top of page

அறிவோம் ஆளுமை – 14

தலைமுறைகளின் ஒளிவிளக்கு முத்துலட்சுமி அம்மையார்



ரதி : அத்தை, முத்துலட்சுமி அம்மையார்  மாதிரி நீ தைரியமா இருக்கணும். பல பெண்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி அவங்க என்ன சாதனை பண்ணினாங்க?   


ஜோ : அவங்க ஒரு சாதனை இரண்டு சாதனை இல்லை.. பல சாதனைகள் செய்ஞ்சிருக்காங்க… ரதி.. புதுக்கோட்டையில் 1886 இல் பிறந்த அவங்க இந்தியாவில் பெண்கள் பள்ளியில் படிக்கவே பயந்த காலத்தில் கல்லூரியில் படித்து தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரானாங்க.. மருத்துவர் மட்டுமல்ல கல்வியாளர், சட்டம் இயற்றுபவர்,  சீர்திருத்தவாதி மற்றும் ஒடுக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகப் போராடிய போராளி. 


நகுலன் :  அடேயப்பா அவ்வளவு பெரிய ஆளா அவங்க? 


ஜோ : ஆமா நகுல் …இன்னும் நிறைய செஞ்சு இருக்காங்க. 


ரதி : அத்தை அப்போது பெண்கள் பள்ளிக்குப் போக முடியாதா? 


ஜோ : அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே   இருக்கணும். அதிகம் படிக்கக் கூடாது. உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருந்தன.  ஆனால் முத்துலட்சுமி அம்மையார் சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய அப்பா நாராயணசாமி கல்வியின் முக்கியத்துவம் புரிந்தவர். சமூகத்தில் பலர் எதிர்த்தாலும், மகளைப் படிக்க வைத்தார்.


நகுலன் : அத்தை… அவங்க தான் ஆண்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண்ணா?


ஜோ : சரியா சொன்ன! அப்போது பெண்கள் படிப்பதற்கென்று தனிக்கல்லூரி கிடையாது… புதுக்கோட்டையில் இருந்த மகாராஜா கல்லூரியில் முதலில் பெண்களை சேர்க்கவே விரும்பல. ஆனா முத்துலட்சுமியின் திறமையை பார்த்து பின்னர் சேர்த்தாங்க. அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவி அவர்தான்.


அப்போ அவரைப் பார்த்து வியந்தாங்க. சிலர் கோபப்பட்டாங்க. ஏனென்றால் புதிய மாற்றங்களை ஏத்துக்க மக்கள் தயங்குவாங்க. ஆனாலும் முத்துலட்சுமி அம்மையார் பயப்படவில்லை.

பின்னர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் ஒரே பெண் மாணவி அவர்தான். அதன் பிறகு அரசு மருத்துவமனையில் முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் ஆனார்.


ரதி : அது ரொம்பப் பெரிய விஷயமா அத்தை? 


ஜோ : அந்தக் காலத்துல மிகவும் பெரிய விஷயம். இன்று பெண்கள் மருத்துவராக இருப்பது சாதாரணம். ஆனால் அப்போது அது ஒரு புரட்சி மாதிரி.


நகுலன்  : சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றாரா?


ஜோ : மகாத்மா காந்தியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார்.  


ரதி : அத்தை, அவங்க பெண்களுக்காக என்ன செய்தாங்க?


ஜோ : 1917-ல் மார்கரெட் கசின்ஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். குழந்தைகள் உதவிச்சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளிலும் பங்காற்றினார். 1926-ல் பாரிஸில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி அம்மையார்  கலந்து கொண்டார். பெண்களுக்கான சம உரிமை, இளவயது திருமணம், விதவை மறுமணம் குறித்துப் பேசினார்.


நகுலன்  :  அவர்தானே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்?


 ஜோ - ஆமாம். சரியாக சொன்னாய். சென்னை மாகாண சட்டசபைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவர். அதுமட்டுமின்றி பெண்களுக்கான வாக்குரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயரானார்.  1925-ல் சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார மணத்தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம், விபச்சார ஒழிப்புச்சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்ற வழிவகை செய்தார். பிப்ரவரி 2, 1929-ல் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.


ரதி: தேவதாசி முறை என்றால் என்ன அத்தை?


ஜோ:  தேவதாசி முறை என்பது சிறுவயதுப் பெண்களைக் கோயிலுக்கோ அல்லது தெய்வத்திற்கோ அர்ப்பணித்து, அவர்களைக் கடவுளின் மனைவியாகக்  கருதி, கோயில் பணிகளிலும் கலைகளிலும் ஈடுபடுத்திய பழங்காலச் சமூக மற்றும் சமய வழக்கமாகும்.  


