top of page

அறிவோம் ஆளுமை – 13

பகத் சிங் – இந்திய விடுதலையின் வீர முழக்கம்



நகுலன் : அத்தை, நம்ம நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் அப்படின்னா யாரைச் சொல்லுவீங்க? 


ஜோ : நிறையப் பேரைப் பிடிக்கும்... ஒருத்தர் அப்படின்னா!  நான் பகத்சிங்கைத் தான் சொல்வேன்.. அவரை ரொம்ப ப் பிடிக்கும்.


ரதி : எனக்கும் பகத்சிங்கை ரொம்ப ப் பிடிக்கும் அத்தை. அவர் நாட்டு விடுதலைக்காக 23  வயதிலே தூக்குமேடைக்குப் போன போராளி….


ஜோ : உண்மை தான் ரதி.. நீ சொன்னது சரி தான். ஆனால் பகத்சிங் சாதாரண விடுதலைப்போராட்ட வீர்ர் மட்டும் இல்லை.  அவர் ஒரு புரட்சியாளர், சிந்தனையாளர். “ இந்தப் போர் எங்களுடன் தொடங்கவில்லை… எங்களுடன் முடியப்போவதுமில்லை இன்குலாப் ஜிந்தாபாத்! ”  அந்த நேரத்தில் அவர் சொன்னது இன்றும் பலரையும் சிந்திக்க வைக்கிறது.


ரதி :‌ அத்தை… அவர் பஞ்சாபில் தானே பிறந்தார்.


ஜோ :  1907 செப்டம்பர் 27-ஆம் தேதி, இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய அப்பா கிஷன் சிங், அம்மா வித்யாவதி.அவர் பிறந்த நேரத்திலேயே, அவருடைய அப்பா சிறையில் இருந்தார். அவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்.


நகுலன் :‌ அப்படின்னா… வீட்டிலேயே போராட்டச் சூழல் இருந்திருக்கும் இல்லையா?


ஜோ : ஆமாம். அவருடைய குடும்பமே சுதந்திரப் போராட்ட த்தில் ஈடுபட்டார்கள்.. அவருடைய தாத்தாவிடம் தான் பகத்சிங் வளர்ந்தார்.. தாத்தா ஒரு ஆன்மீகவாதி. அதனால் தானோ என்னவோ பகத்சிங்கும் சிறு வயதில் ஆன்மீகவாதியாக இருந்தார்.. 


ரதி :‌ அப்படியிருந்தவர் எப்படி புரட்சியாளரா மாறினார்?


ஜோ : ‌அப்போது இந்தியாவில் இருந்த சூழல், அவர் வாசித்த புத்தகங்கள், ஒரு விஷயம் தெரியுமா குழந்தைகளா? சிறுவயதில் ஆன்மீகவாதியாக இருந்த பகத்சிங் தான் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்று ஒரு புத்தகமும் எழுதினார்… வாசித்துப் பாருங்கள்..


நகுலன் – வாவ்.. கட்டாயம் வாசிக்கிறோம்..

அவர் எப்படி விடுதலைப் போராட்ட வீர்ர் ஆனார் அத்தை?


ஜோ – நாடு ஏன் அடிமைப்பட்ட து? யார் இந்த பிரிட்டிஷ்காரர்கள்? ஏன் நமது நாட்டில் இருக்கிறார்கள்? நாம் ஏன் போராட வேண்டும் என்று தன் அப்பாவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு அவருடைய அப்பாவும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே  இருந்தார்.‌ அவருடைய கேள்விகளுக்கு கிடைத்த பதில் அவரை விடுதலைப் போராட்ட வீரராக மாற்றியது.


நகுலன் :‌  என் அப்பா ஒரு முறை பகத்சிங்கைப்  பற்றிக் கூறும் போது  ஜாலியன் வாலாபாக் படுகொலை தான் பகத்சிங்கை விடுதலைப் போரில் ஈடுபடச் செய்த து என்று சொன்னார் அத்தை. அப்படியா அத்தை?


