகிறதா?
அதனால் தான் இப்போதும் கல்லை வணங்குகிறோம். நிலத்தை வணங்குகிறோம். நீரை வணங்குகிறோம். சில மரங்களில் சிவப்புத்துணியோ, மஞ்சள் துணியோ கட்டி வணங்குகிறோம். மலையை வணங்குகிறோம்.
இந்த உலகத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்த கடவுள்களை எண்ணிப்பாருங்களேன்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடவுள், அப்படி என்றால் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? இப்படி மாவட்ட த்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு, கண்ட த்துக்குக் கண்டம் என்று எத்தனை கோடி கடவுள்கள் இருக்கிறார்கள்.
அடேங்கப்பா!
என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
இப்போது சொல்லுங்கள் கடவுள்களை உருவாக்கியது யார்?
மனிதர்கள் தானே!

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




Comments