அறிவோம் ஆளுமை - 16
- சரிதா ஜோ

- 20 hours ago
- 4 min read
பெண்களின் ஒளி விளக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

நகுலன் : ஜோ அத்தை... நேற்று அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க.
ஜோ : என்ன சொன்னாங்க?
நகுலன் : என் திருமணத்தின் போது, "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்" மூலம்தான் எனக்குப் பண உதவி கிடைச்சது என்றாங்க.
ரதி: ஆனால்,என்னோட பக்கத்து வீட்டில் இருக்கிற 11ஆம் வகுப்பு படிக்கிற சிந்து அக்கா அவருக்கு அந்தத் திட்டத்தின் வழியாக மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகக் கூறினார்களே. படிப்பதற்குப் பணமும் கொடுத்து திருமணத்திற்கும் பணம் கொடுக்கிறார்களா?
ஜோ : பரவாயில்லையே இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே மகிழ்ச்சி. இந்த கேள்வி கூட மிகச் சரியான கேள்விதான்.
இத்திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு திருமணத்தின் போது நிதியுதவியும் இத்துடன் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்க்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆக மாற்றி அமைக்கப்பட்டது.
நகுலன் : அவர் என்ன செய்தார் அத்தை?
ஜோ : அவர் வாழ்க்கையே ஒரு போராட்டம். பிறருக்காக மட்டுமல்ல... முதலில் தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்தவர்.
ரதி : எப்படி?
ஜோ : 1883-ல் திருவாரூர் பகுதியில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். குடும்பம் மிகவும் ஏழ்மை. அந்தக் காலத்தில் பெண்களின் வாழ்க்கை இன்று போல இல்லை. ஐந்து வயது குழந்தையாக இருந்தபோதே, வறுமையால் அவருடைய அம்மாவே அவரை இன்னொரு தேவதாசி பெண்ணிடம் பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய சேலைக்கும் விற்றுவிட்டார்.
நகுலன் : என்ன? ஐந்து வயசு குழந்தையையா?
ஜோ : ஆமாம். அது அவர் விருப்பம் இல்லை. அக்காலத்தில் பல ஏழைப் பெண்களுக்கு நடந்த கொடுமைகளில் இதுவும் ஒன்று.
நகுலன் : தேவதாசி முறை என்பது குழந்தைகளை ஒருவருக்கு விற்றுவிடுவது அல்ல கோயிலுக்குக் கொடுப்பது தானே?
ரதி : அந்தக் காலத்தில் சில சிறுமிகளை கோவிலுக்கு "கடவுளின் சேவகி" என்று அர்ப்பணித்து விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. சரிதானே அத்தை?
ஜோ : சரிதான். அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் அதிகாரம் கொண்டவர்கள் அவர்களைச் சுரண்டினர். அந்த முறை பெண்களுக்கு மிகப் பெரிய அநீதி. உனக்கு இது எப்படித் தெரியும்?
ரதி : அத்தை மறந்து விட்டீர்களா நீங்கள் தானே முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றிக் கூறும் போது இது பற்றிக் கூறினீர்கள்.
ஜோ : மகிழ்ச்சி. பரவாயில்லையே. நான் கூறியதை நினைவில் வைத்திருக்கிறீர்களே!
நகுலன் : அவர் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்?
ஜோ : அவரை வளர்த்த ஆச்சிக்கண்ணு என்ற தேவதாசி, அவருக்கு இசை, நடனம், சமஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுத்தார். பத்து வயதிலேயே நல்ல கலைஞராக வளர்ந்தார். ஆனால் பதினேழு வயதில் அறுபத்தைந்து வயது மனிதருடன் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.
ரதி : என்னது இவருக்குப் பத்து வயது. 60 வயது இருக்கும் கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களா? பரவாயில்லை எப்படியோ மறுத்துவிட்டார்.
ஜோ : அந்தக் காலத்தில் மறுப்பது பெரிய துணிச்சல். பிறகு அவருக்கு இசை கற்றுக் கொடுத்த சுயம்பு பிள்ளையைத் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். மதச் சடங்குகள் இல்லாமல், மிக எளிமையாக நடந்த அந்தத் திருமணம் பின்னாளில் "சுயமரியாதைத் திருமணங்களுக்கு" ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டது.
நகுலன் : அதாவது, அவர் தன் வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஆரம்பித்தார்.
ஜோ : சரியாகச் சொன்னாய். பிறகு, தான் மட்டும் தப்பித்தால் போதாது. மற்ற பெண்களும் விடுதலை பெற வேண்டும். என்று முடிவு செய்தார்.
ரதி: அதன் பிறகு தேவதாசி முறைக்கு எதிராகப் போராடினாரா?
ஜோ : ஆமாம். 1917–1918 காலத்திலிருந்தே அவர் தேவதாசி ஒழிப்புப் பணியைத் தொடங்கினார். தேவதாசி பெண்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, இந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வாருங்கள். என்று அவர்களிடம் பேசினார்.
நகுலன் : அவர்கள் உடனே சம்மதித்தார்களா?
ஜோ : எல்லோரும் இல்லை. சிலர் பயந்தார்கள். சிலர் இதுதான் வாழ்வாதாரம் என்று நினைத்தார்கள். சிலர் எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் விடவில்லை.
ரதி : பிறகு?
ஜோ : வெளியே வர விரும்பிய பெண்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, புதிய வாழ்க்கை தொடங்க உதவினார்.
நகுலன் : அதெல்லாம் அவர் ஒருத்தரே செய்தாரா?