ஜோ : ஒரு வகையில் அது உண்மைதான். 1919-ல் பிரிட்டிஷ் அரசு ரவுலட் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்ட த்தைக் கொண்டு வந்த து.  பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட மிகக் கொடூரமான சட்டம். முதலாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் வளர்ந்த புரட்சிகர மற்றும் விடுதலை இயக்கங்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம்.

சந்தேகத்தின் பேரில் யாரையும் விசாரணையின்றி, பிணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். வக்கீல் இல்லை, வாதம் இல்லை, மேல்முறையீடு இல்லை. என்றது இந்த சட்டம்.  அதற்கெதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

அமிர்தசரசில் 1919 மார்ச் 30  வேலைநிறுத்தம் நடந்தது.‌ போராட்டம் தீவிரமானது.  பிரிட்டிஷ் அரசு அமிர்தசரசில் ஊரடங்கு உத்தரவு போட்டது. நான்கு பேருக்கு மேல் கூடினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்  என்ற உத்தரவையும் போட்டது.


ரதி :  இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் மறக்க முடியாத இடம் இல்லையா அத்தை?  


ஜோ : ஆமாம்… 1919 ஏப்ரல் 13.  ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அரசியல்  கூட்டம் நடைபெற்றது.  அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.   மைதானத்திற்கு ஒரே வழி மட்டுமே இருந்தது. அதுவும் மிகக்குறுகிய வழி. அந்த மைதானத்திற்குள் ஒரு கிணறு ஒன்றும் இருந்தது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அப்போது போலீஸ் ஜெனரல் டயர் ஒரு படையுடன் வந்தான்…‌ எந்த அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நட த்தினான். மக்கள் தப்பித்துச் செல்லக் கூடியக் குறுகிய வழியையும் அடைத்தான்…


நகுலன் – கேட்கவே பயங்கரமா இருக்கே அத்தை… 

ஜோ   அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டான்.. அந்த த் துப்பாக்கிச்சூட்டில் 379 பேர் இறந்ததாகவும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அரசு சொன்னது.. . ஆனால் உண்மையில் அதைவிட அதிகம்.


அப்போது பகத்சிங்கிற்கு வயது 12 தான். இந்த சம்பவம் தான் அவரை புரட்சியின் பக்கம் திருப்பியது . 


நகுலன் :‌ அவரும்  அங்கே போயிருந்தாரா?


ஜோ :  ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து சில மாதங்கள் கழித்து அங்கு சென்றார். அங்கே ரத்தம் தோய்ந்த மண்ணை… ஒரு சிறிய பாட்டிலில் சேகரித்துக் கொண்டார்.. அது அவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றியது.


ரதி : அதன் பிறகு அவர் பள்ளி சென்று படிக்கவில்லையா? 


ஜோ : அதுக்குப் பிறகு அவருக்கு பள்ளியைவிட நூலகம் தான் பிடித்த இடமாக இருந்தது. லெனின், கார்ல் மார்க்ஸ், கம்யூனிசம் அனைத்தையும் படித்தார் பிறகு வீட்டை விட்டு வெளியேறிப் புரட்சிக்குழுவில் சேர்ந்தார்.

நகுலன் : பகத்சிங்கை எதற்காகக் கைது செய்தார்கள்?


ஜோ : 1928 சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 

லாகூரில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த போராட்டத்தில்  லாலா லஜபதிராய் சாண்டர்ஸ் என்ற இன்ஸ்பெக்டரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலின் விளைவாக அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

அதற்குப் பதிலடியாக பகத்சிங்கும் மற்றும் அவரது தோழர்களும் லாலா லஜபதி ராய் இறப்பிற்கு காரணமான சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றனர்.


நகுலன் : அதற்காகத் தான் கைது செய்தார்களா?