நகுலன் – இப்படி எல்லாமா வழக்கம் இருந்திருக்கிறது.?


ஜோ : ஆமாம் நகுல்.. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட த்தை சட்டசபையில் நிறைவேற்ற நிறையப் பெரிய மனிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதாவது தேவதாசி முறை இருக்க வேண்டும்.. அது இந்தியாவின் கலாச்சாரம் என்று சொன்னார்கள். ஆனால் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டுவர முத்துலட்சுமி அம்மையார் கேட்ட கேள்வி மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

  

ரதி : அப்படி என்ன கேள்வி கேட்டார் அத்தை?


ஜோ: காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசிகள் கடவுளுக்கே பணி செய்யும் அற்புதப்பணி  என்றும் அதனால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சட்டசபையிலே சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி பேசினார். அதற்கு முத்துலட்சுமி அம்மையார் , 'கடவுளுக்கே செய்யும் பணி அதனால் புண்ணியம் கிடைக்கும் என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் அந்தப் பணிகளைச் செய்து புண்ணியம் தேடட்டும்.. போதுமான புண்ணியத்தைத் தேவதாசிகள் தேடிச் சேர்த்து விட்டார்கள்…என்று தகுந்த பதிலடி கொடுத்தார். 


நகுலன் , ரதி : சபாஷ் சரியான பதில் அத்தை! 


ரதி :  பெண்களுக்கு ‘அவ்வை இல்லம்’ என்ற ஒரு இல்லத்தை தொடங்கினாராம். அது  எதற்காக அத்தை ?


ஜோ :   ஒரு நாள் மூன்று சிறுமிகள் பாதுகாப்பு கேட்டு அவரிடம் வந்தார்கள். சாதியைக் காரணம் காட்டி யாரும் அவர்களை ஏற்கவில்லை. அதனால் முத்துலட்சுமி அம்மையார் அவர்களுக்காக ‘அவ்வை இல்லம்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். அங்கே  பெண் குழந்தைகள் பாதுகாப்பாக தங்கலாம், படிக்கலாம், நல்ல வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளலாம்.


ரதி : அப்படின்னா அவர் குழந்தைகளுக்காக ஒரு பெரிய அம்மா மாதிரி இருந்தாரா? 


 ஜோ : ஆமாம் ரதி. 


 நகுலன் :  புற்றுநோய் மருத்துவமனையை அவர்தான் கட்டினாரா?”


ஜோ :  அவருடைய சகோதரி புற்றுநோயால் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது நல்ல சிகிச்சை கிடைக்கவில்லை. அதனால் ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் பிறகு உருவானதுதான் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட். இன்று உலகமே பாராட்டும் பெரிய மருத்துவமனையாக அது வளர்ந்திருக்கிறது.


 ரதி : அத்தை, நான் பெரியவளானதும் குழந்தைகளுக்காக ஒரு நூலகம் தொடங்கணும்.


ஜோ : அட, அது ரொம்ப நல்ல கனவு.


நகுலன் :  நான் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறிவியல் கற்றுக்கொடுப்பேன். 


ஜோ : அதுதான் முத்துலட்சுமி அம்மையார் போன்ற மனிதர்கள் நமக்குக் கற்றுத்தருவது. பெரிய சாதனை என்றால் புகழ் மட்டும் இல்ல. பிறருக்கு உதவுவது தான் உண்மையான சாதனை.


ரதி : அவருக்கு விருது கிடைத்ததா?


ஜோ : ஆமாம். இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது கொடுத்தது. ஆனால் அவருடைய உண்மையான விருது என்ன தெரியுமா?


 ரதி, நகுலன் : என்ன?


ஜோ : இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தைரியமாக படிப்பது… குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வது… மருத்துவ உதவி கிடைப்பது… அவையே அவருடைய மிகப்பெரிய வெற்றி.


 நகுலன்  : அத்தை… ஒவ்வொரு மனிதரும் தான் வாழும் சமூகத்தைப் பற்றி யோசித்தால் உலகமே கொஞ்சம் நல்ல இடமா மாறும்னு தோணுது.


ஜோ : உண்மைதான் குழந்தைகளே!  முத்துலட்சுமி அம்மையார் போல ஒருவரின் வாழ்க்கை பல தலைமுறைகளுக்கு ஒளி காட்டும்.

சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page