அறிவோம் ஆளுமை - 15
- சரிதா ஜோ

- 2 days ago
- 7 min read
தெற்கில் உதித்த பகுத்தறிவுச் சூரியன்

ரதி: அத்தை, இதுதான் பெரியார் பிறந்த வீடா?
ஜோ: ஆமாம் ரதி. ஈரோட்டில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு மாநிலத்தின் சிந்தனையை மாற்றும் அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஈரோட்டில் உள்ள அவருடைய வீட்டைப் பார்க்க வேண்டும். ஈ.வே.ராமசாமி என்ற பெரியாரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்.
நகுலன்: அத்தை, பெரியாரைப் பற்றி நிறைய பேர் பேசுறாங்க. சிலர் அவரை பெரிய சமூக சீர்திருத்தவாதி என்று சொல்றாங்க... சிலர் சர்ச்சைக்குரியவர் என்று சொல்றாங்க.. உண்மையில் பெரியார் யார்?
ஜோ: நல்ல கேள்வி. ஒரு மனிதரைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அவர் எத்தகைய காலத்தில் வாழ்ந்தார்? எத்தகைய நோக்கங்களைக் கொண்டிருந்தார்? என்ன மாதிரியான செயல்களைச் செய்தார்? யாருக்காகச் செய்தார்? அவர் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டார்?, அதற்கு என்ன தீர்வு சொல்ல முயன்றார்? அதனால் சமூகத்துக்கு நன்மை நடந்ததா? என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
ரதி – அத்தை.. நீங்க சொல்றது ரொம்ப இண்டிரஸ்டிங்கா இருக்கு.. அப்படின்னா யாரைப் பற்றியும் ஆராயாமல் எதையும் சொல்லக் கூடாதில்லையா?
ஜோ – ஆமாம் ரதி. பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை இருந்தது. தீண்டாமை இருந்தது. சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்க தடை இருந்தது. ஏன்னா கல்வி சிலரின் கைகளில் மட்டும் இருந்தது. பெண்களுக்கு சம உரிமை இல்லை. குழந்தைத் திருமணம் இருந்தது. விதவைகளின் வாழ்க்கை கொடுமையாக இருந்தது. இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.
ரதி: அத்தை, அவர் சிறுவயதில் இருந்தே இப்படித்தானா?
ஜோ: ஆமாம். சிறுவயதிலேயே அவர் கேள்வி கேட்கும் பழக்கம் கொண்டவர். எல்லாரும் நம்புகிறார்கள் என்பதற்காக அவர் நம்ப மாட்டார். ஏன்? என்று கேட்பார். எப்படி? என்று கேட்பார். அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்பார்.
நகுலன்: எந்த மாதிரியான கேள்விகளை கேட்டார்?
ரதி : கடவுள் எல்லோரையும் படைத்தார் என்றால் ஏன் சிலர் பணக்காரர்கள், சிலர் ஏழைகள்?
ஜோ : அட! சரியாக சொல்லி விட்டாயே?
ரதி : அத்தை எங்களுக்கே அந்தக் கேள்விகள் வருதே… எல்லோரும் மனிதர்கள் என்றால் ஏன் சிலரைத் தொட்டால் தீட்டு என்று சொல்கிறார்கள்? இன்னும் நிறைய கேள்விகள் எனக்கு தோன்றும் அத்தை. என் அப்பா எனக்கு பெரியாரைப் போல் இப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூறுவார்.
ஜோ : சபாஷ்! அதுமட்டுமல்ல, கடவுள் முன்னால் எல்லோரும் சமம் என்றால் கோயிலுக்குள் எல்லோரையும் ஏன் அனுமதிக்கவில்லை?
ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளில் ஒருவரை உயர்ந்தவன், இன்னொருவரை தாழ்ந்தவன் என்று ஏன் சொல்கிறார்கள்?
"பெண்கள் ஏன் ஆண்களைப் போல சுதந்திரமாக இருக்க முடியவில்லை? இன்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.
நகுலன்: அதுதான் பகுத்தறிவின் தொடக்கமா?
