top of page

பென்சில் மரம்


குட்டி மரம் போலிருக்கும்

குழந்தை கையில் பென்சிலே,

கூர்முனையோ மரங்கொத்தி

கொத்தியது போல் இருக்கும்.


வெள்ளைத் தாளில் விளையாடும்

வேகமான சிறு அணிலும்,

வளைந்து நெளிந்து போகும்போது

வனம் ஒன்று உருவாகும்.


அழிப்பான் வந்து பின்னாலே

அமைதியாக நடப்பானாம்,

தவறு செய்த தடமெல்லாம்

தட்டித் துடைப்பானாம்.


கூர்மை போனால் பென்சிலுக்கு

குட்டித் தச்சன் வருவானாம்,

சீவிச் சீவி மந்திரம்போல்

சின்ன மூக்கு செய்வானாம்.


எழுதி எழுதி சிறு பென்சில்

இறுதியிலே குட்டியாகும்,

அறிவு மட்டும் நாள்தோறும்

ஆலமரம் போலாகும்!


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page