நிலவைச் சுற்றி...
- எழில் சின்னத்தம்பி

- 2 days ago
- 3 min read

(பட உதவி: நாசா – நிலவிலிருந்து தொலைவில் தெரியும் பிறை உலகு)
கடந்த மார்ச் மாதத்தில், மனிதகுலத்தின் அடுத்த விண்வெளிப் பாய்ச்சல் நிகழ்வைப் பற்றி அனைவரும் படித்திருப்பீர்கள். அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஏற்பாடு செய்த நிலவைச் சுற்றிய பயணம் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஆகும். அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவை நோக்கி அனுப்பும் முயற்சியின் முக்கிய கட்டமாக நாசாவின் ஆர்த்தெமிஸ்-2 திட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பயணம் மனிதர்களை நிலவில் இறக்கும் திட்டமல்ல; ஆனால் மனிதர்களை நிலவைச் சுற்றி அழைத்துச் சென்று பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் ஒரு சோதனைப் பயணமாகும். எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் மீண்டும் தரையிறங்குவதற்கும், பின்னர் செவ்வாய்க்கோளுக்குச் செல்லும் நீண்டகால இலக்கிற்கும் அடித்தளமாக இந்தப் பயணம் அமைந்தது.
1969ஆம் ஆண்டு முதன்முதலில் நிலவுக்குச் சென்றவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு மேலும் ஐந்து முறை நிலவுக்கு மனிதர்களை அனுப்பிச் சாதனை படைத்தது நாசாவின் அப்பாலோ திட்டம். ஆனால் 1972-க்குப் பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு நாசா முன்னுரிமை கொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நாசா புதிய தலைமுறைத் தொழில்நுட்பங்களுடன் மனிதர்களை மீண்டும் நிலவுக்குக் கொண்டு செல்லும் திட்டமாக ஆர்த்தெமிஸ் திட்டத்தை உருவாக்கியது.
இந்தத் திட்டத்தின்படி, ஆர்த்தெமிஸ்-1 என்று பெயரிடப்பட்ட பயணம் 2022-ல் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிச் சோதித்தது நாசா. இரண்டாவது திட்டமாக, இந்த வருடம் மனிதர்களை அனுப்பி நிலவைச் சுற்றிவரும் ஆர்த்தெமிஸ்-2 திட்டத்தை நிறைவேற்றியது. அடுத்த கட்டமாக, ஆர்த்தெமிஸ்-3 திட்டத்தின்படி நிலவில் மனிதர்களைத் தரையிரங்கச் செய்வதுடன், அங்கே நிரந்தர ஆய்வுத் தளங்களையும் அமைக்கும் முயற்சியை இன்னும் இரண்டு வருடங்களில் நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப் போகிறது நாசா.
மார்ச் மாதம் முழுவதும் ஆர்த்தெமிஸ்-2 பயணத்திற்கான இறுதி ஏற்பாடுகள் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் நடைபெற்றன. விண்கலத்தை வானில் ஏந்திச் செல்ல நவீன, கனரக விண்வெளி ஏவுதள அமைப்பு (எஸ் எல் எஸ்) சோதிக்கப்பட்டது. இதில் பயனாகும் எரிபொருள் திரவ ஹைட்ரஜன் உறைநிலைக்குக் கீழே 253 டிகிரி செல்சியஸில் இருக்க வேண்டும் (-253 °C); -183 டிகிரி உறைநிலைக்குக் கீழே திரவ ஆக்ஸிஜனை எரிப்பு ஊக்கியாகப் (ஆக்ஸிடைஸர்) பயன்படுத்தினர். இந்த இரண்டு