ஜோ: சரியாக சொன்னாய். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது அல்ல.. பகுத்தறிவு என்பது சிந்திப்பது. கேள்வி கேட்பது. உண்மையைத் தேடுவது. பெரியார் முதலில் கேள்வி கேட்கக் கற்றுக்கொண்டார். பிறகு மக்களையும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ரதி: அத்தை, அவருக்குக் கடவுளை பிடிக்காதா? அவர் எப்போது கடவுள் மறுப்பாளராக மாறினார்?
ஜோ: அது ஒரு நாளில் நடந்த மாற்றம் இல்லை. வாழ்க்கை முழுவதும் நடந்த அனுபவங்களின் விளைவு. குறிப்பாக காசிப் பயணம்.
நகுலன்: காசிப் பயணமா?
ஜோ:- அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட காசி மிகவும் புனிதமான இடம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்தக் காலத்தில் பெரியாரும் சென்றார். ஆனால் அங்கே அவர் கண்டது வேறு. மனிதர்களை சாதியின் அடிப்படையில் பிரித்தார்கள். சிலருக்கு மரியாதை. சிலருக்கு அவமரியாதை. சிலருக்கு உணவு. சிலருக்கு இல்லை. மனிதனைவிட மதம் பெரியதா? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அந்தக் கேள்வி தான் பிறகு சிந்தனைப் புரட்சியாக மாறியது.
ரதி: அத்தை, ஒரு முறை யாரோ கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதாக ஏதோ புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்... மறந்துவிட்டது.
ஜோ: ஆமாம். அப்போது பெரியார் சொன்ன பதில் மிகவும் முக்கியமானது. கடவுள் என் முன்னால் வந்தால் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்வேன் என்றார். இந்த பதிலில் அவருடைய முழுச் சிந்தனையும் இருக்கிறது. உண்மைக்கு எதிராக அவர் இருந்ததில்லை. ஆதாரம் இல்லாததை நம்ப மறுத்தார்.
நகுலன்: அத்தை, பெரியார் ஏன் சாதியை இவ்வளவு கடுமையாக எதிர்த்தார்?
ஜோ: ஏனென்றால் சாதி என்பதே உயர்வு தாழ்வு கற்பிக்கிறது.. அது ஒருவரின் திறமையைப் பார்த்து மனிதர்களைப் பிரிப்பதில்லை. பிறப்பைக் கொண்டு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கிறது. அதைத்தான் பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ரதி: அத்தை, சாதியால் உண்மையிலேயே இவ்வளவு பிரச்சினைகள் இருந்ததா?
ஜோ: இன்று நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. இப்போதும் இருக்கிறது… பிறப்பினால் தாழ்ந்தவர் தீண்டத்தகாதவர் என்று பிரிக்கப்பட்ட மக்கள் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், எந்த இடத்தில் வாழவேண்டும், என்ன தொழில் செய்யவேண்டும் என்பது உட்பட சட்டமாக இருந்தது.. அவற்றை மீறுபவர்களுக்குத் தண்டனைகளும் இருந்தன.
நகுலன் – ஆமாம் அத்தை கிராமங்களில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் நடக்கக்கூட முடியாது. பல கோயில்களுக்குள் நுழைய முடியாது, என்று அப்பா சொல்லியிருக்கிறார்.
ஜோ – சரியாகச் சொன்னாய் நகுலன்.. அவ்வளவு ஏன்? கோவில்களைச் சுற்றிய சாலைகளில் கூட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் காலடி வைக்கக்கூடாது என்று விதி இருந்தது.
ரதி: என்னது? சாலையில் நடக்கக்கூடாதா? இது என்ன நியாயம்?
ஜோ: அதைத்தான் பெரியாரும் கேட்டார்.. அந்தக் கேள்விதான் அவரை வைக்கம் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றது.
ரதி: வைக்கம் போராட்டமா? கேள்விப்பட்டிருக்கிறேன் அத்தை. அது கேரளாவில் நடந்தது தானே?
ஜோ: ஆம், பரவாயில்லை இது பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே! இன்று நாம் எந்தச் சாலையிலும் நடக்கிறோம். யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் சாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் நடக்கக்கூடாது. குறிப்பாக மகாதேவர் கோயில் பகுதியை சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடப்பதற்கே உரிமை இல்லை.
நகுலன்: சாலைகளில் நடக்க கூடாதா?