ஜோ : அது மட்டுமில்லை. இன்னொரு முக்கிய சம்பவம். 1929 ஏப்ரல் 8 – டெல்லி மத்திய சட்டமன்றத்தில்  தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற அதிகாரிகள் கூடியிருந்தார்கள். பார்வையாளர் இருக்கையில் இருந்த பகத்சிங் மற்றும் பட்டுகேஷ்வர் தத் ஆகிய இருவரும் ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டுகளை வீசினர்.


ரதி : ஆள் இல்லாத இடத்தில் எதற்கு வெடிகுண்டுகளை வீசினார்கள்?


ஜோ : யாரையும் கொல்வது எங்கள் நோக்கமல்ல. தொழிலாளர்களுக்கு எதிரான மசோதா மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கவே நாங்கள் குண்டு வீசினோம் என்று பகத்சிங் நீதிமன்றத்தில் சொன்னார். குண்டுகளை வீசி விட்டு அவர்கள் தப்பித்துச் செல்லவில்லை. அங்கே நின்று,

இன்குலாப் ஜிந்தாபாத்

தொழிலாளர் வர்க்கம் வாழ்க

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக

என்று முழக்கமிட்டனர். துண்டு பிரசுரங்களை வீசினர்.

பிறகு…தாமாகவே சரணடைந்தனர்.


நகுலன் : அவர்களோட துணிச்சல் வேற லெவல் அத்தை…


ஜோ : ஆமாம்… அந்த இளைஞர்களின் துணிச்சல் மக்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தைக் கொடுத்த து. அவர்களுக்கு ஆதரவு அதிகரித்தது. பிரிட்டிஷ்காரர்கள் பயந்தார்கள்.


ரதி : பிரிட்டிஷ்காரர்களையே பயப்பட வைத்தார் என்றால் எவ்வளவு பெரிய ஆளு அவரு.

ஜோ : மிகச் சரியாகச் சொன்னாய்.  விட்டு வைப்பார்களா? சிறையில் அடைத்தார்கள். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்றுபேருக்கும் தூக்குதண்டனை விதித்தார்கள். 

1931 மார்ச் 23.

லாகூர் மத்திய சிறை.

மாலை 7:30.


பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.


நகுலன் : அவர் இறக்கும் முன்வரை புத்தகம் படித்துக் கொண்டுதானே இருந்தார்?


ஜோ : ஆமாம். லெனின் எழுதிய அரசும் புரட்சியும்  என்ற புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருந்தார்… தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்த  போது ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக்கொண்டு இருக்கிறான்… கொஞ்சம் காத்திருங்கள்… வருகிறேன் என்றாராம்.


ரதி: கேட்கும்போதே உடல் புல்லரிக்கிறது.. அத்தை… வாசிப்பை எவ்வளவு நேசித்திருக்கிறார்..பகத்..


ஜோ – தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வந்த காவலர் கேட்டாராம்.. இதோ இன்னும் கொஞ்சநேரத்தில் நீங்கள் இறக்கப்போகிறீர்கள்.. இப்போது வாசிப்பதில் என்ன நடந்து விடப் போகிறது? 


நகுலன் – நம்ம பகத் என்ன சொன்னார் அத்தை? 


ஜோ – உண்மை தான். எதுவும் நடந்து விடாது தான்… ஆனால் இப்போதிருப்பதை விட எனக்கு இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொண்ட மனிதனாக இறப்பேன் அல்லவா? என்று சொன்னார். 


ரதி – எப்பேர்ப்பட்ட மனிதராக பகத் இருந்திருக்கிறார்! எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கை… வாழ்ந்திருக்கிறார்..


நகுலன் -  23 வயதில்  முடிந்த அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? .


ஜோ ஆமாம் குழந்தைகளே! பகத்சிங்கின் வாழ்க்கை தான் அவர் சொல்லும் செய்தி. :

” “ இந்தப் போர் எங்களுடன் தொடங்கவில்லை… எங்களுடன் முடியப்போவதுமில்லை இன்குலாப் ஜிந்தாபாத்! ” .  


ரதி : நகுலன் :  இன்குலாப் ஜிந்தாபாத்!…


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page