திரவங்களும் சேர்ந்து ஏவுகணையின் நான்கு கனரகப் பொறிகளை இயக்கி விண்ணில் பாய்ந்து செல்ல உதவுகின்றன. விண்வெளி வீரர்களைச் சுமக்கும் விண்கலத்தின் பெயர் ஓரியன். ஏவுகணையின் உச்சியில் இந்த விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படும். இரண்டு பெரிய கார்களுக்குள் எவ்வளவு இடம் இருக்குமோ அந்த அளவே இது இருக்கும். இருப்பினும் இந்த இடத்திற்குள் சிறிய சமையல் அறை, கழிவறை, உடற்பயிற்சி செய்யும் சிறிய இடம் போன்றவை அமைத்துக்கொள்ளலாம். இந்த விண்கலத்தில் நான்கு பேர் பயணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
பயணம் செய்தவர்களில், திட்டத்தின் தலைவர் ரீட் வைஸ்மேன், விமானி - விக்டர் குளோவர், பணிநிபுணர்- கிரிஸ்டீனா கோச் மற்றும் ஜெரமி ஹான்ஸன் எனும் கனடாவின் விண்வெளி வீரர் போன்றோர் அடங்குவர். இந்தப் பயணம் பல வரலாற்றுச் சாதனையாக, கிறிஸ்டினா கோச் நிலவை நோக்கிச் செல்லும் முதல் பெண்ணாகவும், விக்டர் குளோவர் நிலவை நோக்கிச் செல்லும் முதல் கறுப்பினத்தவராகவும் சிறப்புப் பெற்றனர்.
இந்தப் பயணம் சுமார் பத்து நாட்கள் நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு நிலவைச் சுற்றி அதன் தொலைதூரப் பகுதியில் பயணித்து மீண்டும் பூமியை நோக்கித் திரும்பும் வண்ணம் அமைந்தது. நிலவில் தரையிறங்குவது இத்திட்டத்தின் குறிக்கோள் இல்லை. நிலவின் இருண்ட மறுபக்கத்தை மனிதர்கள் நேரடியாகக் காணும் அபூர்வ வாய்ப்பையும் இந்தப் பயணம் வழங்கியது..
விண்கலம் ஏவப்பட்டவுடன் நேரடியாக நிலவுக்குச் செல்லாமல், பூமியை இரண்டு முறை சுற்றிவந்து அதன் அமைப்புகள் அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா என்று சோதிக்கப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி நிலவை நோக்கி 240,000 மைல்கள் பயணித்து, ஏப்ரல் 6 அன்று நிலவுக்கு மிக அருகில் (சுமார் 4,067 மைல்கள் தொலைவில்) சென்று வெற்றிகரமாக வலம் வந்தது. நிலவின் மறுபக்கத்திற்கு அப்பால் விண்கலம் சென்றபோது, பூமியிலிருந்து சுமார் 252,756 மைல்கள் (406,771 கி.மீ) தொலைவை எட்டியது. இது மனித வரலாற்றில் விண்கலம் ஒன்று பூமியிலிருந்து சென்ற மிக அதிகபட்சத் தொலைவாகும். இதற்குமுன் 1970-இல் 'அப்பல்லோ-13' விண்கலம் படைத்திருந்த சாதனையை (248,655 மைல்கள்) ஆர்த்தெமிஸ்-2 முறியடித்தது.
நிலவின் பின்புறத்திலிருந்து பூமி பிறையாகத் தெரிவதையும், பகல் பாதி இரவு பாதி எனத் தெரியும் அரை வெளிச்ச, அரை இருட்டு பூமியையும் விண்வெளி வீரர்கள் கண்டுகளித்து அதைப் புகைப்படங்களாகப் பதிவு செய்தனர். நிலவின் பின்புறத்தில் பயணம் செய்யும்போது சூரியனை முழுவதும் நிலவு மறைக்கும் சூரிய கிரகண நிகழ்வையும் அவர்கள் கண்டுகளித்தனர். நிலவின் இருட்டுப் பரப்பையும் அவர்கள் புகைப்படம் எடுத்துப் பல தரவுகளைச் சேகரித்தனர்.