ஜோ: ஆமாம். அதுதான் அந்தக் காலத்தின் கொடுமை. அப்போது மக்கள் போராட ஆரம்பித்தார்கள். பெரியார் அங்கே சென்றார். போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டார். சிறை சென்றார். ஆனால் பின்வாங்கவில்லை. அந்தக் கொடிய நடைமுறை மாறியது. அதனால்தான் மக்கள் அவரை வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள்.
ரதி : காங்கிரஸ் கட்சியில் தானே அவர் இருந்தார்?
ஜோ : ஆமாம், 1925-ல் வ.வே.சு. ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணக் குழந்தைகளுக்குத் தனியான உணவு, பிற குழந்தைகளுக்குத் தனியான உணவு கொடுப்பதை எதிர்த்தார். அந்த பாகுபாட்டை எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இத்தனைக்கும் அந்த குருகுலத்திற்கு தொடர்ந்து நிதி வழங்கி உதவியவர் பெரியார்.
நகுலன்: அத்தை, அவர் சிறந்த மேடைப் பேச்சாளரா?
ஜோ: நிச்சயமாக, இன்று மேடையில் பேசுவது எளிது. ஆனால் அப்போது பேசினால் சிறை. எதிர்ப்பு. தாக்குதல். அவமானம். இவற்றை எல்லாம் சந்தித்தார். ஆனாலும் பேசினார். தன் கடைசிக்காலம் வரை பேசினார்.
ரதி: அத்தை, இங்கே ஒட்டியிருக்கும் செய்தித்தாள்களில் இருக்கும் செய்திகளைப் படிக்கும் போது பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.
ஜோ: ஆம், அவர் வாழ்ந்த காலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு பெண் மருத்துவராக இருக்கிறாள். பேராசிரியராக இருக்கிறாள். நீதிபதியாக இருக்கிறாள். எழுத்தாளராக இருக்கிறாள். ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்கூடமே போக முடியாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்பது தான் நடைமுறையாக இருந்தது. பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது.
நகுலன்: அப்போது பெரியார் என்ன சொன்னார்?
ஜோ: பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்றார்.
ரதி: எவ்வளவு வலிமையான வார்த்தைகள்..!
.
ஜோ: ஏனென்றால் அது வெறும் கல்வியைப் பற்றிய வரி அல்ல. அது பெண்களின் விடுதலையைப் பற்றிய வரி. பெண் சமையலறைக்குள் மட்டுமே அடைக்கப்படக்கூடாது. அறிவுலகத்திற்கும் வர வேண்டும். சமூகத் தலைமைக்கும் வர வேண்டும். முடிவெடுக்கும் இடங்களுக்கும் வர வேண்டும் என்ற சிந்தனை. இன்று ஒரு பெண் மேடையில் நின்று பேச முடிகிறது. கருத்து சொல்ல முடிகிறது. நூல் எழுத முடிகிறது. பொதுவெளியில் தன்னம்பிக்கையுடன் இருக்க முடிகிறது. இந்த உரிமைகளுக்காகப் போராடியவர்களில் பெரியார் முக்கியமானவர். நான் இன்று ஒரு கதைசொல்லியாக எழுத்தாளராக மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் பல தலைமுறைகள் போராடிய வரலாறு இருக்கிறது.
நகுலன் : அத்தை! நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு வயதில் கூட விதவை இருந்தார்களாம் எப்படி அத்தை?
ஜோ : சரியாகக் கேட்டாய் நகுலா! அப்போதெல்லாம் இப்போது மாதிரி திருமணம் என்பது 18 வயதிற்கு பிறகு என்று கிடையாது. பிறந்த உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் போய் கணவர் வீட்டில் வாழலாம். கணவர், அதாவது திருமணம் செய்து வைத்த ஆண் குழந்தை இறந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண் குழந்தை விதவையாகவே வாழவேண்டும்.. அப்படி ஒரு வயதுக்கு கீழான விதவைகள் 1927 இல் மட்டும் 427 பேர் இருந்திருக்கிறார்கள்.
