top of page

கோலம் போடும் விமானம்


விமானம் செல்லும் சத்தம் கேட்டாலே வீட்டை விட்டு வெளியே போய் வானத்தைப் பார்ப்போம். அப்போது, சில நேரங்களில் விமானத்தின் பின்னால் நீண்ட வெள்ளை நிறக் கோடுகள் தோன்றுவதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கோடுகள் சில நிமிடங்களில் மறைந்துவிடும். சில சமயங்களில் பல மணி நேரம் வானத்திலேயே காணப்படும். இந்த வெள்ளைக் கோடுகளுக்குப் பெயர் “உறைநீர்த் தடங்கள்” எனப்படுகிறது. ஆங்கிலத்தில், “contrails”, அதாவது “condensation trails” எனப்படுகிறது.


அது ஏன் தெரியுமா?


பெரும்பாலான விமானங்கள் சுமார் 10-12 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கின்றன. அந்த உயரத்தில் காற்று மிகவும் மெல்லியதாகவும், மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கும். நாம் வெயில் தாங்க முடியாமல், இங்கே 35 °C வெப்பநிலையில் தவித்துக் கொண்டிருப்போம். ஆனால் விமானம் பறக்கும் உயரத்தில் வெப்பநிலை –40 °C முதல் –60 °C வரை குறைந்துவிடும். அதாவது, நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைவிடப் பல மடங்கு குளிரான இடத்தில் விமானங்கள் பயணம் செய்கின்றன.


விமானத்தின் இயந்திரம் எரிபொருளை எரித்து அந்த உந்துசக்தியில் முன்செல்கிறது.  அப்போது,  சூடான வாயுவும், நீராவியும் வெளிவரும். மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட இடத்தில்  இருக்கும் நீர் மூலக்கூறுகள், விமானத்தில் இருந்து வெளிவந்த புகையில் இருக்கும் துகள்களின் மீது ஒட்டி, சிறிய பனித்துகள்களாக மாறுகிறது. கோடிக்கணக்கான இந்தப் பனித்துகள்கள் ஒன்றுசேர்ந்து நமக்குத் தெரியும் வெள்ளை நிறக் கோட்டை உருவாக்குகின்றன. இதுவே உறைநீர்த் தடங்கள்.


எல்லா விமானங்களும் எப்போதும் உறைநீர்த் தடங்களை உருவாக்குவதில்லை. வானத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றின் தன்மை போன்றவை சரியாக அமைந்தால் மட்டுமே இந்த வெள்ளைக் கோடுகள் தோன்றும்.


இந்த வெள்ளைக் கோடுகளைப் பார்த்தால், “இது ஜெட் விமானத்தின் தடம்” என்று சொல்வார்கள். ஏனெனில் அப்போது அதிக உயரத்தில் வேகமாகப் பறந்த இராணுவ ஜெட் விமானங்களே பெரும்பாலும் இவ்வாறு தெரிந்தன. ஆனால் இன்று, ஜெட் விமானங்கள் மட்டுமல்ல, நவீன பயணிகள் விமானங்களும் ஜெட் இயந்திரங்களால் வடிவமைக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் விமானமும் உறைநீர்த் தடங்களை உருவாக்கும்.


அடுத்தமுறை விமானத்தைக் கோடு மட்டும் போடாமல், கோலமும் போடு என்று சொல்லலாமா?


ஹேமபிரபா
ஹேமபிரபா

இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்”  உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக்  கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக  இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச்  சென்றடைந்து  பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே  அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page