மேலும், நிலவின் தென் துருவப் பகுதிகளில் உள்ள பனிநீர் வளங்களை ஆய்வு செய்து, அங்கிருந்து ஆக்சிஜன் மற்றும் எரிபொருள் தயாரிப்பது போன்ற திட்டங்களுக்கும் தேவையான தரவுகளைச் சேகரித்தனர்.நிலவில் மனிதர்கள் மீண்டும் இறங்குவதற்கு முன் தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரவுகளும் சேகரிக்கப்பட்டன.
இருப்பதிலேயே மிகக் கடுமையான கட்டம் என்பது விண்கலம் மீண்டும் புவியின் வளிமண்டலத்துக்குள் திரும்பும் நிகழ்வுதான். நிலவைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும் விண்கலம், வளிமண்டலத்தில் நுழையும்போது மணிக்கு சுமார் 40,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இந்த வேகத்தால் சில முக்கிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன:விண்கலத்தின் முன்பகுதியைச் சுற்றிய காற்று சுருங்கி ஆயிரக்கணக்கான செல்சியஸ் வெப்பநிலையை உருவாக்கும்.விண்வெளி வீரர்களின் உடலில் பூமியின் ஈர்ப்பை விடப் பல மடங்கு அழுத்தம் ஏற்படும்.விண்கலத்தைச் சுற்றி உருவாகும் அயனமயமான பிளாஸ்மா சில நிமிடங்கள் வானொலி தொடர்பைத் தடைசெய்யும்.மிகச் செங்குத்தாக வந்தால் விண்கலம் எரிந்துவிடலாம்; மிகத் தட்டையாக வந்தால் கல்லைப் போல வளிமண்டலத்தில் பட்டு மீண்டும் விண்வெளிக்குத் தாவும் அபாயமும் இருக்கிறது. 2003-ல் விண்வெளியிலிருந்து திரும்பியவர்களின் விண்கலம் வளிமண்டலத்தில் நுழைந்ததும் விபத்துக்குள்ளான நிகழ்வை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இத்தகைய ஆபத்துகளை எப்படிச் சமாளித்து மீண்டும் புவிக்குத் திரும்புவது?ஓரியன் விண்கலத்தின் அடிப்பகுதியில் வெப்பக்கவசம் பொருத்தப்பட்டுள்ளது. இது வெப்பத்தால் மெதுவாக உருகி ஆவியாகி வெப்பத்தை வெளியேற்றுகிறது.கணினி வழிநடத்தும் துல்லியமான பாதுகாப்பான நுழைவுப் பாதைபயன்படுத்தப்பட்டது.மேலும், விண்கலம் வளிமண்டலத்தின் மேற்பகுதிக்கு வரும்போது ஒருமுறை தொட்டுச் சிறிது உயர்ந்து மீண்டும் நுழைகிறது. இதனால் வெப்பமும் புவி ஈர்ப்பு விசையும் குறைகின்றன.இறுதியில் பெரிய மூன்று பிரதான பாராசூட்டுகள் திறந்து வேகத்தைக் குறைத்து கடலில் பாதுகாப்பாக இறக்கின.9 நாட்கள், 1 மணி நேரம், 32 நிமிடங்கள் நீடித்த இப்பயணத்தின் முடிவில், விண்கலம் ஏப்ரல் 10 (பசிபிக் நேரப்படி ஏப்ரல் 10 மாலை / உலக நேரப்படி ஏப்ரல் 11) அன்று சான் டியாகோவிற்கு தென்மேற்கே பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாகப் பாய்ந்து நீரில் இறங்கியது.
இந்த வெற்றிகரமான நிலவுப் பயணம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.சர்வதேசக் கூட்டணிகள், வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பங்களின் துணையோடு நாசா மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம், மனிதனை மீண்டும் நிலவுக்குக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் ஆழமான ரகசியங்களைக் கண்டறிவதற்கும், செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால் பதிப்பதற்கும் மிகச் சிறந்ததொரு அடித்தளமாக அமைந்துள்ளது.நாசா தற்போது நிலவின் தென் துருவத்தில் நிரந்தர மனிதத் தளங்களை அமைக்கும் நீண்டகாலத் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி





Comments