ரதி : என்ன கொடுமை! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
ஜோ: ஆமாம், ரதி. அதனால் தான் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். கணவனை இழந்த விதவைகள் மறுமணம் செய்ய வேண்டும் என்றார். விவாகரத்து என்பது பெண்களுக்கான உரிமை என்றும், ஜாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தும் , பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை ஆசிரியர்களாக பெண்களை நியமிக்க வேண்டும் என்பது போன்ற பல திட்டங்களை பல்வேறு மாநாடுகளில் தொடர்ந்து பேசினார்.
நகுலன்: அத்தை, அப்போது எல்லாம் பெண்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாதா?
ஜோ: ஆமாம். ஒரு குடும்பத்தில் ஆணுக்கு கிடைக்கும் உரிமை பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்றார். இன்று அது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அப்போது அது புரட்சி.
நகுலன்: அத்தை, அவர் பெண்கள் அழகாக இருக்கக்கூடாது என்று சொன்னாரா?
ஜோ: இல்லை. ஒரு பெண்ணின் மதிப்பு அழகில் இல்லை திறமையில் இருக்கிறது என்றார். அறிவில் இருக்கிறது என்றார். ஒரு பெண்ணை அவள் எப்படி இருக்கிறாள் என்று அளவிடாதீர்கள். அவள் என்ன சிந்திக்கிறாள், என்ன சாதிக்கிறாள் என்பதைக் கொண்டு அளவிடுங்கள் என்றார்.
ரதி: அத்தை! இங்கு பாருங்கள்! இந்தச் செய்தித்தாளில் கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டம் போட்டிருக்கிறார்கள். அது பற்றிச் சொல்லுங்கள்.
ஜோ: மதுவால் குடும்பங்கள் சிதைவதை பெரியார் பார்த்தார். ஏழைகளின் உழைப்புப் பணம் மதுவில் கரைகிறது. பெண்கள் துன்பப்படுகிறார்கள். குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மதுவுக்கு எதிராக போராடினார். அந்தப் போராட்டத்தில் அவரது குடும்பமும் கலந்து கொண்ட து.
நகுலன்: அவரது தங்கையும் இருந்தாரா?
ஜோ: ஆமாம். அவரது தங்கை கண்ணம்மாள்.அவரது மனைவி நாகம்மாள் சேர்ந்து போராடினார்கள். சமூக மாற்றம் என்பது ஆண்களின் வேலை மட்டும் அல்ல என்பதை அவர்களது வாழ்க்கையே காட்டுகிறது.
.
ரதி: அத்தை, சுயமரியாதை இயக்கம் ஏன் ஆரம்பித்தார்?
ஜோ: ஒரு மனிதன் தன்னைத் தாழ்வாக நினைத்தால் அவனை எளிதாக அடிமையாக்கலாம். அதனால் முதலில் மனிதன் தன்னைத்தானே மதிக்க வேண்டும் என்றார். நீ யாருக்கும் கீழானவன் இல்லை என்று மக்களிடம் சொன்னார். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் உயிர் மூச்சு.
.
நகுலன்: அத்தை, சுயமரியாதை திருமணம் எப்படி நடக்கும்?
ஜோ: சுயமரியாதைத் திருமணத்தில் மிக முக்கியமானது மணமக்களின் சம்மதம். சாதி, மதம் முக்கியமல்ல. எந்தச் சடங்குகளும் முக்கியமல்ல. மனித சமத்துவம் முக்கியம். இந்தக் கருத்திலிருந்து தான் சுயமரியாதை திருமணங்கள் வந்தன. சுயமரியாதை திருமணத்தில் யார் வேண்டுமானாலும் எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாமல் நடத்தலாம். அதை அரசு பதிவு செய்ய சட்டம் இயற்ற இவர்தான் காரணம்.
நகுலன்: அத்தை, கணவன், மனைவி என்பதற்குப் பதிலாக ஏன் துணைவன், துணைவி என்றாராம். அப்பா கூறியிருக்கிறார். அதையெல்லாம் எதற்கு மாற்ற வேண்டும்?
ஜோ: கணவன் என்ற சொல்லுக்கு தலைவர், அதிகாரம் செலுத்துபவர் என்ற பொருள் மரபாக இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் துணைவன், துணைவி என்றால் வாழ்க்கைப் பயணத்தில் உடன் வருபவர். அதில் உயர்வு தாழ்வு இல்லை. சமத்துவம் இருக்கிறது.