ஜோ : ஆரம்பத்தில் பெரும்பாலும் தனியாகத்தான் செய்தார். பிறகு அந்தப் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்டு நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் அது தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தின் முக்கிய அமைப்பாக வளர்ந்தது.
ரதி : சாவித்திரிப்பாய் பூலேவை எப்படி எதிர்த்தார்களோ! அப்படி இவருக்கும் எதிர்ப்பு வந்திருக்கும் தானே அத்தை?
ஜோ : ஆமாம். நிலக்கிழார்கள், சில பூசாரிகள், அதிகாரம் படைத்தவர்கள், தேவதாசி முறையை ஆதரித்தவர்கள் பலரும் எதிர்த்தார்கள். மிரட்டினார்கள். சமூகமாக ஒதுக்கினார்கள். ஆனாலும் அவர் அஞ்சவில்லை.
நகுலன் : அஞ்சாமல் இருந்ததனால்தான், சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார். அவர் ஏதாவது கட்சியில் இருந்தாரா?
ஜோ : ஆமாம். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். காந்தியின் கதர் இயக்கத்தை முழு மனதுடன் ஆதரித்தார்.
தெருத்தெருவாகச் சுமந்து சென்று விற்றார். அவரும் கதர் ஆடையே அணிந்தார். தேவதாசி பெண்களையும் கதர் அணியச் செய்தார்.
நகுலன் : அவர் வீட்டிலேயே ஒரு அறிவிப்பு பலகை வைத்திருந்தாராமே?
ஜோ : கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம் என்று எழுதி வைத்திருந்தார். ஒருமுறை காவல்துறை அதிகாரி வந்தபோது, அவர் கதர் அணியாததால் முன்வாசல் வழியாக வரத் தயங்கியதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது சரி இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?
நகுலன் : அத்தை என் அம்மாவிடம் கேட்டேன் அவர் இவரைப் பற்றி நிறைய கூறினார். நானும் ரதியும் இதைப்பற்றி நிறைய உரையாடி இருக்கிறோம்.
ஜோ : பரவாயில்லையே இதைப் பற்றி எல்லாம் கூட உன் அம்மா கூறி இருக்கிறாரே. மகிழ்ச்சி. இன்னும் ஒன்று. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடியைப் பிடித்து வரக் கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அப்போது அவர் பல தேசியக் கொடிகளைத் தைத்து ஒரு சேலையாக அணிந்துகொண்டு ஊர்வலத்தில் நடந்தார்!
ரதி : வாவ்! அப்படியும் யோசிக்கலாமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்!
ஜோ : அதனால்தான் காந்தியும் அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் அண்ணாதுரை, காந்தி சமூகப் பணிக்காகத் தேடிய பெண் மூவலூர் அம்மையார்தான் என்று புகழ்ந்தார்.
ரதி : பெரியாருடனும் சேர்ந்து பணியாற்றினாரா?
ஜோ : ஆமாம். திரு.வி.க., பெரியார், நீலாம்பிகை, முத்துலட்சுமி ரெட்டி போன்றோருடன் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டார். சுயமரியாதை இயக்கத்தின் அறிக்கையை உருவாக்குவதிலும் பங்கு பெற்றார். கிராமங்களில்கூட தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்று தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். சட்டம் மட்டும் போதாது, பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரதி : அவர் ஏதோ ஒரு நாவல் எழுதி இருக்கிறார் தானே அத்தை?
ஜோ : ஆமாம். தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதினார். அது தேவதாசி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட முக்கியமான நாவல். கட்டுரைகளும் எழுதினார். பெண்கள் விடுதலை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, தமிழ்ப்பற்று ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதினார்.
நகுலன் : அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் இருந்தாராமே?
ஜோ : ஆமாம். 1938-ல் 577 மைல் நடந்தார். வழியிலேயே 87 பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான பெண்களில் ஒருவராக இருந்தார்.
ரதி : அவர் நிறைய நல்ல வேலை செய்திருக்கிறார். அப்படியிருக்க அவரைப் பற்றி ஏன் அதிகம் பேசவில்லை?
ஜோ : அதைத்தான் பல ஆய்வாளர்களும் கேட்கிறார்கள். சாதி, பாலினம், சமூகப் பின்னணி போன்ற காரணங்களால் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று பலர் கருதுகிறார்கள்.
நகுலன் : ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அது ஒரு சாதாரண பெயர் இல்லை.... சரித்திரத்தை மாற்றிய பெயர் என்று அவர் வாழ்க்கைக் கதையை என்னுடைய நண்பர்களிடம் கூறுவேன்.
ரதி : அத்தை எத்தனையோ பேரைப் பற்றிக் கூறி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் சமூகத்திற்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையைக் கேட்கும்போது எனக்கும் நான் வளர்ந்த பிறகு சமூகத்திற்காக என் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஜோ : அதுதான் வரலாற்றின் உண்மையான பயன். ஒரு பெயரை மனப்பாடம் செய்வது அல்ல. அந்தப் பெயருக்குப் பின்னால் இருந்த மனிதரின் தைரியத்தையும் மனிதநேயத்தையும் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் நினைவில் வைத்துக் கொள்வதுதான். அதோடு நாமும் சமூகத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.
நகுலன் : கண்டிப்பாக செய்வோம் அத்தை என்ன ரதி சரியா?
ரதி : சரிதான்!

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.





Comments