ரதி: வாழ்க்கை ஒப்பந்தம் என்பதும் அதே மாதிரியா?
ஜோ: ஆமாம். திருமணம் என்பது ஒருவரை ஒருவர் ஆளும் உறவு அல்ல; இருவரும் சம்மதித்து வாழும் ஒப்பந்தம் என்ற புதிய பார்வையை அவர் முன்வைத்தார். அந்தக் காலத்தில் இது மிகவும் புரட்சிகரமான சிந்தனை.
பெரியாரின் மொழிச் சீர்திருத்தத்தை ஒரு வரியில் சொன்னால்,
சொற்களைக்கூட சமூக நீதிக்கான கருவியாகப் பயன்படுத்தியவர் பெரியார்.
நகுலன்: அத்தை, பெரியார் எழுத்துக்களில் கூட மாற்றம் செய்தார் என்று சொல்கிறார்களே, அது ஏன்?
ஜோ: ஒரு குழந்தை தமிழ் படிக்கும்போது தேவையில்லாமல் நிறைய எழுத்து வடிவங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அச்சுக்கோர்ப்பவர்களுக்கும் சிரமம். தட்டச்சு செய்வதற்கும் சிரமம். இதைக் குறைக்க வேண்டும் என்று பெரியார் நினைத்தார்.
நகுலன்: அதாவது அவர் எழுத்துக்களை மாற்றவில்லை; மக்கள் கற்றுக்கொள்ள வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் இல்லையா?
ஜோ: சரியாகப் புரிந்து கொண்டாய். பெரியாரின் மொழிச் சீர்திருத்தத்தின் அடிப்படை எண்ணம் இதுதான்.
தமிழை நேசிப்பது என்றால் அதை அருங்காட்சியகத்தில் பூட்டி வைப்பது அல்ல, மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் மொழியாக மாற்றுவதுதான்.
நகுலன் : ஆனால் அவர் பெரிதாகப் படித்துப் பட்டம் பெற்றவர் இல்லை என்று நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
ஜோ: சரியாகச் சொன்னாய்! அவர் பள்ளி சென்று படித்தது குறைவு என்றாலும், மிகச் சிறந்த படிப்பாளி. நான்கு வேதங்கள், இதிகாசங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், பதினெட்டு புராணங்கள், அறிவியல், அரசியல், தத்துவம், இப்படி அவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்தார். படிப்பு என்பது கல்லூரி காலகட்டம் முடிந்தவுடன் நின்று விடுவது அல்ல என்பதை அவர் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
ரதி: அத்தை, பெரியார் எப்போதும் மனிதர்களை எதிர்த்துக்கொண்டே இருந்தார் என்று என் மாமா சொன்னார் அப்படியா?
ஜோ: அவர் மனிதர்களை எதிர்க்கவில்லை. அநீதியை எதிர்த்தார். ஒரு மருத்துவர் நோயை எதிர்க்கிறார். அதனால் அவர் நோயாளியை வெறுக்கிறார் என்று சொல்ல முடியுமா? அதுபோல பெரியார் சமூக நோய்களை எதிர்த்தார்.
நகுலன்: அத்தை, இங்க பாருங்க பெரியார் பயன்படுத்திய கண்ணாடி.
ஜோ: பெரியார் பயன்படுத்திய கண்ணாடியை பார்க்கும் பொழுது அவர் மக்களுக்கு கொடுத்த பார்வை முக்கியம் என்று தோன்றுகிறது. உன் கண்களால் மட்டும் பார். பிறர் கண்களால் பார்க்காதே. என்று கூறியது நினைவுக்கு வருகிறது.
ரதி: இந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கிறாரே...
ஜோ: ஆமாம். ஆனால் அவர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தவர் இல்லை. ஊர் ஊராகச் சென்றார். மக்களைச் சந்தித்தார். பேசினார். எழுதினார். போராடினார்.
நகுலன்: அத்தை, அவர் வயதான பிறகும் நிறுத்தவில்லையா?
ஜோ: இல்லை. உடல் பலவீனமானது. வயது தொண்ணூறைத் தாண்டியது. உடல்நலக் குறைபாடுகள் வந்தன. ஆனால் மக்களிடம் பேசுவதை நிறுத்தவில்லை.
ரதி: மூத்திரப்பையைச் சுமந்து கொண்டு மேடை மேடையாகச் சென்று பேசினாராமே உண்மையா?
ஜோ: ஆமாம். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலும் மூத்திரப்பையுடன் மேடைகளுக்குச் சென்றார். சிந்தனைக்கு ஓய்வு கொடுக்கவில்லை. அது ஒரு மனிதனின் தான் வாழும் சமூகத்தின் மீதான நேசத்தை, அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
ரதி: அத்தை, பெரியார் சொன்ன பொன்மொழிகள் இங்கே இவ்வளவு எழுதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதில் மிக பிடித்த வாக்கியம் எது?
ஜோ: யார் சொன்னாலும் சரி. நானே சொன்னாலும் சரி. உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளாதே. என்று அதோ அங்கே எழுதி இருக்கிறார்கள் பாரு அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.
நகுலன்: ஒரு தலைவர் இப்படிச் சொல்வது ரொம்பப் பெரிய விஷயம்.
ஜோ: ஆமாம். அவர் தன்னைப் பின்பற்றச் சொல்லவில்லை. எல்லோரையும் சிந்திக்கச் சொன்னார்.
ரதி: அத்தை, பெரியார் கருத்துகள் இப்போது தேவையா?
ஜோ: சாதி இன்னும் இருக்கிறதா?
நகுலன்: இருக்கிறது.
ஜோ: பெண்கள் மீதான வன்முறை இன்னும் இருக்கிறதா?
நகுலன்: இருக்கிறது.
ஜோ: மூடநம்பிக்கைகள் இன்னும் இருக்கிறதா?
ரதி: இருக்கிறது.
ஜோ: அப்படியானால் பெரியாரின் சிந்தனைகளும் கருத்துகளும் கேள்விகளும் இப்போதும் தேவை தானே!
ரதி, நகுலன் – தேவை தான் அத்தை.
ஜோ – எங்கெல்லாம் சமத்துவமின்மை, மூடநம்பிக்கை, சமூக அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் இன்னும் அதிகமாகப் பெரியார் தேவைப்படுகிறார்.
நகுலன்: அத்தை, உண்மையில் பெரியார் ஒரு சிறந்த ஆசிரியர். .
ஜோ: அதுதான் பெரியாரின் உண்மையான வெற்றி. அவர் மக்களுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தார்.
ரதி: அத்தை, இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்த பிறகு எனக்கு ஒரு விஷயம் புரியுது.
ஜோ: என்ன ரதி?
ரதி: பெரியார் இந்த வீட்டில பிறந்ததால இந்த வீடு முக்கியமானது இல்லை. இந்த வீட்டில பிறந்தவர் உலகத்தையே கேள்வி கேட்க வைத்ததால இந்த வீடு முக்கியமானது.
நகுலன்: எனக்கும் ஒரு விஷயம் தோணுது அத்தை.
ஜோ: என்ன நகுலன்?
நகுலன்: இந்த வீட்டுல கைத்தடி இருக்கு, கண்ணாடி இருக்கு, புத்தகங்கள் இருக்கு, பழைய செய்தித்தாள்கள் இருக்கு. ஆனா இதெல்லாத்தையும் விட பெரியார் விட்டுட்டு போன மிகப் பெரிய பொருள் எது தெரியுமா?
ரதி : என்ன?
நகுலன்: சிந்திக்கிற பழக்கம்.
ரதி: சமத்துவம், சுயமரியாதை, பெண்களின் உரிமை, பகுத்தறிவு இதெல்லாம் புத்தகத்தில மட்டும் படிக்கிற வார்த்தைகள் இல்லைன்னு இங்கே வந்த பிறகுதான் புரியுது.
நகுலன்: அதுதான் இந்த வீட்டின் பெருமை.
ரதி: இல்ல நகுலன் ...அவருடைய சிந்தனைகள் எழுப்பிய கேள்விகள் இன்னும் உயிரோட இருக்கிறது என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஜோ: சரியாகச் சொன்னாய் ரதி. சில மனிதர்கள் மரணம் அடைந்தாலும் சிந்தனையாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